‘எனக்கு வயதாகிவிட்டது’ என்ற பிலாக்கணம் தேவையற்றது’
>> Friday, February 15, 2008
50 வயது, 55 வயது என்றவுடன் தான் வகித்த பதவியிலிருந்து ஓய்வு பெறும் வயது என்று மட்டும் எண்ணாமல் எல்லாமே முடிந்துவிட்டது என்பதுபோல ஒரு கற்பனையில், `மாயையில்’ தள்ளப்பட்டு, ஒரே நாளில் முகம் வெளிறி, இளைத்துப் போனவர்களாக தோற்றப் பொலிவிலும் பலர் காணப்படுகின்றனர்.
வயது அதிகமாவதை எப்படியும் தடுக்க முடியாதுதான். அதற்காக அது குறித்த ஓலமும் ஒப்பாரியும் தேவையற்றது என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.
வயது அதிகமானாலும் வாலிப வசீகரத்துடன் வாழ்வது என்பது ஒருவரால் முடியும்!
காரணம் உடலில் உள்ள சக்தி (Energy) என்பது உடலில் உருவாகும் அதே நேரத்தில் மனதில் உருவாகும் சக்தியோ அதைவிட ஆற்றல் வாய்ந்தது. மனோதிடம் என்று சொல்லுகிறோமே அது உடலைப் பொறுத்தது அல்ல என்பதுதானே உண்மை?
உடலின் சக்தி (Physical Energy) என்பதைவிட மிகவும் பலமானது (Mental Energy) மனோசக்தி. அதுதான் உடலின் சக்தியை வழி நடத்திச் செல்லும் சக்தியாகும்!
அதை நாம் தொடர்ந்து ஏற்று வந்தால் எப்போதும் சீரிளமைத் திறத்துடன் வாழலாம். நமது உருவம், தோற்றம் எல்லாமே இந்த மன எழுச்சி - மனோசக்தி மூலம்தான்!
பாறையைக் கூட அசைக்கலாம் என்ற மன எழுச்சிக்கு முன்னால் எவ்வளவு கடினமான பணியும்கூட சாதாரணம்தானே.
புரட்சிக்கவிஞர் வேறு ஒரு சூழலில் கூறுவார்:
`கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்!’
மாமலை ஓர் கடுகாகும்! - ஆம் உள்ளத்தின் உந்துதலும்
ஊற்றாகப் பெருகும் உற்சாகமும் நிரந்தரமானால்!
`நான் சோம்பல் அறியாதவன்; என்றும் சுறுசுறுப்புடன் இருப்பவன்’ என்று சதா உங்கள் மனதில் எண்ணி, மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள்!
சிறுசிறு வேலைகளானாலும் உற்சாகத்துடன் செய்யுங்கள்.
ஒரு நாளைக்கு எழுந்தவுடன் இதை அய்ந்து முறையாவது மனதில் சொல்லி, சுறுசுறுப்பை வரவழைத்து, நிதானம் தவறாமல் ஓடியாடி பணியாற்றுங்கள்!
தொலைக்காட்சியின் முன்போ, நாற்காலியிலோ தொடர்ந்து பல மணிநேரம் அமர்ந்திருக்காதீர்கள்.
எழுந்து நடந்து, சுற்றிப் பார்த்து, கை, கால் ஆட்டி, இயற்கையின் எழிலைச் சுவைத்து அல்லது சிலரது வேலையைத் தானே வாங்கியாவது செய்து சுறுசுறுப்பை நிலை நிறுத்துங்கள்!
என்றும் நீங்கள் பயனுறு வாழ்க்கையை அனுபவிப்பவர்களாவீர்கள்!
1920-இல் வின்ஸ்டன் சர்ச்சில் தனது முதுமையில் - அவரது உடல்நலம் பெரிதும் ஒத்துழைத்தது என்று கூற முடியாத நிலையிலும்கூட, புதிதாக செங்கற்களை அடுக்கி கட்டடம் கட்ட கட்டுமானத் தொழிலாளர்களிடம் பயிற்சியாளராகி, அவரது கோடைகால இல்லத்தையும், அதனைச் சார்ந்த தோட்டத்தினைச் சுற்றி உயரமான மதில் சுவரையும் அவரே கட்டிக் கொண்டு அந்த உழைப்பின் மூலம் அவர் தன்னை சீரிளமைத் திறன் வாய்ந்தவராக்கிக் கொண்டார்!அவரது இந்த இல்லம் லண்டனில் சார்ட் வெல் (Chartwell) என்ற பகுதியில் உள்ளதை இன்றும் காணலாம்!
95 வயதிலும் தந்தை பெரியார் தம் மூளை சுறுசுறுப்பும், உழைப்பும் அப்பப்பா வர்ணிக்கக் கூடியதா!
84 வயதிலும் முதலமைச்சர் கலைஞரின் பலதரப்பட்ட உழைப்பு - ஆட்சி நிருவாகம், எழுத்துப் பணி, ஆளுமை, பேச்சு, விழாக்கள், கலைத்துறை - இத்தியாதி பணிக்கடலில் அவர் மூழ்கி எழுந்தே நித்தம் நித்தம் புத்தம் புதியவராய், புது சாதனை படைப்பாளராகத் திகழுகிறாரே அதற்குக் காரணம் அவரது சுறுசுறுப்புதானே?
எனவே, `எனக்கு வயதாகிவிட்டது’ என்ற பிலாக்கணம் தேவையற்றது! அதற்குப் பொருள் ``நான் சோம்பேறித் தனத்தில் தள்ளப்பட்டு என் வாழ்நாளை குறுக்கிக் கொண்டு விட்டேன்’’ என்பதுதான், மறவாதீர்!
எனவே, சீரிளமையோடு வாழ மனதில் சக்தியைத் தேக்கி வைத்து மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் SOURCE: INTERNET.
--------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
வயது ஆவதை பற்றிய எனது எண்ணங்களை பற்றி நான் எழுதிய பதிவு http://dondu.blogspot.com/2006/09/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment