தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல் பொறுமையிழந்து......
>> Friday, February 23, 2007
தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல் பொறுமையிழந்து......
பல் மருத்துவரிடம் அந்தப் பெண் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். ''இன்னும் சரியாகப் பொருந்தவில்லை, இந்த செயற்கைப் பல்... நானும் எத்தனை முறைதான் வருவது'' என நொந்து கொண்டவள், தன் பல்லைச் சரிசெய்யும்படி கூறினாள்.
பல் மருத்துவர் மிதமான குரலில், ''இதோடு மூன்று முறை உங்கள் பல்லை ராவி விட்டேன். இனி ஒருமுறை ராவினால் கூட அது உங்களின் வாய்க்கு நிச்சயமாகப் பொருந்தாது'' என்றார்.
அந்தப் பெண், ''வாய்க்குப் பொருந்துவதைப் பற்றி யார் கவலைப்பட்டது? நீங்க செய்த செயற்கைப் பல் என் முகத்துக்குப் பொருத்தமாக இல்லை'' என்று எரிச்சலோடு சொன்னாள்.
கடைசிவரை பல் மருத்துவர் ,''என் தொழில்படி நான் செய்தது சரிதான்'' என்று வாதாட, அந்தப் பெண்மணி ''யாருக்கு வேண்டும் உமது உபதேசம், என் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாததற்கு நீங்க கூறும் சப்பைக் கட்டு இது'' என்று வெறுப்போடு கூறிவிட்டு வெளியேறினாள்.
மனித வாழ்வில் பொறுமையைக் கடைப் பிடிக்கும் கலை கலைந்து போனதே, இது போன்ற சச்சரவுகளுக்குக் காரணம்.
சாதாரணம் போன்று தெரியும் இந்த சச்சரவுகள் தான், மனித நேயத்தை மறையச் செய்து கொண்டிருக்கிறது.
தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல் பொறுமையிழந்து, அது சச்சரவுகளாக வெடித்து உறவுகள் சிதறக் காரணம், ஆழ் மனதின் மந்தத் தன்மைதான்.
மேல் மனம் மட்டும் கொஞ்சம் விழித்துக் கொண்டிருப்பதால், அதிகபட்சம் திறமையாக வாக்குவாதம் செய்ய முடியும். வாதத் திறமையால் ஜெயித்து விட்டதாக நம்ப முடியும்.
ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஜெயித்தாலும், அது பெருந் தோல்வியே.
வாக்குவாதம் என்ற ஒன்று ஆரம்பிக்கும்போதே, உங்களைச் சுற்றி ஒரு சுமுகமற்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள். இன்றைய நண்பர்களை நாளைய எதிரிகளாக மாற்றும் நாசவேலையில், உங்களை அறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
வாக்குவாதத்தில் காலடி எடுத்து வைத்த முதல் அடியே தோல்விதான். இவை அனைத்திற்கும் காரணம், அடிமன மயக்கம்தான்.
உடலில் சேர்ந்துவிட்ட மதுவுக்குச் சமம் அடி மனதைப் பற்றிக் கொண்ட விழிப்புணர்வின்மை.
மது குடித்தவனின் மயக்கம் தெளிவிக்கப்படாதவரை, அவனின் அரைகுறை புரிந்து கொள்ளுதல்கள்தான் சரியென வாதிடுவான்.
மன மயக்கம் தெளிவிக்கப்படாத வரை உறவுகளயும், உலகையும் எப்போதுமே தவறாகப் புரிந்கொள்வதைத் தவிர்க்க முடியாது. சுற்றியிருப்பவர்களும் இதே மனமயக்கத்தில் சிக்கித் தவிர்ப்பார்கள்தான். எனவே...
யாரும் யாருக்கும் உதவ முடியாது. பார்வையற்றவன் மற்றொரு பார்வையற்றவனுக்கு வழி காட்ட முடியாது. நீங்கள்தான் உங்களுக்கு உதவ வேண்டும். கொஞ்சம் விழித்துக்கொண்டுள்ள மேல் மனதிலிருந்து அடிமனதைத் தெளியச் செய்யுங்கள்.
உங்களுக்குள்ளேயே வெகு காலமாக உறங்கிக் கொண்டிருக்கும் அடி மனதைத் தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம் மறந்துவிடும்.
உள்ளேயும், வெளியேயும் சுமூகமான சூழல் உருவெடுக்கும்.
0 comments:
Post a Comment