**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கருத்துச்சுதந்திர ஓலமிட்டவர்களே ஏன் கள்ள மௌனம்?

>> Monday, September 30, 2013

கருத்துச் சுதந்திரம் குறித்து ஓலமிட்ட கருணாநிதி இராமதாசு பாரதிராஜா,திரைக் கலைஞர்கள் நடுநிலை தவறாத ஊடகங்கள் வலைப்பதிவர்கள் கள்ள மெளனம் சாதிக்கின்றார்கள்.

கிழிந்து தொங்கும் கருத்துப் போலிச் சுதந்திரம்!

உறைந்து கிடக்கும் கள்ள மெளனம்

தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்வில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான விவாத அரங்கில் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

“இலங்கையில் நடக்கும் ஈழப்பிரச்னையை முன் வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் அப்போது கருத்துச் சுதந்திரம் பேசுவீர்களா..?

ஆப்கன் முஸ்லிம்களைப் பற்றி படம் எடுத்ததற்கு இங்குள்ள முஸ்லிம்கள் குமுறி எழுகின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள். விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்திரித்து படம் எடுக்கப்பட்டால் இங்குள்ள தமிழர்கள் குரல் கொடுக்க மாட்டார்களா..?

அப்படிக் குரல் எழுப்பும்போது இலங்கையிலுள்ள தமிழர்களைப் பற்றி படம் எடுத்தால் இங்குள்ள தமிழர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? என்று கேட்பீர்களா?”

அப்போது நாம் எழுப்பிய இந்த வினாவிற்கு நிகழ்வில் பங்கேற்ற ரமேஷ் கண்ணாவும், டெல்லி கணேஷும் பதிலளிக்காமல் போக்குக் காட்டினார்கள்.

விவாதத்திற்காக நாம் எழுப்பிய வினா ‘மெட்ராஸ் கஃபே’ என்ற பெயரில் ஹிந்தி திரைப்படமாக வெளிவந்துள்ளது. சுஜித் சர்க்கார் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்த இத் திரைப்படம் ஈழத்தைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என படம் பிடித்துக் காட்டியுள்ளது ‘மெட்ராஸ் கஃபே’. தம்பி பிரபாகரன் அண்ணன் பாஸ்கரன் பாத்திரமாக வருகிறார். எல்.டி.டி.இ இயக்கம் எல்.டி.எஃப் என மாற்றப்பட்டிருக்கின்றது.

விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம் முழங்கிய கருத்துப் போராளிகள் அனைவரும் சொல்லிவைத்தார் போல ‘மெட்ராஸ் கஃபே’ படத்தைத் தமிழகத்தில் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர்.

விஸ்வரூபம் இடத்தில் இன்று மெட்ராஸ் கஃபே.

அமெரிக்காவிற்குப் பதில் இந்தியா. ஆப்கானிஸ்தானிற்குப் பதில் ஈழம். அல்கொய்தாவிற்குப் பதில் விடுதலைப் புலிகள். ஆனால் அதே கருணாநதிதான் இப்போதும்! அதே இராமதாசுதான் இப்போதும்! அதே பாரதிராஜா, அதே ரமேஷ் கண்ணா, அதே செல்வமணி, அதே திரைக் கலைஞர்கள்தான், அதே நடுநிலை தவறாத ஊடகங்கள்தான். அனைவரும் கருத்துச் சுதந்திரம் குறித்து ஓலமிட்டவர்கள் இப்போது ஒப்பாரி வைக்கின்றார்கள். அல்லது கள்ள மெளனம் சாதிக்கின்றார்கள்.

விஸ்வரூபத்தை முன்வைத்து எழுப்பப்பட்ட அத்தனை கேள்விகளும் ‘மெட்ராஸ் கஃபே’க்கு கச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. அப்போது ஆம்! என்று சொன்னவர்கள் இப்போது "இல்லை" எனக் கூசாமல் பேசுகின்றனர்.

‘அதுவந்து அது…அதுக்கும் இதுக்கும் மெல்லிய வித்தியாசம் இருக்கு; அது அப்படி இது இப்படி இல்ல; அது வேற இது வேற இது வரலாற்றைத் திரிக்கும் செயல்’ என்று ஏதேதோ உளறுகிறார்கள். உடைந்த பானை ஒன்றுதான். அன்று மருமகள் கையிலிருந்து தவறியதால் அது பொன்குடம். இன்று போட்டுடைத்தது மாமியாரல்லவா.. அதனால் அது மண்குடம் அவ்வளவுதான்.

‘ஒரு திரைப்படத்தை சென்சார் அனுமதித்த பிறகு அதைத் தடை செய்யக் கோருவது எவ்வகையில் நியாயம். அப்போ சென்சாருக்கு என்ன வேலை?’ என்று கேள்வி எழுப்பியவர்கள் இப்போது சுய நினைவோடுதான் உள்ளார்களா..? ஆம் என்றால் சென்சார் அனுமதித்த மெட்ராஸ் கஃபே யைத் தடைசெய்யச் சொல்வது ஏன்?

‘ஒரு படத்தை திரையிட்டுப் பார்த்தபின்னர்தான் அது குறித்துப் பேசவேண்டும்.அதை வரவிடாமல் செய்தால் எப்படிக் கருத்துச் சொல்லமுடியும்?’ என்று குரலெழுப்பிய அறிவுஜீவிகள் இப்போது எங்கேதான் போய்விட்டார்கள்? மெட்ராஸ் கஃபே-யை ஓட்டிப்பார்த்துவிட்டுப் பேசுவோமா?

‘அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் பிரச்னையில்லாமல் ஓடிக்கொண்டிருக்க தமிழகத்தில் மட்டும் அப்படி என்ன வாழுதாம்?’ என்று பேசியும், எழுதியும் வந்த ஞானவான்கள் இப்போது என்ன ஆனார்கள்? தமிழகத்தைத் தவிர மெட்ராஸ் கஃபே பிற மாநிலங்களில் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது…! ‘இது ஹிந்திப் படம் அது தமிழ்படம் அதனால…’ என்று உணர்ச்சிவசப்பட்டு உளறுபவர்களே.. ‘தலைவா’ என்ற திரைப்படம் பிற மாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும் போது தமிழகத்தின் திரையங்கக் கதவுகள் மூடிக் கிடந்தனவே… அய்யா.. கருத்துப் போர் மறவர்களே, எங்கே இருக்கின்றீர்கள் நீங்கள்?

‘கோடிக்கணக்கில் பணம்போட்டு விட்டு ஒரு திரைக்கலைஞன் இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகும்போது நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது’ என்று கமலின் வீட்டிற்குப் படை எடுத்த தமிழ்த் திரையுலக நியாயவான்களே…விஜய் ஒரு திரைக்கலைஞன் இல்லையா? அல்லது தலைவா செலவே இல்லாமல் எடுக்கப்பட்டதா..? ‘வீட்டை விற்கப்போகிறேன். வேறு நாடு தேடிப்போவேன்’ என்று கமல் அளவுக்கு ஓவர் ஒப்பாரி இல்லை என்றாலும் விஜய் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கை கட்டி நின்று கலங்கியபோது உங்களுக்கு உரைக்கவில்லையா..?

‘படைப்புச்சுதந்திரம் ஒரு கலைஞனுக்கு வழங்கப்படவில்லை என்றால் எதை வைத்துத்தான் படம் எடுப்பது?’ இது நீங்கள் எழுப்பிய வினாதானே..! தலைவா வில் ஒற்றை வாசகத்தை நீக்கச் சொன்னபோது இந்தக் கேள்வியை மீண்டும் எழுப்பும் திராணி ஒருவருக்குக் கூடவா இல்லை..!

தனக்கு ஒரு சங்கடம் என்றதும் அழுதும், புலம்பியும், நடித்தும், துடித்தும், ஓயாது ஓடிய கமல் தலைவா விவகாரத்திலும் மெட்ராஸ் கஃபே விசயத்திலும் ஏதாவது மூச்சு விட்டாரா என்ன?

உலக நாயகனே…. இப்போது நடப்பதையும் கலாச்சார பயங்கரவாதம் என்று சொல்லலாமா…?

‘யாரங்கே வாய் திறப்பது.. நாம் வாய்திறந்தால் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்று ஆகிவிடாதா.. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஏணடா உளருகின்றீர்கள். மைண்ட் யுவர் பிஸ்னஸ் தமிழ் பீப்பிள்ஸ். வரட்டுமே மெட்ராஸ் கஃபே…’ என்று சொல்லுவதற்குப் பாரதிராஜா இருக்கின்றார்தானே… எங்கேதான் அவர்?

‘ஒரு படத்தைத் தடை செய்யக் கோருவதன் மூலம் அந்தப் படத்திற்கு நீங்களே விளம்பரம் தேடித் தந்துவிடுகின்றீர்கள் இல்லையா.. நீங்கள் அமைதியாக இருந்தால் அது வந்த இடமும் போன இடமும் தெரியாமலாகிவிடும்தானே’ என வினா எழுப்பிய தொலைக்காட்சித் தொகுப்பாள சிகாமணிகளே…இப்போதுகூட ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இதே கேள்வியைக் கேட்கலாம் இல்லையா…?

‘திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்காக ஒரு திரைப்படத்தையே தடைசெய்வது நியாயமா?’ என்றெல்லாம் அரசியல் விமர்சனம் பேசும் நடு நிலையாளர்களே…! தலைவா திரையிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற இல்லாத மிரட்டல் எழுந்தபோது நீங்கள் ஆழ் நிலை தியானத்தில் அமிழ்ந்து கிடந்தீர்களா என்ன?’

‘இந்த பாய்மார்களே இப்படித்தான்..! என்ன இவர்களைப் பற்றி படம் எடுக்கவே கூடாதாக்கும். படம் எடுத்தா ஓட விடமாட்டாங்களாமே’ என பேருந்திலும், டீக்கடைகளிலும், கூடுமிடங்களிலெல்லாம் முணுமுணுத்துத் திரிந்த என் அப்பாவி பொதுஜனங்களே…! தலைவா படம் ஏன் தடை செய்யப்பட்டது? என்னதான் நடந்தது..? எதைத்தான் நீக்கித் தொலைத்தார்கள்? அது யாருக்கெதிரான வாசகம். அப்டியெல்லாம் சொன்னா குத்தமாயிடுமா…? எந்தக் கேள்வியுமே இல்லாமல் உங்களாலும் இருக்க முடிந்ததே எப்படி என் மகா ஜனங்களே….!

ஏன் இந்த மயான அமைதி? எதனால் இந்தக் கள்ள மெளனம்? எப்படி உருவானது இப்படியொரு நிசப்தம்? ஒரேயொரு காரணம்தான்.

இஸ்லாம் தொடர்பான விவகாரமென்றால் எல்லாருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி.

அன்று கமலுக்கு ஆதரவாகவா இவர்கள் பேசினார்கள்? கருத்துச் சுதந்திரத்திலா இவர்களுக்கு இவ்வளவு அக்கறை? இல்லவே இல்லை.

இஸ்லாத்தை இழிவு படுத்தியும், முஸ்லிம்களை தவறாகச் சித்திரித்தும் பேசுபவர்களுக்கு வக்காலத்துப் பேசியவர்கள் கருத்துச் சுதந்திரப் போர்வையைப் போர்த்திக் கொண்டார்கள் அவ்வளவே…!

தலைமை தாங்கும் நேரமிது என்று கமல் படம் எடுத்து அதற்கு ஒரு சிக்கல் என்றால் இதே கமலஹாசன் ‘நான் இந்த உலகத்தில் வாழவிரும்பல வேறு உலகம் தேடிப் போகிறேன்’ என்று கதறினாலும் அப்போதும் இதே மெளனம்தான் நிலவும். விஜய்க்கு ஏற்பட்ட அதே நிலைதான் கமலுக்கும்.

நாம் அடுத்தவனைத் தாக்கினால் அது கருத்துச் சுதந்திரம். நம்மை யாரவது தாக்கினால் அது வரலாற்றுத் திரிபு’ இது அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்லித்தந்த இரட்டை நிலைச் சூத்திரம்.

இஸ்லாமியர்கள் குறித்த அவதூறுச் செய்தி தலைப்புச் செய்தியாக வரும். அது தவறான செய்தி என்ற உண்மைச் செய்தி பெட்டிச் செய்தியாய் எட்டாம் பக்க மூலையில் வரும். எப்போதாவது நிகழ்ந்தால் அது விபத்து. எப்போதும் இப்படியே நிகழ்ந்தால் அது சூழ்ச்சி. வன்மம். சதி. அதைத்தான் இந்தகைய மெளனங்கள் உலகிற்கு உரத்துச் சொல்கின்றன.

(வி.எஸ். முஹம்மது அமீன்)

நன்றி: சமரசம் 16-30 செப்டம்பர் 2013

Ref: http://www.satyamargam.com/articles/common/2215-freedoms-of-expression-biased-and-prejudiced.html

மேலும் படிக்க... Read more...

முஸ்லிம்களால் உயிர் பிழைத்த‌ கலைஞர் கருணாநிதி!

>> Monday, September 23, 2013

சாக்கடையில் தூக்கிப் போடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்குப் போராடிய நேரத்தில் முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி!

கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள்

கருணாநிதிக்கு பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக எழுதி நடத்தும் உழைப்பு மற்றும் ஆற்றலின் வளர்ச்சி பின்னர் தமிழகத்தை பலமுறை ஆளும் நிலைக்கு அவரை உயர்த்தியது.

கருணை ஜமால் என்ற பெயருடைய திருவாரூர் நண்பரை துணைக்கு சேர்த்துக் கொண்டு தலையில் முரசொலி பத்திரிக்கை கட்டுகளை ஆற்றை நீந்திக் கடந்த கருணாநிதிக்கு வாழ்க்கைக் கடலில் எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாகிவிடவில்லை.

இங்கே குறிப்பிட்ட கருணை ஜமால் என்பவர் திருவாரூரில் கருணாநிதி அச்சகம் என்ற பெயரில் நடத்தியவர்.

கருணாநிதியுடன் இளமைக்காலம் அல்ல பால்ய காலம்தொட்டே பாசத்துடன் பழகியவர். கருணை- கருணா இந்த சொற்களின் தாக்கத்தை அன்பர்கள் சிந்தித்து அவர்களின் உறவின் அல்லது நட்பின் வலிமையை அறியலாம்.

இந்திராகாந்தியின் ஆட்சி அறிமுகப்படுத்திய அவசரகால அடக்குமுறை நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத்திருமணத்துக்கு வந்தது மணமக்களை வாழ்த்திய கருணாநிதி வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றார்.

இங்கே கருணை ஜமால் அவர்களுடைய பெயரை குறிப்பிடக் காரணம், இன்று கருணாநிதி இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இவரை வடிவமைத்த இவருடைய உயர்வுக்கு வித்திட்ட இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர்.

ஆனால் மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பவன் மற்றவன் என்கிற முறையில்தான் கருணாநிதி வளரக் காரணமானவர்களும் அவர்களின் சந்ததியினரும் அந்த வளர்ச்சியின் பயனை அடைய முடியாத வலை வாழ்க்கை வலை அது பாச வலை.

மேடைப் பேச்சில் சோடை போகாமல், அல்லும் பகலும் அரசியலில் அதுவும் நாத்திகம் கலந்த அரசியலில்- சுயமரியாதை இயக்கம் சார்ந்த பிரச்சாரக்கூட்டங்களில் தனது நாட்டத்தை செலுத்தினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிராமண சமூகத்தினரைப் பற்றியும் அவர்களது கடவுள்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கோபம் கொண்ட அந்த சமூகத்தார். ஆட்களை ஏவி கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தவரை வழிமறித்து வன்முறையாகத் தாக்கினர்.

கருணாநிதி இரத்த வெள்ளத்தில் மிதந்து உணர்வற்று விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு விரைந்தது அடியாட்கள் கூட்டம்.

பகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள் சிலரின் காதுகளில் நடுஇரவில் சாக்கடையில் தூக்கிப் போடப்பட்ட கருணாநிதியின் முக்கல் முனகல் கேட்டது.

மூச்சு மட்டும் ஓடிக கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம் பெருமக்கள் உடனே முனைப்புடன் செயல்பட்டு மருத்துவம் செய்து குளிப்பாட்டி உடைமாற்றி உணவளித்து உயிர் காப்பாற்றினர்.

காலையில் போட்ட இடத்தில் உடல் தேடி வந்த பிராமண அடியாட்கள் தவித்தனர்.

கருணாநிதி தப்பினாரா இல்லையா என்று சந்தேகம் கொண்டு அலசினர்.

ஆனால் கருணாநிதியோ காரைக்கால் முஸ்லிம்களால் தொப்பி, சால்வை ஆகியவை அணிவிக்கப்பட்டு பத்திரமாக பாண்டிச்சேரி கொண்டு போகப்பட்டு அங்கு வந்திருந்த பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அங்கிருந்து பெரியாரால் பத்திரிகையில் பணியாற்ற பின் ஈரோடு சென்றார். - -முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.,

கண்ணதாசன் vs கருணாநிதி

மு.க. பற்றி கண்ணதாசன் கூறிய மற்றொரு நிகழ்வு உண்டு. அதை நினைக்கும்போது எவ்வளவு திட்டமிட்டு ஒரு மனிதன் தன்னை முன்னிலைப் படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை அறியலாம்.

சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் வந்தது. திமுக மக்கள் மத்தியில் வளர்ந்து வந்த காலம். திமுக கூட்டங்களுக்கு எக்கச்சக்க கூட்டம். ஆதரவு. அந்த தேர்தலில் தி மு க பெற்ற வெற்றி திமுகவின் சரித்திரத்தில் முக்கியக் கட்டம். ஒரு வளர்ந்து வரும் கட்சி தலைநகரின் மாநகராட்சியைக் கைப்பற்றுவது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி/ நிகழ்ச்சி.ஊக்கம். ஊட்டம்.

திமுகவின் அனைத்துத் தலைவர்களும் மூலைக்கு மூலை ஊடியாடி/ ஓடியாடிச்சென்று பாடுபட்டு அந்த வெற்றிக் கனியப் பறித்தனர். முகவின் உழைப்பும் கணிசமானது.

மேயருக்கு பாராட்டுவிழா வெற்றிவிழா நடைபெற்றது. அண்ணா பேசினார் - பேசும்போது ஒரு மோதிரத்தைக் கூட்டத்தினருக்குக் காட்டினார்.

"என் மனைவிக்குக் கூட தங்கம் வாங்குவதற்கு நான் இவ்வளவு சிரமப் பட்டது கிடையாது. அப்படி கடைகளில் ஏறிப்போய் இந்த ஒரு பவுன மோதிரத்தை வாங்கினேன். இந்த சென்னை மாநகராட்சியில் கழகத்தின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அருமைத்தம்பி கருணாநிதிக்கு உங்கள் சார்பாக இதனை சூட்டி மகிழ்வதில் பெருமைப் படுகிறேன்."

என்று அண்ணா பேசி மோதிரத்தை கருனாநிதியின் விரலில் அணிவித்தார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது.

மறுநாள் கோபத்துடன் அண்ணாவை சந்தித்தார் கண்ணதாசன். "என்ன வேடிக்கை அண்ணா? கருணாநிதி மட்டுமே உழைத்துப் பாடுபட்டு வெற்றிக்கனியைப் பறித்ததாக நீங்கள் மோதிரம் போட்டீர்கள்? மற்றவர்கள் எவரும் உழைக்க வில்லையா ?" என்று கேட்டார்.

அண்ணா நமுட்டு சிரிப்புடன் சொன்னார்.

"எல்லோரும் உழைத்தீர்கள். ஆனால் சொந்தக் காசில் மோதிரம் வாங்கித் தந்து கூட்டத்தில் பாராட்டி அணிவிக்கச்சொன்ன அறிவு கருணாநிதிக்கு மட்டும்தானே இருந்தது? நீயும் அதுபோல் ஒன்றை வாங்கித்தந்து இருந்தால் அணிவிப்பதில் எனக்கென்ன தயக்கம்" என்றாராம்.

எப்படி இருக்கிறது கதை?

கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் vs சுயநலம்!

கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் அவரை எப்படி அரசியல் உச்சாநிக்கொம்புக்கு கொண்டு சென்றதோ, அதே கலைஞரின் குடும்ப பாசமும், குடும்ப அரசியலும் அவரின் அரசியலுக்கு அவ்வப்பொழுது சாட்டையடி கொடுக்கத்தான் செய்தது.

இருப்பினும் இன்றுவரை அவரின் நிர்வாகத்திறமை, மற்றும் ஞாபக சக்தி , தமிழகத்தை பொருத்தவரை வேறெந்த அரசியல் வாதிக்கும் இருந்ததாகத்தெரியவில்லை.

சுய நலம் இல்லை என்றால் இவரைவிட ஒரு சிறந்த அரசியல் வாதி இந்தியாவிலேயே இல்லை எனலாம்.

சுயநலமே ஒரு நடிகரிடம் தோற்க வைத்தது . சுயநலமே ஒரு நடிகையிடம் தோற்க வைத்தது.

சுயநலமே ஒரு பண்பட்ட பெருந்தலைவரை (காம ராஜர் ) தோற்கடிக்க ஒரு மாணவனை நிற்க வைத்தது. இவரைப்போல சிறந்த அரசியல்வாதியும் இல்லை. இவரைப்போல சிறந்த சுயநலவாதியும் இல்லை.- முத்துப் பேட்டை P.பகுருதீன் B.Sc.,

-நேற்று! இன்று! நாளை! - 7, தொடரில் இருந்து ஒரு பகுதி. source: http://adirainirubar.blogspot.in/2013/07/7.html

*********************************


1972-ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்களின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி கூறும் விதத்தில், இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று சொன்னாராம். இந்த வசனத்தை இதுநாள்வரை பலமுறை மேடைகளில் கலைஞர் அவர்கள் தொடர்ந்து பறைசாற்றி வருகிறார். இப்போது காயிதேமில்லத் அவர்களிடம் யாரும் கேட்க முடியாது என்ற தைரியத்தினால்கூட இருக்கலாம்.

கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்கு இஸ்லாமிய சமுகத்தை வழிநடத்த மாண்புமிகு கலைஞர் அவர்களைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா என்ற கேள்வி நம் மண்டையைக் குடைகின்றது. காயிதே மில்லத் அப்படி சொல்லியிருப்பாரா?

காயிதே மில்லத் அவர்கள் மரணிக்கும் தறுவாயில் அவரோடு உடன் இருந்த அ.கா.அப்துல் சமத் போன்றவர்களிடம் “கலைஞர் சொல்வது உண்மையா?” என்ற கேள்வியை முன்வைத்த போது “இது பச்சைப் பொய்” என்று உறுதி படுத்தினார்கள்.

ஒருவர் மரணிக்கும் தறுவாயில் அவரை சந்தித்ததை வைத்து தனக்கு சாதகமான இப்படியொரு வசனத்தை வசனகர்த்தா கலைஞர் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டாரே என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது.

முஸ்லீம் லீக் என்ற பாரம்பரியமிக்க கட்சியை துண்டு துண்டாக உடைத்த பெருமை மஞ்சள் துண்டு அணிந்த கலைஞர் அவர்களையேச் சாரும்.

கலைஞர் அவர்கள் காயிதே மில்லத்திற்கும், முஸ்லீம் லீகிற்கும் செய்த பச்சைத்துரோகம் இஸ்லாமியர்களின் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் அழிந்துவிடப் போவதில்லை என்பதுமட்டும் திண்ணம்.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்று வீர வசனம் பேசி பேசிப் பேசியே, வாய்ச்சொல்லில் வீரராக, முஸ்லீம்களின் காப்பாளனாக, காவியநாயகராக, Good Samaritan-ஆக, இஸ்லாமியர்களை தன்பால் ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

. ‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” – இதுவும் டாக்டர் கலைஞரின் பஞ்ச் டயலாக்கில் ஒன்று.

இன்று இஸ்லாமியச் சமூகம் இத்தனைப் பிரிவாக போனதற்கு காரணம் கலைஞர் அவர்கள்தான்.

அப்துல் லத்தீப், காதர் மொய்தீன் போன்ற அப்பாவி நபர்களை பகடைக்காயாக வைத்து அவர் ஆடிய சதுரங்க விளையாட்டை – இஸ்லாமியச் சமுதாயத்தில் கலைஞர் ஏற்படுத்திய பிரிவினையை – இந்தச் சமுதாயம் ஒருக்காலும் மன்னிக்கவே மன்னிக்காது. திரைப்படத் தயாரிப்பளர்களான கமால் பிரதர்ஸ் கருணாநிதிக்கு வாங்கித் தந்த வீடுதான் கோபாலபுரம் வீடு. அந்த கோபாலபுரம் வீடு, கலைஞர் அவர்கள் தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி”யில் சொன்னது போல் திரைப்படத்தில் வசனம் எழுதி வாங்கிய வீடு என்ற கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்கு வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் இருந்து வந்தது. 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. ஆதலால் வியாபாரம் நஷ்டத்திற்கு உள்ளானது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” என்ற படநிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கமால் சகோதரர்கள் கலைஞர் கருணாநிதிக்கு பலவிதத்தில் பணஉதவி புரிந்திருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்களும் அவர்களே.

திரைப்படத்தயாரிப்பில் இறங்கி நொடித்துப் போன அவர்கள் வறுமையில் வாடி வதங்கியபோது, அவர்களின் பொருளாதார நிலைமையை யாரோ முதலமைச்சர் கலைஞரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒருகாலத்தில் நம்மிடம் உதவியை எதிர்பார்த்து நின்றவரிடம் நாம் போய் உதவி கேட்பதா?’
என்று தன்மானம் கருதி அவர்கள் கலைஞரைச் சந்திக்க மறுத்து விட்டனர்.- Abdulqaiyum.

இதையும் படியுங்கள்


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம் – 1)


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம்-2)


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)


நாகூர் ஹனீபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)

மேலும் படிக்க... Read more...

அம்மா குடிநீர் வரமா? சாபமா? அதிமுக பிரசாரமா?

அம்மா குடிநீர் தயாரிக்க ஜெயில் சூழ்நிலையில் டிரைவர் வேலைக்கு வந்தவர்களை கால் வலிக்க நின்னுகிட்டே ஒரு வாய் தண்ணி கொடுக்காமல் சரியாகவே சாப்பாடு போடாமல் சம்பளமும் இல்லாமல் ஏழு நாளும் ரெஸ்டே இல்லாமல் வேலை வாங்கும் ......



குடிநீர் என்பது ஒரு இயற்கை வளம் இது ஒரு வர்த்தகப் பொருள் அல்ல இதை அரசே செய்யக்கூடாது. இது போல குடிநீரை, பெருவணிக நிறுவனங்களும், அரசுகளும் விலைபொருளாக மாற்றுவது தவறு.

குடிநீர் என்பது மனித சமூகத்துக்கு உரிமையான இயற்கை வளம். இதை அரசாங்கங்கள் பொது இடங்களிலும், வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் கொடுத்து, அதை மக்கள் இயல்பாக உபயோகித்து வந்த காலம் போய், இப்போது, அரசால் விநியோகிகப்படும் குழாய் நீர், குடிக்கப் பாதுகாப்பானதல்ல, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரே, குடிக்க உகந்த்து என்ற கருத்தாக்கத்தை பொதுப்புத்தியில் செலுத்தியது யார் என்பதை ஆராயவேண்டும்.

இந்தியா மக்கள் தொகை மிகுந்த நாடு , அனைவருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது அரசால் முடியாது என்ற வாதம் சரியானதல்ல. குடிநீரை விலைபொருளாக்குவதால், வசதியுள்ளவர்கள் மட்டுமே அதைப் பெற முடியும், வசதியில்லாதவர்களுக்கு அது எட்டாத ஒரு பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

*******************


அரசு பணத்தில் அ.தி.மு.க. பிரசாரம்! - விகடன்.


'அம்மா குடிநீர்’... தமிழகத்தின் திடீர் பிரபலம். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் போனால், பலரிடம் 'அம்மா குடிநீர்’ பாட்டில் இருந்தது. ஏதோ இலவசமாகத் தருவதுபோல மக்கள் ஆர்வம்பொங்க வாங்கி, தண்ணீரை ருசி பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர்.

நாமும் ஒரு பாட்டிலை வாங்கி ஒரு மொடக்கு குடித்துவிட்டு பாட்டிலைப் பார்த்தோம். அட... இரட்டை இலை அமர்க்களமாக இருந்தது. இரண்டு இரண்டு இலையாக, மொத்தம் எட்டு இலை கொண்ட ஒரு செடியின் கிளை, முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்குக் கீழே இருந்தது. இதுதான் 'அம்மா குடிநீர்’ லோகோ. தண்ணீர் பாட்டிலில் இலை எதற்கு வந்தது? என எண்ணிக் கொண்டே, இந்தக் குடிநீர் தயாராகும் இடம் எங்கே என தேடிக் கிளம்பினோம்.

அம்மா குடிநீர் எங்கே தயார் ஆகிறது?

கும்மிடிப்பூண்டியில் உள்ள பெத்திக்குப்பத்தில்தான் 'அம்மா குடிநீர்’ பிளான்ட் இருக்கிறது. இது சாலைப் போக்குவரத்து நிறுவனத்துக்கு (ஐ.ஆர்.டி.) சொந்தமான இடம். அங்கு சென்றோம். கண்கொத்தி பாம்புபோல சிலர் கண்காணிப்புப் பணியில் இருந்தனர். நம்மைப் பார்த்ததும் கம்பெனிக்குள் சென்றனர். பின்னர்தான், அவர்களும் பிளான்ட்டில் குடிநீர் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர் என்று தெரியவந்தது.

ஒரு ஷிஃப்ட்டுக்கு 75 ஆயிரம் பாட்டில்கள்!

நாம் காத்திருந்த நேரத்தில் ஓர் அதிகாரி அங்கு வந்தார். பெயர் குறிப்பிட வேண்டாம் என்றபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

''ஐ.ஆர்.டி-க்குச் மொத்தமாக இங்கு 55 ஏக்கர் இருக்கிறது. இந்த வாட்டர் பிளான்ட் மட்டும் 2.47 ஏக்கரில் அமைந்திருக்கிறது. முதல்வர் அறிவித்தப் பின்னர் ஜூலை மாதத்தில்தான் கிடுகிடுவென வேலைகள் தொடங்கின. கிட்டத்தட்ட 60 நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டோம். இந்தத் திட்டத்துக்கான மொத்த செலவு 10.44 கோடி ரூபாய். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மூலமாக தண்ணீரைச் சுத்தம் செய்கிறோம்.

மூன்று ஷிஃப்ட்டில், 24 மணி நேரமும் உற்பத்தி நிற்காமல் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு ஷிஃப்ட்டில் 25 பேர் வேலை செய்கின்றனர். இதற்கென தகுதியான வேலையாட்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். ஒரு ஷிஃப்ட்டில் அதிகப்படியாக 75 ஆயிரம் பாட்டில்களை உற்பத்திசெய்யத் திட்டமிட்டு இருக்கிறோம். தண்ணீரை போர் போட்டு எடுக்கிறோம். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் வரை தண்ணீரை எடுத்து சுத்திகரிக்கறோம். 'அம்மா குடிநீருக்கு’ டிமாண்ட் அதிகமாகிக்கொண்டே இருப்பதால், எங்கள் தயாரிப்பு வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்'' என்று சிரித்தார்.

மேலும் ''இந்த நிலத்தில் இயற்கையாகவே TDS 500-க்குள் இருந்தது. மினரல் வாட்டருக்கு 300-க்கு கீழே இருக்க வேண்டும். அம்மா குடிநீரில் TDS 150-தான் இருக்கிறது. அதனால்தான் குடிநீர் சுவையாக இருக்கிறது. இந்தத் திட்டம் ஆரம்பித்து 40 நாட்களில் ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழும் பெற்று இருக்கிறோம். இதுவரை இவ்வளவு விரைவில் யாருமே வாங்கியது இல்லை'' என்றும் தகவல் சொன்னார்.

டிரைவர் வேலைக்கு வந்தவங்க தண்ணி தயாரிக்கிறாங்க!

நம்மை பத்திரிகையாளர் என்று தெரிந்துகொண்டு இரண்டு, மூன்று பேர் வந்தார்கள். ''எங்களை இங்கு அடிமைபோல நடத்துறாங்க சார்'' என்று அவர்கள் ஆரம்பிக்க... நமக்கு ஷாக்!

''இங்கே மொத்தம் 60 பேர் இருக்கோம். நாங்க எல்லோரும் திருச்சியில் பஸ் டிரைவர் ட்ரெய்னிங் எடுத்துட்டு இருந்தவங்க. ஒவ்வொருத்தரும் ரொம்ப செலவு செஞ்சுதான் இந்த ட்ரெய்னிங்குக்கு செலக்ட் ஆகி சேர்ந்து இருக்கோம்.

திடீர்னு ஒருநாள் 'உங்க எல்லோருக்கும் சென்னையில இனி பயிற்சி தரப்போறோம். ரெண்டு நாள் பயிற்சி. ஒரே ஒருநாள் வாட்டர் பிளான்ட்ல சின்ன வேலை பார்க்கணும்.’ சொல்லி அழைச்சிட்டு போனாங்க. பாதியைக் கடந்தாச்சு... இனி யோசிக்க என்ன இருக்குன்னு கிளம்பி வந்துட்டோம்.

முதல் நாள் எங்க எல்லோருக்கும் இங்கேயே தங்குறதுக்கு, ரூம் கொடுத்தாங்க. 10-க்கு 10 அடி ரூம்ல 12 பேர் இருக்கோம். கழிவறை கிடையாது. ரயில்வே டிராக்குக்கு பக்கத்துல பொட்டல் காட்டுலதான் போக வேண்டி இருக்கு. குடிநீர் வசதி சுத்தமாக சரியில்லை.

மினரல் வாட்டர் பிளான்ட்ல வேலை செய்யும் எங்களுக்கே குடிக்க ஒரு வாய் தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க. சரியாகவே சாப்பாடு போடறது இல்லை. முந்தின நாள் வைச்ச பழைய சாதம் எல்லாம் போடுறாங்க.

தினமும் ஷிஃப்ட்படி எட்டு மணி நேரமும் கால் வலிக்க நின்னுகிட்டே வேலை செய்றோம். டிரைவர் வேலைக்கு வந்தவர்களை இப்படி மிஷின் ஆபரேட் பண்ணச் சொன்னா எப்படி? கால் வலிக்குதுன்னு சும்மா ஒரு நிமிஷம் உட்கார்ந்தா கூட 'மாடு மாதிரி சாப்பிடத் தெரியுதுல்ல. எழுந்து ஒழுங்கா வேலை செய். இல்ல, டிரைவர் டெஸ்ட்ல ஃபெயில் பண்ணிடுவேன்’னு மிரட்டுறாங்க.

ஒண்ணுக்குப் போக, வெளியே போனாகூட திட்டுறாங்க. நாங்க வேலை செய்றதுக்கு சம்பளமும் இல்லை. ஏழு நாளும் வேலை செய்றோம். ரெஸ்டே இல்லை. ஜெயில் போல இருக்கு.

டிரைவர் டிரெய்னிங் முடித்து நல்லபடியா வேலைக்கு ஜாயின் பண்ணலாம்னு வந்தா, இவர்கள் சாதனை செய்றதுக்கு எங்கள் வாழ்க்கையை சோதனை செய்றது நியாயமா? இத்தனைக்கும் மினிஸ்டர் செந்தில்பாலாஜி ஒருநாள் விட்டு ஒருநாள் இங்கு வர்றார். ஒரு வார்த்தைகூட இதுவரை வாயைத் திறந்து கேட்கலை. நாங்க படும் கஷ்டங்களை எப்படியாவது முதல்வருக்கு சொல்லுங்க சார்'' என்றார்கள் பரிதாபமாக.

அனுபவம் இல்லாத இவர்கள் தயாரிப்பது எப்படி சுத்தமான தண்ணீராக இருக்க முடியும்? என்ற எண்ணத்தோடு அங்கிருந்து புறப்பட்டோம்.

தண்ணீரின் தரம் முக்கியம்!

சுகாதாரம் இல்லாத பாட்டில் தண்ணீர் குடித்தால் என்னாகும்?

டாக்டர் புகழேந்தியிடம் கேட்டோம். ''23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாட்டிலில் அடைத்து விற்பதால், அது நல்ல குடிநீர், தரமானது, சுகாதாரமானது என்று சொல்ல முடியாது.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் இருப்பதால், பிளாஸ்டிக்கில் இருக்கும் நச்சுத்தன்மை தண்ணீரிலும் கலக்கிறது.

இதனால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க நலவாழ்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

பாட்டிலில் இருக்கும் குடிநீர்தான் சிறந்தது; குழாய்களில் வரும் நீர் சுகாதாரம் அற்றது என்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். குழாயில் வரும் நீர் எல்லாம் அசுத்தமானதும் கிடையாது. பாட்டிலில் வரும் மினரல் வாட்டர் எல்லாம் சுத்தமானதும் கிடையாது'' என்றார்.

இரட்டை இலையைப் போட்டு, தாகம் தணிக்கிறார்களா? ஓட்டு குவிக்கிறார்களா? - நா.சிபிச்சக்கரவர்த்தி

சொட்டு தகவல்கள்

1. தமிழகத்தில் இன்னும் ஒன்பது இடங்களில் 'அம்மா குடிநீர்’ பிளான்ட் அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

2. தமிழகத்தில் மொத்தம் 304 குடிநீர் விற்பனை கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் அதிகபடியாக 39 கவுன்ட்டர்கள். அதிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 12 இயங்குகிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விற்கப்படுகிறது. கவுன்ட்டர்களில் விற்பனைப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்த பஸ் கண்டக்டர்கள்தான்.

3.1965ல்-தான் இந்தியாவுக்கு முதன்முதலில் 'பிஸ்லரி மினரல் வாட்டர்’ மும்பையில் அறிமுகமானது. 1969-ல்தான் பி.வி.சி-யில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய வாட்டர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தது. 1990-களில்தான் வாட்டர் பாட்டில் பிசினஸ் மெள்ள தமிழகத்தில் உதயமானது. 2000-க்குப் பிறகுதான் சூடுபிடிக்கத் தொடங்கி இப்போது அரசே சொந்தமாக நடத்தும் பெரிய வணிக தொழிலாகவே மாறியிருக்கிறது.

நன்றி: விகடன்.

**************
பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை சன்னமான முறையில் வரைந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. எனவே இது லோக்சபா தேர்தலை மனதில் கொண்டும், மக்களை அதிமுகவுக்கு ஆதரவாக திருப்பவும் நடக்கும் முயற்சி என்றும் விவாதம் வெடித்துள்ளது.



பாட்டிலில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெளிவாகத் தெரியும் வகையில் இரட்டை இலைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை இரட்டை இலை இல்லை என்று அரசு சார்பில் விரைவில் மறுப்பு வரும்.

பறக்கும் குதிரைன்னு சொன்னவங்களாச்சே...

ஏற்கனவே மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தின் முகப்பில் இரட்டை இலை வடிவிலான புதிய சிலை உருவாக்கப்பட்டது.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டபோது அது இரட்டை இலை இல்லை, பறக்கும் குதிரை என்று அரசு சார்பில் கூறப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இந்த சர்ச்சைக்கும் உரிய விளக்கம் வெளியாகும் என்று தெரிகிறது.

Ref: that’s tamil.

மேலும் படிக்க... Read more...

அதிகாரத்தின் இரையாக சிறையில் அப்பாவி மதானி.

>> Wednesday, September 18, 2013

முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.



பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு.

மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன.

முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.

நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.

சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.

1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.

அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.

அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.

இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.

ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.

மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது.

1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன.

அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி.

பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.

மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.

****

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.

கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார்.

ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?


இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.

வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.

குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது.

ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர்.

இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது... இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.

குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர்.

மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை.

8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...


***

மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

***

மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது.

விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை.

மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.

கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.- ஆளூர் ஷாநவாஸ் (mediasteps@gmail.com)

[நன்றி: சமநிலைச் சமுதாயம்]

SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&task=view&id=10687

மேலும் படிக்க... Read more...

கற்பழிக்கப்பட்ட சிறுமி கூறுபோடப்படுகிறாளா. ???

>> Tuesday, September 17, 2013

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மனநிலை சரியில்லை? வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது? என‌ இந்தியாவின் முன்னாள் சட்டமந்திரியும் தற்போதைய பி.ஜே.பி யின் ராஜ்ய சபா உறுப்பினருமாவார் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் 90 வயது ஜெத்மலானி அதிரடி .

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ள ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறியுள்ள 16 வயது சிறுமி, ஆசாராமின் ஆசிரமத்தில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்

16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ஆசாராம் பாபு
ஜெத்மலானி



(தாத்தா) ஆசாராம் மீது புகார் கூறிய பெண்ணுக்கு மன நிலை சரியில்லை..

வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது – ஆசாராமின் வழக்கறிஞரான ஜெத்மலானி அதிரடி


ஜோத்பூர்: ஆசாராம் பாபு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசாராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிடுகையில், சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு மன நிலை சரியில்லை .வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் அச்சிறுமிக்கு உள்ளது என்று ஆசாராமின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி ( இவரும் ஒரு தாத்தா தான் ) கூறி சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார்

அசாரம் பாபு மீது சிறுமி குற்றச்சாட்டு

.மத குருவான அசாரம் பாவுக்கு(72) சொந்தமான மத்திய பிரதேசத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படித்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் தேதி இரவு 10 மணிக்கு அந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் ஜோத்பூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அசாரம் பாபு ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை தீய சக்திகள் தீண்டியதாக நினைத்த அவர்கள் தங்கள் மகளை குணப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.

சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் அசாரம் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அசாரம் பாபு மீதான வழக்கு விசாரணை விவரங்களை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்கம் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திலிருந்து ஆபாச வீடியோ பறிமுதல்?

ஜோத்பூர்: சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு ஆபாச எம்.எம்.எஸ் வீடியோ சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆபாச வீடியோவில், ஒரு பெண்ணின் உடல் மீது தனது கைகளால் சாமியார் தடவுவது போல இருக்கிறதாம்.

இந்த வீடியோவை எடுத்தவர் ஆசாராமின் உதவியாளர் சிவா என்று ஆஜ்தக் செய்தி கூறுகிறது.

இந்த ஆபாசப் படத்தை வைத்துப பார்க்கும்போது ஆசிரமத்தில் பெருமளவில் செக்ஸ் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.

இதற்கிடையே, ஆசாராம் ஆசிரமத்தில் வார்டனாக வேலை பார்த்து வந்த சஞ்சிதா குப்தா என்ற பெண் தலைமறைவாக இருக்கிறார். அவர் மகாராஷ்டிராவில் மறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்தான் ஆசாராம் மீது புகார் கொடுத்துள்ள 16 வயது சிறுமியை, ஆசிரமத்திற்குப் போய் சிறப்பு சிகிச்சை பெறுமாறு அவரது பெற்றோருக்கு யோசனை கூறியவர் என்று கூறப்படுகிறது.

சிவா தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். சிவா, ஆசாராம் குறித்த பல ரகசியங்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம். இரவு நேரங்களில்தான் ஆசாராம் சேஷ்டைகளில் ஈடுபடுவாராம். இதற்காக தனியாக குடில் ஒன்றும் உள்ளதாம். அங்கு வைத்துத்தான் அத்தனையும் நடக்குமாம்.

தனது பெண் ஆதரவாளர்கள், சிஷ்யைகளுக்கு ஆபாசப் படம் போட்டுக் காட்டி அவர்களைத் தூண்டி விடுவாராம் ஆசாராம். பின்னர் பாலியல் ரீதியாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வாராம்.

குஜராத் கோவிலில் ஆசாராம் பாபுவின் படங்கள் நீக்கம்

சூரத்: குஜராத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சாமியார் ஆசாராம் பாபுவின் படங்களை கிராம மக்கள் கும்பலாக வந்து நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழமையான வைஜ்நாத் மகாதேவ் சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆசாராமின் புகைப்படங்களை தூக்கி வெளியே போட்டனர்.

பின்னர் கோவிலில் தங்கியிருந்த ஆசாராமின் ஆதரவாளர்களும் ஊர் மக்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

ஆசாராம் பாபுவுக்கு சிறுமிகள், பெண்களை சப்ளை செய்த ம.பி. ஹாஸ்டல் வார்டன்

ஜோத்பூர்: மதகுருவான ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டனுடன் உறவு கொண்டதாக அவரது உதவியாளர் சிவா தெரிவித்துள்ளார்.

அவரது உதவியாளர் சிவா பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். போலீசார் சிவாவை கைது செய்து விசாரித்தபோது தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

வார்டனுடன் உறவு ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டன் சில்பியுடன் உடல் உறவு கொண்டதாக சிவா தெரிவித்துள்ளார். இந்த குருகுல் விடுதி ஆசாராம் பாபுவுக்கு சொந்தமானது.

2 வீடுகள் ஆசாராம் ஷில்பிக்கு டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 2 பிளாட்டுகள் வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஷில்பி ஆசாராமுக்காக பல சிறுமிகள் மற்றும் பெண்களை ஆசிரமத்திற்கு அனுப்பி வைப்பாராம்.

மெத்தை, ஸ்பெஷல் உணவு, குளிக்க கங்கை நீர்: சிறையில் ஆசாராம் பாபுவுக்கு ராஜ மரியாதைதான்

பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதகுரு ஆசாராம் பாபுவுக்கு சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறதாம். சிறையில் அவருக்கு கட்டில், மெத்தை அளித்துள்ளார்களாம். மேலும் சிறை அதிகாரிகளின் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்படும் உணவை தான் அவர் சாப்பிடுகிறாராம். 2 பேர் அவருக்கு பணிவிடை செய்கிறார்களாம். மேலும் அவரது வேண்டுகோளின்படி அவர் குளிக்க கங்கை நீர் கொடுக்கப்படுகிறதாம்.

ஆசாராம் பாபு மீது 'பாக்சோ' சட்டம் பாய்கிறது...!

ஜெய்ப்பூர்: சாமியார் ஆசாராம் பாபு மீது கடுமையான பிரிவுகளைக் கொண்ட பாக்சோ சட்டத்தைப் பிரயோகிக்க ஜோத்பூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில்தான் இந்த சட்டம் அமலுக்கு வந்தது நினைவிருக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டமான பாக்சோ, கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டதாகும்.. தனது பொறுப்பில் இருந்த மைனர் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கும் பிரிவாகும் இது.

பல ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது பெண்ணுடன் ஆசாராம் பாபு கசமுசா: மாஜி ஊழியர் தகவல்

அகமதாபாத்: மதகுருவான ஆசாராம் பாபுவிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒருவர் அவரின் ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

அவரது ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் 15 ஆண்டுகளாக தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்த அம்ருத் பிரஜபதி பல்வேறு ரகசியங்களை தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகள் அம்ருத் பிரஜபதி கடந்த 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அவர் தனியாக கிளினிக் வைக்க சென்றுவிட்டார்.

சூரம் விற்றார் நான் வரும் முன்பு ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்ட சூரங்களை முறையான உரிமம் இன்றி விற்பணனை செய்து வந்தார். அவர் மோதேரா ஆற்றங்கரை அருகே சிறிய குடில் அமைத்து அங்கு தான் இருந்தார். பின்னர் அந்த இடத்தில் ஆசிரமம் கட்டப்பட்டது என்று பிரஜபதி தெரிவித்துள்ளார். தற்போது ஆசாராம் பாபுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

25 வயது பெண்ணுடன் கசமுசா

ஒரு நாள் ஆசாராம் பாபுவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை பார்க்க அவரது அறைக்கு சென்றேன்.

அவரது பாதுகாவலர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால் என்னை அறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

உள்ளே சென்றபோது அங்கு ஆசாராம் தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 25 வயது பெண்ணுடன் கசமுசாவில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். அதன் பிறகே அங்கிருந்து வெளியேறினேன் என்று பிரஜபதி தெரிவித்தார்.

ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆச்சரியம்!!

ஜோத்பூர்: மருந்து கொடுக்காமல்தான் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது 'வீரியம்' பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபுக்கு 3 டாக்டர்கள் கொண்ட குழு ஆண்மைப் பரிசோதனையை நடத்தியது.

முதல் டெஸ்ட்டிலேயே ஆசாராம் பாஸ்... அவருக்கு முதலில் உடல் தூண்டுதல் physical stimulation பரிசோதனை செய்யப்பட்டது. அதிலேயே அவருக்கு உறுப்பு எழுச்சி சிறப்பாக இருந்ததாக ஜோத்பூர் மதுரா தாஸ் மாத்தூர் மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் கூறியுள்ளனர்.

முதலில் பரிசோதனைக்கு ஆசாராம் மறுத்தாராம். ஆனால் டாக்டர்கள் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தனராம். பின்னர் எனது உடல் கல் போன்றது. அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சோதனைக்கு சம்மதித்தாராம் ஆசாராம்.

ஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் கற்பழிப்பு... இன்னொரு தாத்தா சாமியார் கைது!

செஹோர், மத்தியப் பிரதேசம்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிக்கிய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இன்னொரு சாமியார் பலாத்கார சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆசாராம் பாபுவுக்கு 72 வயதாகிறது. இப்போது புதிதாக கைதாகியுள்ள சாமியார் இவரை விட இளையவர்தான். அதாவது 65 வயதாகிறது. இவரது பெயர் மகேந்திர கிரி என்கிற துன்னு பாபா.

இவர் மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் கிராமத்தில் ஆசிரமம் வைத்துள்ளார். அந்த ஆசிரமத்திற்கு வந்த 24 வயதுப் பெண்ணை அங்கு அடைத்து வைத்து பல மாதங்களாக இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் கிளம்பியது.

அந்த 24 வயதான மணமான பெண்ணை தனது ஆசிரமத்தில் கடந்த 4 மாதங்களாக இவர் அடைத்து வைத்திருந்தாராம். அங்கு வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம். இதுகுறித்து போலிஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் ஆசிரமத்திற்குச் சென்று ரெய்டு நடத்தி அந்தப் பெண்ணை மீட்டனர். சாமியாரும் கைது செய்யப்பட்டார்.

2 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ரத்தம் கொட்டக் கொட்ட சாலையில் போட்ட பரிதாபம்

லூதியானாவில் 2 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். ரத்தம் கொட்டிய நிலையில் அந்த சிறுமியை சாலையோரத்திலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக கிடந்த நிலையைப் பார்த்து அதிர்ந்து போன ஒருவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

அந்த சிறுமியின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். அங்குள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் சிறுமியின் தந்தை எழுந்துள்ளார். அப்போது தனது மகளைக் காணாமல் திடுக்கிட்டு அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் காணவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தகவல்கள் அனைத்தும் http://tamil.oneindia.in/news லிருந்து எடுக்கப்பட்டது.:

மேலும் படிக்க... Read more...

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

>> Wednesday, September 11, 2013

அண்ணா பிறந்த நாள்: அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

“இந்தியாவில் முஸ்லிமாக இருந்தால் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம்.

முஸ்லிம்கள் என்றால் அனைத்து விஷயத்திலும் பாரபட்சம் என்பதை மத்திய அரசும், மாநில அரசுகளும் உண்மைப்படுத்தி வருகின்றன.

Picture courtesey to :Imam Hasanul Banna- facebook.com


படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


“இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம். ஆளுங்கட்சி மதச்சார்பற்றது என்பது கூட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரவில்லை.” (இந்தியா டுடே வார இதழின் களஆய்வு அறிக்கை, டிசம்பர் 26, 2012)

இந்தியாவில் இன்று முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகப் பெரும் போராட்டத்தின் ஊற்றாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஆம்! சுதந்திரத்திற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து, ஆங்கிலேயர்களை விரட்டியடித்த ஒரு சமுதாயம் இன்று குற்றப் பின்னணியோடு வாழ்ந்து வருகிறது.

ஆனால், முஸ்லிம்கள் எந்தத் தவறையும் செய்ததாக ஒரு சிறு துரும்மையும் எடுத்து போட்டு விட முடியாது.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வு நாம் மறந்துவிட முடியாது.

இந்த பயங்கரவாத செயல்களை செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல. ஆனாலும், இன்று முஸ்லிம்களுக்கு சுதந்திரம் இல்லை. அரசியல் தளத்தில் தன்னுடைய ஆளுமைத் தன்மையை பறை சாற்றி வந்த இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கினார்கள். இந்த பயங்கரவாத செயலை செய்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை. ஆனாலும், இங்கு முஸ்லிம்களுக்கு நீதி இல்லை.

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்து கொன்ற பயங்கரவாத செயலை செய்தனர். இந்த பயங்கரவாத செயலை செய்ததிலும் முஸ்லிம்களுக்கு பங்கில்லை. ஆனாலும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

இப்படி, இந்தியாவின் அரசியல் தலைவர்களையும், பிரதானமானவர்களையும் கொன்றொழித்தவர்கள் இன்று மதிக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்து, சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த வாரிசுகளின் நிலைமை இன்று சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றது. அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதிலும் அரசு தன்னுடைய மனசாட்சியை திறக்க மறுக்கிறது.

சட்ட நூல்களின்படி ஆயுள் தண்டனை எனப்படுவது ஆயுள் முழுவதற்குமானதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதே சட்டத்தில்தான் பொது மன்னிப்பிற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. எந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் சட்டம் பொது மன்னிப்பிற்கு வழிவகை செய்கிறதோ, அதே அடிப்படையில்தான் முஸ்லிம்களும் 7 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே, முஸ்லிம்களின் கோரிக்கையாக ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களும், கோரிக்கைகளும் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து தொடங்கி விடும். அரசிடம் விசாரணை கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாக இருக்கும்.

அதுபோல்தான் இந்த வருடமும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழாவை தமிழக அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் குடும்பங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை கைதிகளாக இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் என வருடா வருடம் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால், ஒவ்வொரு வருடமும் அரசு தன்னுடைய பாரபட்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அது கடந்த தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி. இரண்டும் முஸ்லிம்களின் விஷயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனவே தவிர, சிறிதும் மாற்றம் இல்லை.

தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும், அந்த கஷ்டத்தை அனுபவிப்பது அவனுடைய ஒட்டுமொத்த குடும்பமும்தான் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாக வாழ்வது என்பது கடினமான ஒன்று என்பதை தற்போது நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்வும் நிரூபித்து வருகின்றது. முஸ்லிம்கள் என்றால் அனைத்து விஷயத்திலும் பாரபட்சம் என்பதை மத்திய அரசும், மாநில அரசுகளும் உண்மைப்படுத்தி வருகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் பிரதானமாக சிறைகளில் இருப்பவர்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. தவறு செய்து சிறையில் இருப்பவர்கள் அவர்கள் திருந்துவதற்கான ஒரு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

அந்த அடிப்படையில் சிறைவாசிகளின் நடவடிக்கைகளில் மாற்றம், ஒழுக்கத்தில் முன்னேற்றம், தவறை உணர்ந்து ஒரு புதிய வாழ்க்கை முறையை எதிர்பார்த்தல், தன்னுடைய தவறை உணர்தல் என்ற அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், நாட்டில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நாட்டின் முக்கிய விசேஷமான நாட்களில் சிறைகளில் இருப்பவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம்.

அதே போன்றுதான் தமிழகத்திலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாள் அன்று சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில்…

மற்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால், கேரளாவில் 7 ஆண்டுகளில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதையும், ஆந்திராவில் 5 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதையும், உத்திரப் பிரதேசத்தில் கான்சிராம் பிறந்த தினத்தை முன்னிட்டு 10,000த்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகளை மாயாவதி அரசு விடுதலை செய்ததையும், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படுவதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கர்நாடகாவில் 8 வருடம் சிறையில் கழித்த ஆண்களுக்கும், 4 வருடம் சிறையில் கழித்த பெண்களுக்கும் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் அது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அது என்னவோ முஸ்லிம்களுக்கு மட்டும் தன்னுடைய பங்களிப்பை மாநில அரசுகள் செய்ய மறுக்கிறது.

மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை

1997ம் ஆண்டு மதுரையில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடைபெற்றபோது தி.மு.க. ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 2008 தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்பட்டார்கள். ஏனென்றால், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தி.மு.க.வின் தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுதலையை எதிர்த்து பல்வேறு கட்சித் தலைவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் போன்றோர் இந்த விடுதலையை கண்டித்து, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.

இந்த விடுதலையின் போது இவர்களுடன் 1,405 ஆயுள் சிறைக்கைதிகள் தமிழகம் முழுவதும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகள் இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

அப்பொழுது கூட இந்த விடுதலையை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், அவர் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களை தவிர, 7 ஆண்டுகள் கழிந்தவர்களை விடுதலை செய்வது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. அரசு இந்த விஷயத்தில் தன்னிச்சையாக செயல்பட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

2009ம் ஆண்டில் 10 பேர் விடுதலை

2009ம் ஆண்டிலும் அதே நிலைதான் தொடர்ந்தது. 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும் முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லை. அப்போதும் முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்பார்ப்பை தமிழக அரசு மீது வைத்திருந்தனர். இதிலும் முஸ்லிம்கள் வழக்கம் போல் ஏமாந்து போயினர்.

2010ம் ஆண்டில் 13 பேர் விடுதலை 2010ம் ஆண்டு அதே தி.மு.க. ஆட்சியில் 5 வருடங்கள் கழிந்த சிறைக் கைதிகள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. வழக்கம் போல் தி.மு.க. அரசு தன்னுடைய பாரபட்சத்தை வெளிப்படுத்தியது.

இதற்கெதிராக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் பல்வேறு சமூக தலைவர்களை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

அ.தி.மு.க. பதவியேற்பு இப்படி தி.மு.க. அரசு முஸ்லிம்களுக்கு தன்னுடைய பாரபட்சத்தை காட்டியது. அடுத்து 2011ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அ.தி.மு.க. அரசும் முஸ்லிம் சிறைவாசிகளின் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது முஸ்லிம்களின் மத்தியில் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களிடமும் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இதே நிலை தொடர்ந்து விடாமல் வரக் கூடிய செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று தமிழக அரசு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விஷயத்தில் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தாங்கள் எப்பொழுதாவது விடுதலை செய்யப்படுவோமா… இல்லை சிறையிலேயே செத்து விடுவோமா என்று தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் நிகழ்வே நடந்து கொண்டிருக்கிறது.

சிறை இன்றைக்கு மன நோயாளிகளை அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய இடமாக மாறியிருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற நிலையை ஏற்படுத்தி விடாமல், சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்த வண்ணம் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்த விஷயத்தில் அரசு மனம் இரங்க வேண்டும். பல்லாண்டு காலமாக தங்கள் உறவை பிரிந்து வாடும் பெற்றோர்களை, மனைவிமார்களை, தந்தைகளின் முகங்களை காணத் துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த முறை தமிழக அரசு இவ்விடயத்தில் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். பெருமூச்சோடு எதிர்பார்க்கிறார்கள்.

நெல்லை சலீம் at: http://www.thoothuonline.com

************


இதையும் படியுங்கள்.
அப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்துறை ‍‍- அ.மார்க்ஸ்
************


Picture courtesey to :Imam Hasanul Banna- facebook.com
படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


மேலும் படிக்க... Read more...

அப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்துறை ‍‍- அ.மார்க்ஸ்

காவல் துறை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து அப்பாவி யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைத்து புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்து செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்களை கணினியில் ஏற்றி பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்து ‘முஸ்லிம் தீவிரவாதம்’ பயங்கரவாதி, “சந்தேகத்திற்குரியவர்” என‌கட்டமைக்கும் ஒரு விஷச் சுழல் நடக்கிறது.

இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல.


மேலப்பாளையம் நெல்பேட்டை முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர்.

மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ் ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர் யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது.

அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றாரை இலட்சம் முலிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.

மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது.

உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள்.

ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது..

எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தெரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார்.

சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது.

மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதாமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.

சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.

மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.

முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.

நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி.

ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார்.

அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.

யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களையும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார்

அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்ப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை. மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர்.

சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.

கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.

பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.

பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.

முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன.

இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது.

சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரனைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது.

ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

கட்டுரை ஆக்கம்: சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ்

--------------------------------------------------------------------- ‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ புத்தகம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 'யாதுமாகி' பதிப்பகத்தில் கிடைக்கும்.

யாதுமாகி பதிப்பகம், 2, முதல் தெரு, வேலவர் காலனி, மகாராஜா நகர், திருநெல்வேலி -627 011

வெளியீடு : யாதுமாகி பதிப்பகம், 37/17, ராமசாமி கோயில் சன்னதி தெரு, திருநெல்வேலி - 627 002 பேசி : 0462 - 4000285 பேசி : 94434 86285

Thanks To:சுவனப்பிரியன்

<

மேலும் படிக்க... Read more...

ஜெயலலிதாவிடமே பம்மாத்தா?. போலி டிகிரி எம்.எல்.ஏ - மந்திரிகள் .

>> Thursday, September 5, 2013

படிக்காத படிப்பை, படித்ததாகச் சொல்லி 50-க்கும் மேற்பட்டோர் சீட் வாங்கி ஜெயித்து எம்.எல்.ஏ-க்களாகவும் மந்திரிகளாகவும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

போலி டிகிரி.. படிச்சாரா மந்திரி? - விகடன்.



தவறு செய்தால்... ஏமாற்றினால்... மோசடியை அரங்கேற்றினால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் 'தொலைத்துக் கட்டிவிடுவார்’ ஜெயலலிதா. அப்படிப்பட்ட தலைவியையே ஏமாற்றிப் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்கள் சிலர். படிக்காத படிப்பை, படித்ததாகச் சொல்லித் தலைவியிடம் பம்மாத்து காட்டி எம்.எல்.ஏ. சீட் வாங்கி ஜெயித்தவர்களின் ஜாதகம் இது.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து 'விருப்ப மனு’ வாங்கியது அ.தி.மு.க. தலைமை. சுமார் 8,000 பேர் சீட் கேட்டு விண்ணப்பித்தனர். அப்படி, விருப்ப மனு அளித்தவர்கள், தங்களின் கல்வித்தகுதி என்ன என்பதையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். இந்த விருப்ப மனு தவிர ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் மாவட்டச் செயலாளர்கள் மூலமும் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவர்களிடமும் கல்வித்தகுதி விவரங்கள் பெறப்பட்டன. விருப்ப மனுக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அளித்த பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் யாரை நிறுத்தலாம் என தலைமை ஒரு இறுதிப் பட்டியலைத் தயாரித்தது. அந்தப் பட்டியலில் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வரை தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். இறுதியாக, வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். அப்படி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர்களுக்குப் பின்னால் அவர்கள் வாங்கிய பட்டங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இங்கேதான் சிக்கல்... வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சொத்துப் பட்டியல், வருமான வரி கணக்கு, நிரந்தரக் கணக்கு எண், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்கள் எல்லாம் வேட்புமனுவோடு அளிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த வேட்புமனுவில் கல்வித் தகுதி பற்றி எட்டாவதாக ஒரு கேள்வி. அதிகபட்சமாகப் படித்த கல்வித் தகுதியை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன படிப்பு, படித்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், படிப்பு முடித்த ஆண்டு ஆகிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

கெடுபிடி காட்டும் தேர்தல் கமிஷனிடம் தவறான தகவலைக் கொடுத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும் என பயந்தோ, என்னவோ பெரும்பாலானோர் சரியான தகவலைக் கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுத்த விவரங்களை எல்லாம் தோண்டி எடுத்தோம். 50-க்கும் மேற்பட்டோர் பொய்யான தகவலைச் சொல்லி சீட் வாங்கி ஜெயித்து எம்.எல்.ஏ-க்களாகவும் மந்தி ரிகளாகவும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.


160 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது அ.தி.மு.க. முதலில் அமைச்சர்களைப் பார்ப்போம்.

* அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றபோது அவருக்கு எந்தப் பட்டமும் சூட்டப்படவில்லை. ஆனால், வேட்புமனு தாக்கலில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கலைக் கல்லூரியில் 1973-ல் பி.ஏ. பொருளியல் முடிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், சட்டசபை வெப்சைட்டில் பி.ஏ. எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

* அமைச்சரவையில் நான்காவது இடத்தில் இருக்கும் வைத்திலிங்கம் வேட்பாளர் பட்டியலில் பி.ஏ. படித்ததாக சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ஆனால், வேட்புமனுவில் 1977-80-ம் ஆண்டு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. முடிக்கவில்லை என சொல்லியிருக்கிறார் வைத்திலிங்கம். ஆனால், சட்டசபை ரெக்கார்டில் பி.ஏ. என குறிப்பிட்டிருக்கிறார்.

* ஆயிரம் விளக்கு வேட்பாளர் பட்டியலில் பா.வளர்மதியின் பெயருக்குப்பின் (பி.ஏ.) என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வேட்புமனுவில் மதுரை சிறுமலர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தாகக் குறிப்பிட்டிருக்கிறார். சட்டசபையிலும் 10-ம் வகுப்பு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இடையில் அவர் பிளஸ் 2 படித்தாரா? பி.ஏ. முடித்தாரா?

* வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் பெயருக்குப் பின்னால் (பி.எஸ்ஸி.) என குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா. வேட்பு மனுவில் ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் 1976-ம் ஆண்டு பி.எஸ்ஸி. ஃபெயில் என சொல்லிவிட்டு, சட்டசபையில் பி.எஸ்ஸி. எனக் குறிப்பிட்டிருக்கிறார் பழனிசாமி.

* கரூர் தொகுதிக்கு சீட் கேட்டபோது பி.காம். படித்திருப்பதாகப் பட்டம் சூட்டிக்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கலின்போது உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். பி.காம். படிப்பை கரூர் அரசு கலைக் கல்லூரியில் 16.4.95-ல் இடை நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், சட்டசபை ரெக்கார்ட் அவர் பி.காம். முடித்ததாகச் சொல்கிறது.

* அமைச்சர் ரமணா திருவள்ளூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வேட்பாளர் பட்டியலில் அவர் பெயருக்குப் பின்னால் பி.எஸ்ஸி., டி.பார்ம். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வேட்புமனுவிலும் சட்டசபை இணையதளத்திலும் வெறும் டி.பார்ம். மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்னை சி.எஸ்.பேஸ்ட் மேத்தா பார்மஸி கல்லூரியில் 1990-ல் டி.பார்ம் முடித்திருக்கிறார். பி.எஸ்ஸி. எங்கே படித்தார் என்பது தெரியவில்லை!

* ஆவடியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் அப்துல் ரஹீமுக்கு வேட்பாளர் பட்டியலில் எந்தப் பட்டமும் குறிப்பிடவில்லை. வேட்புமனுவில் ஆவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து 29.3.1986-ல் விலகியபோது '10-ம் வகுப்பு ஃபெயில்’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சட்டசபை பதிவேட்டில் '10-ம் வகுப்பு’ படித்தாகக் காட்டியிருக்கிறார்.

* அமைச்சர் வீரமணி ஜோலார்பேட்டையில் போட்டியிட்டபோது வேட்பாளர் பட்டியலில் பி.ஏ. எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், வேட்புமனுவில் அவர் ஜோலார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1980-1981-ல் பத்தாம் வகுப்பு முடித்தாகச் சொல்லியிருந்தார். சட்டசபையிலோ பி.ஏ. எனச் சொல்லியிருக்கிறார்.

* குமாரபாளையத்தில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் தங்கமணியின் பெயருக்குப் பின்னால் (பி.ஏ.) என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வேட்புமனுவில் 1976-77-ல் ஈரோடு கலைக் கல்லூரியில் பி.யூ.சி. ஃபெயில் என சொல்லியிருந்தார். சட்டசபை இணையதளத்தில் பட்டத்தைச் சேர்த்துக்கொண்டார்.

* வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பெயருக்குப் பின்னால் பி.ஏ. என குறிப்பிட்டிருந்தனர். ஆனால், வேட்புமனுவில் 1982-85-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தாகச் சொல்லி பட்டத்துக்கு மேல் ஒரு கோடு போட்டிருந்தனர். இதற்கு, அவர் படிப்பை முடிக்கவில்லை என்று பொருள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்டசபை ரெக்கார்டில் பி.ஏ. பட்டம் சேர்ந்துகொண்டது.

* தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் முக்கூர் சுப்பிரமணியன் 5-ம் வகுப்பு வரை படித்தவர். செய்யாறு தொகுதிக்கு அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது அவருடைய பெயருக்குப் பின்னால் பி.ஏ. பட்டம் இடம்பெற்றிருந்தது. ஆனால் வேட்பு மனுவோடு தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். சட்டமன்ற வெப்சைட்டில் பி.ஏ. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் சுப்பிரமணியன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டபோது வேட்புமனுவில் 6-ம் வகுப்பு ஃபெயில் என குறிப்பிட்டிருக்கிறார். ஐந்தாம் வகுப்பு படித்தவர் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சர்.

அடுத்து முன்னாள் அமைச்சர்களைப் பற்றி பார்ப்போம்.

* பாலக்கோடு தொகுதியில் வென்ற கே.பி.அன்பழகன் வேட்பாளர் பட்டியலில் (பி.எஸ்ஸி.) (படிப்பை முடிக்கவில்லை) என குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அஃபிடவிட்டிலும் சட்டசபையிலும் பி.யூ.சி. என குறிப்பிட்டிருக்கிறார்.

* ஊட்டியில் ஜெயித்த முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் பி.எஸ்ஸி., பி.எட்.படித்திருக்கிறார் என வேட்பாளர் பட்டியிலில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அஃபிட விட்டிலும் சட்டசபையிலும் பி.எஸ்ஸி. மட்டுமே இருக்கிறது.

* முசிறி என்.ஆர்.சிவபதி எம்.ஏ., பி.எல். படித்ததாகச் சொல்லிவிட்டு, பிறகு வேட்பு மனுவிலும் சட்டசபையிலும் பி.ஏ., பி.எல். எனக் குறிப்பிட்டிருந்தார்.

* நயினார் நாகேந்திரன் எம்.ஏ. படித்ததாக ஜெயலலிதா சொல்லியிருந்தார். ஆனால், தேர்தல் கமிஷனில் (எம்.ஏ.)வை அடைப்புக்குறியில் காட்டியிருந்தார். திருநெல்வேலி இந்துக் கல் லூரியில் (எம்.ஏ.) கோர்ஸை முடித்திருக்கிறார். சட்டசபையிலோ பி.எஸ்ஸி. (எம்.ஏ.) எனச் சொல்லியிருந்தார்

அடுத்து எம்.எல்.ஏ-க்கள்...

* வேளச்சேரி அசோக் 1987-ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 2007-10-ல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்திருக்கிறார். தேர்தல் கமிஷனில் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கும் அசோக் பி.ஏ. படிப்பை பாஸ் செய்தாரா? என்பதைச் சொல்லாமல் கோர்ஸ் முடித்ததை மட்டும் குறிப் பிட்டிருக்கிறார்.

* மைலம் தொகுதியைச் சேர்ந்த கே.பி. நாகராஜனும் (வேட்புமனுவில் பி.நாகராஜன் எனக் குறிப்பிட்டிருப்பது ஏனோ!), அருகில் இருக்கும் இன்னொரு தொகுதியான வானூர் தொகுதியை சேர்ந்த ஜானகிராமனும் தலைவியிடம் தாங்கள் பி.ஏ. படித்தாகச் சொல்லி சீட் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், வேட்புமனுவிலும் சட்டசபையிலும் 10-ம் வகுப்பு எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

* ஊத்தங்கரை மனோரஞ்சிதம் வேட்புமனுவில் கல்வித் தகுதிக்கு நேராக 'எதுவுமில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், சட்டசபையில் அவருடைய கல்வித் தகுதி 8-ம் வகுப்பு எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

* மதுராந்தகம் கனிதா சம்பத் போட்டியிட்டபோது (பி.ஏ.)வை அடைப்புக்குறிக்குள் காட்டியிருந்தவர், வேட்புமனுவில் 9-ம் வகுப்பு என சொல்லிவிட்டு சட்டசபையில் 10-ம் வகுப்பு எனப் போட்டிருக்கிறார்.

* பல்லாவரம் தன்சிங் போட்டியிட்டபோது (பி.காம்.) பட்டத்தை அடைப்புக்குறிக்குள் காட் டியவர் வேட்புமனுவிலும் சட்டசபையிலும் பி.யூ.ஸி. எனச் சொல்லியிருக்கிறார்.

* சேலம் தெற்கு செல்வராஜ் (பி.எஸ்.ஸி.)யை அடைப்புக்குறிக்குள் காட்டியிருந்தார். ஆனால், வேட்புமனுவில் சட்டசபையிலும் பி.யூ.சி. எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

* கிள்ளியூர் தொகுதியில் நின்று தோற்றுப்போன ஜார்ஜின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றபோது அவர் பெயருக்குப் பின்னால் இரண்டு எம்.ஏ. இடம்பெற்றிருந்தது. ஆனால் வேட்புமனுவில் 1986-ம் ஆண்டு புனித பெர்னதத் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள் எப்படி எல்லாம் 'சட்ட, நியாய’ப்படி நடந்து வருகிறார்கள் என்பதற்கு உதாரணம் இது!

- எம்.பரக்கத் அலி

Thanks to: vikatan.com.

Ref: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=36049

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP