**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அதிரவைக்கும்...'வெடிகுண்டு' சாமியாரிணி! Junior Vikatan.

>> Friday, November 7, 2008

புதன், 05 நவம்பர் 2008 குண்டுவெடிப்பு என்றாலே, 'ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன்' என பட்டியலிட ஆரம்பித்துவிடுவார்கள், நம்முடைய அரசியல்வாதிகளும் புலனாய்வுத் துறை அதிகாரிகளும்.

ஆனால், கடந்த செப்டம்பரில் மாலேகாவ்ன் மற்றும் மொடாசா ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்து, இந்தியாவே இடிந்துவிழும் அளவுக்கு அதிர்ச்சி பரவிக் கொண்டிருக்கிறது!

பி.ஜே.பி-யை சேர்ந்த பெண் சாமியார் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட ஐந்து பேர் வெடிகுண்டு வழக்குகளில் கைதாகி, 'இந்து தீவிரவாதிகள்' என்ற வார்த்தையை நாடு முழுவதும் உச்சரிக்க வைத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 29-ல் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசாவில் இரவு ஒரு குண்டு வெடித்தது. இதில் ஒரு சிறுவன் பலியாகி, பத்துப் பேர் காயமடைந்தனர். அடுத்த பத்தாவது நிமிடத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகாவ்ன் நகரின் நூராணி மசூதியின் முன்பு ஒரு பைக்கில் குண்டு வெடித்தது. இதில் நான்கு பேர் பலியானதோடு, சுமார் 70 பேர் காயம் அடைந்தனர்.

வழக்கம்போல சிமி அல்லது இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்

செய்திருக்கலாம் என்றே செய்திகள் வெளியாக, இந்த வழக்கை மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையினர் விசாரிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகுதான் 'இந்து தீவிரவாதிகள்' பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் அணிவகுத்தன.

குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் 24-ம் தேதி, சூரத்தில் ஆசிரமம் நடத்தும் பெண்சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், இந்தூரைச் சேர்ந்த ஷியாம் லால் சாவ் மற்றும் ஷிவ்நாராயண் சிங் ஆகிய மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரையும் முக்கியமாகக் கொண்டு நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக கடந்த மூன்றாம் தேதி அஜய் ராஹில்கர், ராக்கேஷ் தாவ்ரே, ஜக்தீஷ் மாத்ரே ஆகிய மூவரையும் அடுத்தடுத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரக்யா, பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத், வி.ஹெச்.பி-யின் மகளிர் அமைப்பான துர்கா வாஹினி போன்ற அமைப்புகளில் பணியாற் றியவர். தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார். பிரக்யாவுக்கு மோட்டார் பைக் சவாரி பிடிக்குமாம். சில ஆண்டுகளுக்கு முன் சந்நியாசம் பூண்டு, தன் பெயரை 'சாத்வி பூர்ண சித்தானந்த் கிரி' என்று மாற்றிக்கொண்டார். முப்பத்தெட்டு வயதாகும் இவருக்கு, நம்ம ஊர் பேச்சாளர்கள் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ஆகியோரின் வேகத்தில் இந்துத்துவா எதிரி களைத் தாக்குவது வாய்வந்த கலை!

அவருடன் கைதான ஷியாம் மற்றும் ஷிவ்நாராயண் ஆகிய இருவரும் வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகளில் இருந்து தற்போது தனி அமைப்புகள் நடத்திவருகிறார்கள்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தகட்ட அதிர்ச்சி காத்திருந்தது. கைதான இவர்களுக்கு புனேயில் வெடிகுண்டு செய்யும் பயிற்சி அளித்ததாக போபாலை சேர்ந்த சமீர் குல்கர்னி மற்றும் ரமேஷ்சந்த் உபாத்யாயா ஆகிய இருவர் பற்றி தகவல் கிடைத்தது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ரமேஷ், இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிரவாதிகளை எதிர்க்கப் பயிற்சி அளிக்கும் 'அபினவ் பாரத்' எனும் அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். குல்கர்னியும் இளம் வயதில் ஏ.பி.வி.பி-யில் இருந்தவர். ரமேஷ் நாக்பூரில் உள்ள ராணுவப் பள்ளியில் பணியாற்றியவர். இந்தப் பள்ளி, காந்தியைக் கொலை செய்தவர்களோடு தொடர்புடைய டாக்டர் பி.எஸ்.மூஞ்சே என்பவரால் உருவாக்கப்பட்டதாம்.

மேலும், இந்த வழக்கில் விசாரணைக்காக நாசிக்கில் உள்ள போன்ஸ்லா ராணுவப் பள்ளியின் கமாண்டன்ட் பதவியில் உள்ள கர்னல் பிரசாத் புரோஹித், அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற கர்னல் ரெய்கர் ஆகியோரையும் வளைத்துள்ளனர்.

இதுகுறித்துத் தீவிரவாதத் தடுப்புப் படை வட்டாரத்தில் பேசியபோது, ''குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட

எல்.எம்.எல். ஃப்ரீடம் பைக்கில், பிறை மற்றும் 786 எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, விசா ரணையைத் திசைதிருப்புவதற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்தது. இதனிடையில், பைக் இன்ஜினின் சேசிஸ் எண் சுரண்டி அழிக்கப்பட்டு, போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்தது. இன்ஜினை பெங்களூருவில் உள்ள லேப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் மற்ற ஸ்பேர் பார்ட்ஸ§களை வைத்து சேசிஸ் எண்ணைக் கண்டுபிடித்தோம். அதில்தான் பைக்கின் சொந்தக்காரர் பிரக்யா எனத் தெரியவந்தது.

இதற்கு ஆதாரமாக, பதிவு செய்யப்பட்ட சில டெலி போன் பேச்சின் டேப் ஆதாரங்களும் கிடைத்தன. மேலும், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் (Royal Demolition Explosive) வெடிமருந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவங்களில் மட்டுமே கிடைக்கிறது.

முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து கிடைக்கிறது. ஆனால், கைதாகி உள்ளவர்களுக்கு அவர்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்பதால் அது, இந்திய ராணுவத்தில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறுதியாக எழுகிறது!'' என்கின்றனர்.

பிரக்யாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான சந்திரபால் தாக்கூர், ''என் மகள் 99 சதவிகிதம் அப்பாவி. ஒரு சதவிகிதம் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு. தன்னுடைய மதத்தைக் காப்பதற்காக அவர் தன்னை இதில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்''என்கிறார்.

பி.ஜே.பி-யின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் ஆகியோருடன் ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் பிரக்யா இருந்த பழைய படங்கள் பத்திரிகைகளில் வெளியானதும் 'டர்'ராகி விட்ட பி.ஜே.பி-யினர், அதையும் சமாளித்தபடி...

''இந்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் விபத்தில் இறந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ-வின் இரங்கல் கூட்டத்தில் சௌகானும் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார்கள். அதில் சாத்வியும் கலந்துகொண்டது எதிர்பாராமல் நடந்த சம்பவம்!'' என்கிறார்கள்.

பி.ஜே.பி. தொண்டர்களோ, ''பிரக்யா தன் மோட்டார் பைக்கை நான்கு வருடங்களுக்கு முன்பே விற்றுவிட்டார். பெயர் மாற்றப்படாது இருந்ததால், அவருடைய பெயர் இதில் இழுக்கப்படுகிறது. டெல்லி ஜாமியா நகர் என்கவுன்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்துகிறது காங்கிரஸ்...'' என்கிறார்கள்.

இதற்கிடையே, 'மொடாசா குண்டுவெடிப்பில் பிரக்யாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை!' என போலீஸார் அறிவித்துள்ளனர். இதேபோல்... பிரக்யா, ரமேஷ் மற்றும் சமீர் ஆகிய மூவருக்கும் மும்பையில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இதே சோதனையை மீண்டும் நடத்தவும் தயாராகி வருகிறார்கள் போலீஸார். இதனால் உற்சாகமான சிவசேனா, பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் பிரக்யாவுக்கு வேண்டிய சட்ட உதவிகள் செய்வதில் தீவிரமாகி உள்ளன.

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்சாமியாரின் கைதுப் படலத்தை பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அரசியலுக்கு வசமான தீனியாகப் பேச ஆரம்பித்துவிட்டன!

நன்றி- சரோஜ் கண்பத், ஆர்.ஷஃபி முன்னா(Junior Vikatan - 9-11-08)

****************************************

படிக்க:>>

குண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்மைத் தகவல்கள்

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!

*************************************

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

1 comments:

Anonymous November 7, 2008 at 12:53 PM  

பார்ப்பனிய பயங்கரவாதிகள் அம்பலமாகி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள், VHP ஆகிய பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP