**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! . ஒரு செங்கொடியின் அறைகூவல்.

>> Wednesday, August 24, 2011

செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! ஒரு செங்கொடியின் அறைகூவல்.

மதமாற்றமல்ல! இது மனமாற்றம்.

கம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும், தான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில் திரு. கொடிக்கால் செல்லப்பா இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்து, புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.


 
முன்னாள்
கொடிக்கால் செல்லப்பா

இந்நாள் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்

கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி!கொடிக்கால் செல்லப்பா

தீண்டாமை கொடுமை என்பது காந்திஜி காலத்திலும் இருந்தது. காந்திஜிக்கு முன்னாலும் இருந்தது. இன்றும் இருக்கிறது - அது நாளையும் தொடருமோ? ஏன்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இந்த இனிய நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் திரு. சுந்தரராமசாமி, பிரபல எழுத்தாளர் - சிறந்த நாவலாசிரியர் என்ற சிறப்பு இருந்தாலும், அதோடு மேலும் ஒரு சிறப்பு, அவர் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதாகும். எனவே, இந்த நிகழ்ச்சி அவர் தலைமையில் நடைபெறுவது, மிகவும் பொருத்தமே.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை விளக்கங்களை தர இருக்கின்ற நீங்கள் - படித்தவர்கள் பட்டங்கள் பெற்றவர்கள், பல ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர்கள் என்பதை நான் அறிவேன். எனவே தான் உங்களைப் பார்த்து நான் கேட்பதெல்லாம் தீண்டாமை என்னும் இந்த தீராத பிரச்சினைக்கு நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் கருத்துகள் சிறப்புடையதாக - தீர்வு காணக்கூடிய வகையில் - அது அமைய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

எனவே, அருமை நண்பர்களே!

நாம் இங்கு மனம் திறந்து பேசுவோம். நானும் மனம் திறந்தே பேச விரும்புகிறேன். மரியாதைக்குரிய நடுவர் அவர்கள் குறிப்பிட்டார்கள், தீண்டாமை என்பது இடைக்காலத்தில் பழமைவாதிகளால் அதாவது, மனிதனால் மனிதனுடைய தேவைகளுக்காக மனிதன் ஏற்படுத்திக் கொண்டவையாகும். அது இடைச்செருகலே, அதை ஒழிப்பதற்காகவே காந்திஜி போராடினார். நாமும் காந்திஜி போராடிய அவர் வழி நின்று போராடி வெற்றி பெறுவோம் என்றார்கள்.

அன்பார்ந்த நண்பர்களே!

நடுவர் அவர்களது பேச்சில், அனேகமாக தீண்டாமை கொடுமை, அதன் வேகம் தணிந்து விட்டதைப் போன்ற பிரமை, பேச்சின் மென்மை அப்படி இருந்தது.

மரியாதைக்குரிய நடுவர் அவர்களே!

உங்களால் எடுத்து வைக்கப்பட்ட கருத்துகளில் எனக்கு மாறுபாடு உண்டு. ஆகவே, அது பற்றிய எனது கருத்துகளை உணர்வுகளை இங்கு விளக்கிட நான் விரும்புகிறேன். வேத காலம் தொட்டே தீண்டாமை கொடுமை அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது அதற்கு ஆதாரமாக- இந்து மதத்தின் பலதரப்பட்ட நூல்களில் மனுஸ்மிருதி முக்கிய இடத்தை பெறுகிறது. இந்து மதத்தின் ஆரம்பகால நூலாக இதனைக் கொள்ளலாம். இந்த மனுஸ்மிருதி மக்களை வர்ணங்களாகப் பிரித்து - அதில் ஒரு பெரும்பகுதி மக்களை (பஞ்சமன்) - அதாவது சண்டாளன் தீண்டப்படாதவன் என்று இழிவுப்படுத்தி அதில் கூறப்பட்டுள்ளது. அன்று தொட்டே மனிதர்களிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களை இன்றும் வளர்த்து கடைபிடித்து வருகிறீர்கள்.

மனிதனை தொட்டால் தீட்டு, உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஏன் இருண்ட கண்டமென்று கூறப்படுகிற ஆப்பிரிக்கா கண்டத்தில் கூட இல்லாத அநாகரீகமான செயலிது. உலகத்தின் பல நாடுகளில் இன்றும் நிறவேற்றுமை - இன வேற்றுமை மொழி வேற்றுமை ஆதிக்கப் போட்டி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மனிதனை தொட்டால் தீட்டு என்ற கொடுமை இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்ற கசப்பான உண்மையை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

பாரதம் பழம் பெரும் நாடு. இது உலக நாகரீகத்தின் முகடு. இங்கு, தனி மனித சுதந்திர ஜனநாயக உரிமைகள் எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று உலக நாடுகளின் அரங்குகளில், நிறவெறிக்கு எதிராக நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அங்கு பேசியபோது அங்கே குழுமியிருந்த மக்கள் அதை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்று இருக்கிறார்கள்.

அந்த பரபரப்பான செய்தியை, நாம் செய்தி தாள்களிலும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் கேட்டு படித்து அறிந்திருக்கிறோம்.

உண்மையில் தனிமனித சுதந்திரம் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறதா? தீண்டாமை கொடுமை முற்றிலும் இங்கு ஒழிந்துவிட்டதா? இந்தியாவில் பல மாநிலங்களில் கொத்தiடிமைகள் இருப்பதாகவும், அவர்களை மாநில அரசுகள் விடுவிப்பதாகவும் செய்திகள் வருகின்றதே அது உண்மை இல்லையா? ஆண்டான், அடிமை முறை இன்றும் பல இந்திய கிராமங்களில் நடைமுறையில் இருந்துவருகிறதே அது நம் கண்களில் படவில்லையா? தயவுசெய்து எண்ணிப்பாருங்கள்.

அருமை நண்பர்களே:-

இன்றளவும், தடையின்றி நடந்துவரும் தீண்டாமைக் கொடுமையினை எதிர்த்து காந்திஜிக்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நந்தனார் போராடியிருக்கிறார். காலமெல்லாம் தன் தெய்வமாக தன்னை ஆட்கொள்ளும் ஆண்டவனாக நம்பி, மனதுக்குள் வழிப்பட்டு வந்த தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நடராஜ பெருமானை நேரில் சென்று வணங்க, வழிபட ஆசைப்பட்டார் நந்தனார். முடிந்ததா?

ஆஸ்திக வேதியர்கள் மேல் ஜாதி இந்துக்கள் நந்தனாரைப் பார்த்து 'மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா?' ஏன்று ஏளனம் பேசி சினம் கொண்டு நந்தனாரை கோயிலுக்குள் போக வழிவிட மறுத்து நந்தியானார்கள்.

நந்தனாரைத் தொடர்ந்து கேரளத்தில் பாக்கனார், நாரயணகுரு மகாராஷ்டிரத்தில் சோகமேளா, உ.பி. யில் குருரவிதாஸ், பெரியார் ஈ.வே.ரா. போன்றவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தம் சக்திக்கு தக்க வகையில் போராடியிருக்கிறார்கள். இருந்தும் தீண்டாமைக்கொடுமை பல்வேறு நிலைகளில் புதுபலம் பெற்று புதுபுது பதாகையின் கீழ் தன் கொடூர தன்மையை அது வலியுறுத்திக்கொண்டிருப்பதை நான் இங்கு நினைவுப்படுத்துகிறேன்.

சாதி - தீண்டாமை இவைகளுக்கு மூல காரணமாக இருக்கும் பல இந்து சாஸ்திர ஆதாரங்களை, சம்பிரதாயங்களை கண்டிக்காமல் சாஸ்திரங்களையெல்லாம் புனிதமானவை என்று நம்பும்படி விட்டு விட்டு, அவர்கள் செயல்களை மட்டும் நீங்கள் கண்டிப்பது புத்திசாலித்தனம் ஆகாது. அது சமூக சீர்திருத்தத்திற்கு வழியுமாகாது.

ஜனங்களின் ஆதிக்கத்திற்கு - அவர்களின் செயல்களுக்கு அவர்களது மத நம்பிக்கையே காரணம் என்பதை மகாத்மா காந்தி உட்பட தீண்டாமையை ஒழிக்க முன் வந்திருக்கும் உங்களைப் போன்ற சீர்திருத்தக் காரர்களெல்லாம் உண்மையில் இங்கு உணராமல் இருப்பது துரதிருஷ்டமே! எனவே தான் காந்திஜியும் அவரை, இந்த விசயத்தில் பின்பற்றுகின்ற நீங்களும் தீண்டாமையை ஒழித்திட எடுத்து வரும் முயற்சியில் வெற்றி பெறாததில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்னும் இங்கு நான் அழுத்தமாக சொல்லவேண்டுமானால் தீ;ண்டாமைக்கு அடிப்படைக் காரணம் இந்துக்கள் கடைப்பிடித்து வரும் ஜாதி முறையே. நம்மை பொறுத்தமட்டில் இங்கு பல ஜாதிகள் தோன்றுவதற்கு இந்து மதக் கொள்கைகளே காரணம். அக்கொள்கைகளை இந்து சாஸ்திரங்கள் ஆதரிக்கின்றன. தெய்வீக சக்தியுடைய ஞானிகளால் அந்த சாஸ்திரங்கள் எழுதப்பட்டன என்றும் நம்பப்படுகின்றன. எனவே, அந்த சாஸ்திரங்களுக்கு மாறாக எண்ணுவது, நடப்பது பாவம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். தீண்டாமைக்கு காரணமாக இருக்கும் ''ஜாதியை' ஒழிக்க வேண்டுமென்று நான் இங்கு கூறும் போது அது சாஸ்திரங்களுக்கு விரோதமான கூப்பாடு என்று உங்களால் வர்ணிக்கப்படுகிறது.

அருமை நண்பர்களே!

ஜாதி தெய்வீகமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே, ஜாதியோடு இணைக்கப்பட்டிருக்கும் புனிதத்தையும் - அதில் காணும் தெய்வீகத்தையும் முதன் முதலில் சமூக சீர்திருத்தம் காணவிரும்பும் நீங்கள் அகற்றவேண்டும். அதாவது ஜாதியமைப்பு முறைக்கு வேத சாஸ்திர பிண்ணனி இல்லை என்று நீங்கள் நிரூபிக்கவேண்டும்.

நான் கூறுகிறேன் நமது நாட்டில் ஜாதிகள் சமூகத்தில், பக்கவேர், சல்லிவேர், ஆணி வேரடித்து அது பற்றிப் படர்ந்து பலன் பெற்றுள்ளதென்று. ஜாதிகளை இந்து சமயம் புனிதமாகக் கருதி பாதுகாத்து வருகிறது இன்றும். வர்ணாசிரம தர்மப்படி இந்து சமயத்தின் ஜாதியமைப்பு முறைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆகவே, தீ;ண்டாமைக்கு மூலக்காரணமாக இருக்கும் ''ஜாதியை' ஒழிக்காமல் எப்படி தீண்டாமையை ஒழிக்கப்போகிறீர்கள்? எனவே தான் நான் இங்கு அழுத்தமாக கூற விரும்புவது இன்றைய சமூக சூழ்நிலையில் சாதிகள் ஒழிந்தாலே தீண்டாமை ஒழிந்திட வாய்ப்புண்டு. இந்துக்கள் வர்ணாசிரம கொள்கையை கடைப்பிடித்து வருவதால் பல்வேறு சாதிகளை கொண்ட இந்துக்கள் ஒருவருக்கொருவர் - நேசமோ, இணக்கமோ கொள்வதில்லை.

அதனால், ஒரு இந்து மற்றொரு இந்துவை சகோதரனாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறான் இருந்தும் நாங்கள் இந்துக்களே என்று துணிந்து கூச்சப்படாமல் அந்நியனிடம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். இந்து சமூகம் என்பது உண்மையில் பல்வேறு ஜாதிகளை சார்ந்த ஒரு கதம்பமே ஆகும். ஒவ்வொரு சாதியும் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதே, தனது உயிர் இலட்சியமாக மதிக்கிறது. பல இந்து ஜாதியாரும் ஒரு சமஷ்டியாக கூட சேர்வதில்லை.

இந்து-முஸ்லீம் கலகம் ஏற்படும் காலங்களில் அல்லாமல் மற்ற காலங்களில் தமக்கு பரஸ்பர தொடர்பு உண்டு என்று இந்து ஜாதிகள் உணர்வதில்லை. இதனால் இந்துக்கள் ஒரு சமூகமாகவோ ஒரு நேஷனாகவோ ஐக்கியப்படாமல் இருக்கிறார்கள். ஜாதி ஏற்பாடே இதற்கு தடையாக - முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆனால், தேசாபிமான மேலீட்டினால் இந்தியா ஒரு (நேஷன்) நாடு அல்ல என்று ஒப்புக்கொள்ள நம்மில் பலர் தயங்குகிறோம்.

இந்தியர்களிடையே பலதரப்பட்ட வேற்றுமைகள் சடங்காச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் காரணமாக வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை இருப்பதாக நம்மில் பலர் இங்கு மழுப்புகிறார்கள். இந்துக்களுக்குள்ளே கை வலுத்தவன் மற்றவர்களை இம்சிக்கிறான். பலசாலிகளோ பலவீனனை அடிக்கிறான்.

அன்பர்களே, அரசியல் கொடுமையை விட இந்த சமூகக் கொடுமை மிக பயங்கரமானது, துன்பம் நிறைந்தது. ஒரு ஜாதி எவ்வளவுக்கு கீழானதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அந்த உரிமைகளும் குறைவானதாகவே இங்கு இருக்கின்றன. இந்த உயர்வு தாழ்வு காரணத்தினால் ஜாதி ஏற்பாட்டை ஒழிக்க மக்களை ஒன்று சேர்ப்பது முடியாத காரியமாக இருக்கிறது. எந்த ஜாதியாவது தனக்கு உயர்வான ஜாதியோடு சரிசமமாக நடக்க விரும்பினால் அது விஷமத்தனம் என்று உங்களால் தடுக்கப்படுகிறது.

நமது நாட்டை பொறுத்தமட்டில் பிறப்பினால் ஒருவனுடைய ஜாதியும் தொழிலும் முன்னாடியே நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. எனவே ஒரு சமூகம் விருத்தியடைய வேண்டுமானால் ஒவ்வொரு தனி நபருக்கும் தனக்கு இஷ்டமான தொழிலை பின்பற்றக்கூடிய சுதந்திரம் வேண்டும். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்னாடியே நிர்ணயம் செய்திருப்பதால் ஜாதி ஏற்பாட்டில் ஒவ்வொரு தனிநபருக்கும் தொழில் விஷயத்தில் சுய நிர்ணய சுதந்திரம் இல்லை.

ஜாதியோடு தொழிலையும் இணைக்கபட்டதாலேயே தீ;ண்டப்படாதவனை மாற்று தொழில் செய்ய சமூகம் அனுமதிக்காததால் வேறு தொழிலில் அவனுக்கு பயிற்சியோ - பழக்கமோ இல்லாமல் ஆகிவிடுகிறது. எனவே, ஜாதி பொருளாதார-சமூக முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகவே இருந்து வருகிறது.

இந்து சமூகம் ஜாதிகளை எப்படிப் புனிதமாக கருதுகிறது என்பது பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறும்போது 'ஒரு முஸ்லீமையோ ஒரு சீக்கியனையோ நீ யாரென்று கேட்டால், நான் முஸ்லீம் அல்லது சீக்கியன் என்றே விடையளிப்பான். அவர்களுக்குள் பல பிரிவுகள் இருந்தாலும் ஜாதிப்பெயரை சொல்வதில்லை. முஸ்லீம் என்று சொன்னால் நீ சுன்னியா, சியாவா அல்லது பஞ்சாரியா என்று நீங்கள் கேட்பதில்லை. சீக்கியன் என்று சொன்னால் நிஜாதா, ரோடாதா, ஜாமியா, ராம்தாஸியா என்றும் நீங்கள் கேட்பதில்லை,

ஆனால், ஒருவன் தான் இந்து என்றால் அத்துடன் நீங்கள் திருப்தி அடைவதில்லை. அவனுடைய ஜாதியை அறிய நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஏனெனில் இந்துக்களுக்கு ஜாதி அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது இங்கு. அவன் ஜாதியை அறியாமல் அவன் எப்பேற்பட்டவன் என்பதை நீஙகள் உணர்ந்துக்கொள்ளமாட்டீர்கள்.

எனவே தான் அருமை நண்பர்களே!

ஜாதிகளால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை துவேச உணர்ச்சியை ஒழிக்க, இந்து சமூக அமைப்பில் வழியே இல்லை. இந்துக்கள் அல்லாதவர்களுக்குள்ளே ஒற்றுமை உணர்ச்சியை வளர்க்க தக்க சாதனங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ஒரு ஜாதி எவ்வளவு உயர்வானதாக இருக்கிறதோ அவ்வளவிற்கு அந்த உரிமைகளும் உயர்வானதாக இருக்கிறது இங்கு. எனவே, நமது நாட்டை பொறுத்தமட்டில் ஜாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்திருப்பதால் இதை பிரிப்பதோ அல்லது அதில் சீர்திருத்தம் காண விரும்பிட முயல்வதோ சாதாரண விஷயமல்ல. எனவே, சாதிக் கொடுமையை தீண்டாமையை எதிர்த்துப் போராடும் சமூக சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட அதிக தைரியசாலியும், புத்திசாலியும் ஆவான். அந்த வகையில் மனிதனை நேசிக்கும் உங்கள் மனிதநேயத்தை நான் இங்கு மனதாரப் பாராட்டுகிறேன்.

பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் எங்களை கை தூக்கி விட முன் வந்திருக்கிறீர்கள். அது உங்களால் முடியுமா? தரையில் நிற்பவனே தண்ணீரில் விழுந்தவனை காப்பாற்ற முடியும் என்ற முதுமொழி உண்டு. அதை நான் உங்களுக்கு இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். நீண்ட நெடுகாலமாக மனித சமூகத்தில் புரையோடிப்போன இந்த தீண்டாமை என்னும் கொடிய நோயை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? முடியுமென்று என்னால் நம்ப முடியவில்லை.

அருமை நண்பர்களே!

எங்கள் வாழ்க்கை அது நிலைகுலைந்து - அது குப்பைமேட்டில் தூக்கி எறியப்பட்டு கிடக்கிறது இன்று. திட்டமிட்டு ஒரு சமூகம் எல்லா நிலைகளிலும் ஒதுக்கப்பட்டு தூக்கி எறியப்படும் போது அது எழுந்து வந்து வளர்ந்து நிற்க வாய்ப்பில்லை.

இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நடந்து முடிந்த போன ஒரு சம்பவத்தை - தவறை நான் இங்கு கோடிட்டு காட்ட விரும்புகிறேன். 1855-ல் வெள்ளையர் ஆட்சி இந்தியாவில் நடைப்பெற்ற போது சென்சஸ் எடுக்கப்பட்டது. அப்போது சென்சஸ் எடுத்த அதிகாரிகளின் தவறால் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட - தீண்டப்படாத மக்களை ஜாதி இந்துக்களின் பட்டியலுடன் சேர்த்தே கணக்கெடுத்தனர். இது ஒரு மிகப்பெரும் திட்டமிட்ட சதியும் தவறுமாகும் என்று நான் இங்கு கூறிட விரும்புகிறேன்.

மனிதர்களை வர்ணங்களாக பிரித்து அதில் ஒரு பெரும்பகுதி மக்களை இவன் பஞ்சமன் - சண்டாளன் வேதத்தை ஓதக்கூடாது, மீறி ஓதினால் நாக்கு துண்டாக்கப்படும். வேதத்தை கேட்கக்கூடாது, மீறி கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி விடப்படும்.

இப்படி இழிவாகவும் அடிமையாகவும் நடத்தப்பட்டு வந்த இந்துக்கள் மனசாட்சிக்கு விரோதமாக வெட்கமின்றி வெள்ளையனுக்கு துணைநின்று எதிரிக்கு தன் பலத்தை காட்டுவதற்கு வேண்டுமானால் அரிஜனங்களை இந்துக்களோடு சேர்த்து எண்ணிக்கையை கூட்டி பெரிதுபடுத்திக் காட்ட உங்கள் உபாயங்கள் உதவியிருக்கலாம்.

ஆனால் உண்மையில் இந்துக்கள், அரிஜனங்களை இந்துக்களாக - சகோதரர்களாக ஏன் மனிதர்களாக மதித்து நடத்தினார்களா? நடத்தி வருகிறார்களா? தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.

இந்த வேற்றுமைகள் அடிமை வாழ்வு ஒதுக்கப்பட்ட அரிஜன மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணவும் அம்மக்களை ஒன்று படவும், சிந்திக்கவும் தூண்டியது. இதன் வெளிச்சத்தில்தான் 1931-ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியப்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

சாதி இந்துக்களின் பிரதிநிதியாக காந்திஜியும் ஒதுக்கப்பட்ட தீண்டப்படாத அரிஜன மக்களின் பிரதிநிதியாக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஒரு குழுவும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதியாக ஜனாப் ஜின்னா சாஹிபும் அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர். மாநாட்டில் ஜனாப் ஜின்னா சாஹிப் இந்தியாவில் இந்துக்கள் முஸ்லீம் மக்களுக்கு செய்து வரும் பல்வேறு கொடுமைகளை விளக்கி 14 அம்ச கோரிக்கையை முன்வைத்து வாதாடினார்.

டாக்டர் அம்பேத்கர்: வேதகாலம் தொட்டு இந்துக்கள் எங்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதின் மூலம் கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் பின்னடைந்து ஏதும் அறியாத மக்களாகவே நாங்கள் இருக்கிறோம். எனவே, விடுதலை பெற்ற இந்தியாவில் ஜாதி இந்துக்கள் எங்களை மனிதர்களாக மதித்து நடத்துவார்களா? என்ற அச்சம் எங்களுக்கு பலமாக உண்டு. இந்த வர்ணாசிரம தர்ம கொள்கைகளை கடைபிடித்து வரும் இந்துக்களோடு ஒத்து வாழ முடியாது: வாழ அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே, நான் இங்கு வலியுறுத்துவது வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அரிஜனங்களுக்கு தனி மாநில அந்தஸ்து எங்களை நாங்களே தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்வு முறைகள் அமையவும் அதன் அடிப்படையில்தான் எங்கள் பிரச்சினைகளை அணுக வேண்டுமென்றார். காந்திஜியோ சனாதனி இந்துக்களுக்காக வேண்டி வாதாடினார்.

காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இப்பிரச்சினையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. வட்ட மேஜை மாநாடு வெற்றி பெறாமல் தலைவர்கள் நாடு திரும்பினர். டாக்டர் அம்பேத்கர் அன்று அடக்கி ஒடுக்கப்பட்ட அரிஜன மக்களின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கினார். அவருடைய பேச்சும் எழுத்தும் காலகாலமாக ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த மக்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை உண்டு பண்ணி நம்பிக்கை ஊட்டியிருந்தது. அதன் எதிரொலியாக நாடெங்கும் அம்மக்களை ஒன்றுபடுத்தியது - போராட அணி திரட்டியது. எங்கும் குழப்பமான நிலை! நாட்டின் நிலைமைகளும் வட்டமேஜை மாநாட்டின் தோல்வியும் காந்திஜியை நிலை குலையச் செய்துவிட்டது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு அதைத் தொடர்ந்து மேலும் பிளவுகள் ஏற்பட்டால் நாடு சிதறுண்டு போகும் என்ற அபாயத்தை உணர்ந்திருந்த காந்திஜி அரிஜன மக்களின் உணர்வுகளை தடுத்து நிறுத்தவும், அந்த மக்களை சமாதானப்படுத்தவும் விரும்பினார்;. அதற்கு டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பலவீனப்படுத்தவும் அவரது தலைமையை முடமாக்கவும் அதன் மூலமே விடுதலை பெற்ற இந்தியாவில் அவர் காலமெல்லாம் கனவு கண்ட சாம்ராஜ்யத்தைக் காணவும் இந்து சனாதன கொள்கையை நிலைநாட்டவும் முடியும் என்று உணர்ந்திருந்த காந்திஜி தீண்டாமை ஒழிப்பு என்ற வார்த்தைகளை மிகவும் மலிவாகவே விளம்பரப்படுத்தினார். நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது.

சுதந்திர போராட்டத்தின் மத்தியில் வடபகுதியில் இந்து முஸ்லீம் கலவரம் ஜாதிக் கலவரங்கள் விடுதலை இயக்கத்திற்கு பெரும் ஊறு விளைவித்துக் கொண்டிருந்தன.

இந்த காலகட்டத்தில் தான் பிரிட்டீஷ் பிரதம மந்திரி வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை அளிக்க வகை செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்தச் சட்டம் தீண்டப்படாத மக்களுக்கு தனித் தொகுதியை அளித்தது. காந்திஜியோ வேதனைப்பட்டார். இந்துக்களை பிரித்து பிளவுப்படுத்தி ஒன்றுபட்ட சக்தியை பலவீனப்படுத்தி விட்டார்களே என்று மனம் குமுறினார். பிரிட்டீஷ் அரசின் இந்த முடிவை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்.

தனித்தொகுதியை என் உயிரைக் கொடுத்து எதிர்ப்பேன் என்று வட்டமேஜை மாநாட்டில் தான் கூறிய கருத்துகளை நினைவு படுத்தி பிரிட்டிஷ் பிரதமருக்கு காந்திஜி கடிதம் எழுதினார். அறிக்கை விட்டார். இருந்தும் பிரிட்டிஷ் அரசு 1932 ஆகஸ்ட் மாதம் முதல் சட்டத்தில் சேர்ந்திருப்பதாக அறிவித்தது. பிரிட்டிஷ் அரசு இவ்வுத்தரவு சட்டத்தை ரத்தாக்காவிட்டால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக பிரிட்டிஷ் பிரதமருக்கு காந்திஜி தெரிவித்தார். ஆனால் உண்ணாவிரதம் தவிர்க்கப்படவில்லை. அன்று செவ்வாய்கிழமை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பிரிட்டிஷ் பிரதமருக்கு மீண்டும் தந்தி கொடுத்தார்.

காந்திஜி உண்ணாவிரதம் தொடங்கினார். காந்திஜியின் இந்த திடீர் உண்ணாவிரதத்தால் நேருஜி கருத்து வேறுபாடு கொண்டார். காந்திஜியின்; உண்ணாவிரதம் தேசிய விடுதலை இயக்கத்தை அதன் நோக்கத்தை மக்களை எங்கே திசை திருப்பி விடுமோ என்று அஞ்சினார் நேருஜி. காந்திஜியின் உண்ணாவிரதம் தேசிய இந்து தலைவர்களை உசுப்பிவிட்டது. இந்த தலைவர்கள் பம்பாயில் ஒன்று கூடினார்கள். மதன் மோகன் மாளவியா, தேஜ் பகதூர் சப்ரு, எம்.ஆர். ஜெய்கர், ராஜகோபாலச்சாரி, என். ஜி. செல்கர், இராஜேந்திர பிரசாத், மூஞ்சே முதலானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் பல நாட்கள் நீண்டு பாபுஜி அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். மீண்டும் இந்த இந்து தலைவர்கள் ஒன்று கூடினார்கள். ஏர்-வாடா சிறையில் உண்ணாவிரதத்தால் அபாய கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த காந்திஜியிடம் பாபுஜி நீங்கள் உண்ணாவிரதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், நடக்க வேண்டிய காரியத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று முறையிட்டனர். உண்ணாவிரதத்தை நிறுத்த காந்திஜி உறுதியாக மறுத்துவிட்டார்.

என்னுடைய உயிரை உங்களால் காப்பாற்ற முடியாது. நான் ஒரு முக்கிய கட்டத்திற்கு வந்திருக்கிறேன். நீங்கள் அம்பேத்கரை சமாதானப் படுத்தினாலொழிய இது சாத்தியமில்லை என்று காந்திஜி கூறியதைக் கேட்ட இந்த இந்து தலைவர்கள் வேறு வழியின்றி மீண்டும் ஒன்று கூடி முடிவெடுத்து சக்ரவர்த்தி ராஜகோபாலசாரியை டாக்டர் அம்பேத்கரை பார்த்து சாமாதானப்படுத்த அனுப்பி வைத்தனர். டாக்டர் அம்பேத்கரிடம் நிலைமைகளை எடுத்துச் சொல்லி காந்திஜியின் உயிரை காப்பாற்ற உருக்கமுடன் கேட்டுக்கொண்டார் ராஜாஜி. டாக்டர் அம்பேத்கர்: பாபுஜி இவ்வளவு சீக்கிரத்தில் இந்த அவசரமான முடிவுக்கு வருவார் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. மரியாதைக்குரிய ராஜாஜி அவர்களே! நீண்டகாலமாக எங்களை ஏமாற்றி வந்த நீங்கள் மீண்டு;ம் ஏமாற்றவே வந்திருக்கிறீர்கள். இந்த நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி என்னை ஒரு சங்கடமான நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருப்பதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்.

நான் உங்களோடு ஒத்துப்போவது மூலமாக என் சமூக மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சில கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து காந்திஜி டாக்டர் அம்பேத்கர் கையொப்பமிட்டனர். இதுதான் வரலாற்று சிறப்புமிக்க பூனா ஒப்பந்தமாகும்.

செப்டம்பர் மாதம் 26-ம் தேதி 5-15 மணிக்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் கொடுத்த பழரசத்தை பருகி காந்திஜி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். உயிர் காப்பாற்றப்பட்டது. விடுதலை அடைந்தது இந்தியா.

டாக்டர் அம்பேத்கர் அன்று வட்டமேஜை மாநாட்டில் எந்த சந்தேகத்தை கிளப்பினாரோ அது இன்று சுதந்திர இந்தியாவில் நீக்கமற நிலைத்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே அருமை நண்பர்களே! காந்திஜி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை இந்தியாவில் எப்படியெல்லாம் நடத்தினார் அதற்குரிய காரணங்கள் என்ன என்பதற்கு பல்வேறு சம்பவங்களை நான் இங்கு உங்களுக்கு நினைவுபடுத்தினேன். எனவே, வேத காலத்திலும் காந்திஜி வாழ்ந்த காலத்திலும் தீண்டாமை கொடுமைகள் எப்படியிருந்தது அவைகளை போக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள், அணுகிய முறைகள் இவைகளை நாம் இங்கு அறிய முடிகிறது.

இன்றைக்கும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வருகிற பல சம்பவங்களை நாம் மறந்தே விடுகின்றோம். அப்படி மறந்து போன சம்பவங்களில் ஒன்றை இங்கு நினைவுபடுத்தி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பாபு ஜகஜீவன்ராம் அரிஜன மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர். இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது காசியில் டாக்டர் சம்பூரணானந்து அவர்களின் சிலையை திறந்து வைத்தார். விடுவார்களா? இந்த சதானிகள் இந்த செய்தியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலை தீட்டுபட்டுவிட்டதென்று ஊர் உலகத்துக்கு பிரகடனப்படுத்தி கங்கைக்கு சென்று புனித நீர் கொண்டுவந்து சிலையைக் கழுவி சுத்தப்படுத்தியதை நீங்கள் மறந்தாலும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நான் எப்படி மறக்க முடியும்?

இந்த நாட்டில் சட்டங்கள் இருந்தன என்ன செய்தது? அது நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தது. பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கே இந்த கதி என்றால் என்னைப் போன்ற சாமானியனுடைய நிலையை நான் இங்கு எண்ணிப்பார்க்கிறேன, தயவு செய்து நீங்களும் எண்ணிப்பாருங்கள்.

நான் இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். காந்திஜி, நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, என். ஜாகீர் உசேன் இவர்கள் எல்லாம் மறைந்தபோது அவர்களுடைய பூத உடல்களை ஏற்றுக்கொண்ட டெல்லி பூமி பாபு ஜெகஜீவன்ராம் பூத உடலை மட்டும் - அது ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதற்கு பல காரணங்களை கண்டுபிடித்து சொல்லலாம் நீங்கள் - நாங்கள் நம்பக்கூடிய வகையில்!

அருமை நண்பர்களே!

சமூக முன்ளேற்றத்திற்கு சமுதாய மாற்றத்திற்கு - ஜாதி தீண்டாமை ஒழிவதற்கு இது வழிவகை செய்யுமென்று நீங்கள் நம்புகிறீர்களா?

தீண்டாமை கொடுமையிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருக்கின்றன. அச்சட்டங்கள் என்ன சொல்கிறது? நமது பாரத நாட்டில் சட்டங்களுக்கெல்லாம் அடிப்படைச் சட்டம் இந்திய அரசியல் சட்டமாகும். இந்திய அரசியல் சட்டத்திலும் குறிப்பாக மூன்றாவது பாகம் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அரசியல் சட்டத்தினுடைய மூன்றாவது பாகம், அரசியல் அடிப்படை உரிமைகளை விளக்கி கூறுகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசே நினைத்தாலும் கூட மீறவோ அல்லது பறிக்கவோ முடியாத அளவிற்கு, பாதுகாப்புகளும் அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அரசியல் சட்டத்தினுடைய 13 வது ஷரத்தின் படி மூன்றாவது பாகத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை குறைக்கக்கூடிய அல்லது பறிக்கக்கூடிய எந்தச் சட்டத்தையும் அரசு உருவாக்கக் கூடாது. அப்படி மீறி உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் செல்லத்தக்கவையல்ல என்று கூறுகிறது.

மேலும், அரசியல் சட்டத்தினுடைய 32 வது 326 வது ஷரத்துகளின்படி அடிப்படை உரிமைகள் மீறப்படும் அல்லது பறிக்கப்படும் வேளையில் பாதிக்கப்படுகிறவர்கள் முறையே உயர்நீதி மன்றத்திலும் அல்லது உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து உரிமைகளை தீர்வுகளை பெறலாமென்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அரசியல் சட்டத்தின் மூன்றாவது பாகத்தில் 17 வது ஷரத்தின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. அதனை எந்த வகையில் செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் சமூக ஊனம் சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். இந்த 17 வது ஷரத்தை மையமாகவும் ஆதாரமாகவும் கொண்டுதான் 1955-ம் ஆண்டு தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை 1976-ம் ஆண்டு பல திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவந்து 'வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்' என சட்டத்தின் பெயரையும் மாற்றிவிட்டனர். பொதுவாக சட்டங்கள் என்றாலே பல்வேறு ஓட்டைகளும் பலவீனங்களும் இருக்குமென்பது நமது அனுபவப்பூர்வமான கணிப்பு. ஆனாலும் வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை பொறுத்தவரை ஓட்டைகள் மிகக் குறைவாக உள்ள ஒரு சட்டமெனக் கூறலாம். இருந்தும், மிக மிகக் குறைவான அளவிலேயே இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி வருகின்றனர்.

தீண்டாமை குற்றங்கள் நமது பாரத நாட்டை பொறுத்தமட்டில் எல்லா மாநிலங்களிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் அது பரவி இருக்கின்றன. ஆயினும், தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களில் பெரும்பான்மையினர் வாழ்வியல் உரிமைகள் பாதுகாப்புச்சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதில்லை. இந்நிலைக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் அதி முக்கியமான காரணம் தீண்டாமை என்பது இங்கே சமூக அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது.

எனவே, அருமை நண்பர்களே!

காந்திஜியின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கை இங்கு வெற்றி பெறவில்லை. ஆனால் கோட்சேயை உருவாக்கிய மனுதர்மம் - அதன் வெளிப்பாடு மதவெறி ஜாதி வெறி வெற்றிப்பெற்று வருகிறது.

வேத காலம் தொட்டே இந்து மதத்தில் உயர் சாதி இந்துக்கள் மனுதர்மம் தமக்களிக்கப்பட்டிருக்கும் சமூக சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உழைக்கும் வர்க்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஒரு பெரும் பகுதி மக்களை தீண்டப்படாதவர்களாக பிரித்து, ஒதுக்கி வைத்து, இழிவுபடுத்தி அவமானப்படுத்தி, தமக்கு நிரந்தர அடிமையாக்கி இன்று ஏகபோகமாக வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் உயர் ஜாதி இந்து சமூக கூட்டமைப்பிலிருந்து - அதாவது இந்து மதத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே தீண்டப்படாத மக்களை இழிவு நீக்கி வாழ வைக்கும்.

சுதந்திர இந்தியாவின் நிரந்தர அடிமைகள்

சகோதரர்களே!

நமதுநாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் ஆகியும் நமது நிலை உயரவில்லை. இன்னும் தீண்டத்தகாத மக்களாக வேண்டாத இனமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம். ஜாதி இந்துக்கள் என்பவர்கள் உயர்ந்த ஜாதியினர். நாம் இந்துக்களாம்: ஆனால் தாழ்ந்த ஜாதியாம். நமது சமூக மக்கள் இறந்துவிட்டால் பிணங்களைக்கூட பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாத கேவலமான நிலையில் நாம் இருக்கிறோம்.

உதாரணமாக, 1985-ம் ஆண்டிவ் தஞ்சை மாவட்டத்தில் வலங்கைமானில் மாண்புமிகு அமைச்சர் விஜயலட்சுமி அவர்கள் ஒரு பாலத்தை திறந்து வைத்தார்கள். பாலம் திறந்து ஒரு சில மாதங்களுக்கு பின்பு, அதன் பக்கத்திலிருந்த அரிஜன குடியிருப்பில் ஒரு முதியவர் இறந்துவிட்டார். அவரது உடலை சுடுகாட்டிற்காக எடுத்துச் செல்கிறார்கள், வழியிலேயே அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பாலம்: அதன் வழியே பிரேதம் கொண்டு செல்லப்படவேண்டும். ஆனால், பிணம் கொண்டு செல்ல முடியாத இக்கட்டான நிலை, திகைத்து நிற்கின்றனர் அரிஜன மக்கள். பாலத்தின் முனையில் ஒரு பெரிய கூட்டம் ஆத்திரத்தோடும் ஆயுதங்களோடும் கூடி நிற்கிறது. இந்த பிரேதத்தை இந்த பாலத்தின் வழியே கொண்டு செல்லக்கூடாது என்று வழி மறைக்கிறது.

' ஏனய்யா நமது அரசாங்கம் கட்டிய பொதுவழி தானே, நாங்கள் போகக்கூடாதா? ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்டதும் ஆவேசத்துடன் பலாத்காரத்தில் இறங்கினர். இந்த நிலைமையை அறிந்த காவல் துறையினரும் மற்ற அதிகாரிகளும் அங்கே வந்தனர். அரிஜன மக்களின் நியாயக் குரலைக் கேட்ட அதிகாரிகள் ஜாதி இந்துக்களிடம் நியாயத்தை எடுத்துச்சொன்னார்கள். பிணம் கொண்டு போவதைத் தடுக்காதீர்கள் என்று சொன்னார்கள். அதிகாரிகள் கூறிய நியாயத்தை அவர்கள் அலட்சியம் செய்தனர். மதிக்க மறுத்து விட்டனர்.

நேரம் செல்ல செல்ல இருதரப்பிலும் மக்கள் திரள்கின்றனர். பெரும் கூட்டமாகிவிட்டது. பதட்டநிலை உருவாகிறது. மீண்டும் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள். எச்சரிக்கை செய்தார்கள். ஜாதி இந்துக்கள் கேட்கத் தயாராக இல்லை. ஜாதி இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் அவர்களை விட்டுவிட்டு அரிஜனங்களைப் பார்த்து நீங்கள் விட்டுக் கொடுத்து ஒதுங்கிப் போய்விடுங்கள் என சமாதானப்படுத்தினர். வேறு வழியின்றி சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்ட பிணத்தைத் திரும்பக் கொண்டு வந்து இறந்தவருடைய வீட்டிற்கு முன்னாலேயே இறுதிச்சடங்கைச் செய்தனர்.

இந்த சம்பவம் எதைக் காட்டுகிறது? அரசாங்கம் கட்டிய பாலத்தில் கூட போக முடியாத நிலையில் அரிஜனங்கள் நிலை இருக்கிறதென்றால், நாமும் இந்துக்களே என்று பொதுவாகச் சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா? சகோதரர்களே! சிந்தித்துப் பார்ப்பீர். அரசாங்கத்தின் கடமை சட்டத்தைப் பாதுகாப்பது. ஆனால், அரசு அதிகாரிகளே இது போன்ற பிரச்சினையில் ஜாதி இந்துக்களுக்காக வளைந்து நெளிந்து கொடுக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊஞ்சனை என்னும் கிராமத்தில் அரிஜனங்கள் கோவில் விழா கொண்டாடினார்கள். விழாவிலே சாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேல்ஜாதி இந்துக்கள் வசிக்கின்ற தெரு வழியாக சாமி ஊர்வலம் சென்றது. அவ்வளவுதான் இதை ஜாதி இந்துக்கள் பார்த்தார்கள். அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஓடோடி வந்தனர். கூட்டம் சேர்ந்தது. உங்கள் சாமியை எங்கள் தெரு வழியாக கொண்டு செல்ல விடமாட்டோம். வந்த வழியைப் பார்த்து திரும்பிப் போங்கள் என்று அச்சுறுத்தினர். இது பொதுத் தெருவாயிற்றே, இது சாமி ஊர்வலம் தானே இதை கொண்டு போவதில் என்ன தப்பு என்று வாதாடினார்கள். ஜாதி இந்துக்கள் கேட்கவில்லை. ஒரே கலகம், இரத்தக்காயம், சாவு, பல அரிஜன வீடுகள் தீ வைத்து சாம்பலாக்கப்பட்டன. அந்தப் பகுதி அரிஜன வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது. அரசு அதிகாரிகள் அரிஜனங்களுக்கு ஆறுதல் கூறினார்களே தவிர வேறு எதுவும் செய்து விட முடியவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அரிஜனங்கள் தூக்கிச் செல்கின்ற சாமிக்குக் கூட அவர்கள் வசிக்கின்ற பகுதியில் நுழைவதற்குத் தடை என்ன அநியாயம் இது?

இன்னொரு சம்பவம். இதையும் தெரிந்துக் கொள்வோம். திருச்சி பக்கத்திலே ஒரு கிராமம். அங்கே மேல்ஜாதி இந்து ஒருவருடைய தோட்டத்திலுள்ள கிணற்றில் அரிஜன சிறுவர்கள் குளித்து வந்தனர். இதைப் பார்த்த தோட்ட உரிமையாளர் கிணற்றில் கீழ்ஜாதி பையன்கள் குளிப்பதா என்று குமுறினார். குதித்தார். அவரது கிணற்று தண்ணீரே தீட்டுப் பட்டுவிட்டதாக எண்ணி குமுறினார். ஒருநாள் அந்த கிணற்றிலே சிறுவர்களுடைய பிணங்கள் மிதந்தன. என்ன காரணம்? கிணற்றில் மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்தது. வழக்கம் போல் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவர்கள் பிணமாக மிதந்தனர். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் இந்திய சுதந்திர திருநாட்டில் இன்றும் நடந்து வருகிறது. எனவே, பரிதாபம், என்னே கொடுமை! பாரதத்தாய் பெற்றெடுத்த பிள்ளைகளில் இத்தகைய பேதமா?

தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள ஒரு வழக்கம். மேல் ஜாதி இந்து யாராவது இறந்து போனால், அந்தச் செய்தியை அவரது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு தெரிவிக்க அரிஜன மக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல சாவுக்கு மேளம் அடிக்கின்ற இழி வேலையையும் அரிஜனங்களே செய்யவேண்டும் என நிர்ப்பந்தபடுத்தி வந்தனர்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையர் ஆட்சியில் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டது. எக்காரணம் கொண்டும் அரிஜன மக்கள் விரும்பாத நிலையில் இப்படிப்பட்ட இழிவான வேலைகளைச் செய்ய அவர்களை நிர்பந்திக்கக் கூடாது என இரு தரப்பினர் ஒப்புக்கொண்டு நடைமுறையில் இருந்து வந்த ஏற்பாட்டிற்கு விரோதமாக அண்மையில் வேண்டுமென்றே அரிஜன மக்களுக்கு அவமானம் ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு வெளியூரிலிருந்து அரிஜன ஆட்களை வைத்து இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டு சச்சரவாகி சண்டையாக மாறி பாண்டியன் என்னும் பட்டதாரி இளைஞர், துப்பாக்கி சூட்டிற்கு பலியாகிவிட்டார். இதை முன்னின்று நடத்தியவர் ஒரு அரசியல் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அறியும்போது அளவு கடந்த வேதனையில் விம்முகிறோம்.

சாதிகள் இருக்கும் வரை தீண்டாமை தொடரும்

அருமைச் சகோதரர்களே!

நாமும், நமது முன்னோர்களும் இந்து மதத்தில் என்று நம் வாழ்க்கையைத் தொடங்கினோமோ அன்று தொட்டு மேல் ஜாதி இந்துக்களால் அவமானப்பட்டு வருகிறோம். இந்திய-நிலபிரபுத்துவ சனாதன ஆதிக்க சக்தியை எதிர்த்து நிற்க வலுவற்றவர்களாக, வெந்ததை தின்போம் விதி வந்தால் சாவோம் என்று வாழ்ந்த மக்களிடையே தோன்றிய சமூகப் புரட்சியாளார்களால் தொடங்கப்பட்ட போராட்டம் பல நூறு ஆண்டுகளாகியும் அது முற்றுப் பெறவில்லை. தொடர்கிறது.

அருமைச் சகோதரர்களே! நாம் வாழ்ந்து வரும் இந்து சமூக கூட்டமைப்புக்குள் எத்தனையோ முரண்பாடுகள் உண்டு. அதனால் உயர் ஜாதி இந்துக்கள் இன்று நமக்கெதிராக ஒன்றுபட்டு அணிசேர்ந்து நிற்கிறார்கள். மேல் ஜாதி இந்துக்களுக்கு கீழ் ஜாதி இந்துக்கள் அடிமையாக இருக்கவேண்டும். அவர்கள் இட்ட வேலையை, இழிவாக கருதும் தொழில்களை எதிர்ப்பின்றி விரும்பிச் செய்திட தொடர்ந்து நிர்பந்திக்கப்பட்டு வருகிறோம்.

இந்த வர்ணாசிரம தர்ம கொள்கையை ஆண்டவன் கட்டளையாகவும், வேதங்களின் சாட்சியாகவும் நியாயப்படுத்தப்பட்டு கடைபிடித்து வரும் விதியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பலம் பொருந்திய சமூகச் சட்டமது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது இந்துமதம் இருப்பது வரையிலும் சாதிகள் பாதுகாக்கப்பட்டு வரும். சாதிகள் இருப்பது வரையிலும் தீண்டாமை கொடுமை இருந்தே தீரும். இந்து சமூக அமைப்பில் இது, இங்கு யாராலும் மாற்ற முடியாக ஒரு விதியாகி விட்டது.

இதில் சீர்திருத்தம் - சமரசம் காண விரும்பியவர்கள் தனி மதம் கண்டனர். தனிமைப் பட்டனர். அல்லது தோல்வி கண்டனர். இதுதான் உண்மை.

அருமை நண்பர்களே!

காலத்தின் மாற்றத்தால் உலகில் இன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கால கட்டத்தில் நாமும் மனிதர்களே என்று சுயமரியாதைச் சிந்தனையால் - உணர்வால் உந்தப்பட்டு நம்மைப் பற்றியுள்ள கேடுபாடுகளை நீக்கிட நமது உரிமைக்காக சில சமயங்களில் அவர்களின் சாதி சமூகக் கட்டுப்பாட்டை மீறி முன்னேற முனையும் போது அவர்களால் நாம் காயப்படுத்தப்பட்டோம்.

ஆம்! கீழ் வெண்மணியும், விழுப்புரமும், புளியங்குடியும், ஊஞ்சனையும் சங்கனாக்குளமும் இந்திய நில பிரபுத்துவ சனாதன இந்துச் சாதிக் கொடுமைக்கு பலியாகிய நமது சகோதரர்களின் சவக்குழியில் கட்டி எழுப்பப்பட்ட நினைவுச்சின்னங்களாகும். அதைத் தொடர்ந்து நடைப்பெற்று வரும் சம்பவங்கள் ஒன்றா இரண்டா?

தீண்டாமைக் கொடுமை தென் மாவட்டங்களில் குறிப்பாக இராமநாதபுரம், நெல்லை மதுரை மாவட்டங்களில் அதிகமாக இருந்து வருகின்றன. இப்பொழுது அண்ணா மாவட்டமாக இருந்து வரக்கூடிய வேடச்சந்தூரை ஒட்டிய கிராமங்களில் அதன் கொடுமை தீவிரமாகவே உள்ளது. பி. புதுக்கோட்டை கிராமத்தில் தேநீர் கடைகளில் தொங்குகின்ற குவளைகளை கழுவி தேநீரைக் குடித்துவிட்டு திரும்பக் கழுவி வைத்துவிட வேண்டும்.

வேடச்சந்தூர் தாலுகாவில் பூத்தம்பட்டியில் நிலைமை இன்னும் விசித்திரமாக இருக்கிறது. ஊரிலுள்ள தேநீர்க் கடைகளில் தனி கிளாஸ்கள் இருந்தாலும், டீ கடைக்கு முன்னால் இருக்கும் திண்டுகளிலோ அல்லது உயர்வான இடங்களிலோ உட்கார்ந்து டீ குடிக்க அனுமதிப்பதில்லை.

மதிப்பட்டி என்னும் கிராமத்தில் பொதுவான கிணற்றிலிருந்து தான் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்கவேண்டும். ஆனால் அரிசன மக்கள் தண்ணீரை இறைக்க அனுமதிக்கப்படுவதில்லை. நேரடியாக போய் எடுத்துவிட முடியாது. மேல் ஜாதி இந்துக்கள் எட்ட இருந்து விடும் தண்ணீரை குடத்திலோ அல்லது பாத்திரத்திலோ எடுத்து செல்லவேண்டும்.

அரசாங்கக் காரியமாக வரி வசூலிப்பது போன்ற வேலைகளில் இருக்கும் தலையாரி போன்ற அரிசன அரசு ஊழியர்கள் கிராமத்திற்குள் வந்தால், செருப்பை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு தான் ஊருக்குள் வர வேண்டும். அண்டையில் உள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தால் கட்டப்பட்டிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஐந்து நல்லிகள் உள்ளன. பொதுமக்களுக்காக உள்ள இந்த நல்லியிலிருந்து அரிசனங்கள் விருப்பம் போல் தண்ணீர் எடுத்துவிட முடியாது. இந்த நல்லிகளில் ஒரு ஒரத்தில் இருக்கும் நல்லியில் மட்டும் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம்.

வெள்ளனம்பட்டி என்ற கிராமத்தில் சத்துணவுக் கூடம் ஒன்று இருக்கிறது. இதில் பணியாற்றும் ஆயாக்களில் ஒருவர் அரிசன சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சமையலில் விறகு எரிப்பு போன்ற காரியங்களோடு ஒதுங்கிக் கொள்ளவேண்டும். தப்பித் தவறி சமைத்துவிட்டால் சாதி இந்துக்கள், தங்களது குழந்தைகளை சத்துணவு சாப்பிட அனுப்பமாட்டார்களாம்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சுவணம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், அரிசனங்களுக்கு என்று குறிப்பிட்ட தொழில்கள் இருக்கின்றன. சீர்வரிசைக்கோ அல்லது குழந்தை பிறந்த வீட்டுக்கோ, அரிசி மற்றும் பலகார கூடைகள் கொண்டு போனால், சிறிது கூலியை அரிசனங்களுக்கு கொடுக்கிறார்கள். சாதி இந்துக்கள் யாராவது இறந்து போனால் கூட துக்கச் செய்தியை சொல்வதும் இவர்கள் தான். இத்தகைய வேலைகளுக்கு கூப்பிட்டு அரிசனங்கள் வர மறுத்துவிட்டால் பெரிய பிரச்சினையே உருவாகி அடிக்கடி ரகளையே உருவாகி விடுகிறது.

தொட்டம்பட்டியில் காளியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அக்கோயிலில் அரிசனங்கள் வழிபடவோ, வணங்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. சாமிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றால் கூட உயர்சாதி இந்துக்களின் தயவை நாடி அவர்கள் மனம் வைத்தால் தான் அரிசனங்கள் சாமிக்கு அர்ச்சனை போன்ற வழிபாடுகள் செய்யமுடியும்.

மாரியூர், நரிப்பூர், வேம்பார் போன்ற கிராமங்களிலே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரிசன பெண்கள் மாராப்பு போட முடியாது. ஆண்கள் வேட்டியை முழங்காலுக்கு கீழ் கட்ட முடியாது. மேல் துண்டு போடமுடியாது. அரசியல் கட்சிகளில் அதன் சாதி இந்துக்களின் அடியாளாக இருந்து அவர்களின் நல்லெண்ணத்தை பெற நம்மைக் காட்டிக்கொடுத்து பதவியும் சுகமும் பெற்றுள்ளார்கள். நமக்கு தியாகம் செய்து பெற்ற பதவியும், சுகமும் உயர்வும் அல்ல - அவர்கள் இங்கு பெற்று அனுபவிப்பது. எனவே, நமது இனத்தைச் சார்ந்த சமுதாயத் தலைவர்களை நம்பி பலன் இல்லை.

கிறிஸ்தவ - பௌத்த மதங்கள் இழிவு நீங்க வழி காட்டுமா?

அரசியல் கட்சி தலைவர்களினால் நமது சமுதாய தலைவர்களினால் சமூக இழிவை போக்க இயலாது என்றால் கிறிஸ்துவ பௌத்த மார்க்கம் சேர்ந்தால் இழிவு போய்விடுமா என்ன? கிறிஸ்தவ மார்க்கம் - சாதி அமைப்பிலோ, சமூக அமைப்பிலோ சமூக இழிவிலோ நம்பிக்கை கொள்ளாதது. ஆனால், இந்திய நாட்டில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்ப முன்வந்தவர்கள் இந்துக்களின் எல்லா பழக்கவழக்கத்தையும் அனுமதித்ததன் பலனாக கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயும் சாதிகள் தோன்றின. அந்தோணி பர்ணான்டஸ், மரியசூசை செட்டியார், லூர்துசாமி பிள்ளை, சந்தோச நாடார். இன்று கிறஸ்தவ மதம் ஏறக்குறைய சிலுவை அணிந்த இந்து மதமாக மாறிவிட்டது.

இதில் வேதனை என்னவென்றால், கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்த நமது சகோதரர்கள் அங்கு இந்து மதத்தில் இருந்த மாதிரி ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். சர்ச் வழிபாட்டிலே கூட வேற்றுமை காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் கிறிஸ்தவர்கள் பிளவுபட்டு மனமொடிந்து மதம் மாறி அங்கே அதிசய விநாயகர் தோன்றியது நாடறியும்.

ஆம், இப்போது அங்கே பிள்ளையார் போய் பெத்த பெருமாள் வந்த கதை தான்.

திருச்சி கிறிஸ்தவ இடுகாட்டில், பிள்ளைமார் இடுகாடு ஆதி திராவிடர் இடுகாடு என்று பிரிக்கப்பட்டு சுவர் கூட எழுப்பப்பட்டுள்ளது. எனவே, சமூக இழிவு வேறு உருவத்தில் கிறிஸ்தவ மார்க்கத்திலும் இருக்கவே செய்கிறது. அந்த மார்க்கமும் நமது இழிவை போக்கிட முடியவில்லை. இந்து மத-ஜாதி கொடுமைகள் தாங்காமல், சமூக இழிவு நீங்க பௌத்த மார்க்கமே சிறந்தது என்று 7 லட்சம் மக்களுடன் பௌத்த மதம் சேர்ந்தார் டாக்டர் அம்பேத்கர்.

அவர் பௌத்த மதம் சேர்வதற்கு முக்கிய காரணம் என்ன?

இந்தியாவில் அன்று இந்து முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்த நேரம். இங்கு ஜாதி இந்துக்களின் கொடுமையில் இருந்து நம் சமூக மக்களை பாதுகாக்க அவர் எண்ணினார். பக்கத்தில் சீனா, ஜப்பான், பூட்டான், நேபாள், இலங்கை போன்ற நாடுகள் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள். பௌத்த மதம் இந்தியாவில் தோன்றியது. அவர்கள் உதவி நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று பெரிய திட்டத்தையே வைத்திருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தமதம் சார்ந்த சில நாட்களுக்குள் காலமாகிவிட்டார். இங்கேயும் பௌத்த மதத்தில் சார்ந்த நமது மக்களை அங்கு நியூ புத்திஸ்ட் என்று அழைக்கிறார்கள். ஆகவே, பௌத்த மதத்திலும் இழிவு நீங்க வாய்ப்பில்லை.

எனவே. நமது சமூக இழிவு நீங்க சமுதாய மாற்றம் ஏற்பட்டு இன்று நமக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்கு விஞ்ஞான மெஞ்ஞான பூர்வமான இறுதி தீர்வு காண 'இஸ்லாம் மார்க்கம' நமக்கு உதவுமா? வழி காட்டுமா? இஸ்லாத்தை படிப்போம்! அதை ஆழமாக சிந்திப்போம்!!

இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் ஆராயட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.

மனித இனத்தை ஒன்றுபடுத்தும் இஸ்லாம்!

மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் செய்த சேவைகள் மகத்தானவை. அதை நாம் கண்ணியத்தோடு ஆராயும் போது தற்கால உலகை கண்ணோட்டமாக வைத்து பார்க்காமல் இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நமது சிந்தனையை கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் இஸ்லாத்தின் பெருமையையும், அதன் சேவையையும் நம்மால் உணரமுடியும்.

கல்வி, அறிவு மற்றும் நாகரீகம் வளர்ச்சியடையாத விஞ்ஞானம் வான சாஸ்திரம் என்னவென்றே தெரியாத ஒரு பாகத்து மக்கள் மறு பாகத்தை அறிந்து கொள்ளாத நிலையில் மக்கள் இருந்தனர். பொதுவாக சரித்திரத்தில் அக்காலத்தை இருண்ட காலம் என்பர். அநாகரீகம், காட்டுமிராண்டித்தனம், அதர்மம் நிறைந்த காலமாக அதை வர்ணிக்கப்படுகிறது. அதற்கு மகுடம் வைத்தாற்போல் அன்றைய அரேபிய நாட்டில் மக்கள் மூட பழக்கவழக்கத்தில் மூழ்கியிருந்தனர்.

அந்த காலத்தில் தான் இறைவனின் பிரதிநிதியாக, தீர்க்கதரிசியாக பரிசுத்த முகமது (ஸல்) அவர்கள் உலகின் மத்திய பாகமான அரேபிய பாலைவனத்தில் தந்தை அப்துல்லாஹ்வுக்கும், தாய் ஆமீனாவுக்கும் மகனாக பிறந்தார்கள். சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்த நாயகம் அவர்கள், தாய், தந்தையரை இளம் வயதில் இழந்தார்கள். தந்தை வழி வந்தோரின் அரவணைப்பில் வளர்ந்த நாயகம் அவர்கள் ஏழ்மையில் வாழ்ந்ததினால் கல்வி அறிவு அற்ற நிலையில் வளர்ந்தார்கள். இருப்பினும், புத்தி கூர்மையும் தெளிவான ஞானமும் அளப்பறிய அறிவாற்றலும் கொண்ட நாயகம் அவர்கள் மனிதாபிமான மேலீட்டால் பிறருக்கு பெரும் தொண்டு செய்து மங்கா புகழ் பெற்ற அல்-அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பட்டத்தை மக்களாலே பெற்றார்கள்.

மனித சமுதாய அமைப்பிற்கு தான் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி நடைமுறையில் இருந்து வந்த மக்களுக்கு முற்றிலும் மாறாக வாழ்ந்தார்கள். பரிசுத்தமான நிலையிலும் உயர்ந்த அமைப்பிலும் ஏக இறைவனைப் பற்றிய சிந்தனையிலும் வளர்ந்து வந்த நாயகம் அவர்களுக்கு தமது 40 வயதில் இறைவன் புறமிருந்து நபிப்பட்டம் அருளப்பட்டது. அன்று தொட்டு நபி மணிக்கு 63 வயது வரை 23 ஆண்டுகள் பரிசுத்த திருக்குர்ஆன் என்ற இறை வாக்குகள் சிறுக சிறுக அருளப்பட்டது.

இடைவெளி விட்டும் தொடர்ச்சியாகவும் 23 ஆண்டுகள் கொண்டு நபி மணி மூலம் பரிசுத்த குர்ஆன் என்ற கிரந்தம் உலகிற்கு அருளப்பட்டது. ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள் என்ற தத்துவத்தை இதன் மூலம் நபிமணி அவர்களால் உலகிற்கு பிரகடனப்படுத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு அன்று உண்டாயிற்று. உற்றார், உறவினர், நண்பர்கள் நாட்டு மக்கள் ஆகிய எல்லோரும் நபிகள் நாயகம் அவர்களை எதிர்க்கவும், துன்புறுத்தவும் தொடங்கினர்.

ஆனால் நாயகம் அவர்கள் மனைவியாகிய கதீஜா பிராட்டியும் அவரைத் தொடர்ந்து ஏழை எளியோரும், இளைஞர்களும், அடிமைகளும் தான் நபியவர்களின் கொள்கைகளை முதன்முதலில் ஒப்புக்கொண்டனர். கற்றவர்களோ, படித்தவர்களோ, பணம் படைத்த செல்வந்தர்களோ கோத்திரப் பெருமை பேசி நாயகத்தின் கொள்கைதனை செவி மடுக்க மறுத்துவிட்டனர். மக்கத்து அதிபதியும் அவர் தம் அடியாட்களும் நபிகள் நாயகத்திற்கு எல்லையில்லா துன்பத்தினையும் தினம் தினம் செய்து வந்தனர்.

துன்பத்தையும் துயரத்தையும் தாங்கிக் கொண்டு தம் கொள்கைதனை தீவிரமுடன் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பரிசுத்த திருக்குர்ஆனின் கொள்கைகளை பிறருக்கு பிரச்சாரம் செய்ததோடு அல்லாமல் தானும் தன் தோழர்களும் அதனை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

நபிகள் நாயகம் அவர்களை பின்பற்றிய அந்த சிறிய முஸ்லிம் சமுதாயமானது எல்லாவிதமான துன்ப துயரங்களையும் எதிர்ப்புகளையும் வெற்றிக் கொண்டு வாழ்க்கையின் எல்லா நிலையிலும் எல்லா மட்டத்திலும் எல்லா துறையிலும் முன்னேறி உலகிற்கு முன்மாதிரியாக சிறந்து பெருகி அரேபியா முழுவதும் ஆட்கொண்டது. இரத்தவெறி பிடித்த அநாகரீகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து வந்த அரேபிய சமுதாயத்தை பரிசுத்த குர்ஆனின் கொள்கைகளுக்கு இணங்க தான் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்த அறிவுச்சுடராகவும், வீரத்தின் பாசறையாகவும், அறிவு ஆராய்ச்சியின் சுரங்கமாகவும் மாற்றி அமைத்தார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் மேன்மையை எல்லா மட்டத்திலும் அரசியல், பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், கலை, கலாச்சாரம், சமூக நலம், நிர்வாகம், நீதி, வீரம், வாணிபம், விளையாட்டு ஆகிய எல்லா துறைகளிலும் ஒப்புயர்வற்ற மேலான சிறப்புமிக்க ஒரு புதிய உலகை சிருஷ்டித்து அக்கடல் முதல் இக்கடல் வரை, ஸ்பெயின் முதல் சீனா வரை உலகை இஸ்லாமியக் கொடியின் கீழ் கொண்டு வந்தார்கள்.

இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் என்று பொருள், முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை கைக் கொண்டு முற்றிலும் இறைவனுக்கே (குர்ஆனின் சட்டத்திட்டங்களுக்கு) கீழ்ப்பட்டு நடப்பவர்கள் என்று பொருள்.

பரிசுத்த குர்ஆன் மனித சமூகத்திற்கு 'ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள்' என்ற மகத்தான தத்துவத்தை போதிப்பது மட்டுமல்ல. நடைமுறையில் ஒரு ஐக்கியமான சகோதர பாசத்தையும், சகிப்புத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் அது வலியுறுத்துகிறது.

இஸ்லாத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள், அகில உலக சாந்தி சமாதான, சகோதரத்துவத்தை உண்டுபண்ணி, உலகளவில் அது ஒரு ஜீவன் உள்ள இரத்த உணர்ச்சியை உறவை உண்டாக்கிவிடுகிறது.

இஸ்லாம் தவிர ஏனைய மதங்கள் மனித சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் நடைமுறையில் மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுத்துவதையும் உயர்வு தாழ்வு சாதி மனப்பான்மையை ஏற்படுத்துவதையும் தவிர்க்கமுடியவில்லை.

ஆனால் இஸ்லாத்தின் பரிசுத்த கிரந்தம் சொல்லுகிறது. மனிதனுக்கு மனிதன் வணங்கத் தேவையில்லை. மண்டியிட அவசியம் இல்லை. சிரம் தாழ்த்த வேண்டியது இல்லை என்ற உணர்வினை அது ஊட்டி விடுகிறது.

எல்லாம் வல்ல பரம் பொருளாகிய அந்த அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் தலையினை சாய்த்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் பிற மனிதர்களின் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் மனித மூளையை அடகு வைக்கும் ஆதிக்கம் சுதந்திரச் சிந்தனையைத் தேய்க்கும் மனிதக் கட்டுப்பாடுகள் இ;ங்கே தூள் தூளாக நொறுங்கி விடுகின்றன. அடிமைச் சங்கிலிப் பொட்டித் தெறிக்கின்றன.

சுதந்திரம் சமத்துவம் பெற்று மனிதன் இங்கு முழு நிலவு ஆகின்றான். சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ அவன் இங்கு கூன் நிமிர்ந்து நிற்கிறான். மனிதகுலம் இதுவரைக் கண்டிராத மனித குல சுதந்திர சாசனம் மாக்ன கார்டாவை விட மிக உயர்ந்த சாசனம் திருக் குர்ஆன் ஒன்றே.

முகம்மது (ஸல்) மானிட மக்களின் நல்வாழ்விற்காக கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாம் சமுத்திரத்தை போன்றதாகும். நதிகளும், ஆறுகளும், கால்வாய்களும், கழிவு நீர் சாக்கடைகளும், சமுத்திரத்தில் கலக்கும் போது அது ஒரே தன்மையுடைய சமுத்திரத் தண்ணீராக சங்கமமாவது போல் உலகில் எல்லா இன சாதி, மொழி, நிற உயர்வு தாழ்வு மக்களும் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமில் சங்கமம் ஆகி முஸ்லிம் என்ற ஒரே சமூக மக்களாக இன, சாதி வேற்றுமை காண முடியாத ஒரே சக்தியாக ஆகி விடுகின்றனர்.

எனக்கு கிடைத்த அனுபவங்கள்

நான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.

நாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.

நாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.

இரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் 'அலைக்கும் சலாம்' என்று சொன்னேன்.

அங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள்.

அவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.

இரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை சந்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர் கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளுர உணர்ந்து கொண்டிருந்தேன்.

நான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.

இன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.

சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் 'கிராத்' ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது.

இப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர்; அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது மேலும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.

அடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன்.

அங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்த சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன்.

இறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன். அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

புறப்படுவோம் இஸ்லாத்தை நோக்கி

தீண்டாமை, சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வு ஆகிய சாபக்கேடுகள் எச்சமூகத்தில் தலைவிரித்தாடுகிறதோ அச்சமூகத்திற்கு ஒரு போதும் உய்வும் இல்லை, உயர்வும் இல்லை.

மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதும் சிலரை உயர்ந்தவர்களாக கருதுவதும் அவ்வேற்றுமை நிறம், இனம், ஆகியவற்றின் பேரால் இருப்பினும் சரி, அல்லது பணம், தேசம், சமுதாயம் ஆகியவற்றின் பெயரால் இருப்பினும் சரி, உண்மையில் சமூகத்தின் முகத்தில் அது ஒரு கோரத்தழும்பேயாகும்.

நாம் இங்கு சிந்தித்துப் பார்த்தால் தீண்டாமை ஏற்றத்தாழ்வு ஆகியவை இயற்கைக்குப் புறம்பானவை என்ற உண்மையை நாம் உணரமுடியும். இன்று நமது பாரத நாட்டை பொறுத்தமட்டில் எல்லா மாநிலங்களிலும் தீண்டாமைக் கொடுமை அதன் நர்த்தனம் நம்மை அலைக்கழிக்க வைத்துள்ளது.

இங்கு மனிதர்களை மிருகங்களை விட இழிவாக - கேவலமாக - அருவருப்பாக கருதுகின்றனர். இதற்கான சான்றுகள் நாமிங்கு எத்தனையோ காணமுடியும்.

ஒரு பாத்திரத்தில் நாய் ஒன்று வாய் வைத்து விட்டால் கூட பலர் அதை சகித்துக் கொள்கிறார்கள். ஏன் - மனதில் எவ்வித அருவருப்பின்றி அப்பாத்திரத்தை உபயோகிக்கவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். ஆனால் யாரேனும் ஒரு அரிசன மனிதன் தன் கரத்தால் தொட்டவுடன் அப்பாத்திரம் அசுத்தத் தன்மையடைந்து விடுகிறதாம் - அதாவது தீட்டுப்பட்டு விடுகிறதாம்.

ஆண்டவனின் படைப்பில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே, ஆண்டவனின் அடிமைகளே! அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த வம்சத்தை, எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் படித்தவனாகட்டும், பாமரனாகட்டும் பணக்காரனாகட்டும் ஏழையாகட்டும், 'அனைவரையும் இறைவனே படைத்திருக்கிறான்' அவன் தன் அருட்கொடைகளை எல்லா மனிதர்களுக்கும் சேர்த்தே படைத்திருக்கிறான்.

காற்று, நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், இன்னபிற பொருள்களையும் தன் அருட்கொடையால் மனித சமுதாயத்திற்கு அவன் வழங்கியுள்ளான். மேலும், எவ்வித பாகுபாடுமின்றி எல்லா மனிதர்களுக்கும் வாழுதல், இறத்தல், உண்ணுதல், உறங்குதல், பேசுதல், கேட்டு உணர்ந்து கொள்ளுதல் போன்ற ஒரே விதமான வழிமுறைகளை அருளியிருக்கிறான்.

எல்லா மனிதர்களின் நாடி நரம்புகளிலும் ஒரே விதமான இரத்தம் தான் ஒடிக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட பெரிய விஷயம் என்னவென்றால் - உலக மக்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் - ஆதம் ஹவ்வாவின் மக்களே ஆவர் என்று மார்க்கம் சொல்கிறது. தெளிவுபடுத்துகிறது.

எனவே அனைவரும் ஒரே மனித இனத்தை ஒரே குலத்தைச் சார்ந்தவர்களாவர். அப்படி என்றால் ஒருவர் மற்றவரைவிட உயர்வும், மேன்மையும் கொண்டாடும் உரிமை எப்படி எங்கிருந்து பெறமுடியும்?

- இதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது.

ஆனால் இஸ்லாம் மனிதர்களிடையே ஒரே வேற்றுமையை மட்டும் அது ஏற்றுக்கொள்கிறது. அது என்னவென்றால் அதுதான் நல்லவனுக்கும், தீயவனுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேற்றுமை அதாவது இறையச்சமுள்ளவனுக்கும் இறையச்சம் இல்லாதவனுக்குமுள்ள வேறுபாடு.

- என்று சிறப்பாக இஸ்லாம் சொல்லுகிறது.

இறையச்சமுள்ள நல்ல மனிதன் இறையச்சமற்ற தீய மனிதனைக் காட்டிலும், உயர்ந்தவன், மேலானவன் கண்ணியத்திற்குரியவன் என்றும் அது கூறுகிறது.

இந்த ஒரே வேறுபாட்டைத்தான் தெளிந்த ஆரோக்கியமான மேலான அறிவு ஞானம் ஏற்றுக்கொள்கிறது. இந்த உண்மையை உலகில் சிந்தனை தெளிவுள்ள எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

மற்ற எல்லா வர்ண-இன பாகுபாடுகளும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தவறானவையே ஆகும் என்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. அவற்றை அழித்தொழிப்பதற்கும் அதன் மூலத்தை வேரும் வேரடி மண்ணுடன் கெல்லியெறிவதற்கும் நம்மை வீறு கொண்டெழச் செய்கிறது இஸ்லாம்.

இதனை திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக பின்வருமாறு அறிவுறுத்துகிறது.

'மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் - பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்' - என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது.

'உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அல்லாஹ்விடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.

'நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்' (44:13) என்று திருமறை கூறுகிறது,

இங்கே மனிதரை இறையச்சம் கொள்ளச் செய்து நேர் வழிப்படுத்தி, மனிதப் பிறப்பின் நோக்கத்தை தெளிவுப்படுத்துகிறது.

- நமக்கு ஏற்பட்டுள்ள வர்ண பாகுபாடுகளை - மனித ஏற்றத்தாழ்வுகளை - ஆண்டான் அடிமை - தீண்டாமையின் விளைவாக எழும் சமூக ஊனத்தால் ஏற்பட்டுள்ள காயத்தை குணப்படுத்தும் மாமருந்து தான் நமக்கு மேலே குறிப்பிட்டுள்ள இறை வசனம்.

இனம் நிறம் மொழி, நாடு தேசியம் ஆகிய விரோத குரோதங்களுக்கும், மனமாச்சரியம்தான் நாட்டில் குழப்பங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்து வந்திருக்கின்றன.

- இத்தைகைய படு மோசமான வழி கேட்டினை - திருமறை தகர்த்தெறிகிறது.

பண்டைக் காலம் தொட்டு இன்று வரை மனிதன் ஒவ்வொரு காலத்திலும், மனித பண்பினை உதாசீனப்படுத்திவிட்டு தன்னைச் சுற்றிலும் சிறுசிறு எல்லைகளை வகுத்து வந்துள்ளான்.

- அந்த வட்டார எல்லைக்குள் பிறந்து வளர்ந்தவர்கள் மட்டுமே தன்னைச் சார்ந்தவர்கள் என்றும், அதற்கு வெளியே பிறந்தவர்கள் தன்னைச் சாராத அந்நியர் என்றும் நிர்ணயித்துக் கொண்டான்.

- இந்த எல்லைகள் அறிவுப்பூர்வமாக ஒழுக்கப்பூர்வமாக அல்லது பூகோள அடிப்படையில் அமைத்துக்கொண்டவை அல்ல. மாறாக தற்செயலான பிறப்பின் அடிப்படையிலானதாகும்.

- சில சமயங்களில் ஒரு குடும்பம் கோத்திரம் அல்லது இனம் ஆகியவற்றில் பிறப்பதுவே இவற்றுக்கு அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது.
- இதிலிருந்து திரிபுகள் உண்டாகின்றன.

மனிதன் பிறப்பு-இடம், மொழி, இனம் கோத்திரம் இவைகளினால் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அணுகும் முறைகளினால் எழுந்த வேறுபாடுகள், காலகாலமாக நிலைப்பெற்று வந்துள்ளன. அதன் அடிப்படையில் தன்னை சார்ந்தவர்கள் மீது அன்பு செலுத்துவதும், மற்றவர்கள் மீது பகைமை, துவேசம் காட்டுதல், பிறரை இழிவாகக் கருதுதல், மற்றவர்களுக்கு அநீதி இழைத்தல், பிறரை அடிமைப்படுத்துதல் போன்ற கோர உருவங்கள் மனிதனின் எண்ண அலைகளில் உருவாகி அது தன் செயல்களை செய்யத் தொடங்கியது.

இக்கேடான எண்ணத்தால் உருவான பாகுபாட்டை நியாயப்படுத்தி
- சித்தாந்தங்கள் உருவாக்கப்பட்டன.
- மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
- சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
- ஒழுங்கு விதி முறைகள் வகுக்கப்படுகின்றன.

பல சமுதாயங்களும் பல அரசாங்கங்களும் இதனை பிரத்தியேகக் கொள்கையாக ஏற்று பல்லாயிரம் ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கின்றன.

- யூதர்கள் இதே அடிப்படையில்தான் இஸ்ரவேலர்களை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பினங்களாக கருதினர்.
- தங்கள் மார்க்க சட்டதிட்டங்களில் கூட இஸ்ரவேலரல்லாத மக்களின் உரிமைகளையும், அந்தஸ்த்தையும் தாழ்த்தி வைத்தனர்.
- கறுப்பர். வெள்ளையர் எனும் பாகுபாட்டின் காரணமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இன வேற்றுமைகள் காரணமாக தினம் தினம் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பார்த்து படித்து வருகிறோம்.
- ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் பெருநிலத்தில் புகுந்து செவ்விந்தியர் மீது தம் ஆதிக்கத்தை கொடுமை புரிந்த நெடிய வரலாறுகள் உண்டு.

இவைகளையெல்;லாம் நாம் இன்று பார்க்கும்போது நமது நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அப்பால் பிறக்கின்றவர்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவற்றை பறிப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு - அவர்களைக் கொள்ளை அடிப்பதற்கும், அடிமைப்படுத்திக் கொள்வதற்கும், தேவைப்பட்டால் உலக வாழ்விலிருந்து அம்மக்களை அழித்தொழிப்பதற்கும் கூட தமக்கு உரிமையும் அதற்குண்டான அதிகாரமும் இருப்பதாக வாதிடுகின்றனர்.

மேலே கண்ட பாகுபாடுதான் இந்து மதத்திலும் வர்ணாசிரம தர்மத்தை தோற்றுவித்து இன்று ஆட்சி அதிகாரத்தின் மீது ஏறி இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்துகிறதே, உயர் சாதி தத்துவம், அதன் பரிணாம வளர்ச்சிதான் தீண்டாமைக் கொடுமையின் கோர உருவம்.

எனவே, இந்த இனவாத சாதி வேறுபாட்டிற்கு தெளிவான விளக்கத்தை தந்து மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுகிறது இஸ்லாம்.

இறைவன் எல்லா மனிதர்களையும் அறை கூவியழைத்து மூன்று முக்கிய உண்மைகளை விளக்கியுள்ளான்.

- உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஓரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது.
- இன்று உலகில் காணப்படும் உங்கள் இனங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பூர்வீக இனத்தின் கிளைகளேயாகும். அந்த பூர்வீக இனம் ஒரு தாய் தந்தையிலிருந்து துவங்கியதேயாகும்.

இந்த படைப்புத் தொடரில் எந்த இடத்திலும் நீங்கள் கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த வேற்றுமைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை என்ற விஞ்ஞான பகுத்தறிவு பூர்வமான விளக்கத்தை தருகிறது இஸ்லாம்.

- ஒரே இறைவனே உங்களைப் படைத்தவன்.
- பலவித மனிதனை பலவித கடவுள் படைக்கவில்லை.
- ஒரே மூலப்பொருளில் தான் நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள்.

சில மனிதர்கள் மட்டும் ஏதோ ஒரு தூய்மையான மூலப்பொருளிலிருந்தும் வேறு சிலர் அசுத்தமான மூலப்பொருளிவிருந்தும் உருவாக்கப்படவில்லை. ஒரே வழிமுறையில் தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்று திருமறை அறிவுறுத்துகிறது. எச்சரிக்கிறது.

ஆரம்பத்தில் பல மனித ஜோடிகள் இருந்து அவர்களின் மூலம் உலகின் பல பாகங்களிலும் மனித சமுதாயம் தனித்தனியாக தோன்றவில்லை. பூர்வீகத்தில் ஒரே இனமாக இருந்தபோதிலும் நீங்கள், பல சமுதாயமாகவும் கோத்திரங்களாகவும் பிரித்து விட்டிருப்பது ஒரு இயற்கையான விஷயமாகும். உலகம் முழுதும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே குடும்பம் இருக்க முடியாதது வெளிப்படையான ஒன்றாகும். மனித இனம் பெருக பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும் பின் பல கோத்திரங்கள், பல சமுதாயங்கள் உருவாவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. எனவே, மனிதன் பூமியில் பல பகுதிகளிலும் வசிக்கத் தொடங்கினான். உடலமைப்பு, நிறம், மொழி, நடை, உடை, பாவனை ஒன்றுக்கொன்று வேறுபட்டேயாக வேண்டியது இருந்தது.

ஒரு பகுதியில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும் வெகு தொலைவில் வசிப்பவர்கள் நெருக்கமற்றவர்களாகவும்தான் இருக்க முடிந்தது. இந்த இடைவெளி (அல்லது வேற்றுமை என்ன ஏற்படுத்தி விட்டதென்றால்) உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண்டான், அடிமை மேலோன், கீழோன் என்ற பாகுபாடுகள் தோற்றுவிக்க வேண்டுமென்பதில்லை.

ஒரு இனம் மற்றோர் இனத்தைவிட தன்னை உயர்ந்ததாக கருதி வேற்றுமை பாராட்ட வேண்டுமென்பதில்லை. மாறாக, இறைவன் மானிட சமூகங்களை பல்வேறு சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்து அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாக பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த இயற்கை வழியை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வம்சத்தாரும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒன்று கூடி ஒரு கூட்டு சமுதாயத்தையே உருவாக்கியிருக்கமுடியும். வாழ்க்கை பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். ஆனால் இறைவனின் இயற்கை நியதி எவற்றையெல்லாம் அறிமுகத்திற்கான சாதனங்களாக ஆக்கி தந்ததோ, அவற்றை எல்லாம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வீண் பெருமை பேசி ஒருவருக்கொருவர் குரோதம் காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டனர். இந்த விரோதம் இத்துடன் நின்று விடாமல் கொடூரத்தின் எல்லைக்கே போய்விட்டது.

ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே சிறப்பு அல்லது உயர்வுக்கான அடிப்படை ஏதேனும் இருக்கிறது அல்லது இருக்க முடியுமென்றால் அது ஒழுக்கச் சிறப்பேயாகும். ஆகவே இஸ்லாம் மிக சிறப்பாகவே சொல்லுகிறது. பிறப்பை பொறுத்தவரை எல்லா மனிதர்களும் சமமானவர்களே. ஏனெனில் அவர்களைப் படைத்தவன் ஒருவனே. மனிதனின் படைப்பிற்கான மூலப் பொருள், படைப்பு முறை அனைத்தும் ஒன்றே.

எனவே, ஒருவனுக்கு மற்றொருவனை விட பிறப்பால் உயர்வு கிட்டுவதற்கு எவ்வித அறிவுப் பூர்வமான காரணமும் இல்லை. ஒருவனுடைய உயர்வு தாழ்வு அவனுடைய வாழ்க்கையிலிருந்து தான் அறிய முடியும்.

நல்லவை நாடியவன் நல்லவனாகவும் தீயவைகளை நாடியவன்; தீயவனாகவும் இருக்கிறான். இங்கு இன வேறுபாட்டிற்கு இ;டமில்லை. குர்ஆனின் வசனத்தில் விளக்கப்பட்டுள்ள இந்த உண்மைகளைத்தான் அண்ணலார் நாயகம் அவர்கள், தமது சொற்பொழிவில் மேலும் விளக்கியுள்ளார்கள். மக்காவை வெற்றிக்கொண்டபோது கஃபாவை இறை ஆலயத்தை வலம் வந்து தவாப் செய்தபின் பெருமானார் அவர்கள் ஆற்றிய பேருரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்கள்.

உங்களிடமிருந்து குறைகளையும் அதன் வீண் பெருமைகளையும் போக்கிவிட்ட இறைவனை துதித்து நன்றி செலுத்துகிறேன். மக்களே, எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினர்களாக பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர் இறையச்சம் உள்ளவர் அவரே இறைவனின் பார்வையில் கண்ணியமிக்கவர். மற்றொருவன் - துர்பாக்கியவான்.

அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன் அன்றி மனிதர் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர்.

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான் (பை ஹகீ, ஈமானைப் பற்றிய பிரிவு, திர்மிதி) என்று மனிதன் தோன்றிய வரலாறை விளக்குகிறது.

தன் இறுதி ஹஜ் பயணத்தின் போது பெருமானார் (ஸல்) அவர்கள்; மொழிகின்றார்கள்:

மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியனுக்கு அரேபியன் அல்லாதவனை விடவோ கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தை பொறுத்தே தவிர, வேறு எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களிடத்தில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே. நான் உங்களிடம் இறைவனின் தூதை சேர்ப்பித்து விட்டேன் அல்லவா?

மக்கள் பதிலளித்தனர்: ''இறைவனின் தூதரே! ஆம்! சேர்ப்பித்துவிட்டீர்கள்!'' - அப்படியானால் இங்கே வருகை தந்திருப்போர் இங்கில்லாதவர்களுக்கு இவ்விஷயத்தை எட்டச்செய்ய வேண்டும். (பை ஹகீ).

ஒரு ஹதீஸில் பெருமானார் அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதை விட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.

மற்றொரு ஹதீஸில் கூறுகிறார்கள்: ''அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.'' 'இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்.'

பின் வருபவை இன்னொரு ஹதீஸின் வாசகமாகும்:
'அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின் பாலும் செயல்களின் பாலும் தான் நோட்டமிடுகிறான்.' (முஸ்லிம் - இப்னுமாஜா)

இந்த போதனைகள் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறை விசுவாசிகள் கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. அச்சமுதாயத்தில் நிறம், இனம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை வகுப்பு மாச்சரியம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது.

இஸ்லாமிய குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும், எந்த இனத்தை எந்த குலத்தை எந்த நாட்டை சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

அங்கே இன பேதமில்லை, நிற பேதமில்லை, புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டற கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை.

பழைய மனப்பான்மையும் தாழ்வு நிலையும் மாறி புதிய சிந்தனையும், வளர்ச்சியும் ஏற்படுகிறது. நேற்றுவரை ஒரு இனம் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டே எடுபிடிகள் ஏவல்காரர்களாக எண்ணினார்கள். தங்கள் தயவில் வாழவேண்டிய கூட்டம் என்று அவர்கள் எண்ணியது மட்டுமல்ல. மனுதர்மமே அதுதான். சட்டமே அதுதான் என்ற அகங்காரமும், ஆணவமும் கொண்டவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். இன்னும் பல நூறு ஆண்டுகளென்ன, ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இங்கே அந்த நிலை மாறப்போவதில்லை. மாற்றவும் மாட்டார்கள்.

அரசாங்கச் சட்டமெல்லாம் நடைமுறைக்கு வருவதெல்லாம் சில சலுகைகளை அளிப்பதற்கே தவிர, நமது வாழ்வை மாற்றுவதற்கல்ல. நமது சமுதாய நிலையை உயர்த்துவதற்கல்ல என்பதை ஒவ்வொருவரும் தெரிந்தாக வேண்டும். இந்த சாதிக்கென இத்தனை சலுகை என பகிரங்கமாக - பட்டவர்த்தனமாகப் பேசுவது கூட இன்னும் நிற்கவில்லை. நாம் ஏனைய இந்து சாதியினரைப் போன்று தொழில் செய்ய முடிவதில்லை. வியாபாரத்துறையிலே நமக்கு வாய்ப்பில்லை. கடை விரிப்பார், கொள்வாரில்லை என்ற பரிதாப நிலையே நீடிக்கிறது.

இந்துக்களின் எண்ணிக்கைக்காகவே அரிசனங்கள் இந்துக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனரே தவிர, நம்மை இந்துக்கள் என்று சொல்லவோ, சமுதாய அந்தஸ்து தரவோ எந்த சாதி இந்துவும் தயாராக இல்லை என்பதை யாரும் மறுக்கமுடியாது.

எனவே, அறிவுப்பூர்வமான முடிவுக்கு வந்தாக வேண்டும். அவசரக்கோலத்திலோ அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலோ திடீரென மாறிவிட வேண்டும் என்ற துடிப்பிற்காகவோ அல்ல. ஒரு இனத்தின் பெயரிலே அதே இன மக்களால் ஆழம் காண முடியாத அடித்தளத்திலே அமுக்கி, அழுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலையிலிருந்து விடுபட்டாக வேண்டும். விடுதலை அடையவேண்டும். இல்லையேல் விமோசனமே கிடையாது. இதை தர்க்க ரீதியாக ஆணித்தரமாக வாதிட்டு நிரூபிக்க முடியும்.

இந்த கட்டுரை திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2ல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பாகும்.

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி!
வெளியீடு: அறிவுப்பண்ணை ஈத்தாமொழி - 629 501


இத்தொகுப்பின் தமிழ் அச்சுக்கோவை இதுதான்இஸ்லாம்.காம் என்ற சகோதர வெப்தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

நன்றி : இதுதான்இஸ்லாம்.காம்.

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

3 comments:

tamilan September 10, 2011 at 7:35 PM  

பெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள்.

தலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கபடவில்லை.


அனுப்புநர்
இரா. இலட்சுமணன்,
மாவட்ட அமைப்பாளர்,
பெரியார் திராவிடர் கழகம்,
பெரம்பலூர் மாவட்டம்.
செல் : 9994595714.


http://www.periyarthalam.com/2011/09/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/

Anonymous September 10, 2011 at 8:25 PM  

பெறுநர்
உயர்திரு டாக்டர் தாரேஸ் அகமது அவர்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்,
பெரம்பலூர் மாவட்டம்.

பொருள் : தேனீர்கடையில் இரட்டை டம்ளரை அகற்ற கேரியும்
பொது சாலையில் தலித் மக்கள் சைக்கிள் ஓட்ட அனுமதி
வேண்டியும் விண்ணப்பம்.
—-

ஐயா,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள். தலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கபடவில்லை.

மேலும் அந்த பொது சாலையில் சைக்கிள் ஓட்ட முயன்ற தலித் இனத்தை சார்ந்தவர்களை அவர்கள் தாக்கி அடித்து திட்டி உதைத்துள்ளனர். உதாரணமாக மணியரசன் (டிரைவர்) த/பெ. மணிவேல் என்பவர் டீசல் கேனை ஏற்றிக்கொண்டு பைக்கில் செல்லும் போது அன்பழகன் உடையார் என்பவர் ‘நீ எப்படி எங்கள் வீதியில் பைக்கில் செல்லலாம்’ நீ கீழே இறங்கி வண்டியை தள்ளிக் கொண்டுதான் போகவேண்டும் என கூறிவிட்டு எனது முதலாலியிடம் ‘இவன் எப்படி நமது வீதியில் பைக்கில் ஏரிகொண்டு வரலாம், இதை அவனிடம் சொல்லி வை’ என கூறி தடுத்தார்.

மேலும் எங்கள் பகுதியை சார்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மகள் சுகுனா 12-ம் வகுப்பு படிக்கின்றார். அவர் வகுப்பு தோழியான உiடாயர் சமூகத்தை சார்ந்த வீரமனி தனது சைக்கிளில் சுகுனாவை பின் சீட்டில் உட்கார வைத்து அழைத்து வந்ததை பார்த்த உடையார் சமூகத்தவர்கள் பறச்சியை ஏன் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து வருகின்றாய் என கூறி உள்ளனர்.

மேலும் ரஞ்சித், ரவி என்ற இரு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு குருப்பிட்ட தெருவில் சைக்கிளில் வந்த போது உருலாஸ் என்பவர் வீட்டில் இருந்தவர்கள் இந்த வீதியில் நீங்கள் எல்லாம் சைக்கிளை தள்ளிக்கொண்டுதான் போக வேண்டும் என்று கூறி உள்ளார். துபாய் பெரியசாமி என்பவர் 25 நாட்களுக்கு முன்பு உடையார் தெருவில் பைக்கில் சென்றதை பார்த்த தவிட்டுகாரம்மா என்பவர் நீ என்ன சாதி சனம் உனக்கு உடம்புல தெம்பு இருக்கா என்று கேட்ட போது பதிலுக்கு துபாய் பெரியசாமி (தலித்) இன்னும் ஊர் திருந்தளையாடா என்று கேட்டுள்ளார்.

மேலும் தலித் பள்ளி மாணவர்கள் சைக்கிலில் செல்வதற்கு பாதுகாப்பான சாலை வசதி இருந்தும் உயர் சாதியினர் அச்சாலையில் சைக்கிலில், பயனிக்க அனுமதி மருப்பதால் ஊரை சுற்றி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். பல மாணவர்கள் சைக்கிளை பயன்படுத்தாமல் நடந்தே செல்கின்றனர்.

மேலும் விவசாயத்திற்கு தேவையான உரம் பூச்சி மருத்துகளை ஊருக்கு நடுவில் உள்ளதால் தலித்துகள் தங்கள் நிலத்திற்கு உரத்தை வாங்கி கொண்டு தலையில் தூக்கி கொண்டோ, வண்டியை தள்ளிக்கொண்டோ, தான் செல்கின்றனர்.

மேலும் அஞ்சலகம் ஊருக்குள் இருப்பதால் அஞ்சலகம் வரும் தலித்துக்கள், மத்திய அரசு ஊழியர் தபால்காரர் இன்று வரை தபால் பட்டுவாடா செய்ய சைக்கிலை பயன்படுத்தியது இல்லை.

Anonymous September 10, 2011 at 8:27 PM  

மேலும் நாள் 02.10.07ம் ஆண்டு மருவத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பேரளியில் 1. சிங்காரவேல் 2. அய்யாசாமி, 3. சின்னதுரை 4. முத்துசாமி ஆகியவரது டீக்கடையில் இரட்டை டம்ளர் இருப்பதாகவும் இதனை அகற்றுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு செய்திருந்தேன்.

எனது மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி 16.04.2008 அன்று எனக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளீர்கள். அதில் டீக் கடையில் காவல்துறையினர் ரகசிய முறையில் விசாரணை செய்ததாகவும் விசாரணையில் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கபடவில்லை என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடிதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை எனக்கு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தீர்கள். எனது வாதம் யாதெனில் நீங்கள் அப்போது விசாரித்த போது இல்லை எனில் 04.09.2011. அன்று தி. இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் இரட்டை டம்ளர் முறை பேரளியில் உள்ளதாகவும் மேலும் பல தீண்டாமை நிலை உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே?.

ஆகவே இனிவரும் காலங்களிலாவது திறந்த மனதோடு, நடுநிலையோடு, ஒட்டு மொத்த மனித குலுத்துக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படாத வண்ணம் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஒருவார காலத்திற்குள் பேரளியில் உள்ள அனைத்து பொது சாலையிலும் தலித் மாணவர்கள், பொது மக்கள் சைக்கிளில் இனி எப்போதும் சென்று வரலாம் என்று உத்தரவிடுவதோடு சாதி பாதுபாடு பார்த்து தலித் மக்களை அச்சுருத்துபவர்கள் மீதும் தாக்குகிறவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

. மேலும் பேரளி ஊராட்சி மன்ற தலைவரை தேர்தெடுப்பதில் ஏழமுறையில். அதிக பணம் கட்டுகின்றார்களோ அவர்கள் தான் தலைவராக அறிவிக்கப்படுகின்றார்கள். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் மக்களின் பங்களிப்பு எதுவும் இன்றி. அடிப்படை வசதிகள் செய்து தருமாறு தற்போதைய தலைவரிடம் கேட்டால் நீ ஓட்டு போட்ட நான் ஜெயித்தேன் செய்து தரமுடியாது என்று கூறுகின்றார்.

மேலும் தி.இந்து பத்திரிக்கையில் பஞ்சாயத்து தலைவர் படைகாத்து அளித்துள்ள பேட்டியில் சிரிய வகையிலான ஒன்றிரண்டு தீண்டாமை,சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று ஒப்பு கொண்டுள்ளார். மேலுத் தலித் மக்களை கோவில்களுக்குள் அனுமதிக்காதது பற்றி செய்தியாளர் கேட்டதற்கு இருதரபினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரவர் கோயில்களில் அவரவர் சாமி கும்பிட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று ஒப்பு கொள்கின்றார். தலைவர் கொடுத்திருக்கும் பேட்டியின் அடிப்படையில் தீண்டாமை பேரளியில் நடந்தேரி வருகின்றது என்பது உண்மை. தீண்டாமை நடப்பதை அறிந்த பிறகு சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய தலைவர் தீண்டாமை நடப்பதற்கு பல சம்பவங்களில் இவரே காரணமானவராக உள்ளார்.

மேலும் மகேந்திரன் என்ற இளைஞர் இன்று நான் மனுவில் குறிப்பிட்டதை போல் கடந்த 5 மாதத்திற்கு முன்பு பேரளியில் நடக்கும் தீண்டா மை குறித்து மனுநீதி நாளில் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் முன்பு மகேந்திரனிடம் இருந்த மனுவை தலைவர் படைகாத்து பிடிங்கி கொண்டு சென்று விட்டார்.

சிறிய வகையான தீண்டாமையும் நிகழக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறது. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
இரா. இலட்சுமணன்,
06/09/2011

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP