மன அழுத்தம் ஏன்?
>> Monday, June 16, 2008
குடும்பத்தில் யாருடனாவது கத்த்த்தி..., சண்டை போட்ட படபடப்பில் சிலர் மூச்சு வாங்க அவசர அவசரமாக தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து காலி செய்வதைப் பார்த்திருப்பீர்கள். தண்ணீர் பருகினால் தணியுமா பதற்றம்?
ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும்.
`மனசே சரியில்லை' என்று புலம்புபவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள். மனஅழுத்தப் பிரச்னை குறித்து உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் தெரியவந்த உண்மைகள்...
அமெரிக்கர்களை செயல்பட முடியாமல் முடக்கிப் போடுவதில் மனஅழுத்தத்திற்குத்தான் முதலிடம்.
ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால், இதயநோய், மூளை செயலிழப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமானவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மனஅழுத்தம்தான்.
ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள் எவை?
நாள் முழுக்க மனசே சரியில்லை என்கிறீர்களா?
அதிக நேரம் தூங்குகிறீர்களா?
உடலில் சக்தி இல்லாமல் மயக்கம் வருவது போல் உணர்கிறீர்களா?
உங்கள் மேல் உங்களுக்கே மதிப்பு இல்லையா?
எதிலும் கவனம் செலுத்த முடியவில்லையா?
முடிவெடுக்க இயலவில்லையா?
தன்னம்பிக்கை இல்லாமல் உதவிக்கு யாரும் வரமாட்டேன் என்கிறார்களே என்று நினைக்கிறீர்களா?
வெறுமையை உணர்கிறீர்களா?
இந்தக் கேள்விகளில் ஏதாவது இரண்டிற்கு நீங்கள் `ஆம்' என்று பதில் சொன்னால், உங்களுக்கு மனஅழுத்த பாதிப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
ஏதாவது ஒன்றைப் பற்றி மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை, அவனது உணர்ச்சிகள் மனஅழுத்தத்தை உண்டுபண்ணக் கூடும் என்பது உண்மைதான். அதே நேரம், மூளையின் ரசாயன சமநிலையில் மாற்றம் காரணமாகவும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
மனஅழுத்தத்தை உண்டாக்கும் மூளை ரசாயன சமநிலை வேறுபாட்டை உணவுப் பழக்கத்தை மாற்றுவதால் சரிசெய்ய இயலும்.
ஒரு மாதம், நிறைய தண்ணீர் குடித்துப் பழகவேண்டும். அதே நேரம் குளிர்பானங்களை மறந்துவிட வேண்டும். சுவை, நிறம் மற்றும் வாசனைக்காக குளிர்பானங்களில் ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மூளையின் ரசாயன சமநிலையைப் பாதித்து மனஅழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை.
முழுத் திறனுடன் மூளை செயல்பட நீர்ச்சத்து அவசியம். மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை மின்சாரத்தைப் போல, நரம்பு மண்டலம் உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. நீர்ச்சத்துக் குறைந்தால், மூளை மற்றும் நரம்புகளால் இயங்கும் உடலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.
எனவே, தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கூடுதலாக நீர் அருந்தவேண்டும்.
குளிர்பானங்களைப் போல பாக்கெட் உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டும். பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நைட்ரைட், நெட்ரேட் சல்ஃபைட் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இவற்றில் சேர்க்கப்படுகின்றன.
இந்த ரசாயனங்களின் செயல்பாடு மூளைப்பகுதியில் குறிப்பிட்ட அளவு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். நன்மை எதுவும் தராத இவற்றை தவிர்த்தால், மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.
`சாப்பாட்டில் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவேண்டும்' என்று சொன்னால் சிலர் முகம் சுளிப்பார்கள். உண்மையில், காய்கறி மற்றும் பழங்களில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறையவே உள்ளன.
இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை.
எனவே, உணவில் காய்கறிகள் கட்டாயம் இருக்கவேண்டும். சமைத்த காய்கறிகளைவிட, இயற்கையாகக் கிடைக்கும் நிலையிலேயே உட்கொண்டால் மிக நல்லது.
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்த்து மற்ற காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
மூளையின் செயல்பாட்டுத் திறனுக்கு கொழுப்பு அமிலங்களும் முக்கியத் தேவை. ஒமேகா-3, கொழுப்பு அமிலம் உள்ள சார்டின், சால்மன் போன்ற மீன் வகைகளை சாப்பிடலாம். அதிகமாக மீன் சாப்பிட முடியவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது மீன் எண்ணெய் மற்றும் அது அடங்கிய மாத்திரைகள்.
ஆக, இயற்கையான மற்றும் சத்தான உணவு உண்டால் உடலை நலமாக வைத்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் சீர் குலைந்தால் மன அழுத்தத்தால் மனிதன் பாதிக்கப்படுவான். ஆரோக்கியம் தரும் உணவும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் மன அழுத்தத்தைத் தவிர்த்து, நிம்மதியைத் தரும் என்பது உறுதி. >>சுகன் kumudamhealth
********************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment