இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்தை தானே மனமுவந்து தழுவிய தமிழ் பெண்மணி!!!
>> Sunday, June 22, 2008
அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.
அந்த நூல்கள் அவருள் பிரளயத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!
நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்ட உதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள்.
தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.
சென்னை டெபுடி கமிஷ்னர் காமினியின் அழைப்பின் பேரில் த.மு.மு.க வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.
இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம். -ஆசிரியர். tmmkonline.
அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக் கூற முடியாதவை.
உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது.
இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா!
நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விடவில்லை.
இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.
என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.
என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு.
யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை.
கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன்.
இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன்.
உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள்.
மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!
ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.
அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு..
ரஜிதா (எ) ஹமிதா
http://www.tmmkonline.org/news/999846.htm
0 comments:
Post a Comment