**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை!

>> Friday, February 22, 2008

உலகம் முழுதும் வாழும் உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துகின்றனர். அந்த 'மனிதச் சடங்கு' நமக்கெதற்கு என்ற போக்கில், தளை அறுத்த சில நவ நாகரீக மேற்கத்தியர்களும் எல்லாவற்றிலும் மேற்குப் பார்த்துப் பின்பற்றி ஒழுகும் சில ஆசியரும் அண்மைக் காலமாக, "திருமணம் என்பது தனிமனித சுதந்திரத்துக்குத் தளை" என்பதாகக் 'கண்டு பிடித்து' அதைப் பின்பற்றிப் 'புரட்சி'யும் செய்து வருகின்றனர். மற்றும் சிலர் திருமணம் என்பது பெண்களின் மீதான அடக்குமுறைக்கு அடித்தளம் இடும் சமூகக் கட்டுப்பாடு என பெண்ணீயப் புரட்சியும் செய்கின்றனர்.

மனிதர்களிடையே பல்வேறு சமூகங்களில் நடத்தப்படும் திருமணங்களிலும் திருமணத்திற்குப் பின்னர் குடும்ப வாழ்வில் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்களிலும் உள்ள தீமைகள் இவர்களின் கண்களைக் கட்டுகிறது. ஆனால் அத்தகையத் தீமைகள் எதுவும் இஸ்லாம் நடத்த விரும்பும் திருமணங்களில் நிழகச் சாத்தியங்கள் இல்லை என்பதுதான் உண்மை. முக்கியமாக இஸ்லாம், திருமணம் என்ற சமூகக் கட்டுப்பாட்டில் நுழைபவர்களுக்கான சட்டதிட்டங்களில் பெண்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கிறது.

அதனை அறிந்துக் கொள்ள, இஸ்லாமியத் திருமணத்தில் மணமகளின் உரிமை நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வது கட்டாயமாகும்.விதிகளை ஒருகை விரல்களுக்குள் அடக்கி விடுமளவுக்கு எளிமையான இஸ்லாமியத் திருமணம் 'விதிகளாக' மட்டுமிருக்க, பெரும்பாலான முஸ்லிம்கள் நடத்துகின்ற திருமணங்கள், 'இஸ்லாமியத் திருமண'ங்களிலிருந்து எவ்வளவு தூரம் விலகிப் போய் விட்டன என்பதைக் கண்கூடாகக் காணுகின்ற அவல நிலை, அங்கொன்றும் இங்கொன்றும் என்றில்லாமல் எங்கெங்கும் அண்மைக் காலம்வரை பரவிக் கிடந்தது.

அல்லாஹ்வின் பேரருளால் தமிழகத்தில் இப்போது அப்பரவல் ஓரளவு அருகி வருவது மகிழ்வுக்குரியதாம்; அல்ஹம்து லில்லாஹ்!இஸ்லாமியத் திருமணத்தின் நான்கு விதிகளுள் மணமக்களின் விருப்பத்தை அறிவதும் ஒப்புதல் பெறுவதும் தலையாய ஒன்றாகும்.ஆனால், பெரும்பாலும் மணமக்களின் - குறிப்பாக - மணமகளின் விருப்பத்தை அறிந்து கொள்வதோ அவளின் ஒப்புதலைப் பெறுவதோ தேவையில்லாதது என்ற ஆதிக்கச் சிந்தனை, பெரும்பாலான முஸ்லிம் பெற்றோரிடம் இன்னும் வழக்கிலிருக்கிறது.

"கன்னி(வயது)கழிந்த பெண்ணை அவளுடைய (வெளிப்படையான) ஒப்புதல் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கக் கூடாது ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி), பதிவு : புகாரி 4741)

திருமணத்திற்குப் பின் குடும்பங்களில் நடக்கும் - முக்கியமாகப் பெண்களின் மீது நடத்தப்படும் - கொடுமைகளில் கணவர்களின் துணை இருப்பதற்கான காரணங்களில் தலையாயது, திருமணத்திற்கு முன்னர் மணமகனைக் குறித்து மணமகளிடமும் மணமகளைக் குறித்து மணமகனிடமும் முழுமையான விபரங்கள் தெரிவிக்கப் படாமல், அவ்விருவரின் விருப்பம் அறிந்து கொள்ளாமலேயே கட்டிவைக்கப்படும் திருமணங்களினால் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால், தனக்கு வரவிருக்கும் வாழ்க்கைத் துணைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அவனைத் தேர்வு செய்வதற்கும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு முழுச் சுதந்திரத்தையும் முற்றான உரிமையையும் இஸ்லாம் வழங்குகிறது.

"கன்னி(வயது) கழிந்த ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு அவளின் குடும்பப் பொறுப்பாளரைவிட அவளே அதிக உரிமையுடையவள் ஆவாள் ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரையறுத்தார்கள். (அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி), பதிவு : முஸ்லிம் : 2545).

தன் மகள் பூப்பெய்திய அடுத்த மாதமே திருமணம் நடத்திவிடத் துடிக்கும் பெரும்பாலான பெற்றோர், அவளுடைய மனவிருப்பத்தை அறிய முற்படுவதில்லை.

"சின்னப் பெண்; அவளுக்கு என்ன தெரியும்? நாமாகப் பார்த்து செய்து வைத்தால் சரிதான்" என்ற 'பொறுப்பான' பெற்றோர்தாம் முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பான்மை வகிக்கின்றனர்.

"குடும்பத்தார் திருமணம் செய்து கொடுக்கும் கன்னிப் பெண்ணின் விருப்பத்தை அவர்கள் பெற வேண்டுமா, வேண்டாவா?" என்று அல்லாஹ்வின் தூதரிடம் நான் கேட்டபோது, "ஆம்; பெறத்தான் வேண்டும்" என்று கூறினார்கள்."அவள் (வெளிப்படையாகக் கூறுவதற்கு) வெட்கப் படுவாளே!" என்று நான் திருப்பிக் கேட்டதற்கு, "அவ்வாறெனில், அவளுடைய மெளனத்தை விருப்பமாகக் கொள்ளலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), பதிவு : முஸ்லிம் 2544).

பெண்களின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் ஒப்புதல் பெறாமல் நடந்தேறுகின்ற பலத் திருமணங்கள் அவர்தம் இல்வாழ்க்கையில் விரும்பத் தகாத பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

"கணவனைப் பிடிக்காததால் புதுமணப்பெண் தற்கொலை" போன்ற தலைப்புச் செய்திகளின் ஆணிவேர், கட்டாயத் திருமணம்தான் என்பது திண்ணம்.பிறமதக் கலாச்சாரத்தை ஒத்து, "கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்" என்ற கட்டுப் பெட்டிகளாகத் தன் பெண்மக்களை இஸ்லாம் பொய்வாழ்க்கை வாழப் பணிக்கவில்லை.கன்னி(வயது)கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்.

எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டேன். அந்த(க் கட்டாய)த் திருமணத்தை நபி(ஸல்) அவர்கள், "செல்லாது" என்று அறிவித்தார்கள். (அறிவிப்பாளர் : கன்சா பின்த் கிதாம் (ரலி), பதிவு : புகாரி 4743).

வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப் பட்டுள்ள அண்ணலாரின் மேற்கண்ட இந்த அறிவிப்பு, நபி(ஸல்) அவர்களுக்குப் பிற்றைக் காலத்திலும் பின்பற்றப் பட்டது:ஜஅஃபரின் பேத்தி ஒருவர், தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்குத் தன்னை மணமுடித்துக் கொடுக்கத் தன் பொறுப்பாளர் முடிவெடுத்தபோது, தனக்கு (அந்தத் திருமணத்தில்) விருப்பமில்லை என்பதை ஊர்ப் பெரியவர்களும் அன்சாரிகளும் ஜாரியாவின் மகன்களுமான அப்துர் ரஹ்மான் மற்றும் முஜம்மிஉ ஆகிய இருவருக்கும் தூதனுப்பித் தெரிவித்தார்.

"(அல்லாஹ்வின் தூதரின் ஆட்சிக் காலத்தில்) கன்சாவின் விருப்பத்திற்கு மாற்றமாக அவளுடைய தந்தை கிதாம் முடித்து வைத்தத் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் செல்லாது என அறிவிப்புச் செய்தார்கள். (அந்த முன்மாதிரியைப் பின்பற்றி நாங்கள் தீர்ப்பளிப்போம்) அஞ்ச வேண்டாம்" என்று அவ்விருவரும் கூறியனுப்பினர். (அறிவிப்பாளர் : சுஃப்யான் (ரஹ்), பதிவு : புகாரி - 6454)."

கணவனைப் பிடிக்காததால் புதுப்பெண் தற்கொலை" என்ற செய்திகளும் "கணவனின் கொடுமையினால் இரு குழந்தையின் தாய் தீக்குளிப்பு" போன்ற செய்திகளும் விருப்பமில்லாத கணவர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதை, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் அனுமதிக்காததால் ஏற்படுகின்ற விளைவுகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை தான் விரும்பாத ஒருவருக்கு மனைவியாக வாழ்வைத் தொடர முடியாது என்ற நிலையில், ஒரு முஸ்லிம் பெண் எப்போது வேண்டுமானாலும் தன் கணவரிடமிருந்து பிரிந்து விடலாம்.

அவளுடைய முடிவில் - ஆட்சியாளர் உட்பட - எவரும் தலையிட முடியாது என்பது இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய பெண்ணுரிமையாகும்: முகீஸ் என்ற பெயருடைய ஓர் அடிமை பரீராவின் கணவராவார். (முகீஸிடமிருந்து பிரிந்துவிட பரீரா முடிவு செய்தபோது) தன் தாடியில் வழிந்தோடும் அளவுக்குக் கண்ணீர் உகுத்து அழுதவாறு பரீராவின் பின்னால் அவர் சுற்றிச் சுற்றி வந்தது இப்போதும் என் கண்முன் நிழலாடுகிறது.

அப்போது, "அப்பாஸே! பரீராவிடம் முகீஸுக்குள்ள பிரேமையும் முகீஸின் மீது பரீரா காட்டும் வெறுப்பும் உமக்கு வியப்பாயில்லை?" என்று (என் தந்தையிடம்) அல்லாஹ்வின் தூதர் வினவினார்கள்.(முகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) "நீ அவரிடம் மீண்டு சென்றாலென்ன?" என்று பரீராவுக்கு அல்லாஹ்வின் தூதர் அறிவுறுத்தினார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதைக் கட்டளையாகக் கூறுகின்றீர்களா?" என்று பரீரா கேட்டார்.அதற்கு, "இல்லையில்லை; பரிந்துரைக்கிறேன்" என அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்."எனில், அவரிடம் எனக்குத் தேவை எதுவுமில்லை" என்பதாக பரீரா தன் முடிவை இறுதியாக்கினார். (அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி), பதிவு : புகாரி - 4875).

முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கும் நபி(ஸல்) அவர்கள் அப்பொழுது மதீனாவில் ஆட்சியாளராகவும் இருந்தார்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தனக்கு விருப்பமில்லாத கணவனோடு வாழ்க்கையைத் தொடர்வதற்கு நபி(ஸல்) அவர்களே பரிந்துத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயயமில்லை என்ற அளவிற்கு இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை வழங்கியுள்ளது போல் மனிதர்களுக்கிடையில் வெறெந்தச் சமூகத்திலும் பெண்ணுரிமை பேணப்படவில்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

உலகத்திற்குத் தற்பொழுது மிகத் தேவையான பெண்ணுரிமைகள் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் இஸ்லாமிய வரலாற்றில் பேணப்பட்டு வந்துள்ளன. இப்பொழுதும் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த அரபு நாடுகளில் இவ்வுரிமை எவ்விதக் குறைவுமின்றி நடைமுறையில் உள்ளதைக் காண்கிறோம்.

ஆனால் மாற்றுமதக் கலாச்சாரத்தைத் தன்னுள் அடக்கிய தமிழக முஸ்லிம்களில் பலர் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள அத்தகைய உரிமைகளில் எவ்வித கவனமும் இன்றிப் பல நூற்றாண்டுகள் பயணித்து விட்டனர்.

அவர்தம் வழியறியாப் பயணம் மாற்றம் பெற்று, சரியான திசையில் செல்லும் காலம் வந்து விட்டது.தமிழக வரலாற்றில் அண்மைக் காலங்களில் கண்மூடிப் பயணிக்கும் மனோபாவங்கள் பெருவாரியாக மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி!.

அதில் மகுடமாகக் கடந்த 18 பிப்ரவரி 2008 நாளில் ஊடகங்களில் வந்தத் தலைப்புச் செய்தி, இந்திய முஸ்லிம் பெண்களுக்கு அவர்தம் உரிமையை மீட்டெடுத்துக் கொடுப்பதாக அமைந்துள்ளது.செய்தி இது தான்:"கட்டாய திருமணத்தை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறிவிக்கலாம் - இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!". அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். காலம் கடந்தெனினும் இறைச் சட்டம் மக்களிடையே நடைமுறைபடுத்தப்படுவது சமூகத்தில் மிகப்பெரிய நன்மை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

டெல்லியில், கடந்த 17 பிப்ரவரி 2008 அன்று அகில இந்திய இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துப் பகிர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதுமிருந்தும் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியவர்கள், உலமாக்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.
நீண்ட விவாதத்திற்குப் பின் இக்கூட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் திருமணம் குறித்து ஒருமித்த அளவில் முக்கிய முடிவு ஒன்றும் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரிய செய்தி தொடர்பாளர் இல்யாஸ் அவர்கள் கூறியதாவது:"இஸ்லாமிய பெண்கள் தங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள எல்லா உரிமைகளும் இருக்கின்றன.அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோரோ?, அல்லது வேறு யாருமோ ஒரு மணமகனை வலுக் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயன்றாலும் அதை அவர் செல்லாது என்று அறிவிக்கலாம்.

பெண்ணின் விருப்பமில்லாமல் வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது முழுக்க அநீதியாகும்.வலுக்கட்டாயமாக நடத்தப்படும் திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.இஸ்லாமிய சட்டம், பெண்ணுக்கு தன் இஷ்டப்படி திருமணத்தை நடத்திக் கொள்ள உரிமை அளித்து இருக்கிறது.பெண்ணுக்கு விருப்பமில்லை என்றால் திருமணத்தின்போதோ, அல்லது அதற்குப் பின்போ கூட மணமகனை அவர் நிராகரிக்கவும் செய்யலாம்."

இந்திய முஸ்லிம் அமைப்புகளின் மேற்கண்ட அறிவிப்பு இஸ்லாம் பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் சமூகத்துக்கு உகந்த மார்க்கம் என்பதை மற்றுமொரு முறை நிறுவியுள்ளதோடு "திருமணம் தனிமனிதத் தளை என்றும் பெண்ணினத்தை அடிமைப் படுத்தும் சமூகக் கட்டுப்பாடு" என்றும் "இஸ்லாம் பெண்ணினத்துக்கு எதிரான அடக்கு முறை மார்க்கம்" என்றும் அவசர கோலத்தில் "சமூகப் பெண்ணியப் புரட்சி(!)" செய்பவர்களுக்குத் தகுந்த பதில் விளக்கமாகவும் அமைந்துள்ளது.

திருமணத்தில் இஸ்லாம் கூறும் விதிகளைக் கண்டு கொள்ளாத எஞ்சியிருக்கும் ஒரு சில முஸ்லிம் பெற்றோர்கள் இனிமேலாவது மணமக்களுக்கு - குறிப்பாக - பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளைப் பின்பற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க முன்வரட்டும். ஆக்கம்: அதிரை ஜமீல்.
NANDRI TO: SATYAMARGAM.COM

4 comments:

Irai Adimai February 23, 2008 at 12:25 AM  

Thanks for your very good details.

baln August 20, 2011 at 3:08 AM  

என் நன்பன் ஹிந்து மததை சார்ந்தவன் .அவன் முச்லிம் பென்னை விரும்பிகிரான் அவலும் விரும்பிகிரால் . இருவரும் இருபது வயதை தாண்டியவர்கல் . இவர்கல் திருமனம் செஇது கொலலாமா . ?

VANJOOR August 20, 2011 at 5:53 AM  

DEAR BALN

THANK YOU FOR YOUR QUERY.

முறையாக ஆலோசிக்காது எந்த சுய‌முடிவுக்கும் உள்ளாகிடாமல் முறையான வழி முறைகளையும் எதிர்கொள்ள வேண்டியவைகளையும் ஆழ்ச்சிந்தித்து முடிவெடுக்கவும்.


TO GET THE RIGHT SOLUTION / REPLY

KINDLY CONTACT IMMEDIATELY:
உட‌னடியாக‌ தொட‌ர்பு கொள்ள‌வும்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1

போன்- 91 044 25215226
மின்னஞ்சல்- tntjho@gmail.com

தலைவர்
பி.ஜைனுல் ஆபிதீன்
+91 99520 35111 (மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை)


பொதுச் செயலாளர்
ரஹ்மதுல்லாஹ்
+91 9952035444

பொருளாளர்
அன்வர் பாஷா
+91 95000 52421

து. தலைவர்
அப்துர் ரஹீம்
+91 9003222256
து. பொதுச் செயலாளர்

சைய்யத் இப்ராஹீம்
+91 99520 35333 (மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை)


.

baln August 20, 2011 at 12:56 PM  

thanks for reply sir

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP