ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! கட்டபொம்மனை போற்றியவர்கள் மறந்த மாவீரன் மருத நாயகம்.
தமிழக வரலாற்றில் மறந்த மாவீரன் மருத நாயகம். அவரது போராட்ட வரலாறு என்ன?
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை.
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!
ஊரும், பெயரும்
மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.
இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.
1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.
வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்
சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.
மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.
தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!
பிரெஞ்சுப் படையின் ஆயுதம்
பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.
ஆற்காடு நவாப்
ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.
அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.
சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.
இதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.
ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.
திறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன.
மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார்.
மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.
நிஜாம் – நவாப் ?
இன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.
யார் ஆற்காடு நவாப் ?
ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.
ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்
ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார்.
தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
வீரமும் – பரிசும்
மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!
அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம் தான் பின்னணியாக இருந்தது.
நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.
மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.
1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.
ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.
இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.
பொறாமை
இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட!
இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான்! இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.
சரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம்!
கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.
திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்!
இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!
இங்கிலாந்து பிரான்ஸ் வரலாற்றை மாற்றிய மருதநாயகம்
இந்தியாவுக்கு முதலில் படையெடுத்து வந்தது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் தான். அவர்கள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு வந்தார்கள். பின்னர் கோவாவை மட்டும் முழுமையாக ஆண்டார்கள்.
டேனிஷ்காரர்கள் இன்றைய நாகை மாவட்டம் தரங்கம்பாடியை மட்டும் ஆண்டார்கள். டச்சுக்காரர்கள் இன்றைய நாகப்பட்டினத்தையும், து£த்துக்குடியையும் கைப்பற்றினார்கள். நன்றாக ஆய்வு செய்தால் துறைமுக நகரங்களை மட்டுமே இவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.
வணிகம் தான் இவர்களது பிரதான ஆசையாக இருந்திருக்கிறது. ஆட்சி அல்ல எனலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டவரான ஆங்கிலேயர்க ளும், பிரான்ஸ் நாட்டவரான பிரெஞ்சுக்காரர்களும்தான் தொழில் மற்றும் வணிகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.
அதனாலேயே தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல போர்கள் நடந்தன. அல்லது சண்டையிடும் இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்கொருவர் எதிர் அணியில் நின்று ஆதரவளித்தனர். இறுதியில் ஆங்கிலேயரே வென்றாலும், அதற்குக் காரணம் மருதநாயகம்தான். மருதநாயகம் பிரெஞ்சுப் படையிலேயே நீடித்திருந்தால் ஆங்கிலேயர்கள் பல போர்களில் தோல்வியடைந்திருப்பார்கள்.
மருதநாயகம் பிரெஞ்சுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயர்களுடன் இணைந்ததால்தான், பல இடங்களில் மருதநாயகமே பிரெஞ்சுப் படைகளை தோல்வியடையச் செய்தார். அதனாலேயே பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலோடு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி சுருண்டது.
மருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் பெரும் பகுதி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். இந்தியாவின் ஒரு பெரும் பகுதியை ஆண்ட பெருமை அவர்களுக்கும் கிடைத்திருக்கும். தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இல்லாமல், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் போயிருக்கும்.
வரலாறு மாறியதற்குக் காரணம், மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்.
அன்றைய ஐரோப்பிய அரசியல்
மருதநாயகத்தின் வரலாறை பார்ப்பதற்கு முன்பு அன்றைய சர்வதேச அரசியலையும், அதன் இந்திய விளைவுகளையும் அறிந்து கொள்வது நல்லது.
ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த வெவ்வேறு நாட்டவர்களான ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களுக்கு மத்தியில் இந்தியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்று ஏகாதிபத்திய போட்டி நடைபெற்றது.
இன்று வெளிநாட்டு கம்பெனிகள் சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கல் போன்ற குறுக்கு வழிகளில் இந்திய பொருளாதாரத்தையும், மறைமுகமாக இந்திய அரசியலையும் தங்கள் விருப்பங்களுக்கு வளைப்பது போலத்தான் அன்றைய அரசியல் நிலையும் இருந்தது.
18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டு, நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் கரணமாக அனைத்துப் பொருள்களும் வேகமாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டு முன்னேறின.
அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்கு உலகம் முழுக்க ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியாவை உலக நாடுகள் மிகப் பெரிய வியாபார சந்தையாக பார்ப்பது போல் அன்றும் பார்த்தன. அதன் விளைவு வியாபாரக் கம்பெனிகள் என்ற போர்வையில், இந்தியாவில் தங்கள் கவனத்தை தீட்டின.
ஒளரங்கசீப் 1707ல் இறந்த பிறகு முகலாயப் பேரரசு பலம் குன்றியதும், குறிப்பாக தென்னிந்தியாவின் ஒன்றுபட்ட ஆட்சி இல்லாமல், குறுநில மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதும், ஒரே ஆட்சியில் கூட வாரிசுரிமை சண்டைகள் நடந்ததும், அவர்களுக்கு வசதியாய் போயிற்று.
சென்னையில் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆங்கிலேயரான இராபர்ட் கிளைவ் வணிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது கம்பெனிக்கு பாதுகாப்பாக இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படையையும் வைத்திருந்தார்.
இதே போல் ஐரோப்பாவில் அவர்களுக்கு சவாலாக இருந்த பிரெஞ்சு கம்பெனிகளும் தங்களுக்கென பிரெஞ்சுப்படையை வைத்திருந்தன. இதற்கு தாங்கள் ஒருவருக்கொருவர் கொண்ட பகை காரணமாக, எங்களுக்கு ஒரு படை தேவை என அன்றைய ஆட்சியாளரான ஆற்காடு நவாபிடம் கூறினர்.
காரணம், அப்போது இந்தியாவை ஆக்கிரமிப்பதில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் கடும் போட்டி நிலவியது. உலக அளவிலும் இவ்விரு நாடுகளுக்கிடையே மோதல் இருந்து வந்தது. ஆனால், அது இந்தியாவையே ஆக்கிரமிக்கப் போகிறது என்பது அப்போது ஆற்காடு நவாபுக்குத் தெரியவில்லை.
இப்படி நடந்திருந்தால்?
மருதநாயகம், ஹைதர் அலி, பூலித்தேவன் ஆகியோர் சமகாலத்தவர்கள். சமமான வீரர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் போரிடாமல் ஒன்றுபட்டிருந்தால் அன்றைய தமிழ் மண்ணில் ஆங்கிலேயர் சாம்ராஜ்யம் நிலைகுலைந்திருக்கும். ஹைதர் அலியும், பூலித்தேவனும் ஆரம்பம் முதலே ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள். ஆனால் மருதநாயகம் வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.
ராணுவ அறிவு இருந்த அளவுக்கு, அரசியல் அறிவிலும், தாயகத்தின் வரலாற்று அறிவிலும் மருதநாயகம் மற்ற இருவரையும் விட, தெளிவற்றவராக இருந்தது தான் அதற்குக் காரணம் எனலாம். எனினும் கடைசியில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து தன்னை விடுதலைப் போராட்ட வீரராக அடையாளப் படுத்தினார் மருதநாயகம்.
ஆரம்ப நாட்களிலேயே ஹைதர் அலி, மருதநாயகம், பூலித்தேவன் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாறு திசைமாறியிருக்கும்.
மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 71/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார். நான் போர்வீரன் மட்டுமல்ல…
மிகச்சிறந்த ஆட்சியாளன் என்பதையும் தனது செயல்பாடுகளால் பதிவு செய்தார். அவரது ஆட்சியில்தான் தென்தமிழகம் பொதுப்பணித் துறையில் சிறப்பாக உருவாகியது.
ஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை, ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள். தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்து, தன் மீது நம்பிக்கை வைத்த ஆங்கிலேயர்களை; தன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்!
காவிரி காவலன்!
மக்களை காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரி, மருதநாயகம் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார்.
ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருந்த போது, போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் துணிந்தது. இதன் மூலம் மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம். இதை உளவு மூலம் அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினார்.
பொதுப்பணித்துறை
நாட்டின் வளத்தை பெருக்குவதிலும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அன்றைய கால கட்டத்தில் மருதநாயகம் மிகச் சிறந்த முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்ந்தார். இன்று மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன அவரது புகழை கூறிக்கொண்டிருக்கின்றன.
முல்லைப் பெரியாறு
இன்று பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைக்குரிய பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான்.
தமிழகத்தில் உருவாகி,தமிழகத்தை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ள
மேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.
விவசாயம்தான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உணர்ந்த மருதநாயகம், அதற்காக எல்லா வகையிலும் பாடுபட்டார். விவசாயத்திற்கு அடுத்த தொழிலான நெசவுத் தொழிலையும் ஊக்குவித்தார்.
இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட இந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.
போக்குவரத்துத் துறை
நாட்டின் வணிகத்துக்கு துறை முகங்களும், நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்து தரமான சாலைகளை அமைத்தார். அன்று ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் கொடைக்கானலுக்கு முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார்.
தனது ஆட்சிப்பகுதியின் முக்கிய நகரங்களாக திகழ்ந்த திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்ததால் மக்களின் ஆதரவும், அன்பும் பெருகியது.
இதைப்பற்றி “A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA” என்ற நூலில் கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.
“மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை,
நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” இவ்வாறு மருதநாயகத்தின் ஆட்சியை அந்த ஆங்கிலேயர் புகழ்கிறார்.
மதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்களும் விளக்குகின்றன.
காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.
(யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது.
அதிலே, ஈ – எறும்பு
மொய்க்காமல் இருந்ததடா பணமும்
என்றும்,
கட்டேது காவலறியர்கள் & தேசம்
கறந்து பால் வெளிவைத்தால்
காகம் அனுகாது
என்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
(நன்றி : மதுரை நாயகன் மாவீரன் கான்சாஹிபு – நந்தர்ஷா)
அதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.
அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.
மனிதநேய கொள்கை
அவரது மனைவி மாசா போர்ச்சுகீசிய ஆணுக்கும், தலித் பெண்ணுக்கும் பிறந்தவள் என்றும் கூறப்படுகிறது.
ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் அவர் கெட்டிக்காரராக திகழ்ந்தார்.
மருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தனது வாழ்நாளை கழித்திருக்கிறார். தொழுகையை தவறாது கடைப் பிடித்திருக்கிறார். இதை “ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும் நாட்டுப்புற பாடல் வழியாக அறிய முடிகிறது.
அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார்.
முந்தைய ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டமதுரை அழகர் கோவிலின் நிலங்களை மீட்டு, கோயிலுக்கு திரும்பவும் ஒப்படைத்தார். மருதநாயகம் இந்து சமுதாய
மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்பட்டார்.
அம்மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சீர் செய்து கொடுத்ததால் மக்கள் இவரது ஆட்சியை போற்றினர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள செப்பேடுகளும் இதை
உறுதிப்படுத்துகின்றன.
தொடங்கியது மோதல்
இவ்வாறக, மதுரையில் கொடிகட்டிப் பறந்தது அவரது புகழ்! இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூக்கு சிவந்தது! உள்ளம் வெந்தது!
விளைவு, திருச்சி பகுதியில் இனி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்தார் ஆற்காடு நவாப்! இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை! பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே..
போனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.
அதிலும் திருப்தியடையாத ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்று அடுத்த குண்டை வீசினார். அவரது பொறாமை எந்தளவுக்கு இருந்தது என்றால், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறி பரபரப்பூட்டினார். இக்கால அரசியல்வாதிகளையே தூக்கி சாப்பிட்டார் நவாப்! ஆடிப் போய்விட்டார் மருதநாயகம்!
ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபா? மருதநாயகமா? யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? யாருக்கு பணிவது? என முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆங்கிலேயர்களுக்கு வந்தது.
திறமையற்றவராக இருந்தாலும் ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு நவாபுக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
அது தங்கள் நிம்மதிக்கு கேடாக வந்த முடிவு என்பது அப்போது தெரியவில்லை!
உத்தரவு பறந்தது! மிஸ்டர் மருதநாயகம்… இனி நீங்கள் வசூலித்த கப்பத்தை ஆற்காடு நாவாபிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றார்கள்! அதுவரை ஆங்கிலேயர்களிடம்
நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார்.
தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஓர் அடிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?
மதுரைப் போர்!
முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!
1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது!
போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.
தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி, தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.
சிவகங்கை சிக்கல்
ஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள்.
குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது.
சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்! அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.
அவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பா… வம்பு! பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர்! ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.
கோபம் கொண்ட மருதநாயகம் திருபுவனத்தையும், பார்த்திபனூரையும் தாக்கினார். சிவகங்கை அரண்மனைக்கு தீவைத்தார். நிலைமை முற்றுவதை அறிந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகையர் குலை நடுங்கி போனார். தன் தளபதியின் தேவையற்ற வம்பால் தன் ஆட்சிக்கே ஆபத்து வந்து விட்டதே என நடுங்கினார்.
முத்துவடுகையர் ஆற்காடு நவாபிடம் உதவி கோரினார். ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.
ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.
பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தந்திரம்! வஞ்சகம்!
ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க” என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!
இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது.
தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.
1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
தொடங்கியது ‘மதுரை போர்’!
மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர்.
மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!
நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.
அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.
போரில் உறுதி
கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.
ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில், தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.
இறுதி யுத்தம்
ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர். 31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.
ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.
ஹைதர் அலியின் உதவி
முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந்தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.
“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)
பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு 19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.
சீறினார்… மோதினார்!
உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!
அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.
தந்திரம்
போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர்.
இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.
மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாயகத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.
சூழ்ச்சி வென்றது…
மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!
அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்தபோது துரோகிகள் நுழைந்திருக்கிறார்கள்.
தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.
அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார்.
எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை
! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.
விசாரணை
சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.
மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார்.
ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.
தூக்கு
15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!
அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை.
அந்த காட்சிகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்போது, 2007ல் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட காட்சிகள் நம் மனதில் நிழலாடுகின்றன.
மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.
தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந்தது! எனவே, எடை தாங்கவில்லை!
புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.
இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது!
அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது.
அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.
தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.
ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!
அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…!
தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?
மதுரை விமான நிலையத்திற்கு மருதநாயகம் பெயர்!
மருதநாயகத்தின் வீரம் இந்திய வரலாற்றில் போற்றத்தக்கது மட்டு மின்றி நிகரற்றதுமாகும். இந்தியாவில் வேறு யாரையும் கண்டு இந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் நடுங்கியதில்லை. திப்பு சுல்தானை மட்டுமே இவரோடு ஒப்பிட முடியும்.
இவரது வீர மரணத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதுமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர் களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை நிறுத்திக் கொண்டு, எஞ்சிய பகுதிகளை மட்டுமே, ஆள முடிவு செய்தனர். மருதநாயகத்தின் படை வீரர்களில் பெரும்பாலோர் சரணடைய மறுத்து மைசூர் சென்று ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டனர். 16 ஆண்டுகள் கழித்து அவரது மகன் சுல்தான் திண்டுக்கல்லில் இருந்தவாறு, படை திரட்டி போராட முயன்றதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. (நன்றி : இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் செ.திவான்)
ஹிஜ்ரி 1222, (கிபி 1808) ல் கான்சாஹிப் பெயரில் சம்மட்டிபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழிலும், பார்ஸி மொழியிலும் அங்குள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
அந்த மாவீரனை போற்றும் வகையில் தமிழக அரசு காவல்துறைக்கு வழங்கும் விருதுகளில் ஒன்றுக்கு மருதநாயகத்தின் பெயரை சூட்ட வேண்டும். மதுரையில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி அந்த வீரத்தமிழனை கண்ணியப்படுத்த வேண்டும்! முயற்சிப்பார்களா?
கட்டுரை ஆக்கம் : எம். தமீமுன் அன்சாரி
SOURCE: http://www.samuthayaotrumai.com/?p=439
**************
கீழ் கண்ட சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்.
முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART 1.
இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். PART 2
3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? PART 3. -
மேலும் படிக்க... Read more...