ஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை.
>> Saturday, April 7, 2007
ஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை. இருக்கும் உடைகளைச் சுத்தபத்தமாகப் பயன்படுத்தினாலே போதும்.
நம் கண்ணில் படும் காட்சிகள், நம்மையும் மீறி நம்முள் செயல்படுகின்றன.
தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சொருகப்பட்ட எலக்ட்ரோடுகளோடு ஒரு கும்பல் பென்சல்வேனியா வேளாண்மை பல்கலக்கழகத்தின் வேளாண்மை தோட்டத்தில் உட்கார்ந்திருந்தது.
அந்தக் கும்பலை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மருத்துவக் குழு, அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கும்பலை அவசர அவசரமாக பஸ்ஸில் ஏற்றி, அருகேயிருந்த செயற்கைப் பூங்காவிற்கு இட்டுச் சென்றது.
இயற்கைக் காட்சிகள் நிறைந்த பல சூழல்களிலும், மிக அழகான பல செயற்கைப் பூங்கா மற்றும் கேளிக்கை இடங்களிலும் அவர்களைப் பார்க்க வைத்து மருத்துவக் குழு பரிசோதித்துப் பார்த்தது. வெளிக்காட்சிகள் மூளையின் அலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிட்டது.
ஆராய்ச்சியின் முடிவு ஆச்சரியம் நிறைந்தது. இயற்கைச் சூழல்களைப் பார்க்கும்போது, மூளை அலைகள் படிப்படியாக அமைதி நிலை நோக்கி நகர்ந்தது. எவ்வளவு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தாலும் சரி, செயற்கைச் சூழல்கள் இயற்கைச் சூழல்கள் அளவுக்கு அமைதியைத் தரவில்லை என்று மூளையின் அலைகள் படம்பிடித்துக் காட்டின.
நம் கண்ணில் படும் காட்சிகள், நம்மையும் மீறி நம்முள் செயல்படுகின்றன. மூளையின் அலைகளையே மாற்றுகின்றன. நம் இரத்த ஓட்ட மண்டலத்தில் ரசாயனங்களப் பொழியச் செய்கின்றன.
நாமிருக்கும் இடம் சுத்தபத்தமாக இருப்பதும், சுத்தமில்லா அழுக்குப் படிந்திருப்பதும் இதேபோன்ற மாற்றங்களை இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படுத்தும். உடல் பாதிப்பிற்குள்ளாகும்.
சுத்தபத்தமாக இல்லாதிருப்பது, நாம் சுய ஆரோக்கியத்தோடு இல்லையென்பதற்கான அடையாளங்கள்.
நாமிருக்கும் இடத்தையும், நம்மையும், சுத்தபத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், நம்மை நெருங்குபவர்களையெல்லாம் நாம் பாதிப்புக்குள்ளாக்குவோம்.
'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பது ஏதோ சாதாரண நாடோடிப் பழமொழியல்ல. நம் மூதாதையரின் அன்றைய மனோதத்துவ முதிர்ச்சியை இன்று நமக்கு விளக்கும் மகாமொழிகள்.
நம்மைப் பார்க்க வருபவர்களுக்கும், நம்மோடு பழகுபவர்களுக்கும் நல்ல உணர்வுகளயே பரிசாக வழங்க வேண்டும். நம்மோடு நமக்கு நெருங்கியவர்கள் இருக்கும் போது, அவர்களுக்குள் ரம்மியமான ரசாயன மாற்றங்கள் மட்டுமே உருவாக வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி சுத்தபத்தமாக இருக்க முயற்சிப்பது, ஆரோக்கியமடைவதற்கான ஒரு டெக்னிக்.
உள்ள சுகமின்மையால்தான், வெளி சுத்தமின்மை நம்மைத் தொற்றிக் கொள்கிறது. வெளியே சுத்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், உள்ளுக்குள் சுகத்தன்மை உருவாக ஆரம்பிக்கும். நல்ல ரசாயன மாற்றங்கள் நம்முள் ஏற்பட ஆரம்பிக்கும்.
ஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை. இருக்கும் உடைகளைச் சுத்தபத்தமாகப் பயன்படுத்தினாலே போதும்.
அழகாக இருந்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால், கட்டாயமாக அசுத்தம், ஒழுங்கின்மை நம்மிடமோ, நாமிருக்கும் இடத்திலோ இருக்கக் கூடாது சிறிதளவு கூட!
மற்றவர்களுக்கும், நம் உடலுக்கும் நல்ல ரசாயன மாற்றங்களையே பரிசாக அளியுங்கள். சுத்தபத்தத்தைக் கடைப்பிடியுங்கள். (சிறிதளவு கூட அசுத்தமோ, ஒழுங்கின்மையோ வெளிப்படுத்துவதுகூட, சமூகக் குற்றமாகக் கருதப்பட வேண்டிய ஒன்றுதான்!
'எனக்குத் தெரியாததா இது' என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுத்தபத்தத்தை ஒரு டெக்னிக்காகக் கடைப்பிடியுங்கள். சுகத்தன்மையைப் பெறுங்கள். மற்றவரும் நாமும் நலம் பெற வழிசெய்வோம்.
SOURCE: KUMUDAM. NANDRI TO: KUMUDAM.
மற்ற பதிவுகளை படிக்க: >> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment