விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்
>> Thursday, April 12, 2007
விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்!
செவ்வாய், 06 பெப்ரவரி 2007
அருள்மறை குர்ஆனைத் தாம் பல வருடங்களாகப் பொருளறிந்து படித்ததன் விளைவாக ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே 61 வயதான அமெரிக்காவின் மேகான் நகர மேயர் ஜாக் எல்லிஸ் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாக அறிவித்துள்ளார்.
இறைவனின் புறத்திலிருந்து உதவி செய்யப்பட்ட விவேகம் மிக்கவர் என்ற பொருள்படும் "ஹக்கிம் மன்சூர்" என்ற அழகிய பெயரை மேகான் நகர இஸ்லாமிய மையத்தின் இமாம் ஆதம் ஃபோபனா அவர்கள் தேர்ந்தெடுத்து இவருக்குச் சூட்டியுள்ளார்.
வாழ்க்கையின் அனுபவ அறிவுபெற்றவர் என்றும் நல்லவை தீயவைகளைப் பிரித்தறிபவர் என்றும் பொருள்படும் ஹக்கிம் என்ற பெயரையும், இறைவனின் புறத்திலிருந்து உதவியை எதிர்பார்த்து செயல்படுபவர் என்று பொருள்படும் மன்சூர் என்ற பெயரையும் இணைத்து இவர் வைத்துள்ளது ஓர் அழகிய ஒருங்கிணைப்பு எனத் தெரிவித்துள்ள இமாம் ஆதம் போபனா அவர்கள் மலேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிக்க மேற்குக்கரையிலுள்ள செனேகல் நாட்டில் கடந்த டிசம்பரில் நடந்த ஓர் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கையில், இஸ்லாம் போதிக்கும் அழகிய நபிவழியிலான வாழ்க்கையைத் தான் விரும்பி தேர்ந்தெடுத்துத் தழுவியதாகக் கூறும் ஜாக் எல்லிஸ் அடிப்படையில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராவார்.
உள்நாட்டு சட்டப்படி தன் புதிய இஸ்லாமிய பெயரைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், தன் இரு மகள்களின் விருப்பத்திற்கேற்ப எல்லிஸ் என்ற தன் குடும்பப்பெயரையும் புதிய பெயருடன் இணைத்து வைத்துள்ளார்.
90 சதவீதம் முஸ்லிம்களையும், கிறித்துவ ஆட்சியாளர்களயும் கொண்ட செனகல் நாட்டில் மத ரீதியாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாக ஜாக் எல்லிஸ் அவர்களின் மனமாற்றம் அமையும் என்று இமாம் போபனா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் பெருவாரியான வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பினும், இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பே தன் மதமாற்றத்திற்குக் காரணம் என்று ஜாக் எல்லிஸ் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மையத்தின் மத்திய வாரிய இயக்குனரான முஹம்மத் ஸ்க்ராஃப் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜாக் எல்லிஸின் மன மாற்றம் தனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் கடந்த சில வருடங்களில் மத்திய ஜார்ஜியா பகுதியில் இஸ்லாத்தைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்டினார்.
ஜாக் எல்லிஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை முதன் முதலில் அஸோஸியேட்டட் பிரஸ் ஊடகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு அறிமுகமானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், அட்லாண்டா பத்திரிகை நிறுவனம் CNN, Fox News மற்றும் டைம்ஸ் பத்திரிகை உள்பட பல்வேறு இணைய தளங்களில் தலைப்புச் செய்தியாக இவரது செய்தி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல டெலிகிராப் இணைய தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளைக்குள் இச்செய்தி 10 ஆயிரம் பேரால் படிக்கப்படுள்ளது
மேகான் நகர 176 ஆண்டுகால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் கறுப்பின மேயரான எல்லிஸ், 1999 முதல் பதவி வகித்து வருகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் போது அவர், அமெரிக்கர்களுக்கு ஊடகங்கள் வழியே சொல்லப்படும் இஸ்லாம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் இஸ்லாம் குறித்து தான் அறிந்து கொண்ட அளவை வைத்தே தன்னால் இஸ்லாத்தைக் குறை சொல்வோருடன் அழகிய விவாதம் புரிய இயலும் என்றும் கூறினார்.
அமெரிக்க நகரத்தின் மேயரான ஹக்கிம் மன்சூர் எல்லிஸ் (ஜாக் எல்லிஸ்) விரும்பி, இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு அவரது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பரவலாக பெற்றிருக்கும் சூழலில், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் ஆளும் தலைமை உள்பட பல்வேறு நகரங்களில் அதிர்ச்சி அலைகள் எழுந்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.
0 comments:
Post a Comment