நாம் நாமாகவே இருக்க முயற்சிப் போம்
>> Wednesday, February 21, 2007
நாம் நாமாகவே இருக்க முயற்சிப்போம்.
(20.2.2007) ஆங்கில ஏடு ஒன்றில் வெளிவந்த விளம்பரத்தையொட்டிய ஓர் கதை; இது பழைய காலத்துக் கதை என்ற அறிமுகத்துடன் தொடங்குகிறது.
ஒருவருக்கு இரண்டு மனைவிகள்; அவர்களில் மூத்தவர் கணவனையொத்து சற்றுக் குறைந்த வயதினர் - மற்றொரு மனைவி இளைய வயதுடையவர்.
ஆண்டுகள் ஆக, ஆக, கணவருக்குத் தலை முடி வெளுக்க ஆரம்பித்தது - இயற்கைதானே! அவருடைய இளையதாரத்திற்கோ இவரைத் தன் கணவர் என்று சொல்லிக் கொண்டால் - இவர் கிழவர் என்பதுபோல தோற்றத்தில் தெரிந்து விடுவாரே என்று கருதி, இவர் தம் தலைமுடியில் எவை எவையெல்லாம் வெளுத்தவையோ அவற்றில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளாகப் பிடுங்கி விடும் பழக்கத்தினைக் கையாண்டாராம்!
இவருடைய மூத்த மனைவியாருக்கு இவருக்கு கருப்பு முடிகள் மட்டும் தெரிந்த நிலையில், தன் தலையில் வெளுத்த நரை முடிகள் காணப்படும் நிலையினால் கவலை கொண்டு, இருவரும் வெளியே போகும்போது, இவருக்கு நாம் மனைவி என்று கருதாமல், நம்மை இவருடைய தமக்கை அல்லது தாய் என்று பார்ப்பவர் நினைத்துவிட்டால் என்னாவது? என்ற கவலையில் சிக்குண்டு மீள முடியாது தவித்தார்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்தாராம்; வெள்ளை முடி மட்டும் இவருக்கு இருக்கும் வகையில், வெள்ளையாகாத கருப்பு முடிகளை நாம் ஒவ்வொன்றாக, ஒவ்வொரு நாளும் பிடுங்கி விட்டால், பிரச்சினை தீர்ந்துவிடுமே என்று நினைத்து, கருப்பு முடி ஒவ்வொன்றையும், பிடுங்கி எறிந்தாராம்; தலையில் பெண்கள் பேனும், சிக்கும் பார்த்து முடியை ஒழுங்கு படுத்துவதுபோல இதைச் செய்தாராம்!
இருவரது போட்டியினால், கணவன் இருவரையும் தடுக்காது, அவர்களுக்கு தாட்சண்யத்திற்காக இசைந்து கொடுத்ததன் விளைவாக, தலைமொட்டையாகி விட்டது நாளடைவில்!வெள்ளை முடியும் இல்லை, கருப்பு முடியை யும் காணோம்; மொட்டைத் தலை மட்டுமே மிஞ்சியதாம்!
இப்படி ஆளாளுக்கு அனுமதி கொடுத்து, பலருக்கும் வாய்ப்பு அளிக்க அவர் ஒப்புக் கொண்டதால்தான் இந்த அவல நிலை. ஆகவே, அளவுக்கு அதிகமாக பலருக்கும் தலையாட்டாதீர்கள்!
மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து இசைவு தருவது என்பதற்கும் கூட ஓர் எல்லை உண்டு என்று முடித்து, எங்கள் வங்கியை மட்டும் தேர்ந்தெடுங்கள். பல சேமிப்பு நிதிகளிலும் நீங்கள் பல பக்கமும் இருந்தால் பலம் தானே அது என்று நினைத்து கடைசியில் மோசம் போய்விடாதீர்கள் என்று அந்த விளம்பரத்தின் இறுதியில் ஒரு படிப்பினை போலச் சொல்கிறார்கள்!
இதைப் பொறுத்தவரையில், தத்துவ ரீதியாக சிந்தனையாளர் கூறும்போது, ``எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள். உங்கள் தனித்தன்மை தான் உங்களை என்றென்றும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதை மறந்தால் மானிட சமுதாயத்தில் நீங்கள் சரியான ஓர் உறுப்பினராக இருக்கவே முடியாது’’ என்கிறார்!
பல பேர் பிறரைப் பார்த்து `காப்பி அடித்து’ அதுபோல் தாங்கள் இருந்தால் சிறப்புக் கூடும் என்கிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இது சரியான கருத்தல்ல என்று புரியும்!
மனிதனுக்குக் குரங்கு போல மற்றவர்களைப் பார்த்து APE செய்து அவர்களைப் போல `இமிடேட்’ செய்ய விரும்பு கிறான்.
அது தேவையற்றது. ஒவ்வொருவரின் திறமையும், ஆற்றலும் எப்போதும் தனித்தனி தான்! அதை மற்றவர்களோடு இணைத்து விடும்போது (Merge) அவர்கள் தான் வெளியே தெரிவார்களே தவிர, இவர்கள் அழுந்திப் போய் காணாமற்போய்விடக் கூடும்!
ஒவ்வொரு மனிதனின் மூளையும் ஏராளமான ஆற்றல் வாய்ந்த ``செல்’’களைக் கொண்டது; உள்ளுக்குள் திறமை, ஆற்றல், தனித்த சிந்தனை ஊற்று ஊறிக் கொண்டே இருக்கும். அதனை அறிந்து நாம் நாமாக இருக்க நாளும் முயற்சிப்போம்!
என்னதான் `குளோனிங்’ வெற்றி பெற்றாலும், அசல் அசல்தான்; நகல் நகல்தானே! இல்லையா?
எனவே, நாம் நாமாகவே இருக்க முயற்சிப்போம்; ஒப்பனைகளால், சாயங்களால் `மாயங்கள்’ ஏற்பட்டுவிடும் என்று நினைத்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தேவையற்ற எல்லா வகை விரயமும் ஆகும் என்பதை நண்பர்கள் உணர்வார்களாக!.
0 comments:
Post a Comment