**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்ல "லிபரல்களின் ஜிஹாத்" நடக்கிறது.

>> Saturday, April 5, 2008

உலகில் மிகவும் சுதந்திரமான (லிபரல்) நாடு, சகிப்பு தன்மைக்கு பேர் போன நாடு, எந்த புதினமும் இல்லாத அமைதிபூங்கா, என்றெல்லாம் கருதப்படும் நெதர்லாந்திற்கு தற்போது என்ன நடந்து விட்டது?

ஒரு காலத்தில் தாராள மனதுடன் நடந்து கொண்ட அரசாங்கம் தற்போது வலதுசாரி தீவிர பாதையை நோக்கி செல்கின்றது.

தொன்னூருகலில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்கள், சோஷலிஸ்ட்கள் , கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, லிபரல் கட்சி எல்லாமே கூட்டரசாங்கம் அமைத்து கொண்டு, முதலில் அகதிகள் வருவதை முடிந்தளவு தடை செய்தார்கள்.

பின்னர் வெளிநாட்டு குடியேறிகள் தங்கள் நாட்டில் இருந்து துணையை தேடிக் கொள்வதை கண்மூடித்தனமான சட்டங்கள் போட்டு குறைத்தார்கள்.

தற்போது முஸ்லிம்களுக்கெதிரான "லிபரல்களின் ஜிஹாத்" நடக்கிறது.

அதற்கு தலைமை தாங்குவது தான் முன்பிருந்த லிபரல் கட்சியில், வலதுசாரி தீவிரவாத கொள்கைகளுக்கு இடமில்லாததால் பிரிந்து சென்று, தனிக்கட்சி (PVV) கண்ட "கெர்ட் வில்டர்ஸ் ". அந்தகட்சியின் ஸ்தாபகர், சித்தாந்தம், நிர்வாகம் எல்லாமே வில்டர்ஸ் மட்டுமே.

ஒரு முறை குர் ஆனின் அரைவாசி பக்கங்களை கிழித்தெறிய வேண்டுமென்றார்.

மறுமுறை அதனை ஹிட்லரின் "மைன் கம்ப்" ஐ போன்ற பாசிச நூலாக தடை செய்ய வேண்டுமென்றார்.

அரசியல் நிர்ணய சட்டம் மாற்றப்பட்டு, குறிப்பாக இஸ்லாமியர்களின் குடியேற்றம் தடை செய்ய பட வேண்டுமென்றார்.

இது போன்ற பைதியகாரதனமான பேச்சுகளால் உள்நாட்டு முஸ்லிம்களின் வெறுப்பையும், மிதவாத ஒல்லாந்து (நெதர்லாந்திற்கு) காரரின் எரிச்சலையும் ஒரு பக்கம் சம்பாதித்து இருந்தாலும்,

மறு பக்கம் வில்டர்சிற்கு பல சாதாரண (வெள்ளை டச்சு)மக்களின் ஆதரவும் பெருகியது.

முன்பொரு தடவை "தேயோ வந்கோக்" என்ற பத்தி எழுத்தாளரும் , சினிமா கலைஞருமான, ஆனால் தீவிர வலதுசாரி கருத்தியல்களை கொண்டவரும், இஸ்லாமிற்கு எதிரான படம் எடுத்து,

அதன் காரணமாக முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாக கருதப்பட்டு, ஒரு மொரோக்கோ குடியேறியின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்.

அன்றிலிருந்து ஒல்லாந்து ( HOLLAND ) பொதுமக்களில் பலர் வெளிப்படையாகவே இனவாதம் கதைக்க தொடங்கி விட்டனர்.

அதனை தேசியவாதம் என்று சிலர் சொன்னாலும், பேரினவாதம் என்று சிலர் சொன்னாலும் , சம்பந்தப் பட்டவர்கள் அப்படி கதைப்பது தமது பிறப்புரிமை என்று சட்டம் பேசுகின்றனர்.

சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், அப்படியனவர்களை விமர்சிக்கும் போது, அதனை இனவாதம் என்று குற்றம் சாட்டுகின்றனர். (கவனிக்கவும்: இனவாதம் என்ற சொல்லை ஒவ்வொரு இனமும் தனக்கெதிராக மற்றவர்கள் கதைக்கும் போது பயன்படுத்துகின்றனர்.)

வருங்காலத்தில் வெள்ளையின ஒல்லந்துகாரருகும் ( DUTCH ), முஸ்லீம் அல்லது கறுப்பின சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் பெரும் யுத்தம் மூள இருப்பதாக ஆருடம் கூறுகின்றனர்.

இரண்டாவது தலைமுறை மொரோக்கோ இளைஞர்கள் அல்கைதவுடன் சேர்ந்து பயங்கரவாத திட்டங்கள் தீட்டியதாக ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடும்.

அதே நேரம் வெள்ளையின தீவிர வலதுசாரி இளைஞர்கள் இரகசியமாக ஆயுத பயிற்சி எடுப்பது பற்றி சொல்வதில்லை.

தேயோ வந்கோக் கொலையின் போது பல மசூதிகள், இஸ்லாமிய பாடசாலைகள் தீக்கிரையாகின.
சூத்திரதாரிகள் கைது செய்யபட்டு சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். ஏனெனில் அவர்கள் பதினெட்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளாம்.


எந்த குற்றமும் நிரூபிக்க படாமல், (சில சம்பவங்கள் உளவுபிரிவின் ஆட்காட்டிகளின் தூண்டுதலால் நடந்தவை)

வருடக்கணக்கில் சிறையில் போடப்பட்ட "அல்கைதா உறுப்பினர்கள்" கூட பருவமடையாத பிள்ளைகள் தான்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, வில்டர்ஸ் போன்றவர்கள் முதல் தேர்தலிலேலேயே கணிசமான வாக்குகள் எடுத்து வியப்புகுரியதல்ல.

தேயோ வந்கொகுடனும், வில்டர்சுடனும் சேர்ந்து வேலை செய்தவர் அயன் ஹிசி அலி என்ற சோமாலிய புத்திஜீவி. யார் இந்த ஹிர்சி அலி?

சோமாலிய மத்தியதர வர்க்க பெண். அந்த நாட்டில் உள்நாட்டு போர் மூண்ட போது, தம்மை பாதுகாத்து கொள்ள கென்யாவிற்கு தப்பியோடிய குடும்பத்தை சேர்ந்தவர்.

நெதர்லாந்து வந்து, நேரே சோமாலியாவில் இருந்து வந்ததாக அரசியல் தஞ்சம் கோரினார்.

டச்சு அதிகாரிகள் விரும்பி கேட்குமளவிற்கு, தன்னை இஸ்லாமிய மதகுருக்கள் துன்புறுத்தியதாக கதை சொல்லி அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பல்கலைக் கழக கல்வி பெற்று, ஒல்லாந்து அரசியலில் புகுந்தார். ஊடகங்களின் ஆர்வத்தை தூண்டி பேர் எடுக்கும் விதத்தில், இஸ்லாமிய மதத்தை காட்டுமிராண்டிகளின் மதமாக சித்தரித்தார்.

"இறை தூதர் முகமது ஒரு பயங்கரவாதி." என்று அவர் கூறிய கருத்துக்கள், முஸ்லீம் அல்லாதவர்களினதும் கண்டனங்களை பெற்றுத்தந்தது.

அத்தகைய ஒருவரின் "புகழ்" தேசங் கடந்து அமெரிக்கா வரை பரவியதில் வியப்பில்லை.

ஹிர்சி அலி அரசியல் தஞ்சம் கோரிய போது கூறிய பொய்கள் பின்னர் அம்பலமாகி, அவமானத்தால் டட்ச் பாரளுமன்ற பதவியை விட்டு விலகி , அமெரிக்காவில் புஷ் நிர்வாக ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப் பட்டார்.

அதற்கு முன்னர் "லிபரல் ஜிஹாத்" தலைவர் வில்டர்சிற்கு, இஸ்லாமிய மதத்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று சொல்லிகொடுத்தார்.

இப்போது வில்டர்ஸ் "குர்ஆன்" பற்றி ஒரு படம் தயாரித்திருக்கிறார்.

அதில் காட்டுமிரண்டிதனமான சட்டங்கள், இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தூக்கிலிடப் பட்டமை, கல்லெறிந்து கொல்தல், கை வெட்டுதல்...

இவ்வாறு இஸ்லாமிய விரோத கருத்துக்களை கொண்ட "பித்னா" என்ற படம் வெளிவர முன்னரே சர்ச்சைகள் தலை தூக்கி விட்டன.

ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நெதர்லாந்திற்கு எதிராக கண்டன பேரணிகள் நடந்தன. தாலிபான் அங்கே முகாமிட்டுள்ள ஒல்லாந்து படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

ஒல்லாந்து பொருட்களை பகிஷ்கரிக்குமாறு பல இஸ்லாமிய நாடுகளில் அழைப்பு விடப் பட்டுள்ளது.
இதனால் கலவரமடைந்த வர்த்தக சமூகம் கூட வில்டர்ஸ் எதுவுமே செய்யாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதமர் பால்கநேண்டே "நெதர்லாந்து ஒரு சர்வதேச நெருக்கடியை எதிர்நோக்குகிறது. எமது பிரசைகள் இஸ்லாமிய நாடுகளுக்கு போக அஞ்சுகின்றனர். ஆகவே வில்டர்ஸ் தனது முயற்சியை கைவிட வேண்டும். " என்று கூறியுள்ளார்.

அதற்கு வில்டர்ஸ் "பிரதமர் ஒரு கோழை. நான் இஸ்லாமிய வெருட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன்." என்று பதில் கூறியுள்ளார்.

மேற்கத்தைய வரலாற்றில் என்றுமில்லாத படி, ஒல்லாந்தின் தொலைக்காட்சி நிறுவனங்கள் எதுவும் வில்டர்சின் படத்தை ஒளி பரப்ப மறுத்து விட்டன.

சினிமா தியேட்டர்களை பற்றி சொல்லத் தேவையில்லை. இதனால் வில்டர்ஸ் தனது படத்தை இன்டெர்நெட்டில் மட்டுமே வெளியிட வேண்டிய நிலையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனமொன்றின் வலயத்த்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

அமெரிக்கா அரச நிர்ணய சட்டத்தின் படி, கருத்து சுதந்திரத்திற்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுவதால், பல நவ நாஜி அமைப்புகளின் இணையத்தளங்கள் கூட அமெரிக்காவில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன.
வில்டர்ஸ் இந்த சட்டத்தை பயன்படுத்த நினைத்தார்.

அந்தோ பரிதாபம், ஒல்லாந்து அரசின் நெருக்குதல் காரணமாக "நெட்வொர்க் சொலுஷன்ஸ்" என்ற இன்டர்நெட் நிறுவனம், வில்தேர்சின் வலயத்தளத்தை தடை செய்து விட்டது.

"பித்தன" படம் வெறுப்பை விதைத்து இனவெறியை தூண்டுவதாக அந்த நிறுவனம் காரணம் கூறியுள்ளது.

கடைசியில் வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்கள் வெளியிடும் இணையத்தளமொன்று அனுமதி வழங்கியது.

படத்தை பார்த்தவர்கள், அதில் புதிதாக ஒன்றும் இல்லை, ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த காட்சிகளை வெட்டி ஒட்டி இந்த விவரணப் படத்தை தயாரித்திருப்பதாக கூறுகின்றனர்.

உண்மையில் அது, தீவிர வலதுசாரி மொழியில், வன்முறையில் நாட்டம் கொண்ட முஸ்லிம்கள் ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்த போவதாக பயம் காட்டுகின்றது.

படம் நெடுகிலும், முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இருப்பதால், இது வில்டர்ஸ் அரசியலில் பிரபலமாக கையாண்ட தந்திரம் எனலாம்.

வில்டர்சின் செயல் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது, அதனால் படத்தை தடை செய்ய முடியாது என்று அரசாங்கம் சொல்கின்றது.

ஆபத்தை தவிர்பதற்காக படத்தை தடை செய்யுமாறு பலர் கோரி வருகின்றனர்.

உண்மையில் வில்டர்ஸ் மாதிரி வெறுப்பை விதைக்கும் வலதுசாரி தீவிரவாதிகளை பிடித்து சிறையில் போட்டால் எல்லாம் சரி வரும்.

இஸ்லாமிய மதத்தை நவீனப் படுத்த வேண்டும் என்று வில்டர்ஸ் போன்றவர்கள் விரும்பினால் அதற்கு இது ஏற்ற வழியல்ல.

இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யலாம்.
இப்படி இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது பகை வளர்க்கவே உதவும்.

வில்டர்ஸ் போன்றவர்கள் தன் நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றவே பாடுபடுகின்றனரே தவிர, வேறு எந்த பொதுநல நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

இந்த ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, மத அடிப்படைவாதம் பேசுவோரும் தீவிரவாதிகள் தான்.

சாதாரண மக்கள் மனதில் இருக்கும் மத நம்பிக்கையை, மத வெறியாக மாற்றுவதில் வல்லவர்கள் இந்த காரியவாத பைத்தியங்கள்.

அவர்களின் நோக்கமும் மதத்தை பாதுகாப்பதல்ல, மாறாக அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பது தான்.

இப்படியானவர்கள் இஸ்லாமில் மட்டமல்ல. அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.
இந்தியாவில் இந்து மத வெறியர்கள்,
சிறிலங்காவில் புத்த மத வெறியர்கள்,
இஸ்ரேலில் யூத மத வெறியர்கள்,
அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வெறியர்கள்.... இப்படி எல்லா மதங்களிலும் இருக்கும் தீவிரவாதிகள் ஒரே மொழியை தான் பேசுகின்றனர்.

அது மதவெறி என்ற பொதுமொழி.
குர் ஆனில் மனிதாபிமான விரோத கருத்துக்கள் இருப்பதாக பிரச்சாரம் செய்யும் வில்டர்ஸ் போன்றவர்கள், பைபிளை வாசித்து பார்க்கவில்லையா?

அதே மனிதாபிமான விரோத கருத்துக்கள் பைபிளில் இருப்பது தெரியாதா?
குர் ஆன்இற்கும் , பைபிளுக்கும் அடிப்படை ஒன்றே என்பதும் , ஒரே கதைகளை கொண்டவை என்பதும் தெரியாதா?
இயேசு கிறிஸ்து போன வழியில் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட பெண்ணொருவர் ஊர் மக்களால் கல்லெறிந்து தண்டனை வழங்கப் பட்ட கதை தெரியாத கிறிஸ்தவர்கள் கிடையாது.


அவ்வாறான தண்டனை முறை பண்டைய காலத்தில் இருந்ததை தானே அந்தக் கதை எடுத்து காடுகின்றது?
பைபிளின் பழைய ஏற்பாடு (அல்லது யூதர்களின் தோரா) பல இனப்படுகொலைகள் பற்றி கதை கதையாக சொல்கின்றன.


எல்லாமே கடவுளின் பெயரால் நடந்தது.

இதையே குர் ஆனில் இருந்தால் மட்டும் வில்டர்ஸ் போன்ற "மேன்மை மிகு கலாச்சார பாரம்பரியம் " கொண்டவர்கள் கூச்சல் போடுவதேன்?

இவர்கள் தம்மை கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக காட்டிக் கொள்ளா விட்டாலும், கிறிஸ்தவ மதம் உலகிலேயே சிறந்தது,

அதி உன்னதமான நாகரீங்கம் கொண்டது, என்று ஒரு பக்க சார்பான கதைகளை கூறி வருகின்றனர்.

கிறிஸ்துவுக்கு பின் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவை, வத்திகானை தலைநகராக கொண்டு கத்தோலிக்க மதம் ஆட்சி செய்தது.

அந்த காலகட்டத்தை ஐரோப்பிய சரித்திர நூல்கள் "இருண்ட காலம்" என்று வர்ணிக்கின்றன.

மதத்திற்கு எதிரான இயக்கம் ஐரோப்பாவில் தான் முதன் முதல் உருவானது.

கத்தோலிக்க தேவாலயங்கள் மக்களை சுரண்டி சொத்து சேர்கின்றன என்று சொல்லி லூதர் தலைமையில் எதிர்பியக்கம் ஆரம்பித்தது.

அது பின்னர் புரட்டஸ்தாந்து மதமாக மாறியது. பிரெஞ்சு புரட்சி தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி மதகுருக்களை சிரச் சேதம் செய்தது.

அப்போதிருந்து உருவான மதச்சார்பற்ற இயக்கம் இன்று அரச சித்தந்தமாகி, இன்று ஐம்பது வீதத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் மத நம்பிக்கயற்றவர்களாக வாழ்கின்றனர்.
அதற்கு இந்நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றமும் முக்கிய காரணம்.

இந்த வாழ்கை நெறியை தான் வில்டர்ஸ் போன்றவர்கள் "மேன்மைமிகு கலாச்சாரம்" என்று சொல்கின்றனர்.
இதே போன்ற சமூக வளர்ச்சி இஸ்லாமிய நாடுகளிலும் ஏற்பட வாய்ப்பில்லையா?

அதை தடுப்பது யார்?

அது அந்நாடுகளின் பொருளாதார பின்னடைவு (உதாரணம் : எகிப்து) அல்லது மக்களை மந்தைகளாக மேய்க்க நினைக்கும் ஆட்சியாளர்கள் (வளைகுடா நாடுகள்) தான் காரணம்.

வறிய நாடுகளின் பின்தங்கிய நிலை காலனித்துவ காலத்தின் பாதிப்புகளில் ஒன்று.

அதோடு பணக்கார நாடுகளில் தங்கியிருக்க வேண்டியிருப்பதால், அபிவிருத்திக்காக அவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை.
MANY THANKS TO : KAALAIYARASAN
http://kalaiy.blogspot.com/
------------------------------------------
படிக்க:-
முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது குர்ஆன் திரிப்புத் திரைப்படம் மூலமாக.
---------------------------------
மற்ற பதிவுகளுக்கு:>> வாஞ்ஜுர்

3 comments:

Kalaiyarasan April 15, 2008 at 1:28 PM  

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

-கலையரசன்

VANJOOR April 15, 2008 at 1:57 PM  

DEAR KALAIARASAN,

HOW MODEST OF YOU TO OFFER YOUR THANKS TO ME.

IN FACT I SHOULD OFFER MY HEARTFELT THANKS TO YOU

ACCEPT MY BELATED HEARTFELT THANKS TO YOU .

REGARDS.
VANJOOR

Kalaiyarasan April 16, 2008 at 4:46 AM  

In future, I want to expose more hypocricy of western countries. We have a common enemy to fight. Keep on informed.

Thanks you.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP