சவூதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
>> Friday, March 29, 2013
பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட நிதாகத் என்ற சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்திருக்கிறது.
சவூதி அரேபியாவில் உள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளமானவற்றில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.
எண்ணெய் வளநாடான சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 90 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமாகும்.
எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களைப் பார்த்து சவூதியில் உள்ள வேலையில்லா இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சவூதி அரேபிய குடிமகன்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கின்றனர். சவூதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் ஆய்வில் நாட்டில் கடந்த ஆண்டில் 588,000 பேர் வேலையின்றி இருந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் 15 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களில் 39 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவது தான் தற்போது அரசின் முதல் வேலையாக இருக்கிறது.
அச்சட்டத்தின்படி, சவுதி அரேபியாவில் 10 பேருக்கும் அதிகமானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 10% பணியிடங்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
2011ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்னாள் புதன்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது.
சுமார் இரண்டரை லட்சம் நிறுவனங்களில் சவுதி அரேபியர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கப்படாததை கண்டறிந்த சவுதி அரேபிய அரசு, அந்த நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் பணி உரிமங்களை புதுப்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.
அவ்வாறு பணி உரிமங்கள் முடிவடைந்த அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என்று சவுதி அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அதிரடி ஆய்வுகள் சவுதியின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியுள்ளன.
சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், அவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான இந்தியர்களும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஊதியத்தை நம்பியே வாழ்கின்றன.
அரேபிய அரசின் அதிரடி நடவடிக்கையால் தமிழ் தொழிலாளர்கள் வேலை இழந்து திரும்பினால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் அவலம் ஏற்படும். வறட்சி காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பலர் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில், லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கிக்கொண்டு சவுதி வேலைக்குச் சென்றோரும் திரும்பினால் அதனால் ஏற்படும் தாக்கம் மிகக் கடுமையானதாக இருக்கும்.
சவுதி அரேபிய மக்களின் வேலைவாய்ப்புக்காக அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை குறை கூற முடியாது.
5 comments:
நிச்சயமாக குறை கூறமுடியாது.
இதுவரை அக்கறை எடுக்காமையே குறை கூறக்கூடியது.
(உங்களுடைய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடுகள் இல்லையாயினும் இந்த பதிவை முழுமையாக ஆதரிக்கின்றேன்)
எந்த நாடும் அந்நாட்டு குடிமக்கள் நலனைத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
த.ம: 1
சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!
29 Mar 2013
தம்மாம்:சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் பணியை அந்நாட்டின் தொழில் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.
பரிசோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொந்த ஸ்பான்ஷரின் கீழ் வேலைச் செய்யாமல் வேறு பணிகளை புரிபவர்கள் மற்றும் தங்கும் அனுமதி(இகாமா)யின் கால அவகாசம் தீர்ந்தவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
ஸ்பான்ஸர்களின் கீழ் வேலைச் செய்யாத ஃப்ரீ விசாவில் பணியாற்றுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை பார்ப்பவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோரை கைது செய்து நாடு கடத்த கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்-உள்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தலைநகரான ரியாதில் பத்ஹா, தம்மாமின் இதய பகுதியான ஸீக்கோ பில்டிங் பகுதி, ஜித்தா, அல்ஹஸ்ஸா ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் ரெய்டு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிபந்தனைகளை கடைப்பிடிக்காத சிறு கடைகள் பூட்டிக்கிடக்கின்றன.
ஃப்ரீ விசாக்காரர்களான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி கட்டிட வேலைகளை நடத்தி வந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன.
நாட்டின் தொழில்துறையை சட்டப்பூர்வமாக மாற்றவும், சுதேசிகளுக்கு முடிந்தவரை வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதியின் தொழில் அமைச்சர் எஞ்சீனியர் ஆதில் ஃபகீஹ் தெரிவித்துள்ளார்.
கல்வி தகுதியும், பணிச்செய்ய தயாராக உள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2011 நவம்பர் மாதம் முதல் சுதேசிமயமாக்கும் திட்டமான நிதாகத் சவூதியில் அமல்படுத்தப்பட்டது.
சவூதி அரசின் புதிய சட்டம் - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை!
திருவனந்தபுரம்: சவூதி அரசின் புதிய சட்டத்தை சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டி சவூதிக்கு வேண்டுகோள் விடுக்குமாறு பிரதமருக்கு கேரள முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
சவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தால் அங்கு வேலை செய்யும் 2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவிலிருந்தும் பலர் அங்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக கேரளாவிலிருந்து மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் சவூதியில் வேலை செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தின் முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "ஒரு நாட்டின் உள்நாட்டு கொள்கைகளில் நாம் தலையிட முடியாது.
இருந்த போதிலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிது காலம் ஒத்தி வைத்தால், வெளிநாட்டினருக்கு உதவியாக இருக்கும்.
இந்த கால நீட்டிப்பை வழங்க முறையீடு செய்ய வேண்டி அந்நாட்டுடன் மத்திய அரசுபேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" என்று உம்மன் சாண்டி கோரிக்கை வைத்துள்ளார்.
நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன...
எமது வலைப்பகுதி
தமிழ் வாழ் வலைப்பகுதி
திருக்குறள்
Post a Comment