>> Sunday, March 4, 2007
பேயா?
எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் பிஞ்சு வயதில் திணிக்கப்பட்ட மூடத்தனத் தின் கூரிய கொம்பு மட்டும் வளர்ந்து கொண்டே வருகிறது.
பிஞ்சு வயதில் அடம் பிடிக்கும் பிள்ளைக்குச் சோறூட்டுவதற்காக, அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு `அஞ்சு கண்ணன் வருவான், பேய் வரும், பூதம் வரும்’ என்று சொல்லும் வார்த்தைகள் குழந்தைகளின் நெஞ்சில் ஆழப் பதிந்து பெரியவர்களாக ஆன நிலையிலும் கூட அது ஆலமரமாக வளர்ந்து வருகிறது.
தொலைப்பேசி - அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு! மக்கள் வாழ்வில் மகத்தான `ரசாயன’ மாற் றத்தை அது உருவாக ஆகியிருக்கிறது என்றால், அது மிகையல்ல!
ஆனால், அந்தத் தொலைப் பேசியை எவ்வளவுக் கேடு கெட்ட சமாச்சாரங்களுக்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் குணக் கேடர்கள்.பொள்ளாச்சி வட்டாரத்தில் ஒரு பீதியைக் கிளப்பி விட்டுள்ளனராம்.
கைப்பேசியில் ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டால் `பேய்’ பேசுகிறது என்று கிளப்பி விட்டார்கள். அதன்படி தொடர்பு கொண்டால் எதிர்முனையில் பெண் குரலில் மலையாளம் பேசப்படுகிறது. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஒரே பதில்தான்!
காரணம் புரிகிறதா? சில குணக்கேடர்கள் குறிப்பிட்ட எண்ணில் ஒலிப்பதிவு செய்து வைத்து இந்த விஷம `வேடிக்கை களைச்’ செய்து இருக்கின்றனர்.
(இது சிலருக்குப் பொழுது போக்குக் கூட).
இதனை இதுவரை தொலைப் பேசித் துறை கண்டுபிடிக்காதது - ஏன்? என்ற கேள்வி அந்தப் பகுதியில் உள்ள விழிப்புணர்வு உள்ளவர்கள் வினா எழுப்புகின்றனர்.
திடீர் திடீர் என்று இதுபோன்ற கேவலமான மூடத்தனங்களை பக்தி வியாபாரிகள் கிளப்பி விட்டு அடிவேர் அழுகிப் போன பக்திக்கு உயிர் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்கின்றனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.
பிள்ளையார் பால் குடித்தது என்று ஒரு நாள் புரளி; ஆவியுடன் பேசும் அமுதா என்ற `கரடி’ இன்னொரு புறம்; பிறந்த வீட்டுக்கு ஆபத்து, சகோதரிகளுக்குப் பச்சைப் புடைவை வாங்கிக்கொடுங்கள் என்று சரடு மற்றொருபுறம்; காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குள் எருமை மாடு புகுந்து விட்டது; வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள் என்ற புழுதி இன்னொரு பக்கம்!
2007 ஆம் ஆண்டில்தான் நாம் வாழுகிறோமோ? இதைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு, கருத்துத் தெரிவிப்பதற்குத் திராவிடர் கழகத்தை விட்டால் நாதியுண்டா? எது எதற்கெல்லாமோ நீட்டி முழங்குகிறார்களே - மக்களை மூடமாக் கும் இந்தக் கொடிய `நஞ்சு’ பற்றி யாருக்கும் அக்கறை கிடையாதா? ஏடு நடத்துவோரின் கடமைதான் என்ன?
இதுபோன்ற அக்கப் போர் செய்திகளை கை வைத்து, மூக்கு வைத்து, இறக்கைக் கட்டி பறக்க விடுவதுதானா?
மக்களிடம் விஞ்ஞான மனப் பான்மையைப் பரப்பவேண்டும் என்று அரசமைப்புச் சட்டக் காகிதத்தில் எழுதி வைத்தால் போதுமா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
படித்தவன் பாவம் செய்தால் அய்யோ என்று போவான் என்பதெல்லாம் ஏமாற்று வேலை! நம் நாட்டுப் படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் அவ்வளவுதான் என்றாரே தந்தை பெரியார், அதுதான் உண்மை - நூற்றுக்கு நூறு உண்மை!தந்தை பெரியார் கணிப்பது பொய்ப்பதில்லை!
- மயிலாடன்
இக்கட்டுரை 'விடுதலை'4.03.07 தினசரியில் பிரசுரமானது.
1 comments:
nalla pathivu aiyyaa! viduthalaiyai eduthandatharku valthukal
Post a Comment