**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வராது. தலையில் வழுக்கை விழுவதில்லை.

>> Wednesday, April 30, 2008

சிரிக்கத் தெரிந்தால்தான் நகைச்சுவை உணர்வு வரும். ஆனால், நம்மில் பல பேருக்கு சிரிப்பின் நன்மை, ஆற்றல் பற்றி எதுவும் தெரியாது.

கடனே என்று சிரிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.

‘கழுதை அறியுமா கற்பூர வாசனை?’ அதுமாதிரிதான். நாம் சிரிப்பைப் பற்றி நன்றாக அறிந்தால்தான் வாழ்க்கையை நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்ல முடியும். நான் சொல்வதை காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேளுங்கள்...!

நன்றாகச் சிரிப்பவர்கள், நோயின்றி வாழ்வார்கள். பிரச்னைகளை எளிதாகத் தீர்த்து விடுவார்கள். சிரிப்பில் பலவிதம் இருக்கிறது.... மனதொன்றி வாய் சிரிக்க. வயிறு குலுங்கச் சிரிக்கிறவர்கள் மனநோயை அண்ட விடமாட்டார்கள். வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகி எதையும் இயல்பாக எடுத்துக் கொள்வார்கள்.

நாம் அதிகம் சிரிக்கும்போது என்டோர்பின் ((Endorphin) என்ற ஹார்மோன் உடலில் சுரக்கும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். சுவாசிக்கும் முறையும் சீரடைந்து நுரையீரல் பலப்படும்.

புன்சிரிப்பு சிரிக்கும்போது, முகத்திலுள்ள தசைகளின் விறைப்பு தளருகிறது. அதனால் பத்து வயது குறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். கடுகடுவென்று சினம் கொள்ளும்போது முகத்துத் தசைகளில் முப்பத்து நான்கு தசைகள் இயங்குகின்றன. ஆனால், புன்னகையின் போதோ, பதின்மூன்று தசைகள் மட்டுமே

இயங்குகின்றன. புன்சிரிப்பு நல்லதுதான். ஆனால், வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்தல் அதனினும் நல்லது. அடிக்கடி வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்குத் தலையில் வழுக்கை விழுவதில்லை.

உளவியலார் சிரிப்பை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். ‘‘சீருடன் வாழச் சிரியுங்கள்’’ என்னும் முதுமொழியை இன்றைய உளவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் சிரிப்புக்கு ஒரு முதலிடம் உண்டு. உடம்பில் குருதியைச் (இரத்தம்) செலுத்துவது போன்ற நன்மை சிரிப்பால் ஏற்படுகிறது என்று சொல்லலாம். உடல், உள்ளம் இரண்டிற்கும் ஒருங்கே நலம் அளிக்கும் தன்மை கொண்டது சிரிப்பு.

உண்மையான சிரிப்பு, உள்வடிவச் சுரப்பிகளை மென்மையாக வருடிவிட்டு, அவற்றின் சுரப்பிகளைப் பெருக்குகிறது. குறிப்பாக இரைப்பை, குடல், கணையம் முதலிய உறுப்புகளில் உள்ள சுரப்பிகள் சிரிப்பால் ஊக்குவிக்கப்படுகின்றன. மூளையின் அடிபாகத்தில் பட்டாணிக்கடலை அளவில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி சிரிப்பினால் தூண்டப் பெறுகிறது. அதில் வளர்ச்சி உயிரணுக்கள் (ஹார்மோன்கள்) சரியான நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி மூளையைத் தெளிவு பெறச் செய்கிறது.

மனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சி, உடல் நோய்கள் அணுகாதவாறு காத்துக்கொள்ள உதவுகிறது. இவ்வுண்மையை மருத்துவ உலகம் பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்துள்ளது. நோயாளிகள் சிரிப்பது, அவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது. சிரிப்பு, குருதியிலுள்ள (இரத்தம்) கொழுப்புச்சத்தின் (கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து நெஞ்சக நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பதை அண்மையில் சோவியத் அறிவியலார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்கள் ‘குருதி (இரத்தம்) அழுத்த நோய்க்கும் இது நல்ல மருந்து.

நகைச்சுவை நாடகங்களுக்குச் சென்று மகிழுங்கள் அல்லது நகைச்சுவை நூல்களைப் படித்து வாய்விட்டுச் சிரியுங்கள்’ என்று கூறுகின்றனர். உலகிலுள்ள மக்கள் அனைவரும் நகைச்சுவை உடையவர்களாகவும், மிகுதியாகச் சிரிப்பவர்களாகவும் இருப்பார்களானால் பல மருத்துவமனைகள், நலத்துறை நிலையங்கள் மூடவும் நேரலாம்.

ஏன் வன்முறை, போர்களும் கூட ஒழிந்துவிடும் என்று புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார் என்றால் சிரிப்பின் மாபெரும் ஆற்றலை என்னென்பது!...

நகைச்சுவை உணர்ச்சியில்லாமல் இயல்பான வாழ்வு கூட வாழ முடியாது. நகைச்சுவை உணர்ச்சியற்ற மனிதர்கள், எந்தத் தொழிலையும் வெற்றியுடன் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வுண்மையை ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரிய சிக்கல்களுக்குச் சிறந்த முடிவு காண சிரிப்பு உதவுகிறது என்று ரோமானியக் கவிஞர் ஹொரேஸ் கூறியுள்ளார். சிரிப்பில்லாத மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நண்பர்கள் வட்டம் இருக்காது. எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று இருப்பார்கள். இந்த மனப்பாங்கு இவர்கள் முன்னேற்றத்திற்குப் பெருந் தடைக்கல்லாய் இருக்கும்.

நம் நாட்டில் நகைச்சுவை உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களின் சிரிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்நிலை மாறி, ‘நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் இந்தியர்கள் என்பதில் நம்நாடு முதலிடம் பிடிக்க வேண்டும்.

உலகில் சிரிப்பைச் சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான் இருக்கிறது. அந்தப் பள்ளி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. அங்கே ஆறு வாரங்கள், சிரிப்புப் பாடங்கள் நடத்துகிறார்கள். ஆசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இந்த முறையை நம் நாட்டிலும் கொண்டு வந்தால் ரோட்டில் தன் நிலை மறந்து திரியும் மனநலம் சரியில்லாதவர்கள் உருவாகும் நிலை படிப்படியாகக் குறைந்து மனநலம் சரியாக இருக்கின்ற சமுதாயம் உருவாகும். புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் சிரிப்பதற்கென்றே ஒரு சங்கத்தைத் துவக்கினார்.

அதற்குப் பெயர் ‘பம்பூகு’. பம்பூகு என்றால் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்வது. தவிர, வேறு குறிக்கோள் கிடையாது. மாந்தருக்கு நேரும் துன்பங்களைச் சிரிப்பதன் மூலம் மறந்து சீர் செய்து கொள்ளலாம் என்று எண்ணியே இப்படி ஒரு வியப்பான சங்கத்தினைத் தொடங்கினார் போலும் அந்த எழுத்தாளர்.

ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், ‘நாம் வாழ்க்கையின் பாதையில் மலர்களை தூவ முடியாவிட்டால்கூட, நமது புன்னகையைச் தூவ முடியும். அவற்றை நாம் தூவத்தான் வேண்டும். ஏனெனில் சிரித்து வாழும் வாழ்வு சிறந்த முறையான வாழ்வாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிரிக்கத் தெரியாதவர் வாழ்வே அறியாதவரே! கடைசியாக ஒரு விஷயம், சிரிப்பு என்பது மனிதனுக்கு நல்ல மருந்து. ஆனால், சில வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள் சிரிக்கும்போது, என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு’ என்று மிரட்டி, சிரிப்பு என்பது அசிங்கமானது என்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள்.

இதனால் வளர்ந்து பெரியவனாகும் சூழ்நிலையிலும் சிரிப்பை மழுங்கடித்து எப்போதும் இறுக்கமான மனநிலையிலேயே காணப்படுவார்கள். அதனால்தான் பெற்றோர்களே, குழந்தைகளை அருகில் அழைத்து ஏதாவது ‘ஜோக்’ சொல்லச் சொல்லி, நீங்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரியுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் சிரிப்பு அலை உருவாகும். இதனால் குழந்தைகள் பெற்றோர் இடைவெளி குறையும். குழந்தைகள் நட்புடன் பழகி ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசுவார்கள்.

கணவனும்_மனைவியும் ‘ஜோக் அடித்தால்’ அவர்களிடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் அதிக நெருக்கம் கொள்வார்கள். சண்டைகள் அற்ற புரிதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். அபூர்வா. SOURCE: INTERNET
------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP