நெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்? சரிசெய்ய ?
>> Sunday, April 20, 2008
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டு ஏப்பமும் கூடவே வந்து இம்சை செய்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?
டாக்டர் சதீஷ் (குடல் இரைப்பை மற்றும் லேபராஸ்கோபி நிபுணர்)
‘‘நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முதல் காரணமே நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்தான்.
லைஃப் ஸ்டைல் என்ற பெயரில் இயற்கையான உணவு முறைகளை ஓரம்கட்டிவிட்டு, ஃபாஸ்ட்புட் எனப்படும் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளையும், எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளை இஷ்டத்திற்கு சாப்பிட ஆரம்பித்ததுதான்.
தொடர் மது, குடிப்பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கும், அதிகமான மன உளைச்சலில் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் பிரச்னை வந்து எரிச்சலை மூட்டுகிறது. எப்படி என்கிறீர்களா?
பொதுவாக உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடம் வயிற்றின் மேல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு வால்வு இருக்கும். இந்த வால்வானது நாம் உணவை உட்கொள்ளும்போது திறக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் திரும்ப மூடிக் கொள்ளும்.
ஆனால், அப்படி சாப்பிட்டு முடித்தபிறகு வால்வு மூடா விட்டால்தான் பிரச்னை. மேல் சொன்ன பிரச்னைகள்தான் வால்வு மூடாததற்குக் காரணம். இதனால் இரைப்பையில் இருக்கும் உணவும், அமிலமும் உணவுக்குழாயை நோக்கி மேலே வந்துவிடும்.
இதுதான் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி ‘உவ்வ்வக்’ என்று புளித்த ஏப்பத்தை வரவழைத்து எதிரில் இருப்பவர்களை கொஞ்சம் முகம் சுளிக்கவும் செய்து விடுகிறது.
அதுமட்டும்தானா... வயிற்றின் மேல் பகுதியில் தாங்க முடியாத வலியை உண்டாக்கி, வாயிலிருந்து வாந்தியையும் வரவழைத்துவிடும்.
இப்படிப்பட்ட நெஞ்செரிச்சல் வராமல் இருக்க முதலில் மேற்சொன்ன விஷயங்களைத் தவிர்க்கவேண்டும். அதோடு, மருத்துவரின் ஆலோசனையோடு மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். அதையும் மீறி சிலருக்கு குணமாகாமல் போனால், எண்டோஸ்கோபி மற்றும்
(MANOMETRY) மேனோமேட்ரி பரிசோதனைகள் செய்து லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால், இச்சிகிச்சை தேவைப்படுவது குறைவுதான்.’’
2 comments:
மிகப்பயனுள்ள பதிவு.
நன்றி!
தொடர வாழ்த்துக்கள்.
good
Post a Comment