**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அளவைச் சுவடுகள்

>> Monday, January 15, 2007

இன்றைக்கு நமக்கு விஞ்ஞான பூர்வமான அளவுகள் கிடைத்துள்ளன. இந்த அளவுகள் கண்டுபிடிப்பதற்கு முன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அளவுகள் நடைமுறையில் இருந்தன. உதாரணமாக இன்றைய நமது நீட்டல் அளவு மீட்டர் என்பதாகும் பழந்தமிழகத்தில் தச்சுமுளம் எனற அளவு நடைமுறையில் இருந்தது. தச்சாசாரிகள் இந்த அளவையை அதிகமாகப் பயன்படுத்தியதால், தச்சுமுளம் என்று அந்த அளவுக்குப் பெயர் வந்தது.‘இந்தத் தச்சு மளமும் கண்டுபிடிப்பதற்கு முன், பழந்தமிழர்கள் எந்த மாதிரியான அளவை வைத்திருந்தார்கள்...?’ என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன்.அந்தப் பெரியவர் சொன்னார்; ‘‘அளக்க என்று அளவுகோல் தேடி, அந்தக் காலத்து மக்கள் எங்கும் போகவில்லை. அந்தக்காலத்தில் அளவு கோல்களை கையில் வைத்துக் கொண்டே அலைய முடியுமா என்ன? எனவே அவவனவன் உடம்பும், உடம்பின் உறுப்புகளுமே, அளவுகோல்களாகப் பயன்பட்டன’’ என்றார்.‘‘அதெப்படி உடம்பை வைத்து அளக்க முடியும்?’’ என்று கேட்டேன்.பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘தம்பி அந்தக் கிணற்றில் எவ்வளவு தண்ணீர்? இருக்கிறது என்று ஒருவர் கேட்டால், கிராமத்து மக்கள், அந்தக் கிணற்றில் கரண்டக்கால் அளவு தண்ணீர் கிடக்கு, அல்லது முட்டளவு தண்ணீர் கிடக்கு அல்லது இடுப்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது மார்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது கழுத்தளவு தண்ணீர் கிடக்கு அல்லது ஓராளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது அல்லது இரண்டாளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது என்று கூறிவார்கள்.. இப்படி கிணற்றில் கிடக்கிற தண்ணீரின் அளவை, நீர்நிலைகளில் கிடக்கிற தண்ணீரின் அளவைத் தன் உடம்பை வைத்தே அளந்தார்கள். பண்டை மக்கள். உயரத்தை அல்லது ஆழத்தை அளக்க, அளவுகோல் தேடி எங்கும் அலைய வில்லை. தன் உடம்பை வைத்தே, தனக்கான நீட்டல் அளவைக் கணித்துக் கொண்டான்.நீட்டல் அளவை உடம்பில் அளந்தார்கள் என்பது சரி, உடல் உறுப்பால் அளந்தார்கள் என்று கூறினீர்களே.. அது எப்படி?’ என்று அந்தப் பெரியவரிடம் கேட்டேன்.பெரியவர் சிரித்துக் கொண்டே ‘‘தம்பி....’’ என்று இழுத்தபடி மிக நுட்பமான நீட்டல் அளவை, அந்தக் காலத்து மக்கள் ஒரு ‘மயிர் கனம்’ என்று கூறுவார்கள். அதைவிட சற்று பெரிய அளவை ஒரு நூல்கனம் என்று சொல்வார்கள். கிராமத்தான் கட்டியிருந்த வேட்டியில் நூல் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நூலுக்கு அடுத்து ஒரு விரல் கடை என்று கூறுவார்கள். இந்த விரல் கடையிலும் சுண்டு விரல் தண்டிக்கு, பெருவிரல் தண்டிக்கு என்று இரண்டு விதமான அளவைச் சொல்வார்கள். ஒரு விரல் கடை, இரண்டு விரல்கடை, மூன்று விரல் கடை, பிறகு நான்கு விரல் கடை என்று நீட்டல் அளவைச் சொல்வார்கள். ஐந்துவிரல்கள் மனிதனுக்கு இருந்தாலும் ஐந்து விரல் கடைஅளவு என்று கூறுவதில்லை!நான்கு விரல் கடைக்குப் பிறகு ஜாண்தான் பெரிய அளவு. ஒரு ஜாண் என்பது நான்கு விரல் கடையின் மூன்று பங்காகும். யார் கையாளாலும் இந்த அளவு அதாவது மூன்று, முறை வைக்கும் நான்கு விரல் கடை என்பது ஒரு ஜாண் என்ற அளவுக்குச் சரியாகத்தான் இருக்கும்.ஜாணுக்கும் பிறகு முளம்தான் பெரிய அளவு. மூன்று ஜாண் சேர்ந்தால் ஒரு முளம். இரண்டு கைகளையும் நெட்டுக்கு நீட்டினால் ஒரு ‘கைப்பாகம்’ என்ற அளவாகும். மூன்று முளங்கள் சேர்ந்தால் ஒரு கைப்பாகம் ஆகும். இந்த நுட்பம் இயற்கையாகவே மனித உடலுக்கு வாய்த்துள்ளது. இதைக் கண்டறிந்து பழங்காலத்து மனிதர்கள் தன் அளவிற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடம்பில் உள்ள விரல்கள், கைகள் போன்றே காலாலும் பழங்காலத்தவர்கள் தங்கள் அளவுகளை, அளந்திருக்கிறார்கள்.ஒரு ‘பாதம்’ இரு பாதம் என்று நீளங்களைத் தன் பாதம் கொண்டே அளந்துள்ளார்கள், பாதங்களுக்குப் பிறகு, ‘எட்டு’ என்று ஒரு அளவு உள்ளது. நிற்கிற நிலையில் வலதுகாலைத் திரையில் ஊன்றிக் கொண்டு இயல்பாக ஒரு எட்டு எடுத்து இடது காலை வைக்கும் தூரத்தைத் தான் ‘ஒரு எட்டு’’ என்ற அளவாகக் கூறுகின்றார்கள்.இந்த எட்டையே முடிந்த வரை இரு காலையும் அகட்டி வைத்துக் கொண்டால் அதற்கு ‘ஒரு கவுடுதூக்கு’ என்று பெயர். மூன்று பாதம் ஒரு எட்டாகவும், மூன்று எட்டு ஒரு கவுடுதாக்காகவும் இருக்கும். இந்த அளவின் நுட்பத்தையும் உணர்ந்துதான் பழங்காலத்து மக்கள், காலின் மூலம், கால் பாதத்தின் மூலம் தங்கள் அளவுகளை அமைத்திருக்கிறார்கள்.உடம்பையும் கையையும் சேர்த்து ‘‘ஒரு கை எடுப்பு உயரம்’’ என்றும் ஒரு அளவை சொல்கிறார்கள். பருமனைக் குறிக்கவும் அந்தக் காலத்தில் மனிதர்கள் தன் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.மிக நுட்பமான பொருளைப் பற்றிப் பேசும்போது ‘‘கண்ணுக்குள்ள போட்டு எடுத்திரலாம்’’ என்று கண்ணை மையமாக வைத்துக் கூறினார்கள். அதைவிட சற்று பருமனான பொருளை ஒரு சிட்டிகை என்று கூறினார்கள். பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து ஒட்டிப் பிடித்துக் கொண்டு எடுக்கும் ‘பொடி’ போன்றவைகளைச் சிட்டிகை என்று கூறினார்கள்.உள்ளங்கையைக் குவித்து அதில் நெல்மணி போன்றவற்றை நிரப்பி, ஒரு கையளவு அல்லது ‘ஒரு சதங்கை’ என்றார்கள். இரண்டு கையையும் சேர்த்து நெல்மணிகளை அள்ளி ‘இருகை அளவு’ என்றார்கள். சோற்றை உள்ளங்கையில் வைத்து உருட்டி ஒரு ‘கவளம்’ என்றார்கள். ஒரு ‘வாய்ச் சோறு’ என்றும் ஒரு அளவைக் கூறினார்கள்.இவைதவிர, சில பொருள்களின் அளவைப் பற்றிக் கூறும்போது, மணிக்கை தண்டி, கணுக்கால் தண்டி, தொடைத் தண்டி என்று பொருளின் பருமனுக்குத் தக்கபடி தன் உடல்உறுப்புகளைக் கொண்டு அளவுகளைக் குறித்தார்கள்.மரத்தின் அளவுகளைக் கூறும்போது ஒரு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்கு, இரண்டு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்குப் பெரியது என்று கூறுகிறார்கள். இங்கும் கைகளே அளவு கோலாகப் பயன்படுகிறது, என்று அந்தப் பெரியவர் கூறினார்.இப்படி ஆதிகாலத்தில் மனிதர்கள் தன் உடம்பையும், தன் உடம்பின் உறுப்புகளையும் மட்டுமே அளவுகோல்களாகக் கொண்டு தனக்குத் தேவையான அளவுகளை அளந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.இவைதவிர, கற்பனை நயத்துடன் சில அளவுகளை உடல் உறுப்புகளை மையமாகக் கொண்டு கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு மெகா ‘அளவுக்கு வாய் ரொம்ப நீளம்’ என்று கூறினார். அவள் அதிகமாகப் பேசுபவள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். இங்கு ‘வாய்’ என்பது குறியீடாக நின்று பேச்சைக் குறிக்கிறது. அதேபோல், ஒருவன் அவனுக்கு ‘நாக்கு ரொம்ப நீளம்’ என்று கூறினால், ‘அவன் மிகவும் ருசியாகச் சாப்பிட ஆசைப்படுவான்’ என்று புரிந்து கொள்கிறோம். அந்தத் தொடரில் நாக்கு என்ற சொல் ருசியைக் குறித்து வந்தது. இப்படி மனிதனின் உடலும் உடல் உறுப்புகளும் பழங்காலத்தில் அளவுகோல்களாகவும் பயன்பட்டுள்ளன.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP