**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அம்மா குடிநீர் வரமா? சாபமா? அதிமுக பிரசாரமா?

>> Monday, September 23, 2013

அம்மா குடிநீர் தயாரிக்க ஜெயில் சூழ்நிலையில் டிரைவர் வேலைக்கு வந்தவர்களை கால் வலிக்க நின்னுகிட்டே ஒரு வாய் தண்ணி கொடுக்காமல் சரியாகவே சாப்பாடு போடாமல் சம்பளமும் இல்லாமல் ஏழு நாளும் ரெஸ்டே இல்லாமல் வேலை வாங்கும் ......குடிநீர் என்பது ஒரு இயற்கை வளம் இது ஒரு வர்த்தகப் பொருள் அல்ல இதை அரசே செய்யக்கூடாது. இது போல குடிநீரை, பெருவணிக நிறுவனங்களும், அரசுகளும் விலைபொருளாக மாற்றுவது தவறு.

குடிநீர் என்பது மனித சமூகத்துக்கு உரிமையான இயற்கை வளம். இதை அரசாங்கங்கள் பொது இடங்களிலும், வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் கொடுத்து, அதை மக்கள் இயல்பாக உபயோகித்து வந்த காலம் போய், இப்போது, அரசால் விநியோகிகப்படும் குழாய் நீர், குடிக்கப் பாதுகாப்பானதல்ல, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரே, குடிக்க உகந்த்து என்ற கருத்தாக்கத்தை பொதுப்புத்தியில் செலுத்தியது யார் என்பதை ஆராயவேண்டும்.

இந்தியா மக்கள் தொகை மிகுந்த நாடு , அனைவருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது அரசால் முடியாது என்ற வாதம் சரியானதல்ல. குடிநீரை விலைபொருளாக்குவதால், வசதியுள்ளவர்கள் மட்டுமே அதைப் பெற முடியும், வசதியில்லாதவர்களுக்கு அது எட்டாத ஒரு பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

*******************


அரசு பணத்தில் அ.தி.மு.க. பிரசாரம்! - விகடன்.


'அம்மா குடிநீர்’... தமிழகத்தின் திடீர் பிரபலம். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் போனால், பலரிடம் 'அம்மா குடிநீர்’ பாட்டில் இருந்தது. ஏதோ இலவசமாகத் தருவதுபோல மக்கள் ஆர்வம்பொங்க வாங்கி, தண்ணீரை ருசி பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர்.

நாமும் ஒரு பாட்டிலை வாங்கி ஒரு மொடக்கு குடித்துவிட்டு பாட்டிலைப் பார்த்தோம். அட... இரட்டை இலை அமர்க்களமாக இருந்தது. இரண்டு இரண்டு இலையாக, மொத்தம் எட்டு இலை கொண்ட ஒரு செடியின் கிளை, முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்குக் கீழே இருந்தது. இதுதான் 'அம்மா குடிநீர்’ லோகோ. தண்ணீர் பாட்டிலில் இலை எதற்கு வந்தது? என எண்ணிக் கொண்டே, இந்தக் குடிநீர் தயாராகும் இடம் எங்கே என தேடிக் கிளம்பினோம்.

அம்மா குடிநீர் எங்கே தயார் ஆகிறது?

கும்மிடிப்பூண்டியில் உள்ள பெத்திக்குப்பத்தில்தான் 'அம்மா குடிநீர்’ பிளான்ட் இருக்கிறது. இது சாலைப் போக்குவரத்து நிறுவனத்துக்கு (ஐ.ஆர்.டி.) சொந்தமான இடம். அங்கு சென்றோம். கண்கொத்தி பாம்புபோல சிலர் கண்காணிப்புப் பணியில் இருந்தனர். நம்மைப் பார்த்ததும் கம்பெனிக்குள் சென்றனர். பின்னர்தான், அவர்களும் பிளான்ட்டில் குடிநீர் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர் என்று தெரியவந்தது.

ஒரு ஷிஃப்ட்டுக்கு 75 ஆயிரம் பாட்டில்கள்!

நாம் காத்திருந்த நேரத்தில் ஓர் அதிகாரி அங்கு வந்தார். பெயர் குறிப்பிட வேண்டாம் என்றபடி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

''ஐ.ஆர்.டி-க்குச் மொத்தமாக இங்கு 55 ஏக்கர் இருக்கிறது. இந்த வாட்டர் பிளான்ட் மட்டும் 2.47 ஏக்கரில் அமைந்திருக்கிறது. முதல்வர் அறிவித்தப் பின்னர் ஜூலை மாதத்தில்தான் கிடுகிடுவென வேலைகள் தொடங்கின. கிட்டத்தட்ட 60 நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டோம். இந்தத் திட்டத்துக்கான மொத்த செலவு 10.44 கோடி ரூபாய். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மூலமாக தண்ணீரைச் சுத்தம் செய்கிறோம்.

மூன்று ஷிஃப்ட்டில், 24 மணி நேரமும் உற்பத்தி நிற்காமல் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு ஷிஃப்ட்டில் 25 பேர் வேலை செய்கின்றனர். இதற்கென தகுதியான வேலையாட்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். ஒரு ஷிஃப்ட்டில் அதிகப்படியாக 75 ஆயிரம் பாட்டில்களை உற்பத்திசெய்யத் திட்டமிட்டு இருக்கிறோம். தண்ணீரை போர் போட்டு எடுக்கிறோம். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் வரை தண்ணீரை எடுத்து சுத்திகரிக்கறோம். 'அம்மா குடிநீருக்கு’ டிமாண்ட் அதிகமாகிக்கொண்டே இருப்பதால், எங்கள் தயாரிப்பு வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்'' என்று சிரித்தார்.

மேலும் ''இந்த நிலத்தில் இயற்கையாகவே TDS 500-க்குள் இருந்தது. மினரல் வாட்டருக்கு 300-க்கு கீழே இருக்க வேண்டும். அம்மா குடிநீரில் TDS 150-தான் இருக்கிறது. அதனால்தான் குடிநீர் சுவையாக இருக்கிறது. இந்தத் திட்டம் ஆரம்பித்து 40 நாட்களில் ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழும் பெற்று இருக்கிறோம். இதுவரை இவ்வளவு விரைவில் யாருமே வாங்கியது இல்லை'' என்றும் தகவல் சொன்னார்.

டிரைவர் வேலைக்கு வந்தவங்க தண்ணி தயாரிக்கிறாங்க!

நம்மை பத்திரிகையாளர் என்று தெரிந்துகொண்டு இரண்டு, மூன்று பேர் வந்தார்கள். ''எங்களை இங்கு அடிமைபோல நடத்துறாங்க சார்'' என்று அவர்கள் ஆரம்பிக்க... நமக்கு ஷாக்!

''இங்கே மொத்தம் 60 பேர் இருக்கோம். நாங்க எல்லோரும் திருச்சியில் பஸ் டிரைவர் ட்ரெய்னிங் எடுத்துட்டு இருந்தவங்க. ஒவ்வொருத்தரும் ரொம்ப செலவு செஞ்சுதான் இந்த ட்ரெய்னிங்குக்கு செலக்ட் ஆகி சேர்ந்து இருக்கோம்.

திடீர்னு ஒருநாள் 'உங்க எல்லோருக்கும் சென்னையில இனி பயிற்சி தரப்போறோம். ரெண்டு நாள் பயிற்சி. ஒரே ஒருநாள் வாட்டர் பிளான்ட்ல சின்ன வேலை பார்க்கணும்.’ சொல்லி அழைச்சிட்டு போனாங்க. பாதியைக் கடந்தாச்சு... இனி யோசிக்க என்ன இருக்குன்னு கிளம்பி வந்துட்டோம்.

முதல் நாள் எங்க எல்லோருக்கும் இங்கேயே தங்குறதுக்கு, ரூம் கொடுத்தாங்க. 10-க்கு 10 அடி ரூம்ல 12 பேர் இருக்கோம். கழிவறை கிடையாது. ரயில்வே டிராக்குக்கு பக்கத்துல பொட்டல் காட்டுலதான் போக வேண்டி இருக்கு. குடிநீர் வசதி சுத்தமாக சரியில்லை.

மினரல் வாட்டர் பிளான்ட்ல வேலை செய்யும் எங்களுக்கே குடிக்க ஒரு வாய் தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க. சரியாகவே சாப்பாடு போடறது இல்லை. முந்தின நாள் வைச்ச பழைய சாதம் எல்லாம் போடுறாங்க.

தினமும் ஷிஃப்ட்படி எட்டு மணி நேரமும் கால் வலிக்க நின்னுகிட்டே வேலை செய்றோம். டிரைவர் வேலைக்கு வந்தவர்களை இப்படி மிஷின் ஆபரேட் பண்ணச் சொன்னா எப்படி? கால் வலிக்குதுன்னு சும்மா ஒரு நிமிஷம் உட்கார்ந்தா கூட 'மாடு மாதிரி சாப்பிடத் தெரியுதுல்ல. எழுந்து ஒழுங்கா வேலை செய். இல்ல, டிரைவர் டெஸ்ட்ல ஃபெயில் பண்ணிடுவேன்’னு மிரட்டுறாங்க.

ஒண்ணுக்குப் போக, வெளியே போனாகூட திட்டுறாங்க. நாங்க வேலை செய்றதுக்கு சம்பளமும் இல்லை. ஏழு நாளும் வேலை செய்றோம். ரெஸ்டே இல்லை. ஜெயில் போல இருக்கு.

டிரைவர் டிரெய்னிங் முடித்து நல்லபடியா வேலைக்கு ஜாயின் பண்ணலாம்னு வந்தா, இவர்கள் சாதனை செய்றதுக்கு எங்கள் வாழ்க்கையை சோதனை செய்றது நியாயமா? இத்தனைக்கும் மினிஸ்டர் செந்தில்பாலாஜி ஒருநாள் விட்டு ஒருநாள் இங்கு வர்றார். ஒரு வார்த்தைகூட இதுவரை வாயைத் திறந்து கேட்கலை. நாங்க படும் கஷ்டங்களை எப்படியாவது முதல்வருக்கு சொல்லுங்க சார்'' என்றார்கள் பரிதாபமாக.

அனுபவம் இல்லாத இவர்கள் தயாரிப்பது எப்படி சுத்தமான தண்ணீராக இருக்க முடியும்? என்ற எண்ணத்தோடு அங்கிருந்து புறப்பட்டோம்.

தண்ணீரின் தரம் முக்கியம்!

சுகாதாரம் இல்லாத பாட்டில் தண்ணீர் குடித்தால் என்னாகும்?

டாக்டர் புகழேந்தியிடம் கேட்டோம். ''23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாட்டிலில் அடைத்து விற்பதால், அது நல்ல குடிநீர், தரமானது, சுகாதாரமானது என்று சொல்ல முடியாது.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் இருப்பதால், பிளாஸ்டிக்கில் இருக்கும் நச்சுத்தன்மை தண்ணீரிலும் கலக்கிறது.

இதனால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க நலவாழ்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

பாட்டிலில் இருக்கும் குடிநீர்தான் சிறந்தது; குழாய்களில் வரும் நீர் சுகாதாரம் அற்றது என்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். குழாயில் வரும் நீர் எல்லாம் அசுத்தமானதும் கிடையாது. பாட்டிலில் வரும் மினரல் வாட்டர் எல்லாம் சுத்தமானதும் கிடையாது'' என்றார்.

இரட்டை இலையைப் போட்டு, தாகம் தணிக்கிறார்களா? ஓட்டு குவிக்கிறார்களா? - நா.சிபிச்சக்கரவர்த்தி

சொட்டு தகவல்கள்

1. தமிழகத்தில் இன்னும் ஒன்பது இடங்களில் 'அம்மா குடிநீர்’ பிளான்ட் அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

2. தமிழகத்தில் மொத்தம் 304 குடிநீர் விற்பனை கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் அதிகபடியாக 39 கவுன்ட்டர்கள். அதிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 12 இயங்குகிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விற்கப்படுகிறது. கவுன்ட்டர்களில் விற்பனைப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்த பஸ் கண்டக்டர்கள்தான்.

3.1965ல்-தான் இந்தியாவுக்கு முதன்முதலில் 'பிஸ்லரி மினரல் வாட்டர்’ மும்பையில் அறிமுகமானது. 1969-ல்தான் பி.வி.சி-யில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய வாட்டர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தது. 1990-களில்தான் வாட்டர் பாட்டில் பிசினஸ் மெள்ள தமிழகத்தில் உதயமானது. 2000-க்குப் பிறகுதான் சூடுபிடிக்கத் தொடங்கி இப்போது அரசே சொந்தமாக நடத்தும் பெரிய வணிக தொழிலாகவே மாறியிருக்கிறது.

நன்றி: விகடன்.

**************
பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை சன்னமான முறையில் வரைந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. எனவே இது லோக்சபா தேர்தலை மனதில் கொண்டும், மக்களை அதிமுகவுக்கு ஆதரவாக திருப்பவும் நடக்கும் முயற்சி என்றும் விவாதம் வெடித்துள்ளது.பாட்டிலில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெளிவாகத் தெரியும் வகையில் இரட்டை இலைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை இரட்டை இலை இல்லை என்று அரசு சார்பில் விரைவில் மறுப்பு வரும்.

பறக்கும் குதிரைன்னு சொன்னவங்களாச்சே...

ஏற்கனவே மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தின் முகப்பில் இரட்டை இலை வடிவிலான புதிய சிலை உருவாக்கப்பட்டது.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டபோது அது இரட்டை இலை இல்லை, பறக்கும் குதிரை என்று அரசு சார்பில் கூறப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இந்த சர்ச்சைக்கும் உரிய விளக்கம் வெளியாகும் என்று தெரிகிறது.

Ref: that’s tamil.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP