**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது குர்ஆன் திரிப்புத் திரைப்படம் மூலமாக.

>> Friday, April 4, 2008

"பாசிசத்தை தோற்கடித்தோம், கொம்யுனிஸத்தை தோற்கடித்தோம், தற்போது இஸ்லாமிய சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்த வருகின்றது."

இவ்வாறு முடிகிறது ஒல்லாந்து தீவிர வலதுசாரி பாரளுமன்ற உறுப்பினர் வில்டர்ஸ் தயாரித்த "பித்னா" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு விவரணப் படம்.

படத்தின் இறுதிக்காட்சியில் குர் ஆன் புத்தகத்தின் பக்கத்தை ஒரு கை கிழிக்க போவதாக காட்சி வரும். கமரா இருட்டை நோக்கி நகர, பின்னணியில் கடதாசி கிழிக்கும் சத்தம் கேட்கும்.

பின்னர் "அப்படி கிழிக்கப்பட்டது ஒரு டெலிபோன் புத்தகம், குர் ஆனின் பக்கங்களை கிழிக்கும் பொறுப்பை முஸ்லிம்களிடமே விட்டு விடுகிறேன்." என்று ஒரு குரல் சொல்லும்.

இது வில்டர்ஸ் முன்பே கூறிய, குர் ஆனின் அரைவாசி பக்கங்கள், மனிதநேயத்திற்கு விரோதமான கருத்துகளை கொண்டிருப்பதால், கிழித்தெறிய வேண்டும், அந்த நூலையே தடை செய்ய வேண்டும், என்ற சர்ச்சையை நினைவு படுத்துகிறது. (ம்ம்ம்.... படத்திலேயே குர் ஆனை கிழிக்க வில்டர்சுக்கு தைரியமில்லை. )

நீண்ட காலமாக இஸ்லாமிய எதிர்ப்பு படம் தயாராகிறது, என்று நெதர்லாந்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும், ஆர்வமாய் எதிர்பார்க்கப்பட்ட பித்னா, இண்டர்நெட்டில் வெளி வந்த அடுத்த நாளே, "அட, இவ்வளவு தானா?" என்று கேட்க வைத்து விட்டது.

"இதெல்லாம் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான தொலைக்காட்சி ஒளிப்படங்கள், புதிதாக ஒன்றும் இல்லை, என்று முஸ்லிம்கள் கூறி விட்டனர்.

படம் வெளியானவுடன், உலகமெங்கிலும் இஸ்லாமிய நாடுகளில் கலவரங்கள் உண்டாகும்,

(வில்டர்சின் கூற்றில்) "காட்டுமிராண்டி முஸ்லிம்கள்" நெதர்லாந்து தூதுவராலயங்களை உடைத்து நொறுக்கி, கொளுத்துவார்கள்.

அதன் எதிரொலியாக, ஆத்திரமடையும் வெள்ளையின நெதர்லாந்து மக்கள் தந்து கட்சிக்கு வாக்குகளை அள்ளி வழங்குவார்கள்.

தான் அடுத்த பிரதமர் ஆகி விடலாம், என்றெல்லாம் வில்டர்ஸ் கனவு கண்டிருக்கலாம்.

ஐயோ பாவம், எதுவுமே நடக்கவில்லை. யாருடனும் நேரடி விவாதத்திற்கு போகாத வில்டர்ஸ், பாராளுமன்றத்தில் பல்வேறு கண்டனக் கணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.

அவரின் பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காத வேலைகள், சமூகத்தை பிளவு படுத்துவன , யதார்த்தங்களை எதிர்நோக்க துணிச்சலற்றவர், பக்க சார்பானவர், என்றெல்லாம் சக பாரளுமன்ற உறுப்பினர்கள் பொரிந்து தள்ளினர்.

அதற்கு பதிலளித்த வில்டர்ஸ், தான் மட்டுமே துணிச்சலுடன் "இஸ்லாமிய அபாயத்தை" எதிர் கொள்வதாக தெரிவித்தார்.

பித்னா படத்தில், நெதர்லாந்தில் வருடந்தோறும் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

"ஒருகாலத்தில் முஸ்லிம்கள் நாட்டில் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள், வெள்ளையின ஒல்லாந்து காரர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக போகின்றனர்." என்ற இனவாத கற்பனை,

ஏற்கனவே பல தீவிர வலதுசாரிக் குழுக்கள் முன்னெடுக்கும் பிரச்சாரம். அவர்கள், "முஸ்லிம்களையும் (அதற்குள்ளே வெள்ளையின கிறிஸ்தவர்கள் அடங்க மாட்டார்கள்),

கறுப்பர்களையும் (அதற்குள்ளே கறுப்பின கிறிஸ்தவர்களும் அடங்குவர்) நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

வில்டர்சின் பிரச்சாரம், வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.

அது அனைத்து மூன்றாம் உலகை சேர்ந்த குடியேறிகளுக்கும் எதிரானது.

அப்படி இல்லாவிட்டால் ஏன் வில்டர்ஸ் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில், "சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்." என்ற முதலாவது வாக்கியத்தை மாற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சை கிளப்ப வேண்டும்?

பாசிசம், கம்யூனிசம், இஸ்லாம் எல்லாம் "தீய சித்தாந்தங்கள்" என்று கூறும் வில்டர்ஸ், தனது சித்தாந்தமான லிபரலிசம் பற்றி எதுவும் கூறாதது ஏன்?

இல்லை...அவரது கூற்றுப்படியே, அது "சுதந்திரம்" என்று வைத்து கொள்வோம்.

தனது பித்னா படத்தை தடை செய்தால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று கூறும் வில்டர்ஸ், எவ்வாறு குர் ஆன் தடை செய்யப் பட வேண்டும் என்று கோரலாம்?

அது கருத்து சுதந்திரத்தை மீறும் செயலாகாதா?

கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு இயங்கலாம் , ஆனால் இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும் என சொல்வது தான் சுதந்திரமா?

நாட்டில் மொத்த சனத்தொகையில் ஒரு வீதமேயான முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரப்போகிறார்கள் என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போல பூச்சாண்டி காட்டுகிறார்.

இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்தவர்களை சுட்டிக் காட்டும் அதேநேரம், நவ நாகரீக உடையணியும் பெரும்பான்மை முஸ்லிம்களை ஏன் மறைக்க வேண்டும்?

தீவிரவாத முஸ்லிம்களுக்கு எதிராக, மிதவாத முஸ்லிம்களுடன் கூட்டுச் சேர்வதை விட்டு விட்டு, அனைத்து முஸ்லிம்களையும் எதிரிகளாக காட்டுவதால், சமூகம் இரண்டாக பிளவு படாதா?

இந்தக் கேள்விகளுக்கு வில்டர்ஸ் போன்றவர்களிடம் பதில் இல்லை.

அவர்களுக்கு வேண்டியதெல்லாம் குறுகிய அரசியல் லாபங்கள்.இவர்கள்தான் அப்படியென்றால், சில முன்னால் முஸ்லீம் புத்திஜீவிகளின் தற்புகழ்ச்சி தேடி அடிக்கும் ஸ்டன்ட்கள் வேறு எங்கள் நிம்மதியை கெடுக்கின்றன.

இஸ்லாமிய நாடுகளில் பிறந்து வளர்ந்து, பின்னர் மேற்கு ஐரோப்பா வந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, இஸ்லாமிய மதத்தில் உள்ள குறைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு மதத்தை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனை தமது சொந்த நாட்டில் இருந்து, அம் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதை விட்டு, மேற்கு ஐரோப்பாவில் இருந்து கொண்டு இவர்கள் இஸ்லாமை விமர்சித்து கூறும் கருத்துகளை, இங்குள்ள ஊடகங்கள் மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கின்றன.

அதனை தமது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துகின்றன. இந்த "முன்னால் முஸ்லீம்" புத்திஜீவிகளும், தமக்கு ஊடக பிரபல்யம் கிடைப்பதற்காக, இருந்திருந்து எதாவது அதிரடிக் கருத்துகள் கூறிக் கொண்டிருப்பார்கள்.

மாலியாவை சேர்ந்த ஹிர்சி அலி(பாரளுமன்ற உறுப்பினர்), ஈரானை சேர்ந்த எலியான் (சட்ட விரிவுரையாளர்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரபலத்தை தேடிக்கொண்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது ஈரானை சேர்ந்த எஹ்சன் ஜாமி புதிய வரவு. இவர் தற்போது மத நம்பிக்கையற்ற பிற நண்பர்களை சேர்த்து "மாஜி முஸ்லிம்கள் சங்கம்" ஒன்றை அமைத்து, இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் நடத்தி வருகிறார்.

ஜாமி தற்போது ஒரு அதிரடித் தகவலை கொடுத்து, எம்மை மீண்டும் ஒரு த்ரில் அனுபவத்திற்கு உட்படுத்த பார்க்கின்றார்.

முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது பற்றி ஒரு முழு நீள கார்டூன் படம் தயாரித்திருக்கிறாராம். அதில் முகமது தனது ஒன்பது வயது மனைவியான ஆயிஷாவை, ஒரு மசூதிக்குள் கூட்டிச் சென்று கன்னி கழிப்பதாக, ஒரு காட்சி வருகின்றதாம். இறைதூதரின் உருவப்படத்தை வரைவதே கலவரத்தை உண்டாக்கும் என்ற நிலைமையில், மேற்படி காட்சி பற்றி கூற வேண்டியதில்லை.

இந்த தகவலை தொடர்ந்து, ஜாமிக்கு ஈரானில் இருந்து உயிர் அச்சுறுத்தல் வந்த போதும், அது தனது கருத்து சுதந்திரம் கூறும் உரிமையை அச்சுருத்தாது என்றெல்லாம் கூறி வந்தார்.

தற்போது நெதர்லாந்து நீதி அமைச்சரின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, அந்த கார்டூன் படத்தை வெளியிடும் திட்டம் கை விடப்பட்டுள்ளது.

தற்போது பலர் பெருமூச்சு விட்டாலும், மீண்டும் எப்போது பூகம்பங்கள் வெடிக்கும் என்று கூற முடியாது.

நீங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இருந்து வருகிறீர்களா?

நீங்கள் பிறப்பால் முஸ்லிமா?

இந்தத் தகுதிகளுடன், இஸ்லாமிய மதத்தை விமர்சித்து எதாவது எழுதினால், கூறினால், மேற்குலக ஊடகங்கள் உங்களை கண்டு கொள்ளும். தினசரி உங்களை பற்றிய தலைப்பு செய்திகள், பத்திரிகைகளில், தொலைக் காட்சிகளில் வரும். ஒரு சில நாட்களில் உலகப்புகழ் பெறலாம்.

உங்களைப் பற்றிய நூல்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தரும். இந்த பிரபல்யம் இஸ்லாமை தவிர வேறு மதங்களை விமர்சிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஊடகங்களுக்கு அவர்கள் மீது நாட்டமில்லை.

நெதர்லாந்தில் நியோ-லிபரிலிச சீர்திருத்தங்கள் காரணமாக எத்தனையோ பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

பொது மக்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைக்க படுகின்றன.
மானியங்கள் குறைக்கப் படுகின்றன.
வேலை வாய்ப்புகள் குறைகின்றன.

வசிக்க வீடுகள் கிடைப்பது கஷ்டமாக இருக்கின்றது. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கின்றது.
வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றது.
இதனால் குடும்ப செலவுகளை சரிக்கட்ட கடன் வாங்கி, பின்னர் கடன் கட்ட முடியாமல் வீட்டை இழந்து தெருவுக்கு வரும் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.

இதன் விளைவு, நாட்டில் ஏழைகள் பெருகி வருகின்றனர்.

மறு பக்கத்தில் தஞ்சம் கோரும் அகதிகள் மனிதாபிமானமற்ற சட்டங்களால் அவல வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

இது போன்ற பிரச்சினைகளை யாரும் படமாக தயாரிப்பதில்லை.

அப்படியே எடுத்தாலும் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அகதிகளின் உரிமைக்காக பாடுபட்ட ஒரு வெள்ளையின டச்சு சமூக ஆர்வலர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

அரசியல் படுகொலை என்று நிச்சயிக்கப் பட்ட இந்த சம்பவம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை.

ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பு படம் எடுத்து கொலையுண்ட தேயோ வந்கோக் பற்றி ஊடகங்கள் உலகம் முழுக்க அறிவித்தன.

நிலைமை இப்படியிருக்கையில், வில்டர்ஸ், ஜாமி, ஹிர்சி அலி போன்றவர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டாலும் புகழ் பெறுவார்கள்.

அவர்களும் அதை தான் விரும்புகின்றனர்.

ஆகவே முதலில் ஊடகங்கள் இப்படியானவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

அதுவே உலகை அழிவில் இருந்து மீட்பதற்கான முதல் படி.

· சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்
Posted by kalaiyarasan at 6:49 PM
Labels: இறைத்தூதர் முகமது, இஸ்லாம், நெதர்லாந்து, முகமது கார்டூன், முஸ்லிம்கள்
MANY THANKS TO : http://kalaiy.blogspot.com/2008/04/blog-post.html
----------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP