ஏன் இந்தப் பதவியைப் பிடிக்க ரூ. 10 கோடி லஞ்சம் தர வேண்டும்..?
>> Tuesday, May 7, 2013
காண்ட்ராக்டர்களுடன் கைகோர்த்துக் கொண்டு பல லட்சம் கோடிகள் புரளும் ரயில்வே போர்டில் அடிக்கும் கொள்ளை பல ரயில்களை விட நீளமானது.
ரயில்வே போர்ட் பதவிக்கு ரூ. 10 கோடி லஞ்சம் தர 'ஆசைப்படுவது' ஏன்?
டெல்லி: ரயில்வே துறையின் இயக்குனர் குழுவில் (ரயில்வே போர்டு) இடம் பிடிக்க ரூ. 10 கோடி லஞ்சம் பேசி அதில் ரூ. 90 லட்சத்தை ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் அக்காள் மகன் விஜய் சிங்க்லாவிடம் தரும்போது கையும் களவுமாக சிபிஐயிடம் பிடிபட்டுள்ளார் மூத்த ரயில்வே அதிகாரியான மகேஷ் குமார்.
ரயில்வே போர்டில் உறுப்பினராகிவிட்டால் அப்படி என்னதான் கிடைக்கும்.. ஏன் இந்தப் பதவியைப் பிடிக்க இவ்வளவு லஞ்சம் தர வேண்டும்..?
வானளாவிய அதிகாரம்...
இந்திய ரயில்வேயை பொறுத்தவரை வானளாவிய அதிகாரம் கொண்டது அதன் இயக்குனர் குழு எனப்படும் ரயில்வே போர்டு. இதில் உள்ளவர்கள் தான் ரயில்வேயின் அனைத்து காண்ட்ராக்ட்களையும் முடிவு செய்கின்றனர்.
நாட்டில் தனியாக பட்ஜெட் போடும் ஒரே துறை ரயில்வே தான் என்ற வகையில் அதன் வரவு செலவுகளை நாம் விரிவாக சொல்ல வேண்டியதில்லை. பல லட்சம் கோடிகள் புரளும் துறை இது.
பல லட்சம் கோடி காண்ட்ராக்ட்கள்...
ரயில் நிலையங்கள் கட்டுவதில் ஆரம்பித்து, ரயில் பெட்டிகள்- என்ஜின்களை உற்பத்தி செய்வது, இரும்பு கொள்முதல், பணியாளர் சேர்க்கை, உணவு காண்ட்ராக்ட்கள், டீசல் கொள்முதல், தண்டவாளம் உற்பத்தி, தண்டவாளம் அமைப்பது, சிக்னல்களுக்கு மின் சாதனங்கள் வாங்குவது, ரயில்வே பாதுகாப்புப் படைக்கு ஆட்களை சேர்ப்பது, கம்ப்யூட்டர்கள் வாங்குவது, மின்னணு சாதனங்கள் வாங்குவது, தனியாருக்கு ரிசர்வேசன் உரிமங்கள் வழங்குவது உள்ளிட்ட என ரயில்வே துறையில் நடக்கும் எல்லா பணிகளுமே பல லட்சம் கோடிகளை உள்ளடக்கியது.
சிறப்பு ரயில் பெட்டிகள்...
ரயில்களில் உள்ள பெட்டிகளை விட மிக மிக வசதியானவை. கிட்டத்தட்ட மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாதிரி. அதிலேயே அலுவலகம், ரயில்வே போர்டின் உறுப்பினர்களின் குடும்பமே தங்கியிருக்க அறைகள், உதவியாளர் அறைகள், சமையல் அறை, சமையல்காரர்கள் என கிட்டத்தட்ட ஒரு ஜனாதிபதி ரேஞ்சுக்கு இவர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன.
ஸ்பெஷல் கவனிப்புகள்...
காண்ட்ராக்ட்களை இறுதி செய்யும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் என்பதாலும் ரயில்வேயின் அனைத்து முக்கிய பதவிகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும், பதவி உயர்வு வழங்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்பதால் இவர்கள் நாட்டின் எந்த ரயில் நிலையத்துக்குச் சென்றாலும் அந்த ரயில் நிலையத்தின் மூத்த அதிகாரிகள் கையில் மாலையோடு இவர்களை வரவேற்க நின்றிருப்பர்.
பெரும்பாலும் அலுவலகப் பணியோடு சுற்றுலாவும் இவர்களது வேலையில் சேர்ந்து கொள்ளும். குடும்பத்தோடு மாபெரும் சொகுசு ரயில் பெட்டியில் வந்து இறங்கும் இவர்களை கூட்டிச் சென்று சுற்றுலாத் தலங்களில் தங்க வைத்து, கவனிப்பது ரயில்வே துறையின் பிஆர்ஓக்களின் முக்கியப் பணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
காண்ட்ராக்டர்களுடன் கைகோர்த்து...
இந்தச் செலவு எல்லாமே ரயில்வே மீது விழும், சில 'ஸ்பெஷல்' செலவுகளை காண்ட்ராக்டர்கள் ஏற்பதும் உண்டு. இவர்களது ஸ்பெஷல் ரயில் பெட்டிகளை எந்த ரயிலில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணைக்கலாம்.
பணி காரணமாக இவர்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஆனால், ரயில்வே போர்டில் இருப்பவர்களில் பலரும் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.
இவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு சிறிய ரயில் நிலையம் அளவுக்கு மாளிகைகளும் டெல்லியில் ஒதுக்கப்படுகின்றன. இவர்களது அனைத்து செலவுகளையும் ரயிலேவே ஏற்கும். அது தவிர காண்ட்ராக்டர்களுடன் கைகோர்த்துக் கொண்டு இவர்கள் அடிக்கும் கொள்ளை பல ரயில்களை விட நீளமானது.
மின்சாரப் பிரிவுக்கான உறுப்பினர் பதவி...
இந்த ரயில்வே போர்டில் நல்லவர்களே இல்லையா என்றால், இருக்கிறார்கள். ஆனால், சுத்தமான ரயில் பெட்டிகள் மாதிரி மிகச் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறதா இந்தப் பதவிக்கு வர ரூ. 10 கோடியை லஞ்சமாகத் தர மகேஷ்குமார் ஏன் முன் வந்தார் என்று?. இந்த மகேஷ் குமார் மேற்கு ரயில்வேயின் பொது மேலாளராக இருந்தவர் ஆவார். இவரது ஆசை ரயில்வே போர்டில் மின்சாரப் பிரிவுக்கான உறுப்பினர் பதவியைப் பெறுவது. காரணம், அதில் அடங்கிய பல்லாயிரம் கோடி காண்ட்ராக்ட்களும் கிடைக்கும் பல நூறு கோடி லஞ்சமும் தான்.
சிபிஐயிடம் போட்டுக் கொடுத்த நல்லவர்...
ரூ. 10 கோடி லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு இந்த அதிகாரிக்கு எங்கிருந்து பணம் வந்தது.. மேற்கு ரயில்வேயின் திட்டங்களில் சுருட்டியது தான்! சரி, இவர் எப்படி மாட்டினார்?..
இவரால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு நல்ல மனிதர் சிபிஐக்கு இவரது செயல்பாடுகள் குறித்து ரகசிய தகவல்களை பாஸ் செய்ய பொறி வைத்துப் பிடித்துவிட்டனர். -- Posted by: Chakra – IN THATSTAMIL.
THANKS TO SOURCE: http://tamil.oneindia.in/news/2013/05/07/india-railway-bribery-bansal-nephew-was-in-touch-174796.html
0 comments:
Post a Comment