தரையில் உட்கார வழி செய்யும் நவீன முறை முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை
>> Monday, April 23, 2007
தரையில் உட்கார வழி செய்யும்
நவீன முறை முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை
சென்னை, ஏப்.22- நவீன முறையில் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம், நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு தரையில் உட்காருவது, மாடிப்படிகளில் ஏறுவது ஆகியவை சாத்தியமாகும் என்றார் முட நீக்கியல்அறுவை சிகிச்சை நிபுணர் எஸ். சிவமுருகன்.
சென்னை அண்ணாநகர் சவுந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையில் இயக்குநராக உள்ள அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மூட்டு வலி காரணமாக ஒருவர் பாதிக்கப்படும் நிலையில், நடக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிற நோய்களும், அந்த நோயாளிக்கு தீவிரமடைய வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே ஒருவரை முடக்கும் மூட்டு வலிக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும் நிலையில் அறுவை சிகிச்சையை எளிதாகத் தவிர்க்க முடியும்.
மூட்டு நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும் நிலையில், நோயின் தன்மைக்கு ஏற்ப உடலின் எடையைக் குறைத்தல், உணவுக் கட்டுப்பாடு, பிஸியோ-தரப்பி உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மூலம் நிவாரணம் கிடைத்து விடும்.
நோய் முற்றி விட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு. முழங்கால் மூட்டு தீவிர மாக பாதிக்கப்படும் நிலையில் அறுவை சிகிச்சை மூலம், காலே அகற்றப்படும் என்ற பயம் வேண்டாம். மாறாக பாதிக்கப்பட்ட எலும்பு மட்டும் நீக்கப்பட்டு, செயற்கை மூட்டு பொருத்தப்படும்.
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். பாதிக்கப்பட்ட எலும்பு உள்ள இடத்தில் மட்டும் கீறல் செய்யப்பட்டு நவீன முறையில் `ஹைபிளக்ஸியான்’ மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்படும். இந்த நவீன சிகிச்சை காரணமாக 155 டிகிரி அளவுக்கு செயற்கை மூட்டை நோயாளியால் அசைக்க முடியும். சிகிச்சைக்குப் பிறகு தரையில் உட்காருவது, மாடிப்படிகளில் ஏறுவது ஆகியவை சாத்தியமாகும். இந்த சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் செலவாகும் என்றார் டாக்டர் சிவமுருகன்.
----------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment