சோற்றுக்கும் வருமோ பஞ்சம்.?
>> Sunday, June 15, 2008
இன்னும் பத்து ஆண்டுகளில் உலகம் கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும் என்று பொருளாதார நிபுணர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகிறார்கள்.
நட்சத்திரங்களைப் பிடிக்க நைலான் வலை வீசுவது போல, உணவுப் பொருட்களுக்காக மக்கள் ஆங்காங்கே படையெடுப்புக்களை நடத்துவார்கள்.
நைலான் வலையால் நட்சத்திரங்களை எப்படிப் பிடிக்க முடியாதோ, அதே போல உணவுப் பஞ்சத்திற்கு படையெடுப்புக்கள் பரிகாரமாக இருக்காது. அராஜகம்தான் அமர்க்களமாக இருக்கும்.
உணவுத் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம் என்று அமெரிக்கா ஓர் அற்புதமான கருத்தைச் சொன்னது.`இந்தியாவும் சீனமும் பொருளாதாரத்துறையில் முன்னேறி விட்டன.
அந்த நாட்டு மக்கள் இப்போதெல்லாம் நன்கு சாப்பிடுகிறார்கள். அதுதான் உலக உணவுத் தட்டுப்பாட்டிற்குக்காரணம்' என்று முதலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறினார். இதனை ஏதோ நகைச்சுவைக் கருத்து என்றுதான் நம்பினோம். ஆனால், அடுத்து அம்மணியின் கருத்தையே அமெரிக்க ஜனாதிபதி புஷ் வழிமொழிந்தார்.
இந்த வக்கிரவாதத்திற்கு, இந்திய அரசு பதில் சொல்லியிருக்க வேண்டும். வாயே திறக்கவில்லை.ஒருவேளை அதனையே மன்மோகன் சிங்ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ?
ஆனால், ரோம் நகரில் நடந்த உணவுப் பிரச்னை தொடர்பான சர்வதேச மாநாடு அமெரிக்க வாதத்திற்கு எதிர்ப்பாட்டு பாடியிருக்கிறது. உணவுப் பஞ்சம் வருவதற்கு அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகளின் குண்டு மனிதர்கள் மேலும் தின்று கொழுப்பதுதான் காரணம் என்று கூறியிருக்கிறது.
உலக அளவில் உணவுப் பஞ்சம் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. காரணம், மேற்கு நாடுகளின் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டனர். உணவுக்காக அவர்கள் அதிக அளவில் செலவு செய்கின்றனர் என்று அந்த மாநாடு சுட்டிக் காட்டியிருக்கிறது.
அந்த மாநாடு இன்னொரு கருத்தையும் சிந்தனைக்கு விருந்தாகப் படைத்திருக்கிறது. மேற்கு நாடுகளில் ஒரு பக்கம் மக்கள் உண்டு கொழுக்கும்போது, இன்னொரு பக்கம் ஏழை நாடுகளில் லட்சோபலட்சம் மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பட்டினிப் பட்டாளம் பெருகுவதற்குக் காரணம், மேற்கு நாடுகளின் உணவுப் பழக்கம்தான் என்று அந்த மாநாடு சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதேசமயத்தில்,மேற்கு நாடுகளிலும் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் பட்டினிப் பட்டாளத்தில் அணிவகுப்பவர்கள்தான் என்பதனை அந்த மாநாடு காணத் தவறி விட்டது.
அமெரிக்க அதிபர் புஷ்ஷின் வாதப்படி இந்திய மக்கள் அனைவருமா பொருளாதார முன்னேற்றம் கண்டு வளமான வாழ்வு பெற்று விட்டனர்?
இங்கேயும் ஆண்டிற்கு ஆண்டு வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகிறவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. இந்திய அரசின் இன்றைய பொருளாதாரத் திட்டங்கள் ஒரு பக்கம், புதிய புதிய கோடீசுவரர்களை உருவாக்குகிறது.வளர்ச்சியின் பலன்களை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், பட்டணங்களில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடிய நிலைமை மாறி நடுத்தர,சிறிய விவசாயிகளும் நிலங்களை இழந்து நகரங்களில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.சமுதாய ஏற்றத்தாழ்வு வெகுவேகமாக விரிவடைந்து வருகிறது.
எறும்புகள் ஏறி இமயமலை தேய்வதில்லை. சமுதாயத்தின் ஒரு பிரிவினர் உண்டு கொழுப்பதே உணவுப் பஞ்சத்திற்குக் காரணம் என்பதனை ஏற்பதற்கு இல்லை. ஆனால், உணவுப் பஞ்சத்தை செயற்கையாக உருவாக்குபவர்கள் வாதத்திற்கு நிற்காத இத்தகைய காரணங்களை எடுத்து விடுகிறார்கள்.
அமெரிக்காவிலும் இதர மேற்கு நாடுகளிலும் இன்றைக்கு விவசாயம் என்பது ஆண்டிப்பண்டார நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. உணவு உற்பத்தி வெகுவேகமாகக் குறைந்து வருகிறது. விளைநிலங்களில் எரிபொருள் தேவைக்கான வித்துக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. அதனைத்தான் பயோ டீசல் உற்பத்தி என்று குறிப்பிடுகிறார்கள்.
சுருங்கச் சொன்னால், உணவு உற்பத்தி முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் அபாயத்தை ரோம் நகரில் நடந்த உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா சுட்டிக் காட்டியிருக்கிறது.
ஒரு பக்கம், உணவுதானிய உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம்,உணவு தானியங்களே பயோ டீசலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
`பயோ டீசலுக்கு உணவு தானியங்களைப் பயன்படுத்துவது அதிகரித்தால் உறுதியாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்' என்று இந்திய விவசாய அமைச்சர் சரத்பவார் ரோம் மாநாட்டில் எச்சரித்தார்.
ஒருகாலத்தில் அமெரிக்கா அபரிமிதமான விளைச்சல் கண்டது. விலை ஏற்றத்தைத் தடுக்க கோதுமையைக் கடலில் கொட்டியது. விவசாயம் செய்யாமல் தரிசாகப் போட்டால் அதற்கு மானியம் அளித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு வரும் என்று எச்சரிக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து சாமானிய மக்களுக்கு வாழ்வளிப்பது கைத்தறித் தொழில்தான். நூல் விலை ஏற்றம் அதன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. ஆடை உற்பத்தியாளர்கள் அபாயச் சங்கு ஊதிவிட்டனர்.
நூல் விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?இந்தியப் பருத்தி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. என்ன காரணம்? பருத்தி உற்பத்தியின் பரப்பளவை அமெரிக்கா சரிபாதியாகக் குறைத்து விட்டது. அதனைவிட பயோ டீசல் உற்பத்திக்காக பயிர் செய்வது ரொம்ப லாபம் என்று முடிவு கட்டி விட்டது. அதே சமயத்தில், பருத்தியும் தேவை. அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது. இங்கே நூல் விலை மேகமண்டலத்திற்கு மேலே உயர்ந்து விட்டது.
உணவு தானிய உற்பத்தியைக் குறைத்தாலோ, எரிபொருளாக அதனை எரித்தாலோ உணவுப் பஞ்சம் வரும் என்பது அமெரிக்காவிற்குத் தெரியாதா? தெரிந்துதான் உலகை உணவுப் பஞ்சத்தில் ஊஞ்சலாட்ட விரும்புகிறது. அதன் வழியையே பிரிட்டன், பிரான்சு போன்ற மேற்கு நாடுகளும் தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. உலகிற்கே இதுதான் வழியென்றால் இன்னும் பத்து ஆண்டுகளில் மக்களிடம் பை நிறையப் பணம் இருக்கும். ஆனால் கைநிறைய உணவு கிடைக்காது.
கடந்த 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப்படி,ஆயுதங்கள் வாங்குவதற்காக பல நாடுகள் ஆண்டிற்கு 12லட்சம் கோடி ரூபாய்செலவிட்டன. ஆனால், விவசாய உற்பத்திக்காகச் செலவிடுவது பாதியாகக் குறைந்து விட்டது. இதனை ஐ.நா. உணவு அமைப்புத் தலைவர்ஜாக்கஸ் ட்யூப் ரோம் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். உணவுத் தட்டுப்பாடு உலக அளவில் பெரும் பிரச்னையாக உருவாகும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இந்த நிலை உருவானால், அதற்கு அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும்தான் பொறுப்பு என்பதனை ரோம் மாநாடு சுட்டிக் காட்டியிருக்கிறது.
சென்ற ஆண்டு உணவுத் தட்டுப்பாடு இந்தியாவை எட்டிப் பார்த்தது. `அரசே கொள்முதல் செய்யக் கூடாது. சேமிக்கக் கிடங்குகள் கட்டக் கூடாது. அப்படிச் சேமித்தால் எலிகள் மேய்ந்து விடும். எதற்கு இந்த வீண் தொல்லை? நெல், கோதுமையை தனியார் கொள்முதல் செய்ய அனுமதியுங்கள்தட்டுப்பாடு ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள்' என்பது உலக வங்கியின் உபதேசம்.ஆமாம். எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தச் சொன்னது.
இந்த உபதேசத்தை அதன் சீடர்கள் செயல்படுத்தத்தானே செய்வர்? எனவே, சென்ற ஆண்டு தனியார் தாராளமாகக் கொள்முதல் செய்து குவிக்க, அரசின் உணவுக் கிடங்குகள் அநாதைகளாகக் கிடந்தன. உணவுத் தட்டுப்பாடு வந்தது.வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதிசெய்தனர்.
அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த மண்ணிலேயே தேவையான அளவிற்கு கோதுமை விளைந்து கொட்டும்போது எதற்காகஇறக்குமதி செய்கிறீர்கள் என்று கண்டனக் கணைகள் பாய்ந்தன. இறக்குமதி என்று நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தப் போவதாகஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் எச்சரித்தார்.
இந்த ஆண்டு நமது விவசாய அமைச்சர் சரத்பவார் விழித்துக் கொண்டார். ஓர் ஆண்டிற்குத் தேவையான கோதுமையைக் கொள்முதல் செய்து விட்டார். செயற்கைப் பஞ்ச சூத்திரதாரிகள் திருதிருவென்று திருட்டு முழி முழிக்கிறார்கள். > SOLAI - KUMUDAM.COM
***************************
பெட்ரோல் விலையேற்றம்: திவாலாகும் உலகம்!
****************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
முடிந்த அளவு வீட்டிலேயே சிறு காய் கறி வகைகளை பயிர் செய்தால் நல்லது.
Post a Comment