எண்ணம் வலிமைப் பெற்றால் எல்லாம் கைகூடும்
>> Saturday, February 10, 2007
எண்ணம் வலிமைப் பெற்றால் எல்லாம் கைகூடும்
எண்ணமே மொழியாகிறது
எண்ணமே செயல் வடிவம் பெறுகிறது.
நற்செயல்களையும், தீய செயல்களையும் உருவாக்கும் களமாக எண்ணம் திகழ்கிறது.
மனத்தில் தோன்றும் எண்ணம் மனக்காட்சியாகி உள்ளேயே ஒரு தோற்றமாக கட்டடமாக உருவாகிறது. அது தொடர்ந்து நிலைக்கும் போது செயல் வடிவம் பெறுகிறது என்பது அறிஞர்களின் கருத்து.
எண்ணம் எங்கும் ஊடுருவிச் செல்லும் வல்லமை வாய்ந்தது. எனவே இளைய பருவத்தில் எண்ணத்தை ஒழுங்கு செய்வது அவசியம்.
ஆற்றின் கரைகளுக்குள் நீர் ஒழுங்காகப் பாய்ந்தோடும் போது அதன் பயன் திட்டமிட்டவாறு மக்களைச் சென்றடைகிறது. ஆனால், கரைகளை மீறி காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது அழிவை உண்டாக்குகிறது.
நமக்குத் தேவை ஆக்கமா? அழிவா?
இதன் கரு எண்ணத்தில் உருவாகிறது.
ஆக்கத்தை நோக்கி எண்ணத்தைச் செலுத்த ஒரே வழிதான் உண்டு. எனவே, இளைஞர்களே நல்ல எண்ணங்களை நாமே விரும்பி, முயன்று மனத்தில் இடைவிடாமல் இயங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
விழிப்புடன் நல்ல எண்ணங்களை உள்ளே எப்போதும் உலவவிட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன் ஆகின்றான்.
பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் அறிவின் ஆழத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம். இதற்கு பயிற்சியும், முயற்சியும் தான் தேவை.
தொடர்ந்து இவற்றை செய்து வந்தால் சில நாள்களுக்குள் உங்கள் அறிவும் பிரபஞ்ச அறிவும் ஒன்றாகச் சேரும். அப்போது நீங்களும் அறிஞராகவே ஆகலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவித்தால் இது சாத்தியமாகும்.
கண், காது, மூக்கு போன்ற அய்ம்புலன்கள் மூலமும் அன்றாடம் நம்மை நோக்கி பல காட்சிகளும், தகவல்களும் பாய்கின்றன.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்ற பல ஊடகங்கள் நம்மில் ஊடுருவுகின்றன. அவற்றில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.
நன்மையை தெரிவு செய்து தீமையை விலக்கும் தெளிவை நாம் பெறுவதற்கு எண்ணத் தூய்மை மிகவும் இன்றி யமையாதது.
தம் நினைவு அறிவில் தெளிவு பெற்றவைகளின் நினைவு ஆகியவற்றை எண்ணத்தில் நிலை பெறச் செய்து பழகினால் மனிதன் வாழ்வில் சிறப்புகளை அடைவான் என்பது உறுதி.
எண்ணத்தின் அளவையொட்டியே மனத்தின் தரமும், வாழ்வில் உயர்வும் அமைகின்றன.
குற்றம் குறையில்லாத மனத்தை உருவாக்கிக் கொள்ளுதல் தொடர்ந்த பழக்கத்தின் அடிப்படையிலேயே அமையப் பெறும். எனவே, எண்ணத்தை பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உரமூட்ட வேண்டும். எண்ணத்திற்கு உயிர் ஊட்ட வேண்டும்.
அது எப்படி?
குழியில் விழுந்த யானையை தூக்குவதற்கு மற்றொரு யானையை பயன்படுத்துவது போல எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தை பண்படுத்த முடியும். எண்ணத்தின் தன்மையைத் பயன்படுத்தித்தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.
நாம் எண்ணுகிற செயல்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டு மென்றால், அதற்கு அடிப்படையாக எண்ணத்தை வலிமை பெறச் செய்ய வேண்டும்.
நன்றி: `வெப்-உலகம்’ .
0 comments:
Post a Comment