முகமது அடில் ஷா மன்னரால் கட்டப்பட்ட கோல் கும்பாஸ்.
>> Sunday, February 18, 2007
முகமது அடில் ஷா மன்னரால் கட்டப்பட்ட கோல் கும்பாஸ்.
கருநாடகா மாநிலத்தில் பழங்காலச் சின்னங்கள் நிறைய உண்டு. மராட்டிய மாநில எல்லையில் உள்ள பிஜப்பூர் நகரில் மட்டும் இத்தகையச் சின்னங்கள் 70 உண்டு. இந்த மாவட்டத்தின் பிற பகுதிகளில் மத்திய தொல் பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் 80 சின்னங்கள் உள்ளன.
இவை தவிர மாநில அரசின் தொல் பொருள் துறையில் 40 சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவையல்லாமலும் ஏராளமான சின்னங்கள் பரவிக் கிடக்கின்றன. இவை பெரும்பாலும் முகம்மதிய மன்னர்களால் கட்டப்பட்டவை.
இந்தச் சின்னங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்ற மகுடம் கோல் கும்பாஸ் எனப்படும் கட்டடம். முகமது அடில் ஷா எனும் மன்னரால் கட்டப்பட்டது. 1626ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த மன்னரின் அடக்கக் கட்டடம் ஆகும்.
தாஜ்மகால், ஹூமாயூன் கல்லறை, பாபர் கல்லறை போன்ற அழகிய கட்டடங்கள்.அந்த வகையில் அழகிய கட்டடம் கோல்கும்பாஸ். இந்தக் கட்டடத்தின் மேல் விதானம் உருண்டை வடிவிலானது. தாங்கும் தூண்கள் எதுவும் இல்லாமல் இந்த வடிவில் கட்டப்பட்டவற்றில் இது உலகிலேயே இரண்டாவது பெரிய கட்டடம்.
இந்தியாவில் இதுதான் மிகப் பெரியது. உலகின் பெரியது டமாஸ்கஸ் நகரிலுள்ள மசூதிக் கட்டடம்.
இந்தக் கட்டடத்தின் மிகப் பெரிய சிறப்பு என்ன தெரியுமா? இந்தக் கட்டடத்தின் எந்த மூலையில் இருந்தும் முனகல் போன்ற சிறிய ஒலி எழுப்பினாலும் கட்டடம் முழுவதும் மிகத் தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. எனவே இது (இரகசியம்) கமுக்கக் கட்டடம் அல்ல. ஒரு மூலையில் நின்று கையொலி எழுப்பினால் பலமுறை அந்த ஒலி எதிரொலிக்கும். எனவே இது எதிரொலிக் கட்டடம்.
205 அடி நீளமும் அகலமும்உள்ள சதுரக் கட்டடம். 100 அடி உயரம் உள்ள சுவர்கள் நான்கு பக்கங்களிலும் உள்ளன. மேற்கூரை, உருண்டை (குளோப்) வடிவில் உள்ளது. இதன் உள்பக்க விட்டம் 38 மீட்டர் ஆகும்.
இதைக் கட்டி முடிப்பதற்கு மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட கட்டடக் கலைஞர்கள் 30 ஆண்டுகள் உழைத்துள்ளனர். மய்ய மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் கூம்பு வடிவத்தில் நான்கு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றின் உச்சியையும் அடைவதற்கு 109 படிகள் உள்ளன. இவை ஏழு அடுக்குகளாக இருக்கின்றன.500 பேர் அமர்ந்திடும் மண்டபம் கட்டப்பட்டுள்ளது அடில்ஷாவும் அவரது மனைவியர் மகள்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவரைப்பற்றிய விவரங்கள் இந்தக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளஅருங்காட்சியகத்தில் உள்ளன.
0 comments:
Post a Comment