**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புயலை எழுப்பும் புதிய பைபிள்.கொந்தளிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள்.

>> Saturday, October 11, 2008

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று.

இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம்.

"இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.

`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.

"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார்.

இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம்.

அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.

"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது.

பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர்.

குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா?

அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.

பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர். மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூ கம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்?

பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்' என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர். பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும்,

இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?

இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன.

இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்? இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே?

இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?'' எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.

இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், ``கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர்.

அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார்.

இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன.

இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்'' என்றார் உறுதியாக.

கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.

FROM > http://www.kumudam.com/magazine/Reporter/2008-08-31/pg2.php
----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP