**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இஸ்லாம் ஏன் ? எதற்காக ? - பெரியார். !!!

>> Tuesday, February 5, 2008

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! -

ஆதி திராவிடர்கள் மதம் மாறுதல்-பெரியார்
(பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.

அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை.

ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால்,

அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன.

வீரம் இருக்கின்றது.

வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான்.

இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை.

அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை.

அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும்.

இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.

இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது.

இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள்.

அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.

ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை.

ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம்

. ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது?

கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா?
கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
NANDRI TO: http://idhuthanunmai.blogspot.com/2008/02/blog-post_03.html

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP