குஜராத்தி வியாபார ஸ்டைல்
>> Sunday, January 28, 2007
குடும்ப பாசத்தில் குஜராத்தி வியாபாரம்.
எந்த ஒரு விஷயத்திற்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. அணுகுமுறை என்று வைத்துக் கொள்ளலாம்.
குஜராத்திகள் இதில் ஒரு தனி இலக்கணத்தையே உண்டு பண்ணி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மற்றவர்களைவிட வியாபாரத்தில் வெற்றிகரமாக விளங்குகறார்கள்.
என் கேள்விக்கென்ன பதில்?
ஒருவன் ஒரு காரியம் செய்கிறான் என்றால், குஜராத்திக்காரன் சிந்தனையில் இரண்டு கேள்விகள் உருவாகும்.
``அவன் ஏன் அந்தக் காரியத்தைச் செய்கிறான். அதனால் நமக்கென்ன பயன்?’’
ஒரு குஜராத்திக்காரர் கடைக்கு வியாபாரத்திற்குப் போனால், அவர் தெரிந்து கொள்ள விரும்பும் பதில்கள் நான்கு.
``அந்தப் பொருள் எவ்வளவு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு தரமானதாகக் கிடைக்கும்? விலை எவ்வளவு மலிவாக இருக்கும்? இந்தப் பொருளைக் கடனில் வாங்க முடியுமா?’’
மேலே கண்டபடி மற்றவர்களின் கடைக்குப் போகும்போது கேட்பவர்கள் இவர்களே (குஜராத்திகள்) வியாபாரம் செய்யும்போது வரும் வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் விதம் இருக்கிறதே அதற்கு ஈடு இணை இல்லை
ஆகா! இதுவல்லவா வியாபாரம்?
ஆமதாபாத்தில் ஒரு துணிக்கடை முதலாளி குஜராத்தி கல்லாப் பெட்டியின் முன் அமர்ந்திருக்கிறார். கடையின் உள்ளே நாலைந்து பையன்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ``சும்மா உள்ளே போய் பார்க்கலாம்’’ என்ற எண்ணத்தில் உள்ளே நுழைகிறார்.
இவர் உள்ளே நுழைந்ததும் கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி கடைப் பையனிடம் உரத்த குரலில் சொன்னார்: ``டேய்! என் சகோதரர் வந்திருக்கிறார். போய் சீக்கிரம் காபி வாங்கி வா’’ ``அடடே! அதெல்லாம் வேண்டாங்க! நான் சும்மா... என்று வந்தவர் சொல்லிக் கொண்டிருந்தபோது கடைக்காரர் குறிப்பிட்டார். `அப்போ காபி வேணாமா! பரவாயில்லை. `டேய்! கூல் டிரிங் வாங்கி வா’’ சொல்லி முடிப்பதற்குள் கடைப் பையன் வாங்கிவரப் பறந்தே விட்டான்.
வந்தவரும் வேறு வழியின்றி உள்ளே சென்று துணிகளைப் பார்க்கத் தொடங்கினார். வந்தவரின் கண் போன பக்கமெல்லாம் பேண்ட், சர்ட் துணிகளை எடுத்துப் போட்டார்கள் பையன்கள்.
சும்மா பார்க்க வந்தவருக்கு வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம். அப்படி ஓர் உபச்சாரம். அன்புச் சிறையில் அகப்பட்டு விட்ட கைதிபோல ஆகிவிட்டார்.
துணிகளை எடுத்துக் கொண்டு அவர் பில் கொடுக்க வந்தபோது ``என் பாபிக்கு (அண்ணிக்கு) ஏதேனும் வாங்கலையோ?’’ பாசம் ததும்ப குஜராத்தி முதலாளி கேட்டார்.
அவர் அண்ணி முறை கொண்டாடியது துணி வாங்கியவரின் மனைவியை. இவருக்கும் வாங்கும் ஆசை ஏற்பட்டது. ``ஏதாவது லேட்டஸ்ட் டிசைன் இருக்கிறதா?’’ என்று இழுத்தார்.
``உங்க பாபிக்கு (அதாவது முதலாளியின் மனைவிக்கு) ஒரு லேட்டஸ்ட் டிசைன் வாங்கி வச்சிருக்கேன். அதை என் அண்ணி எடுத்துக்கட்டும். நான் வேறு வாங்கிக்கறேன்’’ என்று எடுத்துக்காட்டிய முதலாளி அதை விற்றும் விட்டார்.
வேடிக்கை பார்க்க வந்தவர் வெளியே வந்தபோது அவர் கையில் ஒரு பெரிய பார்சல்.
இப்படி குடும்பப் பாசம் காட்டியே வியாபாரத்தில் வெற்றி பெற்று வருபவர்கள் குஜராத்திகள்.
(நன்றி: தமிழ் தொழில் உலகம் சனவரி 2007
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
2 comments:
நல்ல பதிவு.
வாழ்த்துக்களுடன்
-அபூ உமர்
http://www.inneram.com/article/readers/2440-muslim-ladies-in-freedom.html
Post a Comment