**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இந்தியாவில் இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள். பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!

>> Tuesday, February 26, 2013

இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள் -

பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்! அநீதிகள். அநீதிகள்.

கீற்று இணைய தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரியா அறிமுக உரையாற்றி "இஸ்லாமியர் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

காவல் துறையின் வழக்குகளினால் சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹாரூண் பாஷா, அப்துர் ரஹீம், ஆயிஷா சித்தீக்கா, ஜக்கரியா ஆகியோர் சிறை அனுபவங்களை பதிவு செய்தனர்.

தலித் முரசு பத்திரிகை ஆசிரியர் புனிதப் பாண்டின் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

"தாடி வைத்தவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?''
- கீற்று பிரியா

“நம்முடன் இணைந்து வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி புரிந்துணர்வு இல்லாமல் சமுதாயம் இருக்கிறது.

முஸ்லிம்கள் தங்குவதற்கு வீடுகளைத் தருவது கூட பல்வேறு இடங்களில் மறுக்கப்படுகிறது.

என்னுடைய சொந்த வாழ்வில் நான் சந்தித்த இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் நம்பிக்கையான அவர் இரவு 8 மணிக்கு மேல் ஆட்டோ வேண்டுமென்று சொன்னால் வருவதற்கு மறுத்து விடுவார்.

ஏன் என்று கேட்டால், "ஏற்கனவே காவல்துறை சுமத்திய பொய் வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்திருக்கிறேன்.

இரவு நேரத்தில் வண்டி ஓட்டினால் அவர்களால் பெரிய தொந்தரவுகள் ஏற்படும்” என்று கூறி மறுத்து விடுவார்.

ஒருமுறை கிருஷ்ணகிரியில் இருந்து வந்த எங்கள் உறவினரை அழைத்து வருமாறு மிகவும் வற்புறுத்தி இரவு 11 மணிக்கு அவரை பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம்.

உறவினரை அழைத்துக் கொண்டு வரும் வழியில் ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். எங்கள் உறவினர் ஆட்டோ டிரைவரை தன்னுடைய நண்பர்தான் என்று காவல்துறையினரிடம் தெரிவித்து ஆட்டோவை போக அனுமதிக்குமாறு சொல்கிறார்.

அதற்கு அந்த காவல்துறையினர் தாடி வைத்திருக்கிற இந்த ஆள் உங்களுக்கு எப்படி நண்பராக இருக்க முடியும் என்று ஆரம்பித்து தடித்த வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

இதனை எங்கள் உறவினர் எங்களுக்கு போன் மூலம் தெரிவித்தவுடன் நாங்களும் அந்தக் காவல்துறையினரிடம் பேசினோம்.

‘அந்த ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு மிகவும் தெரிந்தவர். அதனால் தான் உறவினரை அழைத்து வர அனுப்பினோம்’ என்று சொன்ன பின்பும் சட்டை செய்யாத போலீசார், அந்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரை விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் உட்கார வைத்த பிறகு தான் அனுப்பினார்கள்.

அடுத்த சம்பவம், டிசம்பர்-6 அன்று காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

மற்றவர்களை சாதாரணமாக சோதனையிட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், முக்காடு போட்ட ஒரு முஸ்லிம் பெண்ணை மட்டும் கடுமையாக சோதனை செய்தனர்.

எந்த அளவிற்கு என்றால் வேலைக்குப் போகிற அப்பெண்ணின் கைப்பையில் இருந்த டிபன் பாக்ஸை பிரித்து அதில் இருந்த சாதத்தையும் கிளறிப் பார்த்தனர்.

இதில் காவல்துறையினரின் ஏளனப் பேச்சு வேறு.
அந்தப் பெண் அழுது கொண்டே சாப்பாட்டை ஒரு ஓரமாக கொட்டிவிட்டு சென்றார்.

இந்தச் சம்பவமும் மற்றவர்களை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரிய வில்லை.
அவர்கள் எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக இருந்தனர். அப்போது எங்களோடு வந்த ஒருவர் தன்னுடைய முஸ்லிம் நண்பரைப் பார்த்து உங்களால் தான் இந்தத் தொந்தரவு என்று சொன்னதைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

நாங்கள் "கீற்று' இணைய தளத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்தவுடன் எங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் (ஃபீட் பேக்) பெரும் அதிர்ச்சியை அளித்தது.

‘முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கப்படுவதில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

இவர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்குத்தான் கஷ்டம்.

போலீஸ் தொந்தரவு. அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட வேண்டியதுதானே’ என்பது போன்ற பேச்சுக்கள்!

இது ஏதோ பாமரனின் பேச்சு என்று ஒதுக்கி விட முடியாது.

படித்த இளைய தலைமுறையின் கருத்துத் தான் இது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக அனுமதி வாங்குவதற்கும் பெரும் இன்னல்களை, இடைஞ்சல்களை சந்தித்தோம்.

இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட காரணத்தாலேயே காவல்துறையினர் மிகவும் சிரமத்தைத் தந்தனர்.

இதற்கு முன்னால் மூன்று, நான்கு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அப்போது எல்லாம் காவல் நிலையத்திலே அனுமதி வாங்கித்தான் நடத்தினோம்.

இந்த நிகழ்ச்கிக்காக அனுமதி கேட்ட போது இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் என்னால் அனுமதி தர முடியாது.

ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று அனுமதி வாங்குங்கள் என்று சொல்லிவிட்டனர்.

ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கேயும் அவ்வளவு எளிதில் அனுமதி கிடைக்கவில்லை.

தெரிந்த நண்பர்களை வைத்து அதிகாரிகளிடம் பேசிய பின்பும் முதல் நாள் காலை 9 மணிக்கு வரச் சொன்னவர்கள் மாலை 6 மணி வரை காக்க வைத்த பிறகு தான் அனுமதி அளித்தார்கள்.

அதன் பிறகு இங்கே அரங்கத்திற்கு வந்தபோது இங்குள்ள ஊழியர்களிடம் நீங்கள் எப்படி இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம் கொடுத்தீர்கள்? என்று காவல் துறையினர் விசாரித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி சம்பந்தமான பேனரை அரங்கத்தின் முன்னால் காலையில் கட்டி வைத்திருந்தோம்.

கட்டி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே அந்த பேனர் கிழிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் புதிய பேனர் தயாரித்து இப்போது நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கடைசி நிமிடம் வரை நிகழ்ச்சி நடக்குமா என்று பதட்டத்துடனே நடமாட வைத்து விட்டார்கள் காவல் துறையினர்” கவலையுடன் தெரிவித்தார் பிரியா.

“நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள் - என்னால் அடி தாங்க முடியவில்லை'' - -ஹாரூண் பாஷா (கோவை)

2006 சட்டமன்றத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன்.

இதற்காக காவல் துறையினர் மதத்துவேஷத்தைத் தூண்டியதாக வழக்குப் போட்டார்கள்.

வழக்கு மன்றத்திலே காவல் துறையின் பொய் வழக்கை முறியடித்தேன்.

அதன் பிறகு என்னுடைய மகனின் பிறந்த நாளன்று நள்ளிரவில் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்த போலீசார் வீட்டை சோதனையிட்டனர்.

பிறகு என்னை கைது செய்து அழைத்துப் போன போலீசார் இரவு முழுவதும் ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றி கொண்டு சென்றனர்.

அதீக் ரஹ்மானுக்கு நீங்கள் வெடிகுண்டு கொடுத்ததாக அவர் சொல்லியுள்ளார்.

அதற்காக விசாரிக்கிறோம் என்று சொன்னார் கள்.

நான் எதையும் அதீக் ரஹ்மானிடம் கொடுக்கவில்லை.

வேண்டுமானால் அதீக் ரஹ்மானை அழைத்து வந்து நேருக்கு நேர் வைத்துக் கேளுங்கள் என்று சொன்னேன்.

போலீசார் அதீக் ரஹ்மானை நேரில் அழைத்து வந்த போது நான் நேரடியாக அவரிடம், எப்போது நான் வெடிகுண்டுகொடுத்தேன்? ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அதீக் ரஹ்மான், “நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள், என்னால் அடி தாங்க முடியவில்லை'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே போலீசார் இழுத்துச் சென்று விட்டனர்.

எங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த இஸ்லாமிய பிரசுரங்களுடன் மேப் ஒன்றையும் வைத்திருந்த போலீசார் அது பற்றிய விவரங்களைக் கேட்டனர்.

மேப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், இது கமிஷனர் ஆபிஸ் மேப்.

வெடிகுண்டு வைப்பதற்காக மேப் வைத்திருந்ததாக ஒத்துக் கொள்.

இல்லாவிட்டால் வீட்டில் நீயும் உன் மனைவியும் மட்டும் இருக்கீறீர்கள்.

நீ ஒத்துக் கொள்ளாவிட்டால் உன் மனைவியை சிறைக்கு அனுப்புவோம்.

அதனால் ஒத்துக் கொள் என்று மிரட்டினர்.

72 நாள் சிறை வாசத்திற்குப் பின் வந்த என்னை உறவினர்கள் யாரும் சேர்ப்பதில்லை.

சிறைக்குச் செல்லும்போது தீவிரவாதிகள் என்று பிரசுரித்த பிரபலப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகி வெளியே வந்தபோது பிரசுரிக்கவில்லை.

முஸ்லிம் சமுதாயம் பாதுகாப்போடு இருக்க வேண்டுமென்றால் பத்திரிகைகள் உண்மையை எழுத வேண்டும்.

சில பேருக்குத்தான் ஜட்டி இருக்கும் - எல்லோரையும் நிர்வாணப்படுத்தித் தான் அடிப்பார்கள்
- தடா அப்துல் ரஹீம்

17 ஆண்டு கால சிறை வாழ்க்கையை பத்து நிமிடத்தில் சொல்லி விட முடியாது.

சேத்துப்பட்டு ஆர். எஸ். எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்ததாகக் கூறி என்னைக் கைது செய்தார்கள்.

நீதிமன்றத்தில் 60 நாள் விசாரணையை காவல் துறையினர் கேட்டு வாங்கினார்கள்.

ஒரே அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். பல நாட்கள் இரவு - பகல் எதுவென்றே தெரியவில்லை.

அதிகாரிகளின் முகத்தையும், தோற்றத்தையும் வைத்து யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

சிறையில் இருந்த விடுதலைப் புலிகளில் சிலர் தப்பித்த காரணத்திற்காக ஹெல்மெட் போட்ட காவல்துறையினர் எங்கள் மீது வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள்.

சிறையில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி எங்களை நிர்வாணப்படுத்தி அடிப்பார்கள்.

அப்போது சிலருக்கு மட்டுமே ஜட்டி போட அனுமதி அளிக்கப்படும்.

நாங்கள் சிறைக்கு எதிராக ஆட்சிக்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே பேசவில்லை.

ஆர்எஸ்எஸ் பார்ப்பன சக்திகளின் கொடுமையை எதிர்த்து மட்டும் தான் போராடினோம்.

சிறை வாழ்க்கையின்போது தாயை, தந்தையை, மனைவியை, குழந்தையை, குடும்பத்தை இழந்த நிலையில் சகோதரர்கள் இருக்கிறார்கள்.

எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும் எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை.

புகழேந்தி சங்சரசுப்பு, ப.பா.மோகன், பெலிக்ஸ் போன்ற வழக்கறிஞர்கள் தான் எங்களுக்கு உதவி புரிந்தார்கள்.

7 ஆண்டுகள் கூட நிறைவு பெறாத ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அரசு, 14 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதில்லை.

எத்தனை செம்மொழி மாநாடுகள் நடைபெற்றாலும், அண்ணா பிறந்த நாள் வந்தாலும் இதே நிலைதான்.

முஸ்லிமல்லாத சகோதரர்கள் எங்கள் குரல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள்.

உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!
- ஆயிஷா - 

என் பெயர் சங்கீதா என்கிற ஆயிஷா சித்தீக்கா.

இப்படி அழைத்தால் யாருக்கும் தெரியாது.

மனித வெடிகுண்டு ஆயிஷா என்பது தான் எனக்கு வழங்கப்பட்ட பட்டம்.


1997-ஆம் ஆண்டு 19 வயது நிறைவு பெற்ற நான், இஸ்லாத்தை - ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு விருப்பமானவரை திருமணம் முடித்தேன்.


குடும்ப எதிர்ப்பின் காரணமாக சென்னைக்கு வந்தேன்.

எங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்காக என்னுடைய உறவினரை தேடி வந்தவர்கள் எங்களையும் விசாரிப்பதாக சேர்த்து விட்டார்கள்.

நான் கோவைக்கே போகவில்லை.

கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடுவதாகச் சொன்னார்கள்.


100 கிலோ வெடிகுண்டை கட்டிக் கொண்டு அத்வானியை கொலை செய்யப் போனேனாம்.

என்னுடைய மொத்த எடையே 40 கிலோதான்.

கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடப்படுவதாக போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களிலே என்னுடைய படத்தை ஒட்டியிருந்தார்கள்.

ஆனால் கோவை வெடிகுண்டு வழக்கு குற்றப் பத்திரிகையிலே என்னுடைய பெயர் கிடையாது.


இவ்வளவு பிரபலப்படுத்திய காரணத்தால் வெடிகுண்டு வழக்கிலே தேடப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள்.


தனிமைச் சிறையின் கொடுமைகளை என்னுடைய குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய மாமியாரிடம் கொடுத்திருந்தேன்.

சிறையை விட்டு வெளியே வந்த போது என்னுடைய குழந்தை என்னிடம் வரவில்லை.

இதை விட பெரிய கொடுமை ஒரு தாய்க்கு என்ன இருக்க முடியும்?
சிறையிலிருந்து ஒரு வாரத்திற்கு 4 கடிதங்கள் என்னுடைய கணவருக்கு எழுதுவேன்.

மூன்றரை வருடத்தில் அவருக்கு கிடைத்த கடிதங்கள் மொத்தம் 17தான்.


நான் பாதிக்கப்படும்போது பத்திரிகைகளுக்கு தீனியாக்கினார்கள்.

என்னுடைய வாழ்க்கையைத் தொலைப்பதற்கு பத்திரிகைகள் தான் முழு முதற்காரணம்.


இழந்த சுயமரியாதையை மீட்பதற்காக போராடி வருகிறேன்.

உண்மைக்காகப் போராடுவேன்.

பாகிஸ்தானுக்கு ஓடிப் போக மாட்டேன்.

வாழ்ந்து காட்டுவேன்.

என்னைப் போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு வாதாடுவதற்காக என் மகனை சட்ட வல்லுநராக்குவேன்.

அப்பாவிகளுக்கு குரல் கொடுங்கள், எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள்.

சமூக ஆர்வலர்கள், மீடியாக்கள் இதனை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

புதன் கிழமை கைது செய்தார்கள்! வெள்ளிக்கிழமை கைது செய்ததாக கோர்ட்டிலே சொன்னார்கள்! - ஜக்கரிய்யா உசேன்.  

நோன்பு மாதத்திலே சஹர் உணவுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது என்னைக் கைது செய்து கண்ணைக் கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

புதன்கிழமை கைது செய்தவர்கள், வெள்ளிக்கிழமை வரை அன்-ரெக்கார்டாக வைத்திருந்தார்கள்.

ஆந்திராவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தம் இருப்பதாகக் கூறி விசாரித்தவர்கள், எங்களுக்கும் - அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தவுடன் கொடுங்கையூர் பாலத்தினருகே குண்டுகளோடு சென்றபோது பிடித்ததாக வழக்குப் போட்டார்கள்.

காவல்துறை சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துகிறது! பத்திரிகை பிரச்சாரப்படுத்துகிறது!! - 
வழக்கறிஞர் புகழேந்தி  

1996-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் மன்றத்திலே குணங்குடி ஹனீஃபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.

மறுநாள் தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை.

அதனால் அவர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கத்திகளை வழங்கினார்கள் என்று தெரிவித்திருந்தது.

காவல்துறையினர் இந்தச் செய்தி உண்மையானதுதானா என்று பத்திரிகையாளர் மன்றத்திலே விசாரிக்காமல் பிரிவு-75 சிட்டி போலீஸ் ஆக்டில் வழக்குப் பதிகிறார்கள்.

இந்த வழக்கை ஒத்துக் கொண்டாலே 150 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் காவல்துறையினர் 12 ஆண்டு காலம் இழுத்தடித்து விடுதலை செய்தார்கள்.

தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலே ரஹீம் உள்பட சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கிலே 151 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டார்கள்.

சாட்சிகளில் ஒருவர் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முபாரக் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

சின்னத் தம்பி தெருவில் இருந்த ஜிகாத் கமிட்டி அலுவலகத்தில் தொடர் வண்டியில் குண்டு வைப்பதற்காக சதி செய்திருந்ததாகத் தெரிவித்தார்கள்.

அதற்காக அந்த தெருவில் மூட்டை தூக்கும் இருவரை சாட்சிகளாக போட்டிருந்தார்கள்.

சாட்சி சொன்னவர்கள், ஆகஸ்டு கடைசி வாரம் நாங்கள் அங்கே போனபோது அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் ஆகஸ்டு முதல் வாரம் போன போதும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

அது எப்படி கடைசி வாரம் போனதற்கு பின்னால் முதல் வாரத்திற்கு போக முடியும்?

1999-ஆம் ஆண்டு வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி அதை வைத்ததாக சிலரை கைது செய்தார்கள்.

பேனா விற்கும் 18 வயது ஜலீல், பாவாடை விற்கும் ஹக்கீம், சமோசா விற்கும் ஷேக் ஆகிய பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் மீது வழக்குப் போட்டு துன்புறுத்தினார்கள்.

கோவை கலவரத்தின் போது முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக இன்ஸ்பெக்டர் முரளி மீது வெடிகுண்டு வீசினார்கள் என்று வழக்குப் போடப்பட்டது.

இந்த வழக்கில் 8-ஆவது குற்றவாளியாக உள்ள அமானி சம்பவம் நடக்கும் போது சிறையில் இருந்தார்.

மஹாராஷ்டிராவின் கார்க்கரே, கோவை பாலன், தென்காசி இன்ஸ்பெக்டர் போன்ற நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் இருக்கிறார்கள்.

ஏர்வாடி காசிம் என்பவரை நீதிமன்றம் கண்டிஷன் பெயலில் விடுவிக்கிறது.

பூந்தமல்லியை விட்டு வெளியே போகக் கூடாது என்பது கோர்ட் உத்தரவு, அவருக்கு வீடு கொடுத்தவரை காவல்துறை தொல்லை கொடுப்பதாக தகவல்கள் வருகிறது.

வழக்குகளை வேகமாக நடத்த வேண்டும்.

வழக்குகளை தேவைக்கு அதிகமான காலம் நீட்டிப்பதே ஒரு வகையான ஒடுக்குமுறைதான்.

வழக்குகளை நீட்டிப்பதன் மூலம் சட்டத்தை தவறுதலாக அரசும், காவல் துறையும் பயன்படுத்துகிறது.

பத்திரிகைகள் அதனை பிரச்சாரப்படுத்துகின்றன.

நீதிமன்றமும் உதவுகின்றது.

அநீதிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக நின்று தட்டிக் கேட்க வேண்டும்.

இதுபோன்று நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் உண்டு.

1 comments:

Unknown February 26, 2013 at 7:29 PM  

காவல்துறை சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துகிறது! பத்திரிகை பிரச்சாரப்படுத்துகிறது!! //true

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP