குட்டி யானையும், இரும்புச் சங்கிலியும் ! உங்களின் குட்டி யானைகளையும் உசுப்பிவிட்டு உணர்வூட்டுங்கள் !
>> Saturday, February 16, 2008
நம்மில் மிகப் பெரும்பாலோர் சாதனையாளர்களாகவோ அல்லது நாம் விரும்பிய பலவற்றை அடைய முடியாதவர்களாகவோ இருப்பதற்கு அடிப்படைக் காரணம் நாம் நமது மதிப்பை - ஆற்றலை குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளுவதேயாகும்!
இந்த தன் மதிப்பினைக் குறைத்து சிந்திப்பதை எவராலும் சரிப்படுத்தி, முன்னுக்கு வர முடியும் - அதை அவர்கள் உணர்ந்தால், சரியாகப் புரிந்துகொண்டால்.
புத்திசாலிகளாக அவர்கள் இருப்பின், தங்களது தோல்விக்காகத் துவண்டு, சுருண்டு போகாமல், அதன் காரணங்கள் என்னவென்று ஆராய்ந்து, அத்தோல்வியைப் பாடமாகக் கொண்டு, அதன் பிறகு அங்குள்ள தடைகளை நீக்கிச் செயல்பட்டால், வெற்றி இவர்களைக் கட்டி அணைத்து முத்தமிடுவது உறுதி!
குட்டியானை ஒன்றை இரும்புச் சங்கலியில் அதன் உரிமையாளர் கட்டி வைக்கப்பட்ட நிலையில், பலமுறை முயன்று முயன்று அந்தக் குட்டி யானை அந்தக் கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் வெற்றி பெற முடியவில்லை.
அதன்பிறகு, அதன் மூளையிலேயே ஒரு விலங்கு ஆழமாகப் போடப்பட்டுவிட்டது! அந்தக் குட்டி யானை - இரும்புச் சங்கிலியால் அல்ல, மற்ற சாதாரணமானவைகளால் கட்டி வைக்கப்பட்ட நிலையில்கூட அதனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்ற துணிச்சலை அது இழந்துவிட்டது!
அதுபோலத்தான் நம்மில் பலரும் இளவயதில் சிற்சில கட்டுப்பாடுகளுக்கு ஆளாகி விட்டபடியால், அவர்கள் தங்கள் ஆற்றலை, திறனையே இழந்துவிட்டவர்களைப் போன்ற ஒரு சிந்தனை அவர்களையும் அறியாமல், அவர்களது மனதிற்குள் புகுந்துவிடுகிறது! அதைப் பெயர்த் தெறிவது அவ்வளவு எளிதானதல்ல!
பெற்றோர்களில் பலரும் தத்தம் குழந்தைகளை வளர்க்கும்போது குட்டி யானை இரும்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டது போன்று தேவையில்லாமலேயே தேவைக்கு மேற்பட்ட கட்டுக்களைப் போட்டு விட்டதன் மீளாப் பயன் நமதுகுழந்தைகள், , இளசுகள் துணிச்சலுடன் மீண்டு சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர்களாக வளருவதேயில்லை என்பது மிகவும் வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்பட வேண்டிய உண்மையாகும்!
தனது ஆற்றலை, மதிப்பை சரியாக எடைபோடத் தவறிய மனிதர்களால் கனவு (விழைவுகள் - தொலைநோக்குத் திட்டங்கள்) காணவே முடியாது!
எவரால் கனவு (தனிச் சொல்லாடல் இது) காண முடியாதோ அவர்களால் சமுதாயத்திற்கு வழிகாட்டிடும் சாதனையாளர்களாகச் சரித்திரத்தில் நிலைக்கவே முடியாது!
வாழ்க்கையில் அறைகூவல்களைச் சந்திக்க, துன்பங்கள் - துயரங்களை எதிர்கொள்ள தக்க ஆற்றல் நம்மிடம் உண்டு என்று உள்ள உறுதியுடன் நாம் உழைத்திட வேண்டும்.
நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை எழுப்பி விடுங்கள், தூங்கியவர் விழித்தால், துடிப்போடு செயல்படுவது இயற்கை.
கடுமையான உழைப்பினாலும், தன்னையறிந்து செயல்படத் தயங்காதவர்களும் சாதனையாளர்களாவது உறுதி!
தன்னை வெல்லுவான் தரணியை வெல்வான்!
தன்னையே புரியாதவன் என்றும் வாழ முடியாத கையாலாகாத மரக்கட்டைபோல் கிடப்பான்!
உங்களின் குட்டி யானைகளையும் உசுப்பிவிட்டு உணர்வூட்டுங்கள்! மிகவும் அடக்கி செயலற்றவர்களாக ஆக்கிவிடாதீர்! -NANDRI: INTERNET.
-----------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment