சீதனப்பேய்
>> Monday, January 15, 2007
சமுதாய சீர்கேடு - சீதனப்பேய்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.
அல்லாஹ்வைப் புகழ்ந்து, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக ஆரம்பம்செய்கின்றேன்.
சீதனக் குறள்
வாங்கும் கையைவிட கொடுக்கும்கை மேலோங்குமே அக்காலம் இச் சமுதாயத்தின் பொற்காலம்.
சீதனம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது நம் தாய்மார்கள் தான். ஒரு வீட்டிற்கு மருமகளாய் வந்து, வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மாமியாராய் இருக்கும் நம் தாய்மார்கள் கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்தால் இந்த சீதனப்பேயை நம் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக விரட்டிவிடலாம். எங்கிருந்தோ வந்த இந்த பேய் நம்சமுதாயத்தையும் ஆட்டிபடைப்பது இரத்தக்கண்ணீர் வடிக்கக்கூடிய விசயம்தான். இந்த சீதனப்பேயால் வீடுகளில், தெருக்களில், ஊர்களில், நாட்டில் மற்றும் சமுதாயத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகள். இவைகள் கணக்கிடப்பட்டால் எண்ணிலடங்கா.
சீதனம் வாங்க கூறும் காரணங்கள் பல அதில் இதுவும் சில...
பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் அவள் அவ்வீட்டில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை காலமெல்லாம் செய்யவேண்டிய பொறுப்பு அவளின் கணவனுக்கு இருப்பதால் அதற்காகும் செலவுகளை முதலிலேயே வசூல்செய்துவிடுவது.
பிள்ளையை படிக்கவைத்து அவன் நல்லதொழிலில் இருப்பதால் அவனுடைய சிறுவயது படிப்புசெலவு முதல் கல்யாண நாள் வரையில் அவனுக்காக செலவுசெய்த பணத்தை பொற்றோர்கள் பெற்றுக்கொண்டு அவனை அப்பெண்ணிற்கு விற்றுவிடுவது.
மாப்பிள்ளைக்கு எந்த குறையும் இல்லையென பறைசாட்டுவதற்காக, சீதனம் வாங்காமல் திருமணம் செய்தால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறையுள்ளது என ஊர்மக்கள் பேசுவார்கள் என்ற சாக்குப்போக்கான காரணத்தால். இன்னும் இதுபோல் பல காரணங்கள் உள்ளன.
பெண்களின் நிலை
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னிருந்தும் இதுநாள் வரையிலும் இஸ்லாத்தைத் தவிர பிறமதங்கள் அனைத்திலும் பெண்களின் நிலை கண்ணியக்குறைவாகவே இருந்துவருகின்றது. இஸ்லாம் மட்டும் தான் கண்ணியக்குறைவாக கருதப்பட்டு வந்த பெண்களுக்கு உரிய சரியான அந்தஸ்தை வழங்கி அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் என்ற சிறப்போடு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கி மேல்நிலைக்கு கொண்டு வந்தது. பெண்களுக்கு செத்துரிமை வழங்கியது இஸ்லாம் தான். நம்நாடுகளில் ஆரம்ப காலத்தில் மாற்று சமுதாயத்தவர்களிடம் காணப்பட்ட, கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறும் இழிய கொள்கையை தகர்தெரிந்தது இஸ்லாம் ஆகும். கணவனை இழந்த பெண்களுக்கு இத்தா என்ற ஒரு முறையை ஏற்படுத்தி அந்த காலம் முடிந்தபிறகு மீண்டும் அப்பெண்கள் வேறு ஒருவரை மணந்துகொள்வதற்கு உரிமையளித்தது இஸ்லாம் தான். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியின் தீங்கை தகர்த்தெரிந்து, தக்க காரணங்களுடன் பெண்களும் தங்கள் கணவன்மார்களை விட்டுப் பிரிய அனுமதி வழங்கியது இஸ்லாம் ஆகும். இதுபோல என்னற்ற பல உரிமைகளை பெண்களுக்கு வழங்கியது இஸ்லாம் ஆகும். ஆனால் இன்றைய நம்சமுதாயத்தில் சீதனப்பேயின் கொடுமையாலும் மார்க்கத்தில் இல்லாத சம்பிரதாயங்களாலும் பெண்ணைப் பெற்றுவிட்டால் சந்தோசப்படும் பெற்றோர்களை விட பெண்ணையல்லவா பெற்றுவிட்டோம் என துக்கப்படும் பெற்றோர்கள் தான் அதிகம். பெண் என்றால் செலவும் ஆண் என்றால் வரவும் என பிள்ளைகள் பிறக்கும்பொழுதே கணக்குப்போட்டு பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள நம் பெற்றோர்கள். ஐந்து பெண்களைப் பெற்று கட்டிக்கொடுத்துவிட்டால் அரசனாக உள்ளவன்கூட ஆண்டியாகிவிடுவான் என்று வழக்குச்சொல் உள்ளது.
இக்காலத்தில் ஒரு பெண்ணை கரைசேர்ப்பதற்குள்ளே தந்தை ஓட்டான்டியாகிவிடுமளவுக்கு சீதனம் மற்றுமுள்ள கல்யாண செலவுகள் மார்க்கத்தில் இல்லாத சம்பிரதாயங்களால் செய்யப்படுகின்றன. இது கண்டிப்பாக நம்சமுதாயத்தில் களையப்படவேண்டும்.
சீதனம் மற்றும் மற்ற சடங்குகளால் பெண்ணைப் பெற்றவர்களின் நிலை
பணக்காரர்களுக்கு சீதனம், சீர் மற்றும் சீராட்டு என்பது போன்றவை பொதுவாக பணம் கைமாறல் போல் தான் ஆகிவிட்டது. ஒருவருடைய பணம் அடுத்தவருக்கு கைமாறுகிறது. அவர்களுக்கு பணத்திற்கு மேல் பணம் சேர்ந்துவிடுகிறது. பணகஷ்டம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறவர்கள் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழை வர்க்கத்தினரும் தான்.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலை
பெண்ணை எப்படியும் விரைவில் கரையேற்றிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் மாப்பிள்ளை அமைந்தவுடன் அவர்கள் கேட்கும் சீதனத்திற்கு ஒப்புக்கொண்டு பண ஏற்பாடிற்காக தன்னிடம் இருக்கும் நிலங்களையும் சிலர் விற்றுவிடுகின்றனர். சிலர் பெண்ணிற்கெற்றே சிறுவயதில் அவளுடைய பெயரில் ஒரு தொகையை வங்கியில் வைப்பு நிதியில் டெபாசிட் செய்துவிடுகிறார்கள். அந்த பிள்ளை வளர்ந்து திருமணம் செய்துகொடுக்கும் நேரத்தில் வட்டியுடன் சேர்த்து வந்த அந்த தொகையை எடுத்து திருமணசெலவிற்கு செலவுசெய்துவிடுகிறார்கள். இஸ்லாத்தில் வட்டி முற்றிலுமாக ஹராமாக இருந்தும் வேறுவழி இல்லாமல் இந்த வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். தன்குடும்பங்களில் இருக்கும் செல்வந்தர்களிடம் பணம் கடனாகக் கேட்டு அவர்கள் கேட்கும் தொகையை (தனவந்தர்கள்) இல்லையென்று சொல்லுவதைவிட இந்த வழி நல்லதாகத் தெரிவதால் இதனை தேர்ந்தேடுக்கிறார்கள். இந்த அவலநிலை சீதனம் கொடுக்கவேண்டும் என்ற கொடுமையால் ஏற்படுவதாகும்.
ஏழை வர்க்கத்தினரின் நிலை
இவர்களின் நிலையும் மிகவும் மேசமாகவே உள்ளது. சீதனப்பணத்தை கொடுப்பதற்காக பள்ளிவாசலில் அத்தாட்சி கடிதங்கள் பெற்றுக்கொண்டும், ஊர்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்களுடைய வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்று மகளின் கல்யாண விபரத்தைக் கூறி பணத்தொகையை சேகரிக்கிறார்கள். இதற்காக இவர்கள் படும் கஷ்டம் மிகவும் கொடுமையானது. இந்த நிலைமையும் நம்சமுதாயத்தில் முற்றிலுமாக களையப்படவேண்டும்.
சமுதாயத்தில் நம்மிடத்திலே ஊறிவிட்ட இந்த சீதனப்பேயை எப்படி விரட்டுவது
தாய்மார்கள் முதலில் சிந்திக்கவேண்டும், தான் மருமகளாக ஒரு வீட்டிற்கு செல்வதற்காக தன்னுடைய பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதனை கொஞ்சம் சிந்தித்து உணர்ந்து, நாம் ஏன் நமக்கு வரும் மருமகளின் பெற்றோர்களுக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும், நம்முடைய பிள்ளை நன்றாக சம்பாதித்து நம்முடைய குடும்ப பொறுப்புகளை சரியான முறையில் நடத்திச்செல்வான் என்ற உறுதியான முடிவை எடுத்து சீதனம் சீராட்டு இல்லாமல் எளிமையான முறையில் தன்னுடைய ஆண்பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். நம் தாய்மார்கள் இத்தகைய முடியவை உறுதியாக எடுத்துவிட்டாலே போதும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். நம் தாய்மார்கள் எடுக்கும் இத்தகைய முடிவிற்கு அவர்களின் கணவர்மார்கள் கண்டிப்பாக எந்த ஆசேபனையும் சொல்லப்போவது இல்லை. எல்லோருக்கும் தெரிந்தவிசயம் தான் அவர்களின் கடிவாளம் இவர்கள் கையில். சிலவீடுகளில் கணவர்மார்களின் ஆட்சிஇருந்தாலும் பிள்ளைக்கு சீதனம் சீராட்டு வேண்டாம் என்ற விசயத்தை அவர்களுக்கு வழியுறுத்தும்பொழுது எந்த கல்மனம் உடைய கணவர்மார்களும் சம்மதிக்கவேச் செய்வார்கள். ஆகவே சீதன ஒழிப்பிற்கு முதல் அஸ்திவாரம் நம் தாய்மார்கள் தான். அவர்கள் உறுதியாக இருந்தால் இந்த சீதன சீர்கேட்டை இன்ஷாஅல்லாஹ் நம்சமுதாயத்திலிருந்து அகற்றி விடலாம்.
சிலர் என்னுடைய பிள்ளைக்கு சீதனம் எதுவும் வேண்டாம். பெண் இத்தனை பவுன்நகை போட்டுவந்தால் போதும் எனக்கூறுகிறார்கள். அந்த நகையும் அவள் கழுத்தில் அணிந்து கொள்வதற்குத் தான், நாங்கள் அதனை எதுவும் செய்யமாட்டோம் எனவும் கூறுகிறார்கள். நம்முடைய தாய்மார்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகொள் என்னவெற்றால், பெண்ணின் அழகிற்கு அவளின் புன்னகை ஒன்றே போதுமே பொன்நகை எதற்கு? என்பதுதான். கட்டாயமாக இத்தனை பவுன்நகை போட்டுத்தான் வரவேண்டும் என்ற கட்டளை பெண்ணைப் பெற்றவர்களுக்கு இட வேண்டாமே, உங்கள் தகுதிக்குத்தக்கவாறு அவள் போட்டுவந்தால் போதும் என்று நீங்கள் கூறலாமே.
சீதனம் வாங்குவதால் சமுதாயத்தில் ஏற்படும் பாதக விளைவுகள்
முதலில் பொருளாதாரச் சுமை பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஏற்படுகின்றது. இதனால் அவர்களின் குடும்பத்தில் அவளை கரையோற்றவேண்டும் அதற்காக தனியாக சேமிக்கவேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் அதிகம் காணப்படுகின்றது. சராசரி வருமானம் உள்ளவர்கள் அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பலவழிகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லாஹ் ஏவிய ஹலால், ஹராம் பார்ப்பது மிகவும் அரிதாகிவிடுகின்றது. வியாபாரம், தொழில்துறைகளில் நேர்மை மாறிவிடுகின்றது. வட்டி, இலஞ்சம் போன்றவை வாழ்வில் அன்றாட நிகழ்வுகளாகிவிடுகின்றன. இதனால் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பெருளாதார வளர்ச்சியில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுவருகின்றது. இந்த நிலை நம்சமுதாயத்தில் களையப்படவேண்டும்.
சீதனம் கொடுத்து வீட்டிற்கு வந்தவளின் அதிகாரம் வீட்டில் பரவலாகவே காணப்படுகின்றது. கணவனை மதிக்காத நிலையும் ஏற்படுகின்றது. முதல் எதிரியாக மாமியார் மாறிவிடுகின்றாள். சில மாதங்களில் மாமியார் மருமகள் சண்டைகள் முற்றி தனிக்குடித்தனத்திற்கு வழிவகுக்கப்படுகின்றது. அங்கு அவனுடைய நிலைமையை வருணிக்கவே தேவையில்லை. கணவனை அடக்கிஆளும் பொக்கு அதிகரித்துவிடுகின்றது.
பெண்ணிடத்தில், தான் அதிக பணம்கொடுத்து வந்தவள் என்ற ஒரு மமதை அவளை அறியாமலே ஏற்பட்டுவிடுகின்றது. இதனால் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் நற்செயல் அங்கு தடை செய்யப்படுகின்றது. கணவன்மார்கள் மனநிம்மதி வேண்டுமென்பதற்க்காக மட்டும் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர். தொழுகை, திக்ரு, திருகுர்ஆன் திலாவத் மற்றும் தாஃலிம் போன்ற அமல்கள் அவளிடத்தில் குறைந்து கவனங்கள் அனைத்தும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலேயே செல்கின்றது. குடும்பபொறுப்புகள் குறைய ஆரம்பித்துவிடுகின்றது. சின்னத்திரை நிகழ்ச்சிகளைப் பார்த்து அழும் அவர்கள் குடும்பநிலையை பற்றியும், தன்னிடம் தீனுடைய வாழ்க்கை இல்லாமல் உள்ளதே என்பதைப் பற்றியும் அழுவதுகிடையாது. இதனால் தீனுடைய சூழ்நிலை வீடுகளில் இருந்து எடுபட ஆரம்பித்துவிடுகின்றன. இது மிகவும் கைசேதப்படவேண்டிய விசயமாகும்.
மஹர்
திருமண ஒப்பந்தத்தின் பொழுது மணமகளாகும் பெண்ணுக்கு அவளின் கற்புக்குப் பரிசாக மணமகனால் கொடுக்கப்படுவது மஹராகும்.
மஹரைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில் அருளுகின்றான்.
(நீங்கள் மணந்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்து விடுங்கள்; பிறகு அதிலிருந்து ஏதேனும் உங்களுக்கு அவர்கள் மனமாற விட்டுக் கொடுத்தால், அதனை மங்கல மானதாக, தாராளமாக நீங்கள் புசியுங்கள். ( 4 : 4)
பெண்ணிற்கு மஹர் தொகையை கொடுத்து திருமணம் செய்யவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருக்கும்பொழுது, பிற சமுதாயத்தில் காணப்படுகின்ற பழக்கத்தை நம்சமுதாயத்திலும் ஏற்படுத்தி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாய் பெண்ணிடத்தில் சீதனம் என்ற பெயரில் பெரும்தொகைகளை கேட்டு வாங்குவது எவ்விதத்தில் நியாயமாகும். சீதனம் என்ற செயலுக்கு மாறாக மஹர் தெகையை நம்முடைய சக்திக்குத்தகுந்தவாறு மணப்பெண்ணிற்கு அதிகமாகக் கொடுத்து திருமணம் முடிப்போமாக.
மஹர் கொடுத்து திருமணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
முதலில் அல்லாஹ்வுடைய கட்டளையை ஏற்று நடக்கக்கூடிய பாக்கியம் கிடைக்கின்றது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றிய நன்மை கிடைக்கின்றது. கணவன் மனைவிக்குள் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. அவர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் தன்மை வளர்கின்றது. முக்கியமாக பெண்ணைப்பெற்றோர்கள் நிம்மதிபெருமூச்சு விடுகிறார்கள். பெண்ணை திருமணம்செய்து கொடுக்கும் பொழுது பொருளாதாரச் சுமை அவர்களுக்கு அதிகம் ஏற்படுவதில்லை. கௌரவமான நிலையில் குடும்ப வாழ்க்கை செல்ல வழிவகுக்கப்படுகின்றது.
மாமியார் மருமகள் உறவு தாய் மகள் உறவுபோல் ஆகிவிடுகின்றது. கணவன்மார்களின் செயலறிந்து நடக்கக்கூடிய சூழ்நிலை பெண்களுக்கு உண்டாகின்றது. பெண், கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவளாக ஆகிவிடுவாள். வீட்டில் தீனுடைய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் தீன்தாரிகளாக வளர முயற்சிசெய்வாள். குடும்பப்பெறுப்புகளை நல்லமுறையில் நிறைவேற்றுவாள். பெண்கள் இச்சமுதாயத்தின் கண்கள் என்ற மொழிக்கு உரியவளாகிவிடுவாள்.
மணமகன்களின் பங்கு
படிப்பு முடித்து பெண்ணிடம் சீதனம் வாங்கி தொழில்துறை வைத்து முன்னேறுவோம் என்று இல்லாமல், நம்முடைய செந்தகாலில் நின்று, அல்லாஹ் ஏவிய ஹலாலான வழியில் பொருளீட்டுவது நம்மீது கட்டாயக்கடமையாக இருக்கின்றது. இரணம் என்பது அல்லாஹ் நிர்ணயித்த ஒன்றாகும். யாருக்கு எந்தமுறையில் வழங்கவேண்டும் என்பதை அந்த அல்லாஹ் ஒருவனே அறிவான். உலகம் இயங்குவதற்காக மனிதர்களின் பொருளாதார நிலைமைகளில் ஏற்றத்தாழ்வுகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். நமக்கென்றுள்ள இரணம் நம்மை அடைந்தேதீரும். நாம் செய்யவேண்டியது ஹலாலான முறையில் பொருளீட்டுவதற்கான வழியை தேர்ந்தெடுத்து உழைக்கவேண்டும். அதில் பரக்கத்திற்காகவும் துஆச் செய்து வரவேண்டும். வரும் வருமானம் சிறிதாக அல்லது அதிகமானதாக இருந்தாலும் பரக்கத்துடன் இருந்தால் அது நமக்கு உண்மையிலேயே மிகுந்த நன்மைபயக்கும். எனவே மாப்பிள்ளைமார்கள், சீதனம் என்ற கொடிய பேயை வாங்காமலே நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவேன் என்ற உறுதிப்பாட்டை எடுத்து உழைத்தால் இன்ஷாஅல்லாஹ் பரக்கத் பொருந்திய வருமானத்தை அடைந்துகொள்ளலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்சமுதாயத்தில் ஊன்றிவிட்ட இந்த சீதனப்பேயை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கு நம்சமுதாயமக்கள் அனைவர்களுக்கும் உதவிசெய்வானாக. ஆமீன்.
சமுதாய நல சிந்தனையுள்ள நாம் அனைவர்களும் சிந்தித்து சீதனப்பேயின் தீமைகளை உணர்ந்து அதனை நம்சமுதாயத்திலிருந்து விரட்ட ஒன்றுபடுவோம். அல்லாஹ் உதவிசெய்வானாக. ஆமீன்.
இவண்
இஸ்லாமிய ஊழியன்,
க. சே. செய்யது அஹமது கனி
சவுதி அரேபியா.
0 comments:
Post a Comment