வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL. பகுதி 4.
>> Tuesday, December 8, 2015
Posted by: Sutha Published: Tuesday, December 8, 2015, 16:13 [IST]
சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சிதைந்து போனது மக்களின் வாழ்க்கை. யாரிடம் போய் உதவி கேட்பது என்று கூட தெரியாமல் மக்கள் கலங்கிப் போய் தவித்தனர்.
எந்த "இயந்திரமும்" தங்களுக்காக ஓடி வராத நிலையில் ஆங்காங்கே உதவிக் கரங்கள் நீளத் தொடங்கின. யாருமே எதிர்பாராத அளவில் இந்த உதவிக் கரங்கள் மக்களுக்கு கை கொடுக்க ஆரம்பித்தன. எத்தனையோ கரங்கள். யார் யாரோ வந்தார்கள்.. முகமே தெரியாத நிலையில் அவர்கள் காட்டிய அன்பும், மனிதநேயமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருமருந்தாக அமைந்தன.
அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் ஆற்றிய சேவை மிகப் பெரியது, மகத்தானது.
அலைகடலென. சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்ட முதல் நாளிலிருந்தே மக்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். அந்த அமைப்பின் 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
உணவும், உடையும். இந்த அமைப்பினர் ஆங்காங்கே சமையல் பாத்திரங்களை வைத்து மொத்தமாக சமைத்து வண்டிகளில் வைத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தெருத் தெருவாக சென்று வீடு வீடாக பாக்கெட் உணவைக் கொடுத்து வந்தனர். தண்ணீர் பாட்டில், அடிப்படை மருந்துகள், பிஸ்கட் போன்றவற்றையும் கொடுத்தனர்.
தெருவைப் பெருக்கி பல பகுதிகளில் சேறும் சகதியுமாக இருந்ததைப் பார்த்த அவர்கள் ஜேசிபியை வரவழைத்து அவர்களே முன்னின்று குப்பைகளையும், சேறு சகதிகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
கையால் அசுத்தத்தை அள்ளினர். ஜேசிபி வாகனம் வர முடியாத பகுதிகளில் அவர்களே கையில் பாலிதீன் பைகளை மாட்டிக் கொண்டு சேறு, சகதியை அள்ளி அங்குள்ள மக்களை நெகிழ வைத்தனர். இவர்களைப் பார்த்து அப்பகுதி மக்களும் தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் குதித்தனர்.
கோவில்களைச் சுத்தப்படுத்தி கோவிலைச் சுற்றிலும் சேர்நது கிடந்த சேறு சகதியை ஒரு முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் படை சேர்ந்து சுத்தப்படுத்திய செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.
பார்த்தசாரதி கோவிலில் "பாய்" விருந்து. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தஞ்சம் அடைந்து தங்கியிருந்தனர். மேலும் அங்கு தங்கியிருந்த அனைவருக்குமே இஸ்லாமிய அமைப்பு ஒன்று உணவு அளித்து உதவியது.
பாட்டியின் உடலைத் தூக்கிச் சென்ற இஸ்லாமியர்கள். தமுமுக வினருக்கு சூளைமேடு பகுதியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பிரிட்டோ என்ற போலீஸ்காரரின் பாட்டி அந்தோணி அம்மாள் இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. உடனடியாக விரைந்த தமுமுகவினர் பாட்டியின் உடலை சுமந்து சென்றனர். பின்னர் வீட்டிலிருந்து அடக்க ஸ்தலத்திற்கும் சவப்பெட்டியில் வைத்து கழுத்தளவு நீரில் நடந்து சென்று அடக்கம் செய்ய உதவினர்.
ற்கொலை செய்தவரின் உடல் மீட்பு. இதேபோல வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வீட்டில் இருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியினருக்குத் தகவல் போனது. உடனடியாக அக்கட்சியின் தொண்டர் அணியினர் உடலை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தாஹா நவீன் தலைமையில்தான் இந்தப் பணி நடைபெற்றது.
செம்மஞ்சேரியில் மூதாட்டி மரணம். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தின் அருகில் வயதான மூதாட்டி ஒருவர் தனியாக குடிசைபோட்டு வசித்து வந்தார். வெள்ளம் திடீரென்று பெருக்கெடுத்து ஓடியதால் மூதாட்டியின் வீடு அடித்துச் செல்லப்பட்டது. உதவி கேட்டு மூதாட்டி அலற, மாடியில் வசித்து வந்த அவருடைய மகள், மூதாட்டியைத் தூக்கிக்கொண்டு வரும்போது உயிர் பிரிந்துவிட்டது. அதனால், மாடியில் இருந்து உடலைக் கீழே கொண்டு வர முடியவில்லை. வெள்ளம் வடியாததால் மூன்று நாட்களாக உடலை வைத்துக்கொண்டு திண்டாடினர்.
கழுத்தளவு தண்ணீர்.. உதவிக்கு வராத கவுன்சிலர். தகவல் அறிந்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் விரைந்து வந்து பாட்டி உடலை மீட்டு அடக்கம் செய்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட ஜமாத்தின் நிர்வாகி அப்துல் ரஹ்மான் கூறுகையில், அந்தப் பகுதி முழுவதும் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்திருந்ததால் உடலை மாடியில் இருந்து இறக்க முடியவில்லை. இதனால் வீட்டில் துர்வாடை வீசியது. அந்த உடலோடு உறவினர்கள் பரிதவித்து நின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர், போலீஸ் என யாருமே உதவவில்லை. ஃபிரிசர் பாக்ஸைக்கூட அங்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்து உடலைத் துணியால் சுற்றி வெளியே கொண்டு வந்து நல்லடக்கம் செய்தோம் என்றார்
லாரியில் மீட்கப்பட்ட கர்ப்பிணிகள். வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மூன்றாவது பிளாக் பகுதியில் தண்ணீர் கீழ்தளம் முழுவதும் மூழ்கிவிட்டது. வீட்டில் மேல்தளத்தில் நிறைமாதக் கர்ப்பிணி ஒருவருக்கு வலி ஏற்பட 108-க்கு போன் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்தத் தெருவுக்கு ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. தகவல் அறிந்து அங்கே போன தமுமுகவினர் ஏணி மூலம் முதல் மாடிக்குப் போய் கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு லாரி ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்கள். இப்படி வெள்ளத்தில் சிக்கிய மூன்று கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றி மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறார்கள் என்றார் தமுமுகவைச் சேர்ந்த ஜாஹிர் ஹுசேன்.
மனிதநேயத்தின் உச்சம் இது.. முகம்மது யூனுஸ் என்பவரின் செயல்தான் சென்னை மக்களை பெருமளவில் மனதார அவர் புகழ் பாடச் செய்தது. இ காமர்ஸில் ஈடுபட்டுள்ள யூனுஸ், சொந்த செலவில் பல உதவிகளைச் செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டோருக்கு உத்வேகம் அளித்தார்.
படகுகளுடன் களத்தில் குதித்தார். சென்னை பெசன்ட் நகர் ஆலையம்மன் கோயில் பகுதி மீனவர்களுடன் பேசி படகுக்கு 1,500 ரூபாய் என வாடகை பேசி 4 படகுகளுடன் மீட்புப் பணியில் இறங்கினார். இரண்டு நாட்களில் அதிக நபர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட, 20 ஆயிரம் ரூபாய்க்கு படகுகளை வாடகைக்கு எடுத்து செல்போன் மூலம் இணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். 17 படகுகள் வரை தனது சொந்தச் செலவில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தினார்.
ஊரப்பாக்கம் சித்ராவின் நெகிழ்ச்சி. ஊரப்பாக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதல் மாடி வரை மூழ்கி இருந்த வீட்டின் மாடியில் சித்ரா என்ற கர்ப்பிணிப் பெண் இருந்தார். உதவிக்கும் யாரும் இல்லை. முகம்மது யூனுஸ் உடனடியாக நீரில் குதித்து சித்ராவைக் காப்பாற்றி படகில் சேர்த்திருக்கிறார். அவரது கணவர் சந்துருவையும் மீட்டிருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டு அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.
சாலையில் தொழுகை. சென்னை மக்கா பள்ளிவாசல், மண்ணடி பள்ளிவாசல், தாம்பரம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்து என சகலமும் செய்து தந்துள்ளனர் இஸ்லாமியர்கள். வேளச்சேரி பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை, சாலையில் வைத்து நடத்தியுள்ளனர்.
வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் இப்படி மதம் பாராமல் முகம் பாராமல், மனிதத்தை மட்டுமே பார்த்து செய்த உதவிகளைப் பார்த்து வெள்ளமே கூட வெட்கப்பட்டுப் போயிருக்கக் கூடும். இந்த மனிதம் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும், என்றென்றும் தழைத்தோங்க வேண்டும்.
PHOTOS BY THATSTAMIL.
sOURCE:http://tamil.oneindia.com/news/tamilnadu/tntj-tmmk-done-marvelous-job-flood-hit-chennai-241786.html#slide178475
4 comments:
மாஷா அல்லாஹ், உங்களது சேவைகளை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம் உங்களை எங்களுக்கு சகோதரர்களாக அளித்த அல்லா உங்களுக்கு எல்லா அருளையும் தருவாராக.
எல்லாப்புகழும் இறையவனுக்கே.
நன்றி தோழர் கும்மாச்சி அவர்களே. நாம் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கிறோம். நாடெங்கும் வாழ கேடொன்றுமில்லை. எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ அல்லாஹ் நல்லருள் பாலிக்க வேண்டுகிறேன்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
மீனவர்களும் முஸ்லீகளும்தான் முதலில் வந்தாங்க என்பதை வினவு தளத்தை படித்து தெரிந்து கொண்டேன் நண்பரே..... முஸ்லிம் என்று சொல்லி தனியாக பிரிப்பதைவிட அல்லாவை வணங்கும் மக்கள்தான் முதலில் வந்தார்கள் என்று சொல்வது சாலச் சிறந்தது.
தோழர் வலிப்போக்கன் அவர்களே, மீனவர்களும் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் என பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆரியம் நமக்குள் நயவஞ்சகத்துடன் உருவாக்கிய வேற்றுமைகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. எங்களது தொப்புள் கொடி உறவு பங்காளி தமிழர்கள் உண்மைகளை உணர்ந்து விட்டார்கள்.
Post a Comment