இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக்கிறார்கள்? தலித் - இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது.
>> Tuesday, September 23, 2008
தன் தேசபக்தியை நிறுவித் தொலைத்தாக வேண்டிய கட்டாயம் ஏன் இஸ்லாமியர் மீது திணிக்கப்படுகிறது?
தலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய ஒற்றுமையும்!
திங்கள், 22 செப்டம்பர் 2008
எனது சிறுபிராய காலத்தில் எங்களது கமலை மாடுகளுக்கு லாடம் கட்ட ஒருவர் வருவார். அவரை பாய் என்று என் அப்பா அழைப்பது வழக்கம்.
அப்போது பாய் என்பதை அவருடைய பெயர் என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேனேயன்றி அது இஸ்லாமியரை விளிக்கும் ஒரு சொல் - அவர் ஓர் இஸ்லாமியர் - இஸ்லாம் ஒரு மதம் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆனால் காலக்கிரமத்தில் எனக்குத் தெரிந்த முதல் இஸ்லாமியர் அவர்தான். ஆறாம் வகுப்பில் ஒரு மாணவர் சேர்ந்தார். அவர்தான் எனக்குத் தெரிந்த இரண்டாவது இஸ்லாமியர் என்று இப்போது கணக்கில் வைக்கிறேன். ஆனால் அப்போது தெரிந்திருக்கவில்லை.
யோசித்துப் பார்த்தால் எனக்கு அப்போது வேறுசில இஸ்லாமியர்களும் பரிச்சயமாகியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சைக்கிள் ஷாப் வைத்திருந்தார். அவரிடம் வாடகைக்கு எடுத்துதான் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர் எங்களூர் சிறார்கள்.
மற்றவர் குடை ரிப்பேர் செய்கிறவர். இன்னாருவர் அங்கிருந்த கூட்டுரோட்டில் சின்னதாக ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் கறிபோடும் பாய் ஒருவர்.
இவர்களது பெயர்களெல்லாம் நினைவில் இல்லை. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு இஸ்லாமியர் அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக வரத் தொடங்கினார். மேல்நிலை வகுப்பில் ஒரு மாணவர் எனது பெஞ்ச்மேட்.
எனது பதினேழு வயது வரை என் வாழ்வில் குறுக்கிட்ட இஸ்லாமியர்கள் இவர்கள்தான். அதாவது ஒரு கை விரல்களுக்குள் முடிந்த போகிற அளவிலானதுதான் இந்த எண்ணிக்கை. அவர்களில் இஸ்லாமிய சகோதரி ஒருவருமில்லை. அப்போது என் வயதொத்த சிறுவர் சிறுமியர் இஸ்லாத்திலும் இருக்கத்தானே செய்திருப்பார்கள்?
அவர்களெல்லாம் எங்கே போனார்கள் படிக்க? அல்லது படிக்கவே வரவில்லையா? படிக்க வரவில்லையானால் அவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
அன்று தொடங்கி இன்றுவரை கணக்கிட்டால் எனக்கு இப்போது அனேக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நண்பர்கள் என்பது உண்மைதான்.
ஆனால் அவர்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு நானே உதட்டைப் பிதுக்கி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதே நேர்மையாக இருக்கும்.
கமலைகள் மறைந்து ஆயில் என்ஜின்களும் மின் மோட்டார்களுமாகிவிட்ட இக்காலத்தில் மாடுகளே தேவையற்றதாகிட்ட நிலையில், மாட்டுக்கு லாடமடிக்கிற அந்த பாய் எங்கே போயிருப்பார்?
யூஸ் அண்ட் த்ரோ நாகரீகம் உச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில் குடை ரிப்பேர் செய்கிற ஒருவர் இங்கு இன்னமும் தேவைப்படுகிறாரா?
அரூர் போன்ற சின்ன நகரங்களில் குதிரை வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அந்த பாய்களும் குதிரைகளும் எந்த இரு சக்கர வாகனத்தின் கீழ் அரைபட்டு மாண்டிருக்கக்கூடும்?
மோட்டார் வாகன ஒர்க்ஷாப்புகளில் ஆயிலும் கிரிசும் கரியும் படிந்து தன் சொந்த நிறத்தையும் முகத்தையும் இழந்துவிட்ட சிறுவர்களில் ஏன் பலரும் இஸ்லாமியராகவே இருக்கின்றனர்?
வெகு அரிதான சிலரே வணிகத்திலும் தொழில்களிலும் அரசுப்பணியிலும் இருக்கின்றார்கள் என்றால் மற்றவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக என்ன செய்கிறார்கள்?
ஆளுங்கட்சியில் ஒருமுறை ஒன்றியச் செயலாளராயிருந்தவன் வாரிசுகள் கூட ஒன்பது தலைமுறைகளுக்கு உட்கார்ந்து தின்னுமளவுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளும் ஒரு சமூகத்தில்,
ஆளுமையும் தேசபக்தியும் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் திகழ்ந்து வீரமரணமடைந்த திப்புசுல்தானின் வாரிசுகள் வேலூரில் பீடி சுற்றிப் பிழைப்பதற்கு காரணமென்ன?
சுமார் 800 ஆண்டுகள் இந்த நாட்டை இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்திருந்த போதும் இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக்கிறார்கள்?
அப்படியானால் ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களும் இந்த அடித்தட்டு இஸ்லாமியரும் வெவ்வேறானவர்கள் தானே?
பின் ஏன் அந்த அரசர்கள் நிகழ்த்திவிட்டதாகக் கூறப்படும் 'வரலாற்றுத் தவறுகளுக்காக' இந்த அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்? கருவிலிருக்கிற இஸ்லாமியக் குழந்தைகூட கடப்பாரையால் குத்திக் கொல்லப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?
பாபர் மசூதி தகர்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு இஸ்லாமியரும் தேசவிரோதியாகவும் தீவிரவாதியாகவும் உருவகிக்கப்படுகிற அரச பயங்கரவாதத்திற்குள் இந்து பெரும்பான்மை மனோபாவம் வகிக்கும் பங்கு என்ன?
தன் தேசபக்தியை நிறுவித் தொலைத்தாக வேண்டிய கட்டாயம் ஏன் இஸ்லாமியர் மீது திணிக்கப்படுகிறது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் சச்சார் கமிட்டி அறிக்கையிலும்கூட நமக்கு போதிய பதில்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
அதன் பரிசீலனை வரம்புகளும் நோக்கங்களும் வேறாக இருப்பது மட்டுமே இதற்கான காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சச்சார் கமிட்டி ஒரு உண்மையை உணர்த்தியிருக்கிறது.
அதாவது இந்த நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களின் பல்வேறு முனைகளில் இஸ்லாமியர்களது நிலை தலித்துகளைப் போல அல்லது தலித்துகளைவிடவும் கீழ்நிலையில் இருக்கிறது என்பதே அது.
இங்கேதான் தலித்துகளையும் இஸ்லாமியரையும் இணைத்தும் பகுத்தும் பார்க்கும் தேவையேற்படுகிறது.
பார்ப்பனீய மேலாதிக்கவாதத்தின் வர்ணாசிரம - சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வடிவமாக இஸ்லாத்தை தழுவியர்களே இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர்.
இந்த உண்மையை மறைத்து, இந்தியாவில் இருக்கிற எல்லா இஸ்லாமியரையும் வெளியே இருந்து படையெடுத்துவந்த இஸ்லாமிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கற்பிதம் செய்வித்தும்,
வாள்முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்று பாசாங்காய் கருணை காட்டியும் இந்துத்வவாதிகள் கிளப்பிவிடும் தேசியவெறி உலகப் பிரசித்தமானதுதான்.
இந்த பிரச்சாரத்தின் நோக்கம், எஞ்சியுள்ள தலித்துகளை தங்கள் பிடிக்குள்ளேயே நிறுத்திவைப்பதுதான்.
இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறாதவரை சாதியிழிவும் தீண்டாமையும் தொடரவே செய்யும் என்பதால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையும் பிற மதங்களைத் தழுவுவதையும் ஒரு போராட்ட வடிவமாகவே தலித்துகள் கைக்கொண்டுள்ளனர்.
தலித்துகளின் மீதான தங்களது பிடி இறுகுவதை சகித்துக்கொள்ளாத இந்துத்வவாதிகள் - தலித்துகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு உரிமையையே ஒரு துருப்புச்சீட்டாக வைத்து அச்சுறுத்துகின்றனர்.
பிறமதத்திற்கு செல்லும் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று இந்த அச்சுறுத்தல்களையும் மீறி மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நேற்றுவரை டாய் என்றவர்கள், இன்று பாய் என்று அழைக்கிறார்கள் என்கிறபோது ஏற்படுகிற மனநிலை மிக முக்கியமானதாக தலித்துகளால் உணரப்படுகிறது.
ஆகவே இஸ்லாத்தின் மீது தலித்துகளுக்குள்ள ஈர்ப்பை தணிப்பது - முடிந்தால் ஒழித்துக்கட்டுவது என்பதில் இந்துத்துவம் கவனங் குவித்துள்ளது.
அதன்பொருட்டே இஸ்லாத்தை ஒரு பயங்கரவாதிகளின் தத்துவமாக முன்னிறுத்தும் அமெரிக்க பயங்கரவாத ஆட்சியாளர்களுடன் அது வெளிப்படையாகவே கைகோர்த்து நிற்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த 'புனிதக்கூட்டின் இளையப் பங்காளி'களான இந்துத்வாவினர் - ஏகாதிபத்தியம் முன்வைக்கிற உலாகளாவிய ஒற்றைப் பண்பாட்டைப் போலவே - இவர்களும் ஒரு ஒற்றைத் தேசிய பண்பாட்டை முன்வைக்கின்றனர்.
சமூகத்தின் பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஏகத்துவமான ஒரு மதவாதத்தை இங்கே நிறுவும் அவர்களது கனவுகளைத் தகர்ப்பது தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் முதற்கடமையாகிறது.
தலித்துகள் தொடர்ந்து போராடி பல்வேறு உரிமைகளை அடைந்திருந்த போதிலும் அவர்கள் மீதான தீண்டாமை மற்றும் புறக்கணிப்பு, உரிமை மறுப்பு ஆகியவை தொடரத்தான் செய்கின்றன. அதை எதிர்த்த தலித்துகளின் போராட்டம் தொடர்கிறது.
சச்சார் கமிட்டி அறிக்கை இஸ்லாமியர்களின் நிலையும் தலித்துகளின் நிலையும் கிட்டதட்டட சமநிலையில் முடக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இவ்விரு சமூகங்களும் ஒன்றிணைவது அவசியமாகிறது.
இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், பார்ப்பனீய மேலாதிக்கக் கனவில் முன்வைக்கப்படும் இந்துத்வாவை எதிர்கொள்ளவும், பெரும்பான்மை மதவாதத்திற்குள் இந்திய அரசு எந்திரம் மூழ்கிப் போய்விடாமல் 'மதச்சார்பற்ற அரசு' என்ற அரசியல் சாசன வாசகங்கள் மெய்ப்பிக்கப்படவும் இந்த ஒற்றுமை அவசியமாகிறது. சரியான தலைமைகளால் அணிதிரட்டப்படாத போது தலித்துகளில் ஒருபகுதியினர் - தங்களைப்போலவே ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் இஸ்லாமியரைத் தாக்க மதவெறியர்களால் பயன்படுத்தப்பட்டதை குஜராத்தில் நேடிரயாகக் கண்டோம்.
எனவே இந்துத்துவத்திற்கு எதிராக - அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தலித் - இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது.
('தலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் திரு. ஆதவன் தீட்சண்யா ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்).
நன்றி: கீற்று.
தொடர்புடையச் சுட்டிகள்:
1. இணையும் புதுக் கரங்கள்!
2. ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?
3. இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா
4. யார் தீவிரவாதி?
நன்றி: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1037&Itemid=278
2 comments:
இஸ்லாமியர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்போது வாழ்க்கைத்தரத்தில் முன்னேறமுடியும்.
அருமையான கட்டுரை!!! தீர்க்கமான சிந்தனை !!
நிறைய கேள்விகள் எழுகின்றன இக்கட்டுரையை படிக்கும் பொழுது .
கல்வி, ஒற்றுமை , பொருளாதர வளர்ச்சி , அரசியல் சாணக்கியத்தனம் இவை அனைத்தும் தேவை இஸ்லாமியரும் தலித்களும் முன்னேற !!!
Post a Comment