சர்வ நோய் நிவாரணி.? உஷார்!! அலாவுதீனின் அற்புத விளக்கு. மந்திர மெஷின். மேஜிக் படுக்கை.
>> Thursday, June 26, 2008
கடை விரித்தோம்; கொள்வாரில்லை; கட்டி விட்டோம்' என்பதெல்லாம் அந்தக் காலம்.
அதையே கொஞ்சம் மாற்றி, `கடை விரித்தோம்; கொள்வார் அதிகம்; கல்லா கட்டி விட்டோம்' என்பது இந்தக் காலம்.
இதில் சந்தேகம் இருப்பவர்கள் ஒரு நடை வேலூர் வந்து `செராஜெம்' என்ற நிறுவனத்தைப் பார்த்து விட்டுச் செல்லலாம்.
உலகில் உள்ள அத்தனை நோய்களையும் தீர்த்து வைக்கும் அதிசய இயந்திரம் ஒன்றை வைத்து அழகாகக் காசு பார்க்கிறது அந்த நிறுவனம்.
ஒரு சின்ன ஸ்டெபிலைசர் அளவு மெஷின்தான் அது. அதை வைத்துக் கொண்டு அந்த நிறுவனம் செய்யும் அலப்பரைக்கு அப்படியொரு கூட்டம் கூடுகிறது. உடலில் எந்த நோயாக இருந்தாலும் சரி, எந்தவித மருந்து, மாத்திரையோ, ஊசியோ இல்லாமல் அந்த குட்டி மெஷின் குணப் படுத்துகிறதாம்.
பக்கவிளைவுகளும் கிடையாதாம். தென்கொரிய நாட்டின் தயாரிப்பான அந்த மெஷினின் விலை அதிகமில்லை. நாற்பத்தொன்பதாயிரத்து ஐநூறு ரூபாய்தான்.
ஏதோ அலாவுதீனின் அற்புத விளக்கைப் பார்த்ததுபோல அந்த செராஜெம் நிறுவனம் நடத்தும் சிகிச்சைக்கு செமையான கூட்டம். இந்தத் தகவல் நம் காதுகளுக்கும் எட்ட, ஒரு சுபயோக சுபதினத்தில், வேலூர் கஸ்பாவுக்குப் போகும் வழியில் ஆயுதப்பிரிவு போலீஸ் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் அந்த செராஜெம் நிறுவன வாசலில் நாம் ஆஜரானோம்.
வாசலில் கட்டுக்கடங்காத கூட்டம். அங்கே அழகிய இளம்பெண் ஒருவர் நோயாளிகளின் பெயர்களைக் கேட்டு சீட்டு எழுதிக் கொடுத்தபடி இருந்தார். நாம் அங்கு நின்ற அகமது, ரிஸ்வானா என்ற இரண்டு பேரிடம் முதலில் பேசினோம்.``எனக்கு தண்டுவடப் பிரச்னை என்று வந்தேன். சிகிச்சை பெற்ற பிறகு இப்போது பரவாயில்லை.
இரண்டு வயதுக் குழந்தை முதல் நூறு வயதுப் பெரியவர்கள் வரை இந்த சிகிச்சையை எடுக்கலாமாம். சர்க்கரை வியாதி கூட தீருகிறது என்கிறார்கள். எங்களுக்கு இந்த சிகிச்சையில் நம்பிக்கை வந்திருக்கிறது'' என்றனர்.
நித்தியானந்தம் என்பவரிடம் பேசினோம். ``முதலில் பத்து நாள் இலவச சிகிச்சை என்று விளம்பரப்படுத்தினார்கள். கூட்டம் வந்து குவிந்ததும் மூன்றாம் நாளே இலவசத்தை நிறுத்தி பணம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். ரேஷன் கார்டு, போட்டோவுடன் வந்து எழுநூறு ரூபாய் கட்டி உறுப்பினராகச் சொல்கிறார்கள்.
அப்படி பணம் கட்டிச் சேர்ந்தால் இங்கே இவர்கள் பயிற்சி கொடுத்து வைத்திருக்கும் அழகழகான இளம்பெண்கள், நம் பக்கத்தில் வந்து ஒட்டி உரசாத குறையாக இந்த மெஷினின் மகாத்மியங்களைப் பற்றி விளக்குவார்கள்.
`இங்கே தினமும் ஒருமுறை சிகிச்சை எடுத்து பெரிய பலன் எதுவும் வந்து விடாது. மெஷினை விலைக்கு வாங்கி வீட்டிற்குக் கொண்டு போய் மூன்று வேளை பயன்படுத்தச் சொல்கிறார்கள். மூன்று வகை மெஷின்களை விற்கிறார்கள். அவற்றின் மொத்த விலை அறுபதாயிரம் ரூபாய்.
இந்த கம்பெனி வாசலில் இவர்களே ஆட்களை நிறுத்தி, `அந்த நோய் குணமாகி விட்டது, இந்த நோய் குணமாகி விட்டது' என்று பேச வைக்கிறார்கள். நான் 20 நாட்களாக சிகிச்சை எடுத்தும் ஹெர்னியா, கழுத்துக் கட்டி எதுவும் குணமாகவில்லை. `சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதற்கான மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொண்டே சிகிச்சை எடுக்க வேண்டும்' என்று இவர்கள் சொல்வதுதான் நெருடுகிறது.
இந்த மெஷின் எல்லா நோய்களையும் தீர்ப்பது நிஜம் என்றால் அப்புறம் டாக்டர் எதற்கு? ஆஸ்பத்திரி எதற்கு?'' என்றார் அவர்.
விடிவெள்ளி ஆறுமுகம் என்பவரிடம் பேசியபோது, ``பழைய ஆயா காலத்து ஒத்தடத்தைத்தான் இந்த மெஷின் மூலம் செய்கிறார்கள். நான் ஒன்பது மாதம் ட்ரீட்மெண்ட் எடுத்தும் எந்தப் புண்ணியமும் இல்லை. அதுபற்றி அதிருப்தி தெரிவித்தால் சிகிச்சை தராமல் துரத்தி விடுகிறார்கள்'' என்றார் அவர்.
செராஜெம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரிடம் பேசியபோது, அந்த அதிசய மெஷினின் கல்யாண குணங்களை அடுக்கினார் அவர். ``அக்குபிரஷர் டிவைஸ் இது. நைன்பால் புரோஜெக்டர் சிஸ்டம் மூலம் நோய்களைக் குணப்படுத்துகிறோம்.
இந்த மெஷினுக்குள் ஜெம் கற்கள் இருக்கிறது. அதன்கீழ் ஒரு லைட்டை எரியவிட்டதும் கற்கள் சூடாகி கதிர்கள் வருகிறது. இதன்மூலம் அக்குபிரஷர், அக்குபங்சர், தெர்மல் மசாஜ் எல்லாம் கிடைக்கிறது. மனிதனின் ஸ்பைனல்கார்ட் எனப்படும் முதுகுத்தண்டுவடத்தில் இருந்துதான் கண், காது மூக்கு, கிட்னி, வயிறு,பாதம் போன்ற எல்லா பகுதிகளுக்கும் நரம்புகளும், ரத்தமும் செல்கிறது. எனவே, முதுகுத்தண்டில் இந்த சிகிச்சையைத் தருகிறோம்.
தென்கொரியா, சீனா, ஜப்பானில் இந்த சிகிச்சை முறை ரொம்பவும் பிரபலம். வேலூரில் இரண்டு இடங்களிலும், சென்னையில் 25 இடங்களிலும் சிகிச்சை தருகிறோம். கலைஞரும், ஆற்காடு வீராசாமியும் கூட இந்த மெஷினைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்'' என்று ஒரு போடு போட்டார் அவர்.
இந்த அதிசய மெஷின் பற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை செயலாளர் டாக்டர் ரவிசங்கரிடம் கருத்துக் கேட்டோம்.
`` `மேஜிக் ரெமடி ஆக்ட்' என்ற பெயரில் வித்தை காண்பித்து வைத்தியம் பார்ப்பதைத் தடுக்க மத்திய அரசு சட்டமே போட்டிருக்கிறது.
அறிவியல்ரீதியாக ஒரு மருத்துவமுறையை ஐந்து ஆண்டு, பத்தாண்டு காலம் ஆராய்ந்து அதன் முன்னேற்றம், பின்விளைவு, பக்க விளைவுகளைப் பார்த்த பிறகுதான் அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க முடியும். அந்த மெஷின் சிகிச்சை பிசியோதெரபியைச் சேர்ந்ததுதான்.
எந்த இடத்திலாவது அந்த வைத்தியத்தை நிரூபித்ததற்கு அத்தாட்சி இருக்கிறதா?
அதுமட்டுமல்ல. அந்த மெஷினை வாங்கிப் போய் வீட்டில் தினமும் பயன்படுத்த வேண்டும் என்பது வேறு நெருடுகிறது. ரூ. 49,500 கொடுத்து அதை வாங்குவதற்குப் பதில் மக்கள் நல்ல மாத்திரைகளைச் சாப்பிட்டு குணமாகிக் கொள்ளலாமே.
ஒருவருக்குக் கால் வலி என்றால் அதை அமுக்கி விட்டால் தாற்காலிகமாக வலி தீரும். அதைத்தான் இந்த மெஷின் செய்வதாகத் தெரிகிறது. இதெல்லாம் மக்களை ஏமாற்றுகிற விஷயம். இதுபற்றி டிரக் கண்ட்ரோல் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு அமைப்பு எல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரத்துறையும் அக்கறை கொள்ள வேண்டும்'' என்றார் அவர்.
இந்த நிறுவனத்தை நடத்தும் ஷெரீப் என்பவரிடம் பேசினோம். `இளம் பெண்களை வைத்து ஆண் வாடிக்கையாளர்களைக் கவர்வதாகச் சொல்லப்படுவது பற்றி நாம் கேட்டபோது, ``அதெல்லாம் கிடையாது. ஆண் வாடிக்கையாளர்களின் பக்கத்தில்கூட இளம் பெண்களை அனுப்புவதில்லை!'' என்று எரிந்து விழுந்தார் அவர். >>ம.பா. கெஜராஜ் kumudam reporter<<
***************************************
பக்கவாதம். பாதிப்புகள். அறிகுறிகள்.
புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்
0 comments:
Post a Comment