**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆக யோசனைகள்?

>> Friday, May 14, 2010

உலகம் கருவறையா?. கல்லறையா? உலகம் மண்தான். உழைப்பவருக்கு வயல். உழைக்க மறுப்பவருக்குக் சுடுகாடு. பாடுபடுபவருக்குக் கருவறை. படுக்க நினைப்பவருக்குக் கல்லறை! முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.

முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார்.

முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார்.

பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் யாருக்கெல்லாம் அவை வேண்டுமோ அவர்களை எல்லாம் உடனே இங்கே வரச் சொல்லிவிடுங்கள்” என்று உரக்கக் கூவினார்.

அவ்வளவுதான்… செய்தி விஷம் போல பரவியது. திபுதிபு என்று கூட்டம் சேர்ந்தது.

முல்லா சொல்லப் போகும் யோசனைக்காகக் கூட்டம் அமைதியாகக் காத்திருந்தது. இரண்டு மணி நேரம் கழித்து “இன்னும் யாராவது வரவேண்டி இருக்கிறதா?” என்றார் முல்லா… “இல்லை. மற்றவர்கள் வரமாட்டார்கள்… வர மறுத்து விட்டார்கள். நாங்கள்தான் உங்கள் அரிய யோசனைகளைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்” என்றது கூட்டம்.

வெளியூரில் இருந்து வந்து முல்லாவிடம் ஏதோ சவால்விட்ட நபரைப் பார்த்து “இவர்களை நன்றாக எண்ணிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு முல்லா எழுந்து புறப்பட ஆரம்பித்தார்.

“முல்லா உழைக்காமலேயே பெரும் பணக்கார னாக ஆசைப்படும் எங்களுக்கு ஏதும் சொல்லவில்லையே…” என்று கூட்டம் அலறியது.

முல்லாவோ வெகு அலட்சியமாக “இதோ வெளியூரில் இருந்து வந்திருக்கும் இவர் என்னிடம் சவால் விட்டார். எல்லாக் கேள்விக்கும் விடை சொல்கிறீர்களே… இந்த ஊரில் முட்டாள்கள் மொத்தம் எத்தனை பேர் என்று துல்லியமாகச் சொல்ல முடியுமா? என்றார்.

உழைக்காமல் பணக்காரன் ஆக விரும்பும் உங்களை விட முட்டாள்கள் இருக்க முடியுமா என்ன?

அதுதான் உங்களை வரவழைத்து இவரை எண்ணிக் கொள்ளச் சொன்னேன்” என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார்.

உண்மை,, உழைக்காமல் பணக்காரனாக விரும்பும் எவனுமே அறிவாளி அல்லன். முட்டாளே.

லாட்டரி டிக்கட்டுகளை நம்புகிறவர்கள்,

சினிமாவில் வருவது போல் முதல் காட்சியில் ஆட்டோ ஓட்டிவிட்டு அடுத்த காட்சியில் பென்ஸ் கார் ஓட்டும் கதாநாயகனைப் போல ஆக விரும்புகிறவர்கள்,
அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள்,

கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் சாமிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஏதாவது கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிற முட்டாள்கள்.

இவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா… தயவு செய்து வெளியே வாருங்கள்.

உழைக்காமல் முன்னேற முடியாது. உழைக்காமல் தற்காலிகமாக மேலே வந்தவர் ஒரு போதும் நிலைக்க முடியாது. புரிந்து கொள்ளுங்கள்.

உழைப்பு என்றதும் கல் உடைப்பது, உழுவது, கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம்.

பாடுபடுவது, சிரமங்களை மகிழ்வுடன் ஏற்பது, சினிமா, சீட்டு, சிட்டு, சிகரெட்டு என்கிற இளவயது இன்பங்களில் தன்னைத் தொலைக்காமல் பல மணி நேரம் படிப்பது கூட உழைப்பதுதான்.

பல மைல் பயணித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய் வருவது கூட உழைப்புத்தான்.

சோம்பி இராத சுகம் தேடாத எல்லா முயற்சிகளும் உழைப்புத் தான்.

இப்படி உழைத்தவர்கள் தான். உயரமான இடங்களில் பின்னர் உட்கார்ந்தவர்கள்.

சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும் உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா?

பேரறிஞர் அண்ணா சிவாஜி என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். தி.மு.க மாநாட்டில் அது நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார்.

இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா.

“அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா.

சாப்பிட்டு விட்டு, சின்ன தூக்கம் போட்டு விட்டு அண்ணா திரும்பியதும் ஆச்சர்யம் காத்திருந்தது. “அண்ணா இப்பிடி நாற்காலில உட்காருங்க” என்று அழுத்தி உட்கார வைத்துவிட்டு கணேசன் சிவாஜியாக வசனம் சொல்ல ஆரம்பித்தார். கொடுத்த பாடத்தைப் பார்த்து படிக்கப் போகிறார் என்று எண்ணிய அண்ணா திகைத்துப் போனார்.

மொத்த நாடகத்தில் சிவாஜி வேடத்துக்குரிய வசனம் முழுவதையும் (பலப்பல பக்கங்கள்) கிடுகிடுவென்று மனப் பாடத்துடன் நடித்துக் காட்டினார் கணேசன். முழுவசனமும் மனப்பாடம்…! நம்ப முடிகிறதா? “அப்புறம் படிக்கறேனே! கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேனே…!” என்ற சோம்பல் அவரிடம் இல்லை. ஒரே மூச்சில் மனப்பாடம்… கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கடின உழைப்பு…

அதனால் தான் நாடகத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக மேடை ஏறி வந்த தந்தை பெரியார். “யாருப்பா அந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்” என்று புகழ்ந்தபோது “கணேசன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். “கணேசனா… இல்ல… இல்ல… இவன் சிவாஜிகணேசன்” என்று பட்டாபிஷேகம் செய்தார். திராவிட வசிட்டர் தமிழர் மகரிஷி தந்தை பெரியார்.

எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் எட்டு மணிக்கு வந்து தயாராகும் இக்கால நடிகர்கள் போல அல்லர் அவர். எட்டு மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதனால்தான் எட்டாத இடங்களை எட்ட முடிந்தது அவரால்!

காந்தி அடிகள் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் உழைப்பார். சில மணியே ஓய்வெடுப்பார். காமராஜரும் அப்படியே. உலகம் மண்தான்.

ஆனால், அது உழைப்பவருக்கு வயல். உழைக்க மறுப்பவருக்குக் சுடுகாடு. பாடுபடுபவருக்குக் கருவறை. படுக்க நினைப்பவருக்குக் கல்லறை!

சொல்வேந்தர். சுகி சிவம்
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

1 comments:

Anonymous May 19, 2010 at 12:38 AM  

padiththen suvaiththen nanru mika mika.. ungkal pani thodarka.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP