**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மருந்தா? மரணமா? உயிரோடு விளையாடும் போலிகள்' விலை கொடுத்து வாங்குவது.

>> Wednesday, March 17, 2010


‘போலிகள் புகாத பொருளே இல்லை’ என்று ஒரு வரியில் சொல்லும் அளவுக்கு உலகமே இன்றைக்கு போலிகளின் பிடியில் சிக்கியுள்ளது.

சோப்பு, ஷாம்பில் தொடங்கிய போலி, கடைசியில் கரன்சி வரை வந்து விட்டது. பார்த்து பழக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ, போலிகள் விஷயத்தில் யாரும் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.

விளைவு, ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடிக்கும் கதையாக, மருந்து மாத்திரைகளிலும் போலிகள் புகுந்து விட்டதுதான் வேதனை.

அதிலும் 2001ல் எடுத்த ஒரு இந்திய கணக்கெடுப்பு மயக்கத்தையே வரவழைக்கிறது. நாட்டின் மொத்த மருந்து உற்பத்தியில் (ரூ.22,887 கோடி) 18 சதவீதம் போலி மருந்துகள், அதாவது ரூ.4112 கோடியாம். இப்போதைய அதன் சந்தை மதிப்பு ரூ.2000 கோடியாக குறைந்து விட்டதாக சொல்வது ஆறுதலான விஷயமா என்ன?

‘உலக மருந்துப் பொருள் சந்தையில் 35 சதவீத போலித் தயாரிப்புகள் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன’ என்று உலக சுகாதார நிறுவனம், ஓங்கி குட்டியதற்கு பின்னர் தான் போலிகளை பற்றிய பயம் தொடங்கியது.

விழிப்புணர்வு பிறந்தது.

உலக மருந்து உற்பத்தியில் 8%, உலக மருந்து விற்பனைச் சந்தையில் 2%, மருந்து உற்பத்தியில் ஆண்டுக்கு 12.14% வளர்ச்சி, தினந்தோறும் 20 புதிய தயாரிப்புகள் என சாதனை படைத்த தேசம் இது.

அது மட்டுமா ஆண்டுக்கு ரூ.85000 கோடி மருந்து உற்பத்தியையும், அதில் ரூ.35000 கோடி ஏற்றுமதியையும் மேற்கொள்ளும் நாடு என்று புகழ் பாடும் நேரத்தில், ‘‘35% போலிகள்’’ என்ற குற்றப்பத்திரிகையும் வாசிக்கப்பட்டது.

அதன்பின்னர் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வுகளுக்கு பின்னர் தான் உண்மை தெரிந்தது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 20% போலிகள் மற்றும் தரக்குறைவானவை. அதில் 60% மருந்துகள் சரியான உட்பொருட்கள் இல்லாதவை, 19% தவறான உட்பொருட்கள் கொண்டவை, 16% ஆபத்து தரக்கூடிய உட்பொருட்கள் கொண்டவை என்ற அதிர்ச்சியை நாடு உணர்ந்து.
அப்புறமென்ன... சட்டம் திருத்தப்பட்டது.

தண்டனைகள் அதிகமாக்கப்பட்டன. நாடெங்கும் சோதனைகள் துரிதம் பெற்றன. மாநிலங்கள் தோறும் ஆய்வகங்கள் திறக்கப்பட்டன. வழக்குகள் போடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. ஆனாலும், போலி மருந்துகள் புழக்கத்தில் இருக்கின்றன.

பெரிய நிறுவனங்களின் பெயரில் போலி தயாரிப்புகள், முறையான மூலக்கூறுகள் இல்லாத மருந்து மாத்திரைகள், தடை செய்யப்பட்ட மருந்துகளின் தடையற்ற விற்பனை, காலாவதியானது தெரிந்தும் கல்லாவை நிரப்பும் வியாபார சிந்தனை... இப்படி போலி முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் பல முகங்களை கிழித்தெடுக்க தேவை என்ன மருந்தோ?

மாதவிடாய் மாத்திரையில் போலி

தமிழகத்தில் மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்வதற்கு 74 ஆய்வாளர்கள் உள்ளனர். மாதாமாதம் இவர்கள் மருந்து விற்பனை கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மாதத்திற்கு 7 சாம்பிள்கள் எடுக்க வேண்டும். டிஸ்பென்சரிகளிலும் சாம்பிள் எடுக்கலாம். அந்த சாம்பிள்களை பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.

அதிரடிச் சோதனைகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. அதெப்படி என்றால், ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் சோதனை. அதில் ஒரு குறிப்பிட்ட மருந்து மட்டுமே ஆய்வுக்கு எடுக்கப்படும். குறிப்பிட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த சோதனையில் போலிகள் கண்டுபிடிக்கப்படும்.

‘பிரிமோலட்&என்’ என்ற மாத்திரையில் போலிகள் புழங்குவதாக தகவல் வந்தது. பெண்கள் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை. போலியை உட்கொண்டால் குழந்தைப் பிறப்பே கேள்விக்குறியாகி விடும். தமிழ்நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. 4 நாளில் போலி மாத்திரைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்ப்டடன.

2009 ஏப்ரல் முதல் இதுவரை தமிழகத்தில் போலி மருந்துகள் தொடர்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 58 வழக்குகள் தரம் குறைவான மருந்துகள் பற்றியது. காலாவதியான மருந்துகளை விற்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக 120 கடைகள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளன.

‘ஆன்டி ப்ளூ’ எனற மாத்திரை பன்றிக்காய்ச்சலுக்கானது. இந்தியாவில் விற்க அனுமதியில்லை. வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தரப்பட்ட அனுமதியை பயன்படுத்தி கோவாவில் ஒரு கம்பெனி தயாரித்தது. அதை லோக்கல் மார்க்கெட்டில் விற்க முயற்சித்தது அம்பலமானது. தமிழகத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் அனுமதியில்லாமல் விற்கப்பட்ட ரூ.25 லட்சம் மருத்துவப் பொருட்கள் பிடிபட்டன. அறுவை சிகிச்சையின்போது தையல் போடுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அவை. தரம் குறைந்தவை. வடசென்னையில் இன்னொரு சோதனையில் போலி சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் 2 முதல் 6 டிகிரி டெம்பரேச்சரில் பாதுகாக்க வேண்டும். ஸ்டோரேஜ் கன்டிஷன் மோசமாக இருந்த 5 ரத்த வங்கிகள் (சென்னை 2, கோவை 1, தஞ்சை 2) மூடப்பட்டன. ரத்ததான முகாம் மூலம் சேரிக்கப்பட்ட 150 பாட்டில் ரத்தத்தை சோதனை செய்யாமல் விற்ற, சென்னையை சேர்ந்த ஒரு ரத்த வங்கியும் மூடப்பட்டது.

ஏன்? என்னாச்சு?

2008ம் ஆண்டில் போலி மருந்துகளை ஒழிக்க அரசு ஒரு முடிவெடுத்தது. அதன்படி மாநிலங்கள் தோறும் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. தமிழகத்தில் அந்த பொறுப்பை பெட்காட் என்ற நுகர்வோர் அமைப்பு மேற்கொண்டது. 1800 சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு சரி.

போலி மருந்து தயாரிப்புகள் தமிழகத்தில் இல்லை என்றும் வடமாநிலங்களில் இருந்து தான் வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஆந்திராவில் குண்டூரை மையமாக கொண்டு செயல்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு. மாதவிடாய் மாத்திரையில் போலிகளை தயாரித்து விற்ற கும்பலும் ஆந்திராவில் தான் ஐக்கியம் என்கிறது அதிகாரிகள் வட்டாரம். வழக்கு போட்டதோடு சரி.

புகாரின்படி கடைகளில், கம்பெனிகளில், மருத்துவமனைகளில் சாம்பிள் எடுக்கப்படுகிறது. போலியா என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

17 மாநிலங்களில் ஆய்வகம் உள்ளது. அதில் 7 மட்டுமே எல்லா வகை மருந்துகளை சோதிக்கும் வசதி கொண்டவை. அரசுக்கு சொந்தமான இந்த ஆய்வகத்தில் சோதனை செய்து போலிதான் என்று அறிக்கை அனுப்பினாலும், சம்பந்தப்பட்ட கம்பெனிகள் ஏற்பதில்லை. விளைவு, கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு ஆய்வகத்திற்கு (ஆய்வகங்களுக்கு அதுதான் உச்சநீதிமன்றம் மாதிரி) அனுப்பி வைப்பதோடு சரி.

போதைப் பொருள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் கடுமையான சட்டங்கள் உள்ளன. அப்பாவிகளின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தயாரிப்பை தடுக்க, அதைவிட கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்புவதோடு சரி.

வெளிநாடுகளில் தடை இங்கு தாராளம்

அறுவை சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்தாக தரப்படும் மார்பின் போன்றவை ஓபியம் என்ற போதைப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதற்கு தடை இருந்தாலும் பயன்பாட்டில் இருக்கிறது.

வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டவை இங்கு தாராளமாக விற்கப்படுகின்றன.

கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதற்காகதான் அந்த நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. மாத்திரை, மருந்துகள் தடை செய்யப்பட்டால் அவற்றின் உற்பத்தி நிறுத்தப்படும். ஆனால் கடைகளுக்கு வந்தவை விற்றுத்தீரும். சில தடையின் போது மாத்திரைகளை அப்புறப்படுத்த 3 மாதம் வரை அவகாசம் கொடுப்பார்கள். அந்த அவகாச நேரத்தில் விற்றுத் தீர்க்கும் அவலமும் உண்டு.

மருந்து தரும் தீங்குகள்...

தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக கிடைக்க காரணம், தடை உத்தரவில் உள்ள ஓட்டைகள். எடுத்துக்காட்டாக, அனால்ஜின் ரத்த நோய், ஈரல் நோயை உண்டாக்கக்கூடியது. இதை குடல்பிடிப்பு நீக்கி மருந்து தவிர மற்ற மருந்துகளுடன் இணைத்து தருவதற்குத்தான் தடை. தனியாக விற்கத் தடை இல்லை.

இதேபோலவே, பீனல்புடசோன், ஆக்சி பென்பூடசோன் மருந்தும் தனியாக விற்கத் தடை இல்லை. இந்த ஓட்டைதான் தடையை ஆரம்பத்திலேயே உடைத்து விடுகிறது என்பது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாதம்.

குழந்தைகளுக்கு என தயாரித்து விற்கப்படும் அனைத்து வடிவ லோபரமைடு, டைபீனாக்சிலேட், பெல்லடோனா மருந்துகள் தடை செய்யப்பட்டன. குடல் பாதிப்பு, உயிருக்கும் ஆபத்து என்பது காரணம். மிகவும் அரிதான நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு மட்டுமே இந்த மருந்தைக் கொடுக்கலாம்.

ஆனால், இதை சாதாரண வயிற்றுப்போக்குக்கும் கொடுக்கிறார்கள். பெரியவர்களுக்கே தரக்கூடாத இந்த மருந்துகளை குழந்தைகளுக்கும் தருகிறார்கள் என்பது வேதனையானது.

இந்த மருந்தின் திரவ வடிவம் மட்டும் தடை செய்யப்பட்டது, மாத்திரை வடிவம் தடை செய்யப்படவில்லை.

குழந்தைகளின் வயிற்றுப்போக்குக்குத் தரப்படும் உப்பு&சர்க்கரைக் கரைசலில் சேர்க்கை அளவு சரியாக இருப்பது அவசியம். அளவு மாறுபட்டால் பலன் இல்லை என்பது மட்டும் இல்லை,

பிரச்னைகளும் வரும். அளவு உறுதிப்படுத்தாத உப்பு&சர்க்கரைக் கரைசல் மருந்துகள் தடை செய்யப்பட்டன. கடைகளில் அதுபோன்ற கரைசல் மருந்துகள் உள்ளன.

சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகளுடன் சேர்த்து எந்த அலோபதி மருந்து தருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் அலோபதி வல்லுநர்களே இதை பரிந்துரை செய்கின்றனர்.

தடைக்கு தடை எப்படி?

உயிர் காக்கும் மருந்துகளில் சில உயிர் வாங்கும் தரம் கொண்டவை. பக்கவிளைவுகள் மூலமாக உயிரை பறித்து விடும். அத்தகைய மருந்துகளை ஐரோப்பிய, வட அமெரிக்கா நாடுகளில் விற்க முடியாது. கடுமையான சட்டங்களும், தண்டனைகளும், சொத்து முழுவதும் விற்றால் கூட கட்ட முடியாத அளவிற்கு அபராதமும் அங்கு உண்டு.

நமது நாட்டிலும் தயாரிக்க, விற்பனை செய்ய 77 மருந்துகளை மத்திய மருந்து தரக் கட்டுபாட்டு நிறுவனம் தடை விதித்துள்ளது. தடை விதித்த பிறகு அந்த நிறுவனங்கள் அந்த மருந்தின் சிறப்பை சொல்லும் வகையில் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஊடகங்களில் செய்திக் கட்டுரைகள் வெளியிட வைக்கும்.

அதற்கு ஏற்ப மருத்துவமனைகளும் மருந்தின் சிறப்பைக் கூறும் கருத்தரங்குகள் நடத்தும். இவற்றையெல்லாம் ஆதாரமாக காட்டி மருந்து நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை பெற்றுவிடும்.

காலாவதியான மாத்திரையா?

வழக்கமாக 10 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையை வாங்கும் போதுதான் அதில் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒன்றிரண்டு வாங்கும்போது விவரங்கள் கிடைக்காமல் போகலாம். கடைக்காரரிடம் மாத்திரையை வெட்டி தரும் முன் தேதிகளை பார்க்க வேண்டும்.

காலாவதியான மாத்திரைகளை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்ப பெற்றுக் கொள்வதில்லை. சமீபகாலமாக ஒரு சில நிறுவனங்கள் காலாவதியான மருந்துகளை விற்றுத் தந்தால் ஒரு தொகையை கமிஷனாக தருகின்றன. சில நிறுவனங்கள் காலாவதியான மாத்திரையை திரும்ப வாங்கினாலும், குறைந்த தொகையை தான் திருப்பி தருகின்றன. நஷ்டத்தை சரிக்கட்ட சில கடைக்காரர்கள் காலாவதியான மாத்திரைகளை அப்பாவிகளின் தலையில் கட்டி விடுகின்றனர்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் 539 மருந்து தயாரிப்பு கம்பெனிகள் இருக்கின்றன. அதில் 5 கம்பெனிகள் அமெரிக்க அங்கீகாரம் பெற்றவை. தமிழகத்தில் ரூ.8000 கோடி அளவுக்கு மருந்து மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் ரூ.5000 கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இலங்கைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மருந்து தயாரிப்புக்கென பல விதிமுறைகள் உள்ளன. சட்டப்படியான அந்த விதிமுறைகளை பின்பற்றாத 89 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

தமிழ்நாட்டில் 259 ரத்த வங்கிகள் உள்ளன. தமிழக அரசு 84, தனியார் 163, இஎஸ்ஐ 2, மத்திய அரசு 10.
இந்தியாவில் 77 வகை மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதில் சில மருந்துகள் விற்கப்பட்டதாக இரண்டு வழக்குகள் மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருந்து உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு. 95% தேவைகளை உள்நாட்டு தயாரிப்பு மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நாடு என்பதால் இறக்குமதி அதிகம் இல்லை. சமீபத்தில் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த மருந்துகள் அனைத்தும் போலி எனத் தெரியவந்தது. கோடிக்கணக்கான மதிப்புடைய அவை அழிக்கப்பட்டன.

கவனிப்புக்கு பஞ்சமில்லை

என்னதான் புதுபுது மருந்துகளை சந்தையில் மருந்து நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினாலும், விளம்பரப்படுத்தினாலும் டாக்டர்கள் மனசு வைக்காவிட்டால் அவை வருவாய் தராது. எனவே மருந்து நிறுவனங்களின் முக்கிய இலக்கு டாக்டர்கள். அவர்களை திருப்திப்படுத்த பல்வேறு வழிகளை இந்த நிறுவனங்கள் கையாளுகின்றன. நட்சத்திர விடுதிகளில் விருந்து. விலை உயர்ந்த பரிசுகள், வெளிநாட்டில் சுற்றுலா என பல கவனிப்புகள். ஒருமுறை தங்கத்திலான டெலிபோனையே நினைவு பரிசுகளாக தந்திருக்கின்றனர்.

THANKS TO DINAKARAN.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP