ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர்.
வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.
செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன.
அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை.
இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன.
ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில்
இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது
இன இழிவு நீங்கியபாடில்லை.
அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும்.
MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.
இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல; இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.
ஆதி காலத்தில் தமிழக மக்கள் "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன.
இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.
இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.
மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர்.
அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்கவழிவகுக்குமா?
அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே பொய்க்கடவுளர்களின்கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா?
ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை.
இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான "இன இழிவு இஸ்லாமே நன் மருந்து" ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார்.
பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.
இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான்.
இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.
இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள்.
எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே!
அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை.
தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே!
ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல்உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை.
அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள். அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள்.
இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.
ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த
இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது.
மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.
நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை.
அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
அம்பேத்கார் தழுவிய பெளத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது.
அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.
இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்?
இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை.
அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.
அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள்.
இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்
"எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. "
"மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு." அல்குர்ஆன் அத்தியாயம் 2:174
ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள்.
ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர்.
தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.
அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள்.
எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும்.
இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல் "என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர்." (25:30 அல்குர்ஆன்) என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை.
எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்
"எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். " என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம்.
மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.
அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.
எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா?
(நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.
தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.
பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
NANDRI: http://www.readislam.net/untouchable.htm
------------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
மேலும் படிக்க... Read more...