**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மதம் மாற்றப்பட்ட மசூதி! அயோத்தி ராமன் அழுகிறான்.

>> Thursday, December 5, 2013

இந்தியாவில் நீதி அயோக்கியர்களின் அநீதிக்கு கட்டுப்பட்டது. அந்த அயோக்கியர்களின் கைகளினால் தான் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
டிசம்பர் 6 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.

இந்திய மக்களின் ஒற்றுமையை சகோதரத்துவத்தை முஸ்லீம் மக்களின் நம்பிகக்கையை தகர்த்தெறிந்த நாள்.

பௌத்தத்தையும் சமணத்துவத்தையும் தனக்கு பிடிக்காத அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிழத்த கும்பல்தான் பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.

இந்த காலித்தனத்தை கொலை பாதகத்தை பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம் என்று சொல்லி விடுகிறது.

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


மதம் மாற்றப்பட்ட மசூதி!

அயோத்திய மண்ணில் அசுரக் கொடி

திசம்பர் ஆறில் ஏற்றிய நெறி

இந்திய இறையாண்மையை முறித்து

பூணூல் பொசுக்கிய புனிதத்தல ஒழிப்பு!

இத்தேசத்தின் இறையாண்மை இதயத்திலிருந்து
காவிக் கரங்களால் சிகப்பு நீர் சிதறியதே
மனித இறையொன்று தோற்றுவிக்கப்பட்டதனால்!

வேற்றுமையில் ஒற்றுமையே
வேதமெனப் பாடும் நாட்டிலே
மதம் மாற்றப்பட்டதே மசூதியொன்று!

உடல் உறுப்பில் சிறு சதை சிதைந்து
ஊனமுற்றுத் துடிக்கின்றது எந்நாடு
அதை வெற்றியெனக் கொண்டாடுகிறது
நாடற்ற நாடோடிக் கூட்டமொன்று!

வருடம் பிறந்தாலன்றி விழி நோக்குவதில்லை
விசும்பி அழும் மசூதியின் உறவுகள்!

வீதியில் நின்று இழப்பு ஓலமிடுவதினால்
விடியல் கிடைத்திடுமோ குருடர்களே?

விதியென்று தலையிலடித்துக் கொண்டாய்
நீதி மரித்திடாதென அம்மன்றம் ஏறியும் நின்றாய்!

கைகளில் கடப்பாரை தாங்கிய கயவர்களின்
மாறுவேடமே சுத்தியல் தாங்கியவரென்று உணர்ந்தாய்!

ஆட்சித் தலைமை முதல், தாசன் வரை
தன் சீடர்கள் பரப்பி – உன் குரலை
குருதிகளற்றதாய் நசுக்குமவன் திறனை
இசுலாமியனே நீ இன்றும் அறிந்தபாடில்லை!

கயமத்தால் கருவறுக்கப்பட்ட மசூதியின் இறப்பு
கருப்பு நாளென்று ஒரு சாயலில் கொள்ளும் வேளையிலே
அது காவிகளின் நாள் என்பதனையும்
மறந்திடாதே! மனிதமுள்ள மனிதச் சமூகமே!

கருப்பு நாளை வெண்மையாய் படரச் செய்து
காவிகளுக்கு அந்நாளை கசப்பாக்கிட
கட்டி எழுப்புவோம் மசூதியினையும்
மிதிப்புகளைத் தடுத்து குடிசைகளையும்!

ஓ காவிவாதிகளே! நீங்கள் கொண்டிருக்கும்
திரிசூலம் உங்களையே ஓர் நாள் அழிக்கும்
அதன் மும்முனைகளும் முச்சமூக
இணைப்பாய் மாறி வெகுவிரைவினிலே!

மூச்சியிழந்து துடிக்கும் அயோத்தி நிலத்தில்
பாபர் மீண்டும் பிறப்பான்
< இராமரே அதனை ஏற்பான்!

இந்தியம் அன்று ஒலிக்கும் அங்கு
உன் ஹிந்தியம் மரித்து மசூதி பிறந்ததென்று!


- கீரனூர் ஷஹான் நூர்

நன்றி :www.inneram.com

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு ஓடுகிறது..

சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..)


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???

11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார்:

“அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லாஹ் உன்னிடம் ஓப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.

ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமையாக அமைத்துக் கொள்:

நீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.

நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி நிலைபெறும்”

ராமர் கோவில் என்ற பொய்யும், பார்ப்பன இயக்கங்களின் அரசியல் லாபமும் ...

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர் .பாபரை எதிர்த்தவர். . பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார்.

பாபர் மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர்.

புரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இராமாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி!” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமாயணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள்.

துளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப்ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.

அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர்மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது.

இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார்.

இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசியிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக்பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754-ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்...

பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனிவர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர்களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர்கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக ஏன் அறிந்திருக்கவில்லை?

இவர்கள் யாரும் பாப்ரி மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் ராமர் கோவில் என்ற ஒன்றை இடித்துத்தான் கட்டபப்ட்டது என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை..

ஆனால் வெள்ளைகாரர்கள் ஆண்ட போது சுதந்திர போராட்ட காலத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு போராடுவதை சிதைக்க வட இந்திய மாநிலங்களில் 1853 ஆம் ஆண்டு அதாவது பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்ட 300 ஆண்டுகளுக்கு பின்னர் பிரிவினைக்காக அரசியல் ஆக்கப்பட்டது.

ஃபைசாபாத்தில் சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆதரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரிமையுடன் வழங்கப்பட்டது.

இராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது..எல்லாம் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்சிகள் தான்..

ஆனால் வெள்ளையர்கள் நாட்டை விட்டுப் போனாலும் கூட நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பார்பன கூட்டம் மீண்டும் தங்களது பிரித்தாளும் சூழ்சியை அரங்கேற்ற ஆரம்பிக்கப்பட்டது தான் பாப்ரி மஸ்ஜித் நிலம் பார்பன இயக்கங்களின் பிராமண கடவுள் ராமர் பிறந்த இடம் என்ற பொய்யான வதந்திகள்.

காரணம் இதன் மூலம் மக்கள் இதை பற்றி மட்டும் சிந்திக்கும் போது இவர்கள் ஏகபோகமாக ஆட்சி மற்றும் அதிகாரங்களை அனுபவிக்கலாமல்லவா.அது தானே நம் நாட்டில் நடந்து வருகிறது

.பின்னர் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இதை வைத்தே கலவரங்களை நாடு முழுவதும் பார்பான் இயக்கங்கள் அரங்கேற்றி ஆயிரக்கணகான அப்பாவி மக்களை கொன்று ஆட்சியையும் பிடித்தார்கள்..

மீடியாக்களும் தங்களின் பங்குக்கு ராமர் பற்றிய பாமர மக்களுக்கு பக்தியை ஏற்ற நாடகங்கள் உள்ளிட்டவை பரப்படுகிறது .இதன் மூலம் பார்பன இயக்கங்களின் சதி நிறைவேறுகிறது

. ..இந்த கூடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவும் உண்டு என்பதே மறுக்க முடியாத உண்மை..காங்கிரஸ் மட்டும் நினைத்திருந்தால் நாட்டின் திட்டமிட்ட பார்பன இயக்கங்களின் கலவரத்தையும் தடுத்து இருக்கலாம்..பாப்ரி மஸ்ஜித் தையும் காப்பாற்றி இருக்கலாம்..

இன்னும் ஒரு உண்மையை கூற வேண்டுமானால் வரலாற்றை பார்ப்போமேயானால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் தான் பார்பன இயக்கங்கள் கூறியபடி வழிபாட்டு உரிமை என அனைத்தும் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டது எனபதே உண்மை.

எது எப்படியோ இவர்களின் சுய நல அரசியலுக்காக கொல்லப்பட்டது என்னவோ அப்பாவி மக்கள் தான்..இடிக்கப்பட்டதும் நூற்றாண்டு கால பழமை கொண்ட பள்ளிவாசல்..

பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது.

அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார்.

தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.

இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாகவும், கசப்பான நிகழ்வாகவும் மாற்றப்பட்ட அயோத்தி பிரச்சினையின் முக்கிய விதை விதைக்கப்பட்டது அந்த இரவில் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைப் பிரிவான இந்து மகா சபையின் நேர்த்தியான திட்டத்தால் அந்த இரவும், அந்த சம்பவமும் கமுக்கமாக மறைக்கப்பட்டது.

சமீபத்தில் தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களான கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து, அயோத்தியில் மசூதியை கைப்பற்ற முனைந்த அந்த இரவின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

பார்ப்பன இந்து மதவெறி அடிப்படையிலான செயல்திட்டம் கொண்ட இந்து மகா சபையின் திட்டம், அதற்கு உதவி புரிந்த காங்கிரசு வலதுசாரிகள், இந்து வெறி அதிகாரிகள், வாய்ச் சொல்லில் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசி வந்த இந்திய அரசின் கையாலாகாத்தனம் என அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கும் புத்தகம்தான்

 
‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘

புத்தகம் ஒரு வரலாற்று ஆவணத்துடன் தொடங்குகிறது – காலை 9.00 மணி, 23 டிசம்பர், 1949. உத்திர பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்கிறார்.

அந்த முதல் தகவலறிக்கையின் சுருக்கம் – காலை 7 மணியளவில் நான் (ராம் தியோ துபே) ஜன்ம பூமியை அடைந்தபோது, அங்கிருந்த மாதா பிரசாத் (காவலர் எண் 7) மூலம் தெரிந்து கொண்டது என்னவெனில், சுமார் 50 முதல் 60 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியினுள் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து ஒரு ராமர் சிலையை வைத்துள்ளனர்.

அதோடு மசூதியின் சுவற்றில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் ராமர், சீதை, அனுமான் படங்களை வரைந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலுக்கிருந்த ஹன்ஸ் ராஜ் எனும் காவலர் தடுத்தும் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன தாசு இன்னும் அடையாளம் தெரியாத 50 முதல் 60 பேர். இவர்கள் மசூதியினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ராமர் சிலையை வைத்து கலகம் செய்துள்ளனர். அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் இதை நேரில் கண்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யபட்டுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது.

ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை;

இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் எப்படி திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்பட்டன என்பதையும் புத்தகம் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் விவரிக்கிறது.

1947-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தன.

மத வெறியர்களால் இந்துக்களும், முசுலீம்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து ராஷ்டிரத்தை தம் கனவாகவும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அடிமைகளாக்கும் பாசிச திட்டத்துடனும் செயல்படத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இதன் ஒரு பகுதியாக அவர்கள் காந்தியை கொலை செய்துவிட்டு, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

காந்தி கொலையானது பெரும்பான்மை இந்துக்களிடமிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையை தனிமைப்படுத்தியது.

கூடவே இந்திய அரசு இவர்களை தடை செய்தது; இந்து மகா சபையோ அரசியல் திட்டத்தை கைவிட்டதாக சொல்லிக் கொண்டு தன்னை இந்துக்களின் கலாச்சார அமைப்பாக வெளியில் காட்டிக் கொண்டது. இவர்களின் ஞானகுரு சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை அடையவே, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரசில் இருந்த பல வலதுசாரிகள் இந்து மகா சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

1947-ம் ஆண்டு பல்ராம்பூர் அரசர் ஒரு யாகம் நடத்தினார். அதற்கு தன் உற்ற நண்பர்களான பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், இந்து மகா சபையின் உத்திர பிரதேச தலைவரான திக் விஜய்நாத் ஆகியோரை அழைத்திருந்தார். அப்பொழுது நாயரிடமும், மன்னரிடமும் சாவர்க்கரின் திட்டம் ஒன்றை திக் விஜயநாத் விவரித்தார்.

இந்தியாவில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களை மீட்பது; இதன் மூலம் மக்கள் மத்தியில் தாங்கள் வளருவது; அயோத்தியில் ராமர் கோவில், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவது ஆகிய திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கினார் திக் விஜய்நாத். இந்தத் திட்டம் நிறைவேற, தான் எந்தவிதமான தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக நாயர் வாக்குக் கொடுத்தார்.

காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகு, 1949 மே மாதம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உடனடியாக செய்ய வேண்டியவற்றைப் பற்றி சாவர்க்கரும், இந்து மகா சபையினரும் சேர்ந்து திட்டமிடத் தொடங்கினர்.

அயோத்தியின் ராமர் கோவில் அவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக காட்சியளித்தது. அயோத்தியை மையமாகக் கொண்ட ராமாயண மகா சபை உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாளராக மகா சபையின் நகர தலைவர் ராமச்சந்திர தாசு பரமஹம்சு என்பவர் நியமிக்கப்பட்டார்.

பரமஹம்சு இந்தத் திட்டத்திற்கு இரண்டு பேரை தன் கூட்டாளிகளாக இருந்தவர்களில் தேர்ந்தெடுத்தார், ஒருவர் சந்நியாசி அபிராம் தாசு, மற்றொருவர் அச்சக உரிமையாளரும், பைசாபாத் மாவட்ட செயலாளருமான கோபால்சிங் விஷ்ராத். இன்னொரு புறம் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயருடன் அயோத்தி நகர நீதிபதியும், நாயரின் சீடருமான இந்து மகா சபையின் ஆதரவாளர் குரு தத் சிங் என்பவரும் இந்தத் திட்டத்தில் மறைமுகமாக பங்கெடுத்தனர்.

அபிராம் தாசு ஒரு சந்நியாசி, அவரின் உண்மையான பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீகாரில் உள்ள ரஹரி கிராமத்தை சேர்ந்த பார்ப்பனர். குடும்ப ஏழ்மை அபிநந்தனை நாடோடியாக்கியது. அவரின் குடும்பத் தொழிலான அர்ச்சகர் பணி சில இடங்களில் அவருக்கு உணவளித்தாலும், ப்ளேக் நோய் பரவல் அவரை பரதேசியாக அயோத்திக்கு அழைத்து வந்தது. அங்கு அனுமான் கர்ஹியைச் (அனுமான் கோவில்) சேர்ந்த துறவி சராயு தாசின் சீடரானார். சராயு தாசு மறைவுக்குப் பிறகு அனுமான் கர்ஹிக்கு அபிநந்தன் மிஸ்ரா பொறுப்பாளாரானார். சந்நியாசியாகி விட்ட பின் தன் பூர்வீகப் பெயரை துறந்தார்; அபிநந்தன் மிஸ்ரா அபிராம் தாசானார். ஆனால் துறவிக்கான நடைமுறைகளை மீறி, தன் உறவினர்களை அயோத்திக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அவர்களுடனான குடும்ப உறவுகளை தொடர்ச்சியாக பேணி வந்தார்.

அபிராம் தாசுக்கு அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அது தனது மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கவசம் என்பதும் அவருக்கு புரிந்திருந்தது. கூடவே இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குமளவு அவருக்கு இந்து மகா சபையுடன் நெருக்கம் வளர்ந்தது. அதன் ஒரு பகுதியாக பாபர் மசூதியை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

பாபர் மசூதி அருகில் சுமார் 50 அடி தொலைவில் ஒரு ராமர் கோவில் இருந்தது. பாபர் மசூதியில் தொழுகை அழைப்பாளராக இருந்த முகமது இசுமாயிலும், ராமர் கோவில் அர்ச்சகர்களும் பரஸ்பரம் நல்லுறவையே பேணி வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் அயோத்தியில் இருந்த துறவிகளிடையே சில பிரிவுகள் இருந்தன. அவற்றில் முக்கியமான வகைகள் நிர்மோகி அகோரி, நிர்வாண அகோரி. அபிராம் தாசு நிர்வாண அகோரி பிரிவை சேர்ந்தவர்.

நிர்வாண அகோரிகள் இயல்பில் ஒரு ரவுடிகளைப் போன்ற துறவிகள் குழு. இவர்கள் அயோத்தியில் பலமாக இருந்த சைவ துறவிகளை அடித்து துரத்திவிட்டு ஆஞ்சநேயர் கோவிலைக் (அனுமான் கர்ஹி) கைப்பற்றி, அதன் நிலங்களையும், உண்டியல், காணிக்கை பணத்தையும் அனுபவிக்கத் துவங்கினர்.

இன்னொரு பிரிவினர் நிர்மோகி அகோரி, இவர்கள் பாபர் மசூதி அருகில் இருந்த ராமர் கோவிலை நிர்வகித்து வருவதுடன் அதன் காணிக்கைகளையும் அனுபவித்து வந்தனர்.

அபிராம் தாசு பாபர் மசூதியை கைப்பற்றும் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று, பாபர் மசூதியைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் அருகில் உள்ள ராமர் கோவிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, நிர்மோகி அகோரிகளை ஒன்றுமில்லாதவர்களாக்குவது;

இரண்டாவது, ராமஜன்ம பூமியின் காவலர் என்ற புகழைப் பெறுவது.

இப்படி சாமியார் குழுக்களுக்கிடையே இருந்த சொத்துச் சண்டைகளும், கட்டைப் பஞ்சாயத்தும் பாபர் மசூதி பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்து மகாசபையும், ராமாயண மகா சபையும் அயோத்தியில் பல நிகழ்வுகள், திருவிழாக்கள், பூஜைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நடத்தினர்.

பாரம்பரியமாக அயோத்தியின் துறவிகள் ராமர் பிறந்த தினமான ராம நவமியை கொண்டாடுவார்கள், ராமர் திருமணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். சீதை பெண் என்பதனால் ஆண் துறவிகள் அவளை வணங்க கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆனால் 1949-ம் ஆண்டு ராமரது திருமண நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அயோத்தியில் வலிந்து நடத்தப்பட்டன.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர்.

மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது.

இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள்.

இதனால் பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர்.

அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது.

இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர்.

இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன.

அச்சக உரிமையாளாரான விஷ்ராத், பரமஹம்சின் கூட்டாளியானதால் பிரசுரங்கள் அயோத்தியெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.

டிசம்பர் 22-ம் தேதி அபிராம் தாசு ராமர் சிலையை மசூதியினுள் வைத்து விட்டார்.

மறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிகைகள், அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், அங்கு தன் பிறப்பிடத்தில் (மசூதியினுள்) ராமரது சிலை ஒன்று சுயம்புவாகவே தோன்றியுள்ளது என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

இந்து மகாசபையால் திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்கவே, பூசைகள், பாடல்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிலையை அகற்றாமல் பிரச்சினையை தள்ளிப் போட்டார் மாவட்ட நீதிபதியான நாயர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறான தகவல்களை அறிக்கைகளாக கொடுத்ததுடன், கலவரங்கள் வராமல் தான் தடுப்பதாகவும் ஒரு பிம்பத்தை நாயர் ஏற்படுத்தினார்.

அதிகாரிகளோ மாவட்ட இணை ஆணையாளரும், நீதிபதியுமான நாயரின் அனுமதிக்காக காத்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்தலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என பயம் காட்டி தள்ளிப்போட்டார் நாயர்.

நாயரின் இந்த கடும் உழைப்பிற்கு சன்மானமாக 1967-ல் ஜன சங்கத்தின் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

காவல்துறையினர் இதை வெறும் குற்றவியல் வழக்காகவே பதிவு செய்தனர். நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் மாநில அரசோ அயோத்தி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வந்தது.

ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. பல காங்கிரசுக்காரர்கள் மசூதி ஆக்கிரமிப்பை தாம் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர்.

மறுபுறம் சோசலிசம், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்ட காங்கிரசின் சிறு பிரிவினர், இதனை மென்மையாகக் கையாண்டதன் மூலம் மறைமுகமாக உதவி புரிந்தனர்.

பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

காங்கிரசின் பைசாபாத் மாவட்ட செயலாளரும், காந்தியவாதியுமான அக்ஷய் பிரம்மச்சாரி இசுலாமியர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக அவர்களின் பயத்தைப் போக்க தொடர்ந்து போராடினார்.

ஆரம்ப கட்டத்தில் மாவட்ட நீதிபதி மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனக் கருதி பல புகார்களை அவரிடம் கொண்டு சென்ற அக்ஷய் பிரம்மச்சாரி மெல்ல நாயரை பற்றி புரிந்து கொண்டார். பின்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

ஆனால் இந்து மகாசபையின் ரவுடிகள் அவரை ஊரை விட்டே அடித்துத் துரத்தினர்.

ஆனாலும், அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.

அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மோசமான காலகட்டத்தில் எண்ணற்ற அயோத்தி இசுலாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பியோட முனைந்தனர்.

தங்கள் சொத்துக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ஓடினார்கள்.

அன்று முதல் இந்த மோசடி நிகழ்வின் அரசியல் ஆதாயங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன.

மசூதியைக் கைப்பற்றிய பின் அது ராமர் கோவிலாகி விட்டது என்று சொல்கின்றனர்.

தூண் பூசை, கர சேவை,மசூதி இடிப்பு,செங்கல் பூசை என்று 1949-ல் விதைத்த விதைக்கான பலனை அறுவடை செய்யும் பணியில் சங்க பரிவார அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இசுலாமியர்களுக்கு சொந்தமான மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து, அடுத்தடுத்து சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் இந்துத்துவா கும்பல்களை எதிர்த்து நின்று, அந்த இடத்தை அதன் உரிமையாளர்களான இசுலாமியர்களிடம் ஒப்படைப்பது தான் நியாயமானதாக இருக்க முடியும்.

ஆனால் அந்த நியாயத்தை செய்யும் வண்ணம் இங்கே எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை.

முதன்மையாக மதச்சார்பின்மை பேசும் காங்கிரசுதான் 1949-ல் மட்டுமல்ல, பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்ட 1992-ம் ஆண்டிலும் அதிகாரத்தில் இருந்தது.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது.

எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது.

அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும். -ஆதவன்

நன்றி:http://www.vinavu.com/2013/09/10/baber-masjid/

**********************************


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


சொடுக்கி படியுங்கள்
பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா? பாபர் மசூதிக்கு போராடுவதேன்?


***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

1 comments:

கவிஞர்.த.ரூபன் December 6, 2013 at 8:42 AM  

வணக்கம்

விரிவான விளக்கத்துடன் பதிவாக தந்தமைக்கு மிக்க நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP