**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் கொலையாளி.

>> Monday, December 22, 2008

ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார்.

25.12.08 கவர் ஸ்டோரி

பெங்களூரு ரங்கநாத்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியா காந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.`ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?'

என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப் பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார்.

ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார்.

அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.

டெல்லியில் நடந்த இந்த `ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள `ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், `எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.ஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீவ் கொலையாளிகளை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்டோம்' எனக் குரல் கொடுக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், `சோனியாவிடம் பெங்களூரு ரங்கநாத் பேசியது என்ன? சோனியா கேட்ட கேள்விகள் என்ன? அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது?' என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார்? என அறிய முடியவில்லை.

ஒருகட்டத்தில் நாம் ரங்கநாத்தை தொலைபேசியில் பிடிக்க, நம்மிடம் பேசிய அவர், "நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நிம்மதியாக இருக்கிறேன். இருந்தாலும் சோனியாவின் சந்திப்பில் பேசப்பட்ட பல உண்மைகளை இதுவரை எந்த மீடியாவுக்கும் நான் தெரிவிக்கவில்லை. உங்களது தேடுதல் முயற்சிக்காக நான் பேச விரும்புகிறேன். வாருங்கள்'' என கிரீன் சிக்னல் கொடுக்க, அவரை நாம் நேரில் சந்தித்துப் பேசினோம்.

இனி ரங்கநாத் பேசுகிறார்...

"அப்போது நான் பெங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்தேன். கார்த்திக் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனியை நடத்தி வந்தேன். எனக்கு சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.

புலிகள் இயக்கம் அப்போது தடை செய்யப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை நடந்தபிறகு, ஜூலை மாதம் 30-ம் தேதி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி வேண்டும். எனது நண்பர்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும்' என்றார். நானும் தொழில் சரியில்லாமல் சிரமத்தில் இருந்ததால் சம்மதித்தேன். பிறகு, ஆகஸ்ட் முதல் தேதி ராஜனிடம் இருந்து போன் வந்தது.

நான் அவரைச் சந்தித்தபோது, சஞ்சய்வாணி பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு, `சி.பி.ஐ. போலீஸார் ராஜீவ் கொலையாளிகளைத் தேடி பெங்களூரு வந்தபோது, குலத்தான், அரசன் என்ற இரண்டு புலிகள் குப்பி(சயனைடு) சாப்பிட்டு இறந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்ததை' என்னிடம் காட்டினார். பிறகு `எனக்குப் பிரச்னையாக இருக்கிறது. உடனே வீடு வேண்டும்' எனக் கேட்டார். நானும் ஏற்பாடு செய்கிறேன் என்றபடியே வீட்டுக்குப் போய்விட்டேன்.பிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்திற்கு வருமாறு ராஜன் அழைத்தார். அங்கேயும் `நண்பர்களுக்கு வீடு வேண்டும். ஏற்பாடு செய்து விட்டாயா?' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பச்சை நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி(இவர் பெயர் கீர்த்தி என பின்னர்தான் தெரியவந்ததாம்), இன்னொரு டிரைவர் ஆகியோர் ராஜனிடம் வாக்குவாதம் செய்தனர்.அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று போக, உடனே என்னிடம் திரும்பிய சுரேஷ் மாஸ்டர் துப்பாக்கியைக் காட்டி, `நாங்கள் வருவதை போலீஸில் சொன்னாயா?' என மிரட்டியவாறு, ராஜனைப் போகச் சொன்னார். என் கண்ணில் துணியைக் கட்டினார்.

வண்டி கிளம்பும்போது சுரேஷ் என்னிடம், `தமிழ்நாட்டில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் போராடி வருகிறோம். கோடியக்கரை சண்முகத்தை விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. போலீஸார் தூக்கில் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் தற்கொலை செய்ததாகக் கதைகட்டி விட்டார்கள். நாங்கள் அங்கு இருந்தாலும் இதுதான் நடக்கும் என்பதால் இங்கு வந்திருக்கிறோம். தாற்காலிகமாகத்தான் உங்கள் வீடு தேவை' என்றார்.பிறகு எனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்த்தபோது, `இவர்களுக்கு எப்படி என் வீடு தெரியும்?' என ஆச்சரியப்பட்டேன். அவர்களும் கிளம்பிவிட்டார்கள். நான் இந்தச் சம்பவம் பற்றி என் மனைவி மிருதுளாவிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அதிர்ந்தே போனேன். அங்கு சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி, ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் ஆறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுபா கையில் பிஸ்டல் இருந்தது. என் மனைவி அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.சுபா என் மனைவியிடம், `போகும் வழியில் போலீஸ் ஜீப் சென்றதால் இங்கு வந்தோம். இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர்களை குறிவைத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகளைக் கற்பழிக்கின்றனர்...' என ஏதேதோ பேசினார். அன்றிலிருந்து 21 நாட்கள் அவர்கள் என் வீட்டில்தான் தங்கினர். சுபாவுக்கு சமையல் நன்றாகத் தெரியும். இலங்கைப் புட்டு, கொழும்பு சமையல் என விதம்விதமாகச் செய்வார். அப்போதெல்லாம் சுபாவும், சிவராசனும், `செத்தாலும் இலங்கையில்தான் சாகணும்' என்பார்கள். நானோ, `நீங்கள் இருப்பது தெரிந்தால் எங்களுக்கும் பிரச்னை வரும். சீக்கிரம் போய்விடுங்கள்' என்போம்.அப்போது இலங்கை சிங்களச் சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். `போலீஸ் பிடித்துவிட்டது' என பயந்துபோன அவர்களில் ஒன்பது பேர் குப்பியைக் கடித்து சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். மற்றவர்கள் பிடிபட்டபோது, `சிவராசன், சுபா ஆகியோர் ரங்கநாத் வீட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்' என்ற தகவலையும் சொல்லிவிட்டார்கள். போலீஸ் தேடி வரும் தகவல் தெரிந்ததும், உடனே வீட்டில் இருந்த பொருட்களை கோணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றினோம். இதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு.என் மனைவியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது சிவராசன் தலைக்கு பத்து லட்சமும், சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் தேதி எனது வீட்டை சி.பி.ஐ. போலீஸ், என்.எஸ்.ஜி. கமாண்டோ (தேசிய பாதுகாப்புப் படை), எஸ்.டி.எஃப். (அதிரடிப்படை) படை வளைத்திருந்தது. கமிஷனர் ராமலிங்கம், துணைகமிஷனர் கெம்பையா ஆகியோர் என் வீட்டின் எதிரில் முகாமிட்டிருந்தனர்.

நானும் இயல்பாக அங்கு செல்ல, `இவர்தான் ரங்கநாத்' என கூட்டத்தில் யாரோ சத்தம் போட்டுச் சொல்ல, அதிர்ந்துபோய் ஓட ஆரம்பித்தேன். அதற்குள் போலீஸார் என்னை வளைத்துப் பிடித்து, ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். ராஜீவ் படுகொலையை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) அதிகாரியும், சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திகேயன் அங்கு வந்தார். பல கேள்விகளை என்னிடம் கேட்டார். பிறகு சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.எனது வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி கால்வாயில் பெரும் சப்தத்துடன் மோத, போலீஸார் துப்பாக்கியால் எனது வீட்டை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங், ஜெய்சிங் உள்பட மூன்று போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார்.

சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர், ஜெமீலா(இந்தப் பெண் அங்கே எப்படி வந்தார் என்று தெரியவில்லை) எல்லாரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். பிறகு என்னைப் பத்துநாட்கள் சட்டவிரோத காவலில்சி.பி.ஐ. வைத்திருந்தது. எனக்கும், புலிகள் அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர்.

வழக்கு விசாரணைக்காக சென்னைக்கு என்னை ஹெலிகாப்டரில் கூட்டி வந்தனர். இந்தச் சம்பவத்தில் 56 பேரை போலீஸார் ரிமாண்ட் செய்தனர். செங்கல்பட்டு சிறையில் நான் இருந்தபோதுதான் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்பட பலரைச் சந்திக்க முடிந்தது...'' என்றவர், தொடர்ந்து..."சிவராசன் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும்போது நடந்த `ரகசியங்கள்' இதுவரை பரவலாக வெளியில் தெரியாது. அப்போது எஸ்.டி.டி. போன் பூத்துகள் பெரிய அளவில் இல்லை. சிவராசன், சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார்கள். நான் நான்கு முறை அவர்களோடு போயிருக்கிறேன்.

ஒருமுறை பேசி முடித்ததும், `சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்) போன் செய்தோம்.

நாங்கள்சந்திராசாமியுடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவார். இந்தக் கொலைக்கு(ராஜீவ்காந்தி) முக்கியக் காரணமே சந்திராசாமிதான். நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என என்னிடம் சுரேஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே தொடர்ந்து, `முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தேன். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன்.

எல்லாருக்கும் பொது எதிரியான ராஜீவைக் கொல்வதற்கு எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து போனேன்.அப்போது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்

ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் வேடிக்கையாக.

நான் இந்த விஷயங்களையெல்லாம் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோது, அவர் அதிர்ச்சியாக என்னிடம், `சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்? இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்தைக் காட்டுகிறார்).இதில் சி.பி.ஐ. போலீஸார் என்னை பலிகடாவாக்குவது தெரிந்தது. இதேபோல் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, நளினி உள்பட பலர் சிக்கியிருப்பதை அறிந்தேன். இவர்களெல்லாம் எந்த வகையிலும் இந்தச் சம்பவத்தில் தொடர்பில் இல்லாதவர்கள். கொலையில் ஈடுபட்டவர்களை நேரில் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம்.

ஆனால், கொலை செய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. அதேபோல், தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடுவதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட் பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வெடிகுண்டைத் தயாரித்தது அமெரிக்காவா, இலங்கையா என இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன், `பெல்ட் பாம் தயாரித்தது யார் என்றே தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். இப்படி முரண்பாடான இந்த வழக்கில் பேரறிவாளன் இன்று வரையில் தூக்குத் தண்டனைக் கைதியாகவே சிறையில் இருக்கிறார்.இந்த வழக்கில் ஏ-26 ஆக நான் சேர்க்கப்பட்டேன். 98-ம் ஆண்டு மார்ச்சில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. நான் உள்பட ஐந்து பேர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். 99-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் எனக்கு விடுதலை கிடைத்தது. ஏழு பேர் தண்டனை உறுதி செய்யப்பட்டது!'' என்றவரிடம்,`சரி.. விஷயத்துக்கு வருவோம். சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ன பேசினீர்கள்? உங்களிடம் சோனியா என்ன கேள்விகளைக் கேட்டார்?' என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்."மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவரையிலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறியதில்லை. முதல்முறையாக உங்களிடம் கூறுகிறேன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது.

அதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.டெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன.

காலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி, `இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.முதல் கேள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்ததா?' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்' என்றேன்.இரண்டாவதாக, `உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?' எனக் கேட்க, நானும், `அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.மூன்றாவதாக, `இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?' என்றார். `அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்' என்றேன்.


நான்காவதாக, `தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா?' என்றார். `எனக்குத் தெரியாது. நான் கவனித்த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை' என்றேன்.ஐந்தாவது கேள்வியாக, `பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்?' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா?' என்றார். `நான் பேசியது வரை உங்கள் மீது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை' என்றேன்.இறுதியாக, `சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்?' எனக் கேட்டார். நானும், `இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

சந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்' என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், `இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்' என என்னை அனுப்பி வைத்தார்.பிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூருவில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய்துவிட்டார்கள்.

இந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இதுவரை மவுனம் காத்து வந்தேன். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பா.ஜ.க. அரசு எனக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இப்போது நிம்மதியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இதுவரை யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால்தான் பேசினேன். என் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல் உணர்கிறேன்'' என்றார் எங்கோ வெறித்தபடியே.

படம் : ம.செந்தில்நாதன்

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

*********************

READ THE TWO ARTICLES BELOW

பதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது? காங்கிரஸ்- திக்விஜய்சிங் கேள்வி

உங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.

1 comments:

Unknown December 22, 2008 at 10:36 PM  

எல்லா மேலிடங்களிலும் காவிகளை வைத்து நிறைத்திருக்கிறார்கள். அதனால்தான் உண்மையின் கண்களுக்கு காவித்திரை விழுகிறது. அவ்வப்போது அவர்களையும் மீறி வெளியுலகுக்கு வரும் ஒன்றிரண்டோடு சரி. அதையும் பின்னால் அமுக்கி விடுவாரகள்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP