மனம் ஒரு குரங்கு! - பர்வீன்
>> Thursday, March 22, 2007
மனம் ஒரு குரங்கு! - பர்வீன்
ஒரு ஊரில் குரங்காட்டி ஒருவன் இருந்தான். அவன் தன் குரங்கை தினமும் அடித்துக் கொண்டே இருந்தான். அதைக் கண்ட அவனுடைய மனைவி, 'ஏன் அந்தக் குரங்கை தினமும் அடிக்கிறீர்கள்? அது மிகவும் பாவம்' என்று கண்டித்தாள்.
அதைக் கேட்ட குரங்காட்டி, 'நான் இதை அடித்தால்தான் அது அமைதியாக எனக்குக் கட்டுப்பட்டு இருக்கும். நான் வேண்டுமென்றால் இதை அடிக்காமலிருக்கிறேன். அப்போது இது என்னென்ன செய்கின்றது என்பதைப் பார்' என்று கூறினான்.
சில காலம் சென்றது. அந்தக் குரங்காட்டி சொன்னதுபோல் குரங்கின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாயின. அதனைக் குரங்காட்டியின் மனைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஒரு நாள், 'இதைக் கொஞ்சம் கண்டித்து அடக்கக் கூடாதா?' என்று தன்னுடைய கணவனிடம் முறையிட்டாள். 'நான் இந்தக் குரங்கை அடித்து அடக்கி வைத்திருந்தேன். ஆனால் நீ அதை மனம்போல் விட்டுவிடச் சொன்னதால் அது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. எனவே இதை வழிக்குக் கொண்டு வருவது இனிமேல் கொஞ்சம் சிரமம்தான்' என்று கூறினான்.
நம்முடைய மனமும் ஒரு குரங்குதான். நம்முடைய மனதை திக்ரு (இறைத்தியானம்) என்னும் சாட்டையால் அடித்து நிலைப்படுத்த வேண்டும்.
அதனை அங்குமிங்கும் அலைபாய விடக்கூடாது. நாம் இறைத்தியானம் செய்வதினால் நமது கவலைகளும், துயரங்களும் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கிறது; உடலுக்கு ஊக்கம் ஏற்படுகிறது. பாவம் செய்வதை விட்டும், தவறான காயங்களில் ஈடுபடுவதை விட்டும் பாதுகாப்பு பெற மாமருந்து, இறைத்தியானம் தவிர வேறு ஏதுமில்லை.
மனதில் ஏற்படும் கெட்ட எண்ணங்களையும், ஊசலாட்டத்தையும் தடுப்பது திக்ருதான்.
மேலும் நம்முடைய உள்ளத்தில் ஏற்படும் கசடுகளை நீக்கிப் பிரகாசத்தை ஏற்படுத்துவதும் அதுவே. நாம் ஏதேனும் ஒரு பாவத்தைச் செய்தால் நம்முடைய உள்ளத்தில் கரும்புள்ளி விழுகிறது.
இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு பாவங்களைச் செய்வதை விட்டுவிட்டால் கரும்புள்ளிகள் மறைந்து விடுகின்றன. நாம் பாவமன்னிப்பு கேட்காவிட்டால் கரும்புள்ளிகள் நம்முடைய இதயத்திலே நிலைத்துவிடுகின்றன.
இது தொடர்ந்தால் நம்முடைய இருதயம் கரும்புள்ளிகளால் நிரம்பிக் கறுத்து, கடினத் தன்மை அடைந்து, பாவமன்னிப்பு கேட்பதையே மறந்தும் விடுகிறது.
இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் அதிகமாக இறைத்தியானம் செய்து, மனதை நிலைப்படுத்த வேண்டும்; பாவங்களை விட்டு நீங்கி மரணத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்விதம் செய்தால் நம்முடைய இதயங்களிலிருந்து கசடுகள் நீங்கி, நிம்மதி (சலாமத்) கிடைக்கும்
.
அதிகமாக இறைத்தியானம் செய்வதால் நாம் பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறோம். 'திக்ரு உள்ளவன் உயிருள்ளவன்; திக்ரு அற்றவன் உயிரற்றவன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்.
எனவே இந்த மேலான செயலைத் தொடர்ந்து செய்து நம்முடைய மனதைக் கட்டுப்படுத்தி, மேலும் தூய்மைப்படுத்துவோம்! இம்மையிலும், மறுமையிலும் நாம் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் நல்லருள்புவானாக! - பர்வீன்
0 comments:
Post a Comment