தோண்டித் தோண்டி?? நோண்டி, நோண்டி ??
>> Thursday, February 22, 2007
தோண்டித் தோண்டி?? நோண்டி, நோண்டி ??
வாழ்விணையர்களுக்குள் அன்றாடம் சிறுசிறு பிரச்சினைகள் முளைப்பதும், வெடிப்பதும், முடிவதும் இயல்பானதுதான். இல்லையானால் அறிவுக்கும், வேலை இராது. உணர்ச்சிக்கும் தீனி கிடைக்காது! உறவும் `சவுத்துப்’ போனதாகி விடுமே!
என்றாலும், அது அதன் எல்லையைத் தாண்டும்போது, ஊதப்பட்டு, உப்பும் பலூன் மகிழ்ச்சியைத் தருகிறது என்பதற்காக ஊதிக் கொண்டே போனால், அது `டப்’பென்று வெடித்து ஒரு நொடியில் நம் மகிழ்ச்சியைக் காணாமற் போகச் செய்துவிடுமே!
நம் வீட்டு மழலைச் செல்வங்கள் இந்தப் பாடத்தை நன்கு அறிந்தவர்கள். எனவேதான் பலூனை நாம் ஊதும்போது அது பெருக்க, பெருக்க மகிழும் அதே குழந்தைகள், `போதும், போதும்’ என்று நமக்கே எச்சரிக்கை விடுவர்!
வாழ்விணையர்களை நண்பர்களாகவே கருதி நடந்திட்டால்தான் வாழ்க்கையின் முழு இன்பத்தை அவர்கள் பெற்று சுகமான வாழ் வையும், சுயமரியாதை வாழ்வையும் ஒன்றாக அனுபவிக்க முடியும் .
பிறரது உறவைப் போற்றும் நாம், அவர்தம் உரிமையையும் மதிக்கத் தவறலாமா?
`தனித்திரு’ என்ற தத்துவத்தை ஒவ்வொரு வரும், நாளில் ஒரு சில மணித்துளிகளை ஒதுக்கியாவது கடைபிடிப்பது பயன் தருவதாகும்!
தனிமையும், இனிமை தரும் பற்பல நேரங்களில் தனித்துச் சிந்தித்து, வேதனைகளாலோ, துயரத்தாலோ பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டு மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாக இருப்பின், மகிழ்ச்சியின் அருமை பெருமை நமக்குப் புரியாமலேயே போய்விடக் கூடும். எனவேதான், துன்பத்தையும் நாம் அனுபவித்தல் இயற்கையின் நியதிப்படியே நமக்கும் தேவையானதுதான்!
தனித்திருப்பதே எப்போதும் நல்லது என்று நாம் கூறமாட்டோம். அது `தனித்திரு’ என்பதை `தவிர்த்திரு’ என்று உணர்ந்து துடிக்கும் நிலை யைத் தருவதாகவும் கூட ஆகிவிடக் கூடும்.
வாழ்விணையர்களிடையே கூட `ரகசியங்கள்’ என்பவை ஒவ்வொருவருக்கும் இருக்கும், தனி வாழ்க்கை கூட்டு வாழ்க்கையான பிறகும் கூட இது தேவையா என்று சிலர் கேட்கக் கூடும் தேவையே ஓரளவுக்கு.
என்னதான் வாழ்விணையர்கள் `ஈருடல் ஓருயிர்’ என்று ஆனாலும், அவர்களும் ஒரு சில செய்திகளை மறைத்து வைத்து, வெளியிட வேண்டிய தக்க நேரத்தில் வெளியிட வேண்டிய அளவே வெளியிடுவது வாழ்க்கையில் முக்கியம் ஆகும்!
இதில் நம்மவர்களைவிட மேலைநாட்டவர்கள் நனி நாகரிகம் படைத்தவர்கள் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!
தனது வாழ்விணையராக (மனைவியாக) இருந்தாலும்கூட, அவருக்கு வரும் கடிதத்தினை இவர் பிரித்துப் படிக்கமாட்டார். அது மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் (Contents) என்னவென்று அறியும் ஆவலையும்கூட துணைவர் பெற்றவராக இருக்கமாட்டார், கேட்கவும் மாட்டார்.
அப்படிக் கேட்பது அநாகரிகம் ஆகும். ஆனால், இங்கோ... கடிதம் என்ன? தொலைப் பேசி வந்தால்கூட, அது நமக்குச் சம்பந்த மில்லாதது என்றாலோ, தவறான அழைப்பு என்றாலோ கூட பல `கணவன்மார்கள்’ (எஜமானர்கள் என்று கருதிக் கொண்டவர்களைக் குறிக்கவே இச்சொல்லை எழுதுகிறேன்) துளைத்து எடுத்து விடுவார்கள்! சண்டை, தகராறு எல்லாம் வெடித்து தேவையற்ற நிம்மதியின்மையை அது உருவாக்கும் பேரபாயத்தில் முடியும்.
ஒட்டுக்கேட்பது எவ்வளவு தவறோ, அதைவிட மோசமானது இன்னொருவருக்குத் தெரியாமல் அவருடைய கடிதத்தைப் படித்து விட்டு, பிறகு அதை மீண்டும் ஒட்டி, ஒன்றும் தெரியாததுபோல வைத்துவிடும் பழக்கமும் சிலருக்க உண்டு.
தனிமை (Privacy) பற்றிச் சொல்லும்போது ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் எழுதினார்: 56 ஆண்டு குடும்ப வாழ்க்கையை நான் சுமுக உறவுடன் வாழ்ந்ததற்குக் காரணமே தனித்தனி குளியல் அறைகள்தான் என்றார்! மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவர் அவர்!
அவரவரது தனித்தன்மை என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவரவர் தனிமையின் பாதுகாப்பும் (Right of Privacy) என்பதை நண்பர்களிடம் கூட நாம் மதிக்கப் பழகுதல் அவசியம்.
எவரிடத்திலும் அவராகச் சொல்லாத செய்தியை நாம் அவசர ஆர்வத்துடன் அறிந்துகொள்ளத் துடிப்பது அநாகரிகமாகும்.
நம்மோடு அன்றாடம் பழகும் பல நண்பர்கள் சிலரிடம் இந்த எதையும் (தோண்டித் தோண்டி என்பதைவிட) நோண்டி, நோண்டித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் மூக்கை நுழைத்து, வெறும் வாய்க்கு அவல் தேடி, அதையே பிறருக்கு அவசரமாகச் சொல்லி, கலகம் ஏற்படுவதைக் கண்டு மகிழும் ``கடமையாளர்களும்’’ உண்டு. இவர்கள் ``கடமையாளர்கள்’’ அல்லர் ``கயமையாளர்கள்’’ - கடைத்தர மனிதர்கள்.
அந்த ரகத்தில் சேரமாட்டோம் என்ற உறுதியுடன் வாழ்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.
0 comments:
Post a Comment