இந்தியா இலங்கைக்கு செய்த ‘கட்டிப்புடி’ வைத்தியம்!
>> Monday, March 18, 2013
ஜெனீவாவில் நன்றி.. பாராட்டு.. வாழ்த்து.. வரவேற்பு.. என்று தெரிவித்து இலங்கையை அசத்தியிருக்கிறது இந்தியா!
தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடுகள், பாகிஸ்தான், சீனா மட்டுமல்ல… மிகப்பெரிய பாராட்டு இந்தியாவிடம் இருந்து கிடைத்துள்ளது.
இலங்கைக்கு நன்றி, பாராட்டு, வாழ்த்து மற்றும் வரவேற்பு தெரிவித்து இந்தியா ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை, இலங்கையை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையின் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்திய அரசு ஐ.நா.வில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், எந்த வலியுறுத்தலும் கிடையாது!
ஒரே ‘கட்டிப்புடி’ வைத்தியம்தான்!
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கை சார்பிலான அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.
அதையடுத்து, இலங்கையின் அந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து பேசினர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பொது மன்னிப்பு சபை பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
இந்தியா எதுவும் பேசவில்லை.
இலங்கையின் அறிக்கை தொடர்பான இந்தியாவின் கருத்துக்களை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில்தான், நன்றி.. பாராட்டு.. வாழ்த்து.. வரவேற்பு.. என்று தெரிவித்து இலங்கையை அசத்தியிருக்கிறது, இந்தியா!
இலங்கை அரசையே திகைக்க வைத்த இந்திய அறிக்கையை பார்க்க
இலங்கைக்கே தமது காதுகளை நம்ப முடியாமல் இருந்திருக்கும் இந்த அறிக்கையின் வாசகங்கள். அப்படி என்னதான் சொல்கிறது இந்திய அறிக்கை? அதோ, நீங்களே படித்துப் பாருங்கள்:
நன்றி: 2-வது சுற்று காலமுறை ஆய்வறிக்கை தாக்கல் செய்ததற்காக இலங்கைக்கு நன்றி.
பாராட்டு: யுத்தம் தொடர்பாக இலங்கை அரசே மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் (எல்எல்ஆர்சி) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை இலங்கை ஏற்றதை பாராட்டுகிறோம்.
சிறப்பு செயல்பாடு: அத்துடன் மறுவாழ்வு பணிகள், வடக்கு மாகாணத்தில் படைகளை குறைத்தல் போன்றவற்றையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர்பார்ப்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
வலியுறுத்தல்: தமிழர்கள் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வேகமாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
வரவேற்பு: வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற இலங்கையின் உறுதிமொழியை வரவேற்கிறோம்.
வாழ்த்து: மறுவாழ்வு பணிகள் தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
இதுதான் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கையின் ஹைலைட்டுகள்.
போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென எந்த கோரிக்கையும் அறிக்கையில் இடம்பெறவில்லை.
இலங்கை அரசுத் தரப்பில், “எமது மூத்த சகோதரன் இந்தியா எம்மை கைவிடாது” என்று கூறப்பட்டதன் அர்த்தம், இதுதான்!
இந்நிலையில், வரும் 20, 21-ம் தேதிகளில் அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றும், அதை இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இலங்கையை நிர்ப்பந்திக்கும், அல்லது இலங்கைக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் எதுவும் அந்த தீர்மானத்தில் இடம்பெற சான்ஸ் மிக குறைவு.
அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதை விடுங்கள்… போகிற போக்கில், இலங்கையேகூட “அண்ணே.. நீங்க ஆதரிச்சா, நானும் ஆதரிக்கிறேன்” என்று ஆதரித்துவிட்டு ஹாயாக அண்ணனுடன் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நன்றி: விறுவிறுப்பு டாட் காம்.
0 comments:
Post a Comment