கர்ப்பிணிப் பானை.
>> Tuesday, January 23, 2007
ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாகக் கேட்டார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச் சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா.
அதற்கடுத்த வாரம் முல்லா பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.அடுத்த நாள் வந்தது.முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை திருப்பிக் கேட்டார் அவர்.
“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை மகப்பேறின் போது மரித்து விட்டது’, என்றார் முல்லா.பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய். பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.‘நண்பரே! பானை கர்ப்பமாகும். அதற்கு பிரசவ வேதனை வரும் என்பது நாம் நமக்குள்ளே முன்னமே ஏற்படுத்திக் கொண்ட விஷயந்தானே. உங்களிடம் அதன் இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறதே’ குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அதை நன்கு போஜித்திருக்க வேண்டும்’ என்று அமைதியாகச் சொன்னார் முல்லா.
இந்த கதைக்குள்ளே புதைந்திருக்கும் ' நீதி ' ?
0 comments:
Post a Comment