மனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக்கப் பழகுவதே நல்லது!
>> Tuesday, March 13, 2007
மனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக்கப் பழகுவதே நல்லது!
உரையாடல் ஒரு கலை என்பதை இன்னமும் நம்மில் பலர் உணர்ந்தபாடில்லை.
`சளசள’வென்று பேசிக் கொண்டே இருப்பது, நிறுத்தாது வேகமாகப் பேசிக் கொண்டே இருப்பது, தனக்குத் தெரிந்ததை யெல்லாம் அவிழ்த்துக் கொட்டிவிட இதோ ஓர் அரிய சந்தர்ப்பம் என்று உரையாடலை எண்ணி `கேட்பாளரைத்’ துளைத்தெடுப்பது இத்தியாதி இத்தியாதி உரையாடல் ஆகாது. உரையாடலில் நகைச்சுவை இருக்கலாம், நக்கல் இருக்கக் கூடாது; நையாண்டித்தனம் நெளியக் கூடாது.
சுவையான உணவைக் கூட குறிப்பிட்ட அளவோடு நாம் உண்டு, அடுத்து பரிமாற வரும்போது, போதும் என்று சொன்னால்தான், உணவின் சுவை நமக்கு ருசிக்கத் தக்கதாக இருக்கும்.
அதுபோலத்தான், `இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டாரா? இவருடன் பேசுவது, உரையாடுவது தான் எவ்வளவு இன்பமாக இருக்கிறது’ என்று எதிர்புறத்தில் இருப்பவர் நினைக்கும் வண்ணம் இருப்பதை விட சிறப்பான உரையாடல்தான் வேறு ஏது?
உரையாடலை நாம் தொடர, எதிர்புறம் `பச்சை விளக்கு’ எரிகிறதா? மஞ்சள் விளக்கு வந்து கொண்டுள்ளதா? சிவப்பு விளக்கு வந்தே விட்டதா? என்று சூழ்நிலை புரியாமல், தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்மை அடுத்த முறை காணும் அந்த நண்பர் ஓடி ஒளியத் தொடங்கி விடுவார் -இல்லையா?
சிலர், நமது உரையாடலை சுவைத்துக் கொள்கிறார்களா அல்லது சுளித்துக் கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய முடியாத நிலையில், ``உம்’’ என்பது, வெறுந்தலையாட்டுதல், காதை இவருக்குக் கொடுத்து, தம் மனதை வனத்தில் திரியும் வானரம்போல விட்டுவிட்டு இருப்பதும் உண்டு!
நம் மனங்கள், வனங்கள் ஆகக் கூடாது. காரணம், குறிப்பிட்ட செய்திகளை உரையாடலில் கூறும்போதோ, அல்லது கேட்கும்போதோ அடுத்த தரப்பினர் கருத்து நமக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் மனதை அதில் செலுத்துவதுதான் முறை.
தள்ளுவதோ, கொள்ளுவதோ நமது உரிமை என்பதால், சொல்வதை அவர் தனது உரிமையாகக் கருதிச் சொல்கிறார். அதில் தவறில்லை என்று நாம் உணருதல் நம் மனங்களையும், குணங்களையும் செம்மைப்படுத்த உதவும்.
குறிப்பறிதல் என்பது முக்கியம்.
அதிலும் இப்போது எதிரில் இல்லாத நிலையில்தான் தொலைப்பேசி மூலம் (கைத்தொலைப்பேசி உள்பட) பேசிடும் நிலையும் உண்டு என்பதால், அடுத்த பக்கத்தில் அவர் என்ன நிலையில், எங்கு முக்கியப் பணியில் இருக்கிறார் என்று கூட எண்ணாமல், நிற்காத தொடர் வண்டிபோல் பேசிக்கொண்டே போவது `நயத்தக்க நாகரிகம்’ ஆகாது.
நமக்கு என்னதான் நெருக்கமானவர்கள் ஆனாலும் கூட, அவர், முக்கிய ஆலோசனை யிலோ, குழுக் கூட்டத்திலோ, எழுதும்போதோ அல்லது உண்ணும்போதோ, அவருடைய சந்தர்ப்பம்பற்றி அறிந்து கொள்ளாமலேயே `வளவள’வென்று பேசுவது அவர்களை எவ்வளவு இக்கட்டான சங்கடத்தில் வைக்கும் என்பதை உணர வேண்டும்.
பசியால் களைப்புற்று, சாப்பாட்டு மேசையில் அமர்ந்து உண்ணத் தொடங்கும்போது, ஒலிக் கும் தொலைப்பேசி, அது ஏதாவது மிக முக்கியமானதாக இருந்துவிடக் கூடும் என்பதால், சாப்பிடுபவர் அதைக் கேட்க உடனே முனைகிறார்;
மறுபுறம் சோற்றினைப் பிசைந்த ஈரக்கை; ஆனால், அடுத்த முனையிலிருந்து கேட்பவரிடம், ``நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று துணிந்து கூறி, மறுமுறை அழையுங்கள்; அல்லது நானே அழைக்கிறேன்’’ என்று கூறுபவர் சிலர்தான்!
அப்படிச் சொல்வதற்கு சங்கோஜப்பட்டுக் கொண்டு, பேச்சைக் கேட்டால் கை காய்ந்து விடுவதோடு, உணவும் ஆறிப்போகும் நிலை ஏற்படும்.
எனவே, தொலைப்பேசி உரையாடலைத் தொடரும் நிலையில், ``பேசலாமா? தங்கள் வசதி எப்படி, ஏதாவது முக்கியப் பணியிலோ, உணவு எடுத்துக் கொண்டோ தாங்கள் இருப்பின் பிறகு, பேசுகிறேன்’’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விடுவது மிக நல்ல முறையாகும். நனி நாகரிகமும் ஆகும்!
சிலர் டாக்டர்களிடம் தொலைப்பேசியில் பேசும்போது, அவர்கள் தங்கள் எதிரில் உள்ள நோயாளிக்கு நேரம் கொடுத்து, அவரிடம் அவருடைய நோய்பற்றி உரை யாடும்போது, இந்த குறுக்கீடு நீண்டால், அதைவிட பெருங்குற்றம் உண்டா?
எடுத்து, `ஹலோ, சொல்லுங்கள்’ என்று கேட்பது, டாக்டரின் பெருந்தன்மை. அவர் கிளினிக்கில் நோயாளியை ஆய்வு செய்யும் நேரம் என்று பொதுவாக அறியும்போது, சுருக்கமாக, நாம் பேச வேண்டியதை முடித்துக் கொண்டால்தான், சரியான மனத்தை நாம் பெற்றுள்ளோம் என்று பொருள். இன்றேல், பரந்து அலையும் வாழ்வு முறையைப் பெற்ற வனமாகி விட்டதே மனது என்பது புரிகிறது!
மனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக்கப் பழகுவதே நல்லது! - கி. வீரமணி.
http://viduthalai.com/20070312/news05.htm
0 comments:
Post a Comment