ஜப்பானியப் பெண்மணியான கவுலா சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம்
>> Saturday, April 14, 2007
ஜப்பானியப் பெண்மணியான கவுலா
சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம் .
(ஜப்பானியப் பெண்மணியான கவுலா அவர்கள் தன்னுடைய அனுபவத்தை விவரிக்கின்றார்கள்)
பிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.
சார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும் மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான். மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை.
ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய அக்கறையாக இருந்து வந்தது. நான் என்னொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது. கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத் தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ, தேர்ந்தெடுக்க விரும்பினேன்.
இஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்).
நான் கிறிஸ்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பைபிளைப் படித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு கடவுள் இருக்கிறார் என நம்பினேன். இறைவன் இருக்கத் தான் வேண்டும் என நான் நம்பினாலும் அவன் இருப்பதை நான் உணர முடியவில்லை. நான் சர்ச்சில் தொழுது பார்த்தேன். ஆனால் அது வீணில் தான் முடிந்தது. இறைவன் இல்லாமலிருப்பதைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை.
ஜென் அல்லது யோகா மூலமாக இறைவனை உணரலாம் என்று நினைத்துக் கொண்டு நான் புத்த மதத்தைப் படித்தேன். கிறிஸ்தவ மதத்தில் இருந்ததைப் போலவே பல உண்மையான விசயங்கள் அதிலும் இருந்ததைக் கண்டேன்.
ஆனாலும் நான் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியாத ஏராளமான விசயங்கள் அதில் இருந்தன. என்னைப் பொறுத்தவரையில், இறைவன் இருந்தால் அவன் எல்லோருக்குமுள்ள இறைவனாக இருக்க வேண்டும்.
மேலும் சத்தியம் என்பது எளிமையானதாகவும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஏன் மக்கள் தங்களுடைய வழமையான வாழ்க்கையைத் துறந்து விட்டு இறைவனுக்கே தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இறைவனைத் தேடும் கடும் முயற்சியின் இறுதியை அடைய என்ன செய்வது என எனக்கு தெரியாமலிருந்தது. அப்பொழுது தான் நான் ஒரு அல்ஜீரிய முஸ்லிமைச் சந்தித்தேன். பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு எப்படித் தொழுவது என்று கூடத் தெரியவில்லை.
அவனுடைய வாழ்க்கை ஒரு சரியான முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது. ஆயினும் அவன் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்.
ஆனால் எந்தவொரு அறிவுமேயில்லாமல் இறைவனை நம்புவதென்பது என்னை எரிச்சல்படுத்தி இஸ்லாத்தைக் கற்கத் தூண்டியது. ஆரம்பமாக பிரஞ்சு மொழியிலுள்ள திருக்குர்ஆனை வாங்கிப் படித்தேன். ஆனால் என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அது மிகவும் விநோதமாகவும் போரடிப்பதாகவும் இருந்தது.
தனியாக அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு விட்டு எனக்கு உதவி செய்யும்படி யாரையாவது கேட்பதற்காக பாரீசிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றேன். சகோதரிகள் என்னை நன்றாக வரவேற்றனர். இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்களை நான் சந்திப்பது அதுவே முதல் முறை.
கிறிஸ்தவ பெண்களுடன் இருக்கும் போது மிகவும் அந்நியத்தை உணர்ந்த நான், வியக்கும் வகையில் முஸ்லிம் சகோதரிகளோடு மிகவும் அன்னியோன்யமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ளத் தொடங்கினேன்.
முஸ்லிம் சகோதரி ஒருவரால் கொடுக்கப்பட்ட பத்தகம் ஒன்றை படித்தும் வந்தேன். சொற்பொழிவின் ஒவ்வொரு வாக்கியமும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நான் முன்னர் ஒரு போதும் அறியாத ஆத்மீக திருப்தியை தரும் இறை வெளிப்பாடாகவே எனக்கு இருந்தது.
சத்திய ஊற்றில் மூழ்கிய உணர்வு என்னுள் பொங்கியது. அதிசயமானது என்னவெனில், ஸுப்ஹானல்லாஹ்..! நான் ஸஜ்தாவிலிருக்கும் போது இறைவன் எனக்கு மிக அருகிலிருக்கும் உணர்வைப் பெற்றேன்.
ஹிஜாப் பற்றி கவுலாவின் கருத்தும் அனுபவமும்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவிய போது பள்ளிக் கூடத்திற்குள் ஹிஜாப் அணிவதைப் பற்றி மிகவும் சூடான சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மதங்களோடு சரிசம நிலையில் இருக்க வேண்டிய பள்ளியின் கொள்கைக்கு அது எதிரானது என பெரும்பாலோர் கருதினர்.
முஸ்லிம் மாணவிகள் தங்கள் தலையை ஸ்கார்ப்பினால் மறைப்பது போன்ற சிறிய விசயத்திற்காக அவர்கள் ஏன் அவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என அப்பொழுது முஸ்லிமாகாதிருந்த எனக்குப் புரியவில்லை.
ஆனால் வேலை இல்லாத் திண்டாட்டம், பெரிய நகரங்களில் நிலவிய பாதுகாப்பின்மை போன்ற மிகவும் மோசமான பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிட்ட பிரஞ்சு மக்கள் அரபு நாடுகளிலிருந்து பணி புரிவதற்காக ஆட்கள் வருவதை எண்ணி மிகவும் எரிச்சல்பட்டார்கள். அவர்கள் தங்களின் நகரங்களிலிருந்து பள்ளிகளிலும் ஹிஜாபை கண்டு மிகவம் மனக் கிலேசத்திற்குள்ளானார்கள்.
மறுபுறம் அரபு நாடுகளில், மேற்கத்திய கலாச்சாரம் வேர்விட்டதால் பர்தா மறைந்து போவதற்குப் பதிலாக, மிகப் பெரும்பான்மையான மேற்கத்தியர்களும் மற்றும் சில அரபியர்களும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்ததற்கு மாற்றமாக, ஹிஜாபிற்கு, குறிப்பாக இளம் பெண்கள், ஏராளமாக திரும்பி வருவது காணப்பட்டுக் கொண்டிருந்தது.
தற்பொழுது ஹிஜாபின் மறுமலர்ச்சியால் பிரதிபலிக்கப்பட்ட இஸ்லாமிய எழுச்சி காலனித்துவம் மற்றும் பொருளதாரப் பின்னடைவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அரபு முஸ்லிம்கள் தங்களுடைய கௌரவம், மற்றும் தனித்தன்மை ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ள செய்யும் முயற்சியே என்று கருதப்படுகிறது.
அரபுகள் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றி வாழ்வது தொன்று தொட்டு வரும் நடைமுறைகளைப் பின்பற்றுவதாலோ அல்லது மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மையாலே ஏற்பட்டிருக்கலாம் என்று ஜப்பானியர்களுக்கு தோன்றலாம்.
ஏனெனில் மேற்கத்தியவர்களுடன் தொடர்ப கொண்ட பிஜீ காலத்தில் அவர்களும் இத்தகைய எதிர்ப்புணர்ச்சியை உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான் மேற்கத்திய வாழ்க்கை முறை, உடை ஆகியவற்றிற்கு எதிர்ப்பாகச் செயல்படுகின்றனர். மனிதன் எப்போதுமே பழமைவாத உணர்வுகளைக் கொண்டவனாக இருக்கிறான்.
ஆகவே தான் புதிய அல்ல தெரியாத எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நன்னமை பயக்கக் கூடியதா அல்லது தீமை பயக்கக் கூடியதா என்று உணராமல் எதிர்க்கிறான்.
தங்களுடைய பரம்பரை பழக்க வழக்கத்திற்கு அடிமையானதாலும் தங்களுடைய துயரமிக்க நிலையை சரிவர தெரிந்து கொள்ளாததாலுமே முஸ்லிம் பெண்கள் ''நசுக்கப்பட்ட சூழ்நிலை"" யின் சின்னமாக ஹிஜாபை அணிய வேண்டுமென வற்புறுத்துகின்றனர் என சிலர் இன்னும் நினைக்கின்றனர்.
பெண் விடுதலை மற்றும் சுதந்திர இயக்கம் அவர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினால் அவர்கள் ஹிஜாபை தூர எறிந்து விடுவார்கள் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.
இஸ்லாத்தைப் பற்றி சொற்ப அறிவே உள்ள சிலர் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். உலகாதாய மற்றும் பல்வேறு மதக் கொள்கைகளைப் பின்பற்றும் மனோப்பாங்குள்ளவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை உலகளாவியவை, எக்காலத்திற்கும் ஏற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
எவ்வாராயினும், ஏராளமான அரபுகளல்லாத பெண்களும் இஸ்லாத்தை சத்திய மார்க்கமென ஏற்று அதைத் தழுவி தங்களுடைய தலையை மறைத்து வருகின்றனர். அது போன்ற பெண்களில் நானும் ஒருத்தி.
நன்றி: தமிழ் இஸ்லாம்.காம் ----posted by அபூ ஸாலிஹா.
0 comments:
Post a Comment