உபயோகமில்லாதவை வீட்டிலேயே இருக்கலாமா?
>> Sunday, February 11, 2007
உபயோகமில்லாதவை வீட்டிலேயே இருக்கலாமா?
மகாத்மா காந்தி வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார்.
மன்னரைச் சந்திக்க ஆடம்பர உடை அணிந்து வரவேண்டும் என்பது மரபு. ஆனால், காந்தி இடுப்பில் ஓர் வேஷ்டி, மேல் துண்டு என்று இருந்தார்.
காந்தியிடம், நிருபர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு...
'உங்கள் மன்னர் என்னைப் போன்று நான்குபேர் அணியக்கூடிய உடைகளை அணிந்திருக்கிறார். அதனால்தான் என் உடைகளை குறைத்துக் கொண்டேன்' என்றார்.
தேவைக்கு அதிகமாக உடுத்தும் உடையோ, உணவுப் பொருளோ கிட்டத்தட்ட திருட்டுத்தனம்தான்
ஏனென்றால், உங்களிடம் மிகுதியாக இருப்பது, இந்த உலகில் இருக்கும் இன்னொரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டியது.
ஆறு மாதங்களுக்கு மேல் எந்த ஒரு உபயோகமில்லாத பொருள் உங்கள் வீட்டில் இருந்தாலும், உடனே அந்தப் பொருளை ஏதாவது ஒரு சேவை நிறுவனத்திற்கு தானம் கொடுத்து விடுங்கள். யாராக இருந்தாலும், இந்த மனநிலைக்கு வருவது கொஞ்சம் கடினம்தான். அது வந்துவிட்டால் எதுவுமே நமக்குப் பெரிதாகப்படாத. எங்கும், எதிலும் சுகமாயிருக்கலாம்.
ஒரு பாரசீகக் கவிஞர், தான் வீட்டிலிருக்க நேர்ந்தால், வீட்டுக் கதவை மூடி, உட்புறம் தாளிட்டுக் கொள்வார்.வீட்டை விட்டு வெளியே புறப்பட்டால், கதவைத் திறந்து வைத்துவிட்டுச் செல்வார்.
காரணம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்...
'மிகவும் விலை உயர்ந்த பொருளாக என்னை மட்டுமே நான் நினைத்துக் கொள்கிறேன். ஆகவே, விலையுயர்ந்த பொருள் வீட்டில் இருக்கும்போது, கதவைத் தாழ்பாள் இட்டு பாகாப்புச் செய்கிறேன்.'
அவர் சொன்ன பதில் கதையல்ல நிஜம். உலகம், பிரபஞ்சம் ஆகியன இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் இருக்கும் வரை மட்டுமே உங்களுக்கு அவை நிஜம்.
தன்னை உணர்ந்தவன் எங்கும், எதிலும் சுகமாக, சுதந்திரமாக இருக்கிறான். அந்த ஞானியைப் போல்!
தன்னை விட, சொத்து, சொந்தம், பதவி, புகழ் ஆகியவற்றை முக்கியமாகக் கருதுபவன் எங்கிருந்தாலும் சிறைப்பட்டு இருப்பான்! அவற்றை சுற்றிய எண்ணங்களாலேயே!
ரோஜாவுக்கு ஆசைப்படுகிறீர்களா?
பேரறிஞர் ஷிப்லிக்கு ஏராளமான ரசிகர்கள். ஒருமுறை, உடல்நலம் குறைவு காரணமாக படுத்திருக்கும்போது, ரசிகர் கூட்டம் அவரைப் பார்க்க வந்தது.
'நீங்கள் யார்?' எனக் கேட்டார் ஷிப்லி.
ரசிகர் கூட்டத்தினர் 'நாங்கள் உங்கள் ரசிகர்கள், உங்கள் அன்புக்கு உரியவர்கள்' என்றனர்.
ஷிப்லி உடனே தன் அருகே இருந்த பொருட்களை எடுத்து, அவர்கள் மீது வீசியெறிந்தார். அவர்கள் ஓடத் தொடங்கினர். உடனே அவர்...
'உங்கள் அன்புக்குரியவன் தந்த சிறு தண்டனையக்கூட, உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லயே!' என்றார் சிரிப்புடன்.
முட்கள் இல்லாத ரோஜாக்கள் உலகில் இல்லை. தவறுகள் செய்யாத மனிதன் உலகின் எந்த மூளையிலும் இல்ல.
ரோஜாவுக்கு ஆசைப்படுகிறீர்களா! முட்களைப் பிடிக்கத் தயாராகுங்கள். காதலிக்கிறீர்களா... காதலரின் சின்ன திட்டுக்கும் பெரிய திட்டுக்கும்கூட தயாராக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. தட்டும்போதும், திட்டும்போதும் அன்பு கலையாமல், ஆர்வம் குறையாமல் இருக்கப் பழகினால்...
0 comments:
Post a Comment