உயிர் காக்கும் பழக்கம்
>> Tuesday, February 27, 2007
உயிர் காக்கும் பழக்கம்.
சுன்னத், சின்னத், சுன்னத் கல்யாணம், கத்னா என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பழக்கம் ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதாகும். இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமயம் சார்ந்த ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை சர்கம்சிஷன் (Circumcision) என்று சொல்கிறார்கள்.
ஆனால் யூதர்களும் முஸ்லிம்களுக்கும் மட்டும்தான் இந்த பழக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பயன் அல்லது அவசியம் கருதி இதை செய்துகொள்ளும் மற்ற மதத்தினரும் உண்டு.
ஆனால் இதுகாறும் சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்பட்ட ஒன்றுக்கு இப்போது விஞ்ஞானத்தின் ஆதரவு கிடைத்துள்ளது. அதுவும் மனித உயிரைக் கொல்லும் எய்ட்ஸ் என்னும் நோயிலிருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்ட செயலாக இந்த 'சர்கம்சிஷன்' உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பை இது குறைப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் டொராண்டோவில் (Toronto) நடந்த சர்வதேச எய்ட்ஸ் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஹெச்.ஐ.வி. தொற்றுவதிலிருந்து நம்மைத் தடுக்கும் மிகச்சிறந்த வழியாக சர்கம்சிஷன் இருப்பதாக தான் நம்புவதாக முன்னால் ஜனாதிபதி பில் கிளிண்டன் கூறினார். இதை மதரீதியானதாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
"பரிசோதனைகளுக்கு நல்ல பயன்கள் கிடைத்திருக்கும் பட்சத்தில், இந்நோயைத் தடுக்கும், மனித உயிர்களைக் காக்கும் ஆற்றல் மிகுந்த வழி காணப்பட்டுவிட்டது என்றே பொருள். நாம் அனைவரும் இங்கிருந்து போகும்போது இந்த முறைக்கு பச்சைக்கொடி காட்டியவர்களாக வெளியே செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.
"சர்கம்சிஷன் செய்து கொள்வதனால் முறையற்ற பாலியல் உற்வுகளால் விளையும் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஆண்களுக்கு ஆண்குறியைப் பாதிக்கும் புற்று நோயும் (penile cancer), பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் பாதிக்கும் புற்றுநோயும் (cervical cancer) வராமல் தடுக்கப்படுகிறது. ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பையும் எய்ட்ஸ் ஏற்படும் வாய்ப்பையும் இது கணிசமாக கட்டுப்படுத்துகிறது. ஆனால் இது எய்ட்ஸுக்கு எதிரான முழு பாதுகாப்புக் கேடயமல்ல" என்கிறார் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரபல டாக்டர் கம்பம்பட்டி ஸ்வயம் ப்ரகாஷ்.
தென்னாப்பிரிக்க மற்றும் ஃப்ரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகள்தான் இந்த விவாதத்தையே தொடங்கி வைத்தன என்று கூறலாம். சர்கம்சிஷன் செய்து கொண்ட ஆண்களில் 60 விழுக்காட்டுப் பேருக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயம் குறைவாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தார்கள்.
கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் இது தொடர்பான மூன்றுவிதமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதாக உலகளாவிய ஹெச்.ஐ.வி. தடுப்புக் குழு (Global HIV Prevention Working Group) சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது. சர்கம்சிஷன் செய்து கொண்டவர்களோடு சேர்ந்து வாழும் 7000 பெண்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பு குறைந்துள்ளதா என்று ஒரு ஆராய்ச்சி உகாண்டாவில் நடக்கிறது. இதன் முடிவுகள் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப் படுகின்றன.
25-லிருந்து 50 பேர்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுவதை சர்கம்சிஷன் தடுக்கிற்து என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் ஜி.சாமரம். ஆரோக்கியமான உடலுறவே 60-லிருந்து 70 விழுக்காடு வரை இந்த நோய் பரவாமல் காப்பாற்றும் என்றும் அவர் கூறுகிறார்.
"ஒவ்வொரு உடலுறவுக்குப் பிறகும் மர்ம உறுப்புகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். நோய் பரப்பும் கிருமிகளிலிருந்து இது காப்பாற்றும். ஆண்குறியில் சர்கம்சிஷன் செய்துகொள்ளும்போது முன்தோல் வெட்டி எடுத்துவிடப்படுவதால், பாக்டீரியா,வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றுவதற்கு மிகக்குறைந்த வாய்ப்பே உள்ளது" என்றும் அவர் கூறினார்.
"சர்கம்சிஷன் இந்த நோயைக் குறைக்குமே தவிர, ஒழித்து விடும் என்ற் சொல்ல முடியாது. இதைச் செய்து கொண்டால் யாரிடம் வேண்டுமானாலும் (தகாத) உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் செய்து கொண்டவர்களுக்கு ஏற்படலாம். இது செக்ஸை சட்டபூர்வமாக்குவதைப் போன்றதாகிவிடும்" என்கிறார் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தவறான பாலியல் பயன்பாட்டுக்கு எதிரான குழுவுக்குத் தலைவராக இருக்கும் என்.வி.எஸ். ராம்மோகன்.
-- வெள்ளி, டெக்கன் க்ரானிக்கிள், ஆகஸ்ட் 18, 2006.
NANDRI: NAGORE RUMI.
1 comments:
நன்றி வாஞ்சூர்
அன்புடன்
நாகூர் ரூமி
Post a Comment