எது பெண்ணுரிமை?
>> Sunday, February 3, 2008
நமது இந்தியக் குடியுரிமைச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் அடுத்தவரின் உரிமையைப் பாதிக்காமலும் பறிக்காமலும் தான் விரும்பியதைச் செய்ய முழு உரிமை பெற்றவராவார்.
போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு, இஸ்லாமியச் சட்டபுத்தகமான திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.
இஸ்லாத்தினைக் குறை கூற முற்படுமுன் தங்களது வழிபாட்டிற்குரிய மதங்கள் என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விடுவர்.
பிறப்பதில் உள்ள உரிமை!
பெண்குழந்தை என்றால் சிசுவிலேயே அழித்துவிடுவதையோ அல்லது பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதையோ இஸ்லாம் மிக வன்மையாக எதிர்க்கிறது. பெண்குழந்தை பிறந்தால் உண்மையான முஸ்லிம் அதனை ரஹ்மத் (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று சந்தோஷப்படுவர். பெண்ணுக்கு வயது வந்தவுடன் பொருத்தமான மணமகனைத் தேடித் திருமணம் செய்யும்போது பெண்களுக்குரிய மஹரைக் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள் என்பது இறைக்கட்டளையாகும் (காண்க அல்குர்ஆன் 4:4)
அறிவைப் பெருக்குவதில் உரிமை!
ஆண்குழந்தைக்கு வழங்குவது போன்றே சற்றும் பாரபட்சமில்லாமல் பெண்ணுக்கும் கல்வியறிவை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் வழக்கறிஞர்களுக்கு ஈடான அறிவுஞானம் பெற்றிருந்தது இதற்கு ஒரு சான்று.
பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது, திறம்பட நிர்வாகிப்பது, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, மருத்துவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக இப்படி அனைத்துத் துறையிலும் பிரகாசிப்பதையும் அறிவைப்பெருக்கிக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களுடன் போர்க்களத்தில் பல பெண்மணிகள் உதவி செய்து பணியாற்றி உள்ளார்கள் என்பதே இதற்குச் சான்று.
அதேவேளை, தான் ஒரு பெண் என்பதை மறந்து எல்லையைத் தாண்டிவிடுவதைத்தான் இஸ்லாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இறைவன் ஆணையும் பெண்ணையும் மனித இனமாகவே படைத்திருந்தாலும் பெண்ணின் இயல்பான உடலமைப்பு, ஆண்களைக் கவரக்கூடியதாகவே அமைந்துள்ளது. சட்டென சபலத்திற்குள்ளாகும் ஆண்களது மனதைப் போல் அல்லாஹ் பெண்ணுக்குப் படைக்கவில்லை என்பதே யதார்த்தம். அதே போல் பெண்ணுக்கு உரிய உடல், மன பலவீனங்களை ஆணுக்கு இறைவன் கொடுக்கவில்லை.
அதனாலேயே ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலந்து பணியாற்றும் சூழலை இஸ்லாம் தடுக்கிறது. இங்கே தான் இஸ்லாம் நிலைநிறுத்தியுள்ள ஹிஜாப் (மறைத்தல்/தடுப்பு) எனும் விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.
கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப்!
பெண்ணுரிமையைப் பற்றி வாய்கிழியப்பேசுவோர், "பர்தாவின் மூலம் இஸ்லாம் பெண்ணை அடிமைப்படுத்துகிறது" என்று கூக்குரலிடுகின்றார்கள். இஸ்லாமிய உடைச்சட்டம் என்னவெனில் பெண்கள் தங்களது உடல் பரிமாணங்களைப் பிற ஆடவர் முன் வெளிப்படுத்தாதவாறு, முகத்தையும் முன் கைகளையும் தவிர்த்து ஏனைய பகுதிகளை மறைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறது.
ஆணின் குணத்தை அறிவதில் அவனைப்படைத்த இறைவனை விட வல்லமை மிக்கவன் யார்? ஆணின் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காக இறைவன், பெண்களுக்கு ஹிஜாப் எனும் பாதுகாப்பை ஏற்படுத்தி, அதைப் பின்பற்றச் சொல்கிறான்.
பெண்ணை போகப்பொருளாக மட்டும் பார்க்க நினக்கின்ற வக்கிர எண்ணம் கொண்ட போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டத்தினர் போடும் கூப்பாடுகளில் ஒன்று 'ஹிஜாப் என்பது பிற்போக்குத் தனத்தின் அடையாளம்' என்பது. ஹிஜாப் என்பது முகத்தை மறைப்பதல்ல என்பதைப் புரிந்து கொள்ளாத பாரதியாரும் துருக்கி நாட்டையும் இந்தியத் தலைநகரையும் முடிச்சுப் போட்டு, "டில்லித் துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்" என்று பாடி வைத்தார்.
இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனமுள்ளது என்று முனகுவோர் ஏனோ கிறித்துவப் பெண்பாதிரிகளைக் கண்டு கொள்வதில்லை. இஸ்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கும் அதே கண்ணியமிக்க உடையினைப் பிற மதப் பெண்கள் அணிந்திருந்தாலும் அவர்களது பார்வை இஸ்லாமிய உடைகளின் மீது மட்டும் திரும்புவது, இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
திருணத்தில் உரிமை!
"ஆயிரம் காலத்துப் பயிர்" என்றும் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்றும் பேசும் பிற மதத் திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத் தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை "ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்" என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது! திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் சம்மதம் என்பதை, திருமணத்திற்குரிய முக்கிய சாராம்சமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். மணம் பேசப்படும் பெண் நாணமுற்று பதிலளிக்காமல் போகும் நேரங்களில் மட்டும் அவளது சம்மதம் கிட்டியதாக எடுத்துக்கொள்ளச் சொல்லியுள்ளார்களே தவிர மணப்பெண்ணின் சம்மதமின்றி ஒரு திருமணம் இஸ்லாத்தில் ஆகுமானதாகவே ஆக்கப்படவில்லை.
அத்துடன் பெண்ணுரிமை பேசும் பிற மதங்களில் நிலவும் வரதட்சணை என்ற கைக்கூலியைப் பெறுவது இஸ்லாத்தில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மனைவி மீதான கணவனின் முக்கியக் கடமையாக உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் வழங்க வேண்டுமென்று இஸ்லாம் கட்டளை இடுகிறது. அதே போல் பெண்ணின் கடமை கணவனின் உடமைகளையும் குழந்தைகளையும் தனது கற்பையும் பாதுகாத்து குடும்பத்தைச் சிறப்பாக நடத்திச் செல்வது. இந்த அற்புதமான ஏற்பாடுகளைப் பற்றி அறிவிலிகள் சிலர், "பெண்களை இஸ்லாம் வீட்டினுள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறது" என்று கூக்குரலிடுகின்றனர்.
திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை:
பல்வேறு காரணங்களால் மணவாழ்வில் கசந்து போய் கணவனோடு சேர்ந்து வாழ்வதில் ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயமாக அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அடிபணிந்து, "கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன்" என்று இறுதிவரை அவனோடு வாழ்ந்து(?) ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை இஸ்லாம் போதிக்கவில்லை.
ஒரு பெண் எளிமையான முறையில் ஊர்த்தலைவர்/பகுதித்தலைவர் (ஜமாத்தாரிடம்) சொல்லிவிட்டுத் தன் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெறுவது போன்று ஓர் ஆண்கூடப் பெற்றுவிட முடியாது. இதிலும் பிற சமுதாயத்தவர் தவறாக விளங்கியுள்ளது போன்று, "தலாக் தலாக் தலாக்" என்று கூறி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்துச் செய்துவிட முடியாது. ஆணின் அவசரக்குணத்தை அறிந்து வைத்திருக்கும் இறைவன், தன் அவசரக் குணத்தால் ஓர் ஆண், தனக்கே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நன்கு சிந்தித்து, பிரிவை அனுபவித்து இறுதி முடிவெடுப்பதற்காகவும் மாதக் கணக்கில் காலக் கெடு வழங்கியுள்ளான்.
பெண்கள் பணியிடங்களுக்குச் சென்று சம்பாதிப்பதைவிட வீட்டில் இருந்து தம் குடும்பத்தினரை பராமரிக்கும் பாரிய பொறுப்பை இஸ்லாம் பெண்களுக்கே தருகிறது. கணவன் சம்பாத்தியத்துடன் குடும்பத்துக்குக் கூடுதல் பொருளாதார மேம்பாடு என்ற ஆசையில் பொருளீட்டப் பணியிடங்களுக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்கள் படும் அவதிகள், அமைதியிழப்புகள் கணக்கிலடங்காது. அதே சமயம் கணவனை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் ஒரு பெண், தகுந்த பாதுகாப்போடு பொருளாதாரத்தை ஈட்டுவதையும் இஸ்லாம் குறைகூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒரு பெண் தன் கணவனை இழந்துவிட்டால் 'இத்தா' என்று குறிப்பிடும் ஒரு சிறு காலகட்டத்திற்குப் பிறகு அப்பெண் விரும்பினால் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மறுமண அனுமதியை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது இஸ்லாம்.
வாரிசு உரிமை:
பிற மதங்களில் தராத வாரிசு உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் நிலை நிறுத்துகிறது. பெண் என்பவள் புகுந்த வீட்டிற்குப் போகப்போகிறவள்தானே என்ற ரீதியில் பிறமதங்களில் புறம் தள்ளப்படும் பெண்மை இஸ்லாத்தில் கவுரவிக்கப்படுகிறது. தன்னைப் பெற்றெடுத்த தாய்-தகப்பன், தன்னை மணங் கொண்ட கணவன், தான் பெற்றெடுத்தப் பிள்ளைகள் ஆகிய அனைவரது சொத்துகளிலும் ஒரு பெண்ணுக்குப் பங்குண்டு என்ற பன்முக உரிமையை இஸ்லாம் பெற்றுத் தருகிறது.
உயர்ந்த கண்ணியம்:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "மனிதர்களிலேயே நான் அதிகம் கண்ணியப்படுத்துவதற்குரிய நபர் யார்?" என்று மூன்று முறை திரும்பத்திரும்ப கேட்டும் நபியவர்கள் ஒவ்வொரு முறையும் "உனது தாய்தான்!" என்றும் நான்காவது முறையாகத்தான் தந்தையைக் குறிப்பிட்டார்கள் எனும் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு மனிதன் இவ்வுலகில் கண்ணியம் கொடுக்க வேண்டிய மனிதர் மூன்று உயர்ந்த நிலைகளிலும் பெண்ணான ஒரு தாய்தான் என்ற இச்சிறப்பை இஸ்லாம் வழங்கியுள்ளது.
முடிவுரை:
ஆணுக்கும் பெண்ணுக்குமான உரிமைகளை அவர்களைப் படைத்த இறைவன் அவரவர்களின் தேவைகளைக் கணக்கிட்டே வழங்கியுள்ளான் என்பதனை, இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை அறியாமல் பேசுவோர் உணரவேண்டும். பெண்ணுக்கு உரிமை அல்லது பெண்ணுரிமை என்பது அந்தப் பெண்ணுக்கு கண்ணியம் தரக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அரைகுறை ஆடைகளுடன் அலைவதில் பெண்ணுரிமை இல்லை என்பதை இவர்கள் உணரவேண்டும்.
இன்று சட்டங்களிலும், ஏட்டிலும் அழித்து அழித்துத் திருத்தம் செய்து கொண்டு இஸ்லாமியச் சட்டங்களுடன் நெருங்கி வந்து கொண்டிருக்கும் சர்வதேசச் சட்டங்களை இஸ்லாம் 1428 வருடங்களுக்கு முன்னமே நிறைவு செய்து விட்டது.
ஆகவே, பெண்ணுரிமை பேசுபவர்களும் இஸ்லாமிய ஆர்வலர்களும் இஸ்லாத்தின் முழு பரிமாணத்தையும் விளங்காத முஸ்லிம்களும் உண்மையான பெண்ணுரிமை இஸ்லாத்தில் ஏற்கனவே தெளிவாக்கப் பட்டிருப்பதை உணர்ந்து தெளிந்திட வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக!
ஆக்கம்: சகோதரி. ஜஸீலா
http://www.satyamargam.com/index.php?option=content&task=view&id=738
THANKS TO: SISTER JAZEELA AND SATYAMARGAM.COM
0 comments:
Post a Comment