**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? PART 3.

>> Wednesday, March 6, 2013

இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. - பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)

ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள்.

ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர்.

இன்றைய ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது.

அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந்தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே!

அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

சிப்பாய்கள் பெற்ற உத்வேகம்


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும். இதனை சிப்பாய் புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்..!

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்ற அதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு.... பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான். நெப்போலியனையே கடற்ப்போரில் தோற்கடித்த ஆங்கிலப் படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர்.

50 கோடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது.

ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்தது. ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெறி ஆகும்.

1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். அத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி - பசுக் கொழுப்பு வாயில் பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி - பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர்.

கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.*

இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்ககள். ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும்சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.**

(* வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85) (** மேற்படி., பக்கம்.63) மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர எழுச்சியை ஊட்டினர். இதனை வீரசாவர்க்கர், 1857-இல்…தேசயாத்திரை செய்வதாக கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகசியமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான உரைகள் வெகு சுதந்திரமாக் கைக்கொள்ளப்பட்டன.

அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவிரப்பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்*. -என்று வியந்து தன் நூலில் வடித்துள்ளார்.

பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர். (* மேற்படி, பக்கம். 63-64) அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

அவமானப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.

அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! - என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.*

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.**

நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

(* ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10) (** B.L.Grover, S.Grover, A New Look at Modern Indian History, P665)

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது

. அதில் கைதான - கொல்லப்பட்ட -தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர்.

முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை.

முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.- திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.

இஸ்லாமியர் நடத்திய அரசுகள் - அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர்

இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுதான் காரணமாகும்.

அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக - கூலிகளாக - ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம்

இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது

ஏனென்றால் இன்றும் இஸ்லாமியரின் வளர்ச்சியை இம்மண்ணில் தடுக்க, அவர்களைப் பொருளாதரத்தில் வீழ்த்துவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்களது நோக்கம் கோவை போன்ற இடங்களில் நிறைவேறி வந்துள்ளதையும் காணலாம்.

முகம்மது அலி மற்றும் சௌகத் அலி சகோதரர்கள்


கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர்.

என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்!

அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வீரத்தோடு களமாடினார்கள்.

இந்த வீரத்தாய் பீபியம்மாள் தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்).

பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.

இளையான்குடியில் வீரத்தாய் பீபியம்மாள்.
சந்தை பிடிக்க வந்த வெள்ளையன், நம் முன்னோர்களை மந்தை ஆடுகளாக்கி, பாரதத்தை அடிமைபடுத்தி அவன் அரசாண்ட நேரமது.

குட்டினான் வெள்ளையன் குனிந்தோம் நிமிரவில்லை என அன்றைய அடிமை நிலைபற்றி நமதூத் கவிஞர் எழுச்சியுடன் பாடிய காலமது.

இந்த நிலையில் நாடெங்கும் சுதந்திரக் கணல் ஜுவாலை விட்டுக் கொண்டிருந்த நேரம். மக்கள் வெள்ளையனுக்குப் பயந்து தெரிந்தும் தெரியாமலும் இந்திய விடுதலை பற்றி சிந்தித்த காலகட்டமது. ஏன் போராட்டங்களும் தமிழகத்தில் சில பகுதிகளில் ஆங்காங்கே நடந்த காலம் அது. நல்ல காரியம் எதுவென்றாலும் முன்நிற்கும், இளையான்குடி இளைத்ததா…. என்ன…? இந்த மண் சிவந்தது. இந்திய விடுதலைக்காகச் சினந்தது என்றே கூறலாம்.

சுமார் 300 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட அன்னியரை எதிர்த்து அவன் நாட்டுத் துணிகளை அணியக் கூடாது. அணியவே கூடாது என்ற வைராக்கியம் எங்கும் எதிரொலித்தது. அலி சகோதரர்கள் என்று அவனியே பாராட்டிய இந்தியச் சிங்கங்கள், இஸ்லாமிய தங்கங்கள் மௌலானா முகம்மதலி ஜௌஹர், மௌலானா ஷவ்கத் அலி ஆகியோர் மூட்டிய இந்திய விடுதலைக் கனற்பொறிகள் தெறித்து விழுந்தன.

இளையான்குடி கடைத்தெரு, அன்று கலகலப்பாய் இருந்தது. களைகட்டியிருந்தது. அன்றென்ன விசேஷம்? ஊர் மக்கள் எல்லாம் கடைத்தெருவில் திரண்டிருந்தார்கள். என்ன தேர்த் திருவிழாவா? இல்லை பின் எதற்கு?

நம்மை அடிமை கொண்ட அன்னியரின் துணிகளை நாம் அணியக் கூடாது என்ற இலட்சியம் செயலாக உருவெடுத்தது.

பனிமலை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். துணிமலையை என்று தான் மக்கள் பார்த்தனர். அதோ எரியத் தொடங்குகிறது. எரிகிறது, எரிகிறது. சுதந்திரக் கனலாய் எரிகிறது. அன்னியர் மீதான கோபத் தீயாய் துணிகள் எரிகின்றன. உரிமைச் சுடர் முன், அடிமைப்புகை நிற்குமா… என்ன? துணி எல்லாம் எரிந்து சாம்பலானது.

அதற்குப்பின் கடைத் தெருவெல்லாம் வெள்ளைக் கதராடை அணிந்திருந்த மக்களின் கண்கொள்ளாக் காட்சி.

வீடுகள் தோறும் கைஇராட்டினம். அது சுழன்ற சத்தத்திலே வறுமை எழுந்தோடித்தான் போனது. தங்கள் கையாலே நூற்ற நூல்களை, பரமக்குடி நெசவாளர்களிடம் கொடுத்து விட்டு அதற்குரிய தொகைக்குக் சுகாதாரடைகளை வாங்கிக் கொண்டு வருவோர் மறுபுறம் : தாம் அணிந்த ஆடைகள் பேக மிகுதியாக உள்ள எஞ்சிய கதர் துணிகளைப் பர்மாவில் வாழும் இளையான்குடி மக்களிடம் விற்பதற்காக அதனை அனுப்பும் அழகிய காட்சிகள் மற்றொருபுறம்.

அன்று கதர்த் தொப்பிகள், குல்லாய் அணிந்த மக்களின் தோற்றம் கம்பீரமாய் தெரிந்தது.

தெருவெல்லாம் தேசிய வெள்ளம் தாய்நாட்டுப்பற்று தழைத்து பூத்திருந்தது. இதயத்தில் உதயமாய் இன்னும் தெரியும் இன்னொரு இனிய சம்பவம்:

இளையான்குடியில் இன்றுள்ள அலங்காரத் தோப்பு மைதானத்திற்கு அருகே தென்புறத்தில் பேரூராட்சியின் குடிநீரேறறு தொட்டி உள்ளது. முன்பு அந்த இடத்தில் காவலர் குடியிருப்பு இருந்தது. அதற்கு முன்பு அந்த இடத்தில் பங்களா ஒன்று இருந்தது. அந்த பங்களா இளையான்குடி நகர கூட்டுரவு வங்கியின் நிறுவனராகிய ஏ.எஸ்.டி. இபுராகிம் ஷா அவர்களுடைய பங்களாவாகும். அதற்கு சுவனப் பூங்கா எனப் பொருள் தரும் ஜென்னத் பங்களா என்று பெயர்.

அன்று அந்த பங்களா வளாகம்…. அல்லாகு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்தால் ததும்பிப் போயிருந்தது.

ஒரு வீர நிகழ்ச்சி….. ஏதோ… நடக்கவிருக்கும் தடயங்கள். பிள்ளைகளின் வரவால் தாய் மகிழ்வாள். ஆனால் ஒரு தாயை வரவேற்கப் பிள்ளைகளெல்லாம் மொய்த்திருந்தனர்.

அவர் வெறும் தாயா? இல்லை வீரத்தாய்.

தன் பிள்ளைகளை தீனுக்காய் தேசத்துக்காய் பாடுபடும் மாணிக்கங்களாக திகழவை என்று மக்காநகர் புனித ஹரம் சரீபாம் கஅபாவிலே கரம் ஏந்தி துஆ கேட்ட தூய தாய். அவர் இந்தியச் சிங்கங்கள் மௌலானா முகம்மது அலி ஜவ்ஹர், சௌகத் அலி ஆகியோரை பெற்றெடுத்த தாயார் பீவியம்மாள்தான் அவர்கள்.

இந்தியாவுக்கு பூரண சுதந்திரம் கொடு: இல்லையேல் அடிமை பூமியில் ஒரு சவக்குழி கொடு என்று 19&11&1930 இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் நமக்காகக் குரல் உயர்த்திய அரிமா மௌலானா முகம்மது அலி அவர்கள். இத்தகைய வீரப் புதல்வரை பெற்றெடுத்த வீரத்தாய் பீவியம்மாளை வரவேற்க ஜன்னத் பங்களா புன்னகை பூத்திருந்தது.

அன்று இளையான்குடியில் கடலை வரவேற்க நதிகள் திரண்டு இருந்தன. ஆம் தாயை வரவேற்கத் தாயகமே திரண்டிருந்தது.

அது 1922 ஆம் ஆண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டிகள் தயார் நிலையில் இருந்தன. ஆர்வத்தின் காரணமாக அதன்பின் அறிகுறியாக வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு, தாங்களே வடம் பிடித்து அந்த அம்மையாரை அங்கிருந்து அழைத்து வந்தனர்.

இன்று கடைத்தெருவாய் இருக்கும் மீன் பஜார் முதல் காதர் பிச்சை தெரு தொடக்கம் வரை உள்ள பகுதி அப்போது பொட்டல் தரையாய் இருந்தது.

அன்னையின் வருகைக்காக அப்போது அந்த இடம் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது. அன்னை வந்தார். வீர உரை தந்தார். தீனும் தேசிய உணர்வும் கொப்பளித்தது. மக்களுக்கு எல்லாம் நிரம்ப மகிழ்ச்சி. உற்சாக வெள்ளத்தில் ஊர் நனைந்தது.

தீடீரென்று ஒரு திருப்பம் அங்கே கூடியிருந்த மக்கள் தம் கைகளிலும் சட்டைப் பைகளிலும் இருந்த நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளையும், பொன்னாபாரணங்களையும் கழற்றி விழா மேடையில் குவித்தார்கள்.

எதற்காக?

அவையெல்லாம் கிலாபத் இயக்கத்திற்காக குவிந்தது. கிலாபத் என்றால் இந்திய விடுதலை போராட்டம்.

ஆம், நாட்டுக்காக நாட்டு விடுதலைக்காக இளையான்குடியும் தன்னால் ஆன பங்கை அளித்திருக்கிறது. இது சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

மௌலானா முகம்மது அலி.


1930 – இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது.

தேச நலனுக்காக தேக நலனையும் பொருட்படுத்தாமல் பேசுகிறார். கால அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேரம் ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு அவரது உரையைக் கேட்டது.

மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள் :

என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !

லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை.

எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம் என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன.

இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க, மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் ‘அல்-அக்ஸா’ பள்ளிவாசல் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மௌலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது, புனித கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணீர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :

இறைவா… என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா ! சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா !

மௌலானா முகம்மது அலியின் பிரார்த்தனையான ‘சுதந்திர இந்தியா’ மலர்ந்து விட்டது.

ஆனால் தேசத்தின் விடியலுக்காய் பல்வேறு துறை சார்ந்த அர்ப்பணிப்புகளை – தியாகங்களைச் செய்த இஸ்லாமிய சமுதாயத்தை இன்று அந்நியப்படுத்தும் போக்குகள் இம்மண்ணில் வேர்பரப்பும் வேதனை வளர்ந்து வருகிறது.

எனவே மௌலானா கேட்ட ”சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்ததிற்கு வாழ்வைத் தா” ! என்ற பிரார்த்தனை… மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

" மகாத்மா காந்திக்கு உலகம் அடக்கம், அந்த மகாத்மா இந்த மௌலானா முஹம்மது அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்." --பெரியார்.

"நான் இந்த ( மௌலானா முஹம்மது அலி ) வீரத்தலைவரை வெகுவாக மதிக்கிறேன். இந்தியாவின் விடுதலைக்காக அவர் செய்துள்ள தியாகங்களும் ஆற்றிய அரும்பெறும் தொண்டுகளும் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் தங்க மை கொண்டு எல்லாவற்றையும் விட மிக முக்கியமான இடத்தில் எழுதப்படும் " -நேருஜி.

REF: பனைக்குளம் தவ்ஹீத் ஜமாத்,veppamadu.site88.net,http://seyedibrahim.wordpress.com , tamilislamicaudio.com, முஹம்மத் ஆஷிக்>

தொகுப்பு: வாஞ்ஜூர்.

தொடரும் .....

>>>>> PART 1. முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். - <<<<<
>>>> PART 2. இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். PART 2 <<<<<<

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP