பற்களின் நிறம்மஞ்சளா? வெள்ளையா?
>> Wednesday, April 4, 2007
பற்களின் நிறம்மஞ்சளா? வெள்ளையா?---மருத்துவர் ஜீவா .
1. பான்பராக், வெற்றிலை போன்ற பழக்கம் இல்லாதவர்களின் பற்களில்கூட மஞ்சள் கறை உருவாகி விடுகிறது. இது எதனால்? இதனைச் சரி செய்ய இயலுமா?
சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத பற்களின் ``பிளாக்’’ எனப்படும் ஒரு மென்மையான மஞ்சள் நிறப் படலம் காணப்படும். இந்த ``பிளாக்’’ எனப்படும் படலத்தை ஆரம்பத்திலேயே அகற்றாமல் விட்டுவிட்டால் இது கால்குலசாக கெட்டியாகிறது. இதனையே பொதுவாக பற்காறை என்பர்.
இதனை சாதாரண பல்தூரிகையைக் (பிரஸ்) கொண்டு பல் துலக்கினால் அகற்ற முடியாது. ஏனெனில், கடினமானதாக இருக்கும். பல் மருத்துவரிடம் சென்று U.S.S. (Ultra Sonic Scaling) மூலம் பற்களைச் சுத்தம் செய்தால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும். எனவே, பான்பராக், வெற்றிலை போன்ற பழக்கம் இல்லாதவர்களின் பற்களில் மஞ்சள் கறை உருவாவதற்கு அவர்களின் முறையற்ற பல் சுத்தமின்மையே காரணம்.
2. பெற்றோர்களுக்கு சிறு வயதிலேயே வழுக்கை விழுந்தால், பிள்ளைகளுக்கும் மரபணு தொடர்பால் வழுக்கை விழுவது இயற்கை. அதேபோல, நடுத்தர வயதிலேயே பற்கள் பலம் இழந்து விடுவதற்கு மரபணு ஒரு காரணமாக இருக்கலாமா?
பற்கள் பலமிழந்து விடுவதற்கு மரபணு ஒரு காரணமாக இருக்காது. கால்சியம் பற்றாக்குறையால் பற்கள் பலம் இழந்து விடுவது உண்டு. முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் அதாவது பற்களைத் துலக்குவதில் சரியான முறை இல்லாமல் இருந்தாலும், பற்களில் அழுக்கு அதிகமாகச் சேர்ந்து பற்கள் பலம் இழந்துவிடும்.
அதனால் மிக விரைவிலேயே பற்களை இழக்கக் கூடும். எனவே, பற்களை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
பழங்களைப் பொதுவாக சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மென்று தின்பது பற்களுக்கு நல்லது. பல் மருத்துவரிடம் சென்று பற்களைத் துலக்கும் சரியான முறையைத் தெரிந்துகொள்வது அவசியம்.
3. என் நண்பனுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சினை வெகுநாள்களாக உள்ளது. பலவித பற்பசைகளை மாற்றிப் பார்த்தும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இதற்குத் தீர்வு என்ன?
பற்களில் சொத்தை அதாவது பற்குழி ஏதாவது இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். சிலருக்கு பற்களில் ஒருவித மஞ்சள் நிற ஏடு பதிந்திருக்கும். அதனையே பற்காறை (கால்குலஸ்) என்பர். அதனால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும். சிலருக்கு வயிற்றில் புண் ஏதாவது இருந்தாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே, பற்குழி இருந்தால் அதனை பல் மருத்துவரிடம் சென்று பற்குழியை அடைத்துவிட வேண்டும்.
பற்களைச் சுற்றிலும் உள்ள காறையை “Scaling” எனப்படும் முறை மூலம் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்தால், வாய்த் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். மேலும், பல் மருத்துவர் பரிந்துரைக்கும் “Mouth Wash”- -யை (வாய் கொப்பளித்தல்) பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.
காலை, இரவு இரு வேளையில் பல் துலக்குவது அவசியம். ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு வாயை நன்கு கொப்பளித்துவிட வேண்டும். இதுபோக, மருத்துவ வழியான சில உடல் உள் உறுப்புகள் பாதிப்பினாலும் வாய் துர்நாற்றம் வரலாம். அதற்குரிய சிகிச்சை எடுத்தால் இப்பிரச்சினை தீரும்.
4. என்னதான் அழுத்தி, அழுத்தித் தேய்த்தாலும் பற்களில் ஒருவித மஞ்சள் படிமம் இருக்கத்தான் செய்கிறது. தூய வெண்நிறப் பற்களைப் பெற என்ன செய்யவேண்டும்?
பொதுவாக பற்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். வயது ஆக ஆக பற்களில் இருக்கும் ``எனாமல்’’ என்ற லேயர் தேய்ந்து போய் பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். சிலருக்கு பற்களில் மஞ்சள் நிற ஏடுபோல் படிந்து காணப்படும். அது பற்களைச் சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருப்பதே காரணம். அதனை பல்தூரிகை (பிரஸ்) கொண்டு சுத்தம் செய்வதால் நீக்க முடியாது.
பல் மருத்துவரிடம் சென்று பற்களை “Scaling மூலம் சுத்தம் செய்வதால் நீக்கவிடலாம். வருடத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை “Scaling” மூலம் சுத்தம் செய்வது நல்லது. சிலர் அதனால் பற்கள் பாதிக்குமோ என்று பயப்படுவார்கள். “Scaling” செய்வதால் பற்களுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது.
அதனால் பற்கள் பலம் இழக்காது. வெண்நிறப் பற்களை பெற ``பிளீச்சிங்’’ என்ற முறையினால் வெண்மையான பற்களைப் பெறலாம். ஆனால், இந்த முறையில் செய்வதால் பற்களில் சிலருக்கு கூச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. -SOURCE: INTERNET
0 comments:
Post a Comment